(சரியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் சில சுதந்திரங்கள் எடுத்துக்கொண்டு தமிழாக்கம் செய்யப்பட்ட கட்டுரை இது. கலைச்சொற்களின் தமிழாக்கமும் நம்பத்தகுந்ததாய் இருக்கும் என்று சொல்வதற்கில்லை. பிழை எது, சரி எது என்பதை சுயமாய்ச் சிந்தித்தறிய தூண்டுவதாக இருக்கும் என்ற நம்பிக்கையில் மட்டுமே இந்த மொழிபெயர்ப்பு செய்யப்படுகிறது. விஷயத்தைச் சரியாக விளங்கிக் கொள்ள விரும்புபவர்கள், Michael Saler எழுதிய மூலக்கட்டுரையை ஆங்கிலத்தில் இங்கு வாசிக்கலாம்)
இந்தக் கட்டுரையின் முந்தைய பகுதி இப்படி முடிந்திருந்தது:-
Fin de siècle இயக்கத்தின்போதும் அதன் பிற்பாடும் புனைபடுதல் எண்ணற்ற வகைகளில் வெளிப்பாடு கண்டது. இவற்றுள் அழகியல் பார்வையை முதலில் சொல்ல வேண்டும், இனிமேற்கொண்டு கலையின் பணி வாழ்வை போலி செய்வது மட்டுமல்ல என்று இந்த இயக்கத்தினர் பிரகடனம் செய்தனர்- இனி வாழ்வே கலையின் போலியாகிறது.
இதன்பின், மனித ஒழுக்கத்தை மேம்படுத்தும் இலக்கியப் படைப்புகள் என்று சமய நூல்கள் ,,மறுவரையறை செய்யப்பட்டன. பதினெட்டாம் நூற்றாண்டு துவங்கிற்று- மாத்யூ ஆர்னால்டு, 1873ஆம் ஆண்டு, தன் Literature and Dogma என்ற நூலில் இந்தப் பார்வைக்கு மிகச் சிறப்பான வடிவம் அளித்தார்.
சமயங்களைப் புனைவாய் வடிவமைப்பது எந்த அளவுக்கு வெற்றி பெற்றதென்றால், இருபதாம் நூற்றாண்டு பிறக்கும்போது, தெய்வ நம்பிக்கை கொண்ட கிருத்துவர்களான டோல்கீன், சி.எஸ். லூயிஸ் போன்றவர்கள், அனைத்து புனைவும் சமயசார்பு கொண்டவையே என்று மறுவரையறை செய்ய வேண்டியதாயிற்று. எழுத்தாளர்கள், ஆண்டவனைப் பின்பற்றும் உப-படைப்பாளிகள்.
புனைபடுதலில் இது போன்ற வேறு சில உதாரணங்களையும் அளிக்க இயலும் – புரட்சிக்குப் பயன்படக்கூடிய புதிய தொன்மங்களைத் திட்டமிட்டு உருவாக்க வேண்டும் என்று ஜார்ஜஸ் சரேல் அறைகூவல் விடுத்தார்; “நம்பிக்கை நாட்டம்” என்பதன் பிராக்மாடிக் விளைவுகள் என்ன என்று வில்லியம் ஜேம்ஸ் ஆய்வுகள் செய்தார். இருபதாம் நூற்றாண்டுக்குள் நுழைந்தால், இந்தப் பட்டியல் விரிந்து சென்று, பின்நவீனத்துவச் சிந்தனைக்கு வந்து நிற்கிறது.
இனி-
புனைவுகள் மன மயக்கத்தைத் தோற்றுவிக்கும் நோக்கத்தில் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வந்தாலும், புனைபடுதல் மயக்கத்தில் ஆழ்த்தாமல் களிப்பூட்டும் கதைசொல்லலின் வசீகரங்களை உருவாக்குவதை தொடர்ந்து தன் நோக்கமாய் கொண்டிருந்தது. இத்தகைய முயற்சிகளை மயக்கற்ற மோகங்களுக்கான முயற்சிகள் என்று சொல்லலாம்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் புனைவுகள் கூடுதல் முரண்நகைத்தன்மை கொண்டிருந்தன, தன்னையே பிரதிபலித்துக்கொள்ளும் இயல்பு கொண்டிருந்தன, முந்தைய நூற்றாண்டைக் காட்டிலும் இப்போதும் மேலும் தனித்தன்மை கொண்ட வடிவம் பெற்றிருந்தன. பதினெட்டாம் நூற்றாண்டில், புனைவுபடுதல் குறித்து கண்டறிந்த புதிய புரிதல்களை இலக்கிய ஆய்வாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர், பத்தொன்பதாம் நூற்றாண்டில் புனைவுபடுதல் அடைந்த வளர்ச்சிக்கு இப்போக்கு முக்கியமான பங்களிப்பு செய்வதாய் இருந்தது.
எனினும் பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்திலும் மத்திய வர்க்கத்தினரிடையே புனைவு குறித்தும் கற்பனையாற்றல் குறித்தும் இரட்டை மனநிலை இருந்தது. கற்பனையின் இன்பங்கள் ஆபத்தான ஆசைகளைத் தூண்டக்கூடிய இயல்பு கொண்டவை என்று அவர்கள் அச்சம் கொண்டிருந்தனர். எனவே, சமயம் மற்றும் பயனுள்ள தேவைகளுக்குக் கீழ்ப்படியும் இடத்தில் புனைவை இருத்தி வைத்தனர்.
1817ஆம் ஆண்டு, சாமுவேல் டெய்லர் கூல்ரிட்ஜ், மிகை கவித்துவ உணர்வையும் அதன் வசீகரத்தையும், “அவநம்பிக்கையை விரும்பித் தளர்த்திக் கொள்வதால்” அடைகிறோம் என்று கூறியது, புனைவின் வீச்சைக் கட்டுப்படுத்தும் பார்வையை வெளிப்படுத்துகிறது. அடிப்படையில், புனைவு அவநம்பிக்கையோடுதான் அணுகப்பட்டது, தற்காலிகமாகத் துணிந்து அவநம்பிக்கையைத் தளர்த்திக் கொள்ள மட்டுமே இயலும். இத்தகைய பார்வை, நல்ல ஒரு புத்தகத்துடன் பொழுது போக்குவதற்கு அளவுக்கதிகமான உழைப்பு கோருகிறது- விக்டோரியர்கள் துவக்கத்தில் புத்தகங்களைப் பொழுதுபோக்குச் சாதனங்களாகவே பயன்படுத்தினர்.
பல்வேறு காரணங்களால், கற்பனையின் சுதந்திர வெளிப்பாட்டுக்கு எதிராக அவர்கள் எழுப்பிய தடைகள் பத்தொன்பதாம் நூற்றாண்டில் மெல்ல மெல்ல நீக்கப்பட்டன. முடிவில், புனைவைக் கொண்டு கற்பனை உலகில் கற்பனை விளையாட்டு விளையாடுவது என்பது வளர்ந்தவர்களுக்கும் குழந்தைகளுக்கும் அனுமதிக்கப்பட்டது என்றாயிற்று.
அகத்தின் தன்மை குறித்த வரையறையில் ஏற்பட்ட மாற்றமும் இதற்கான காரணிகளில் ஒன்று. முதல் விக்டோரியர்களின் அகம் ஆதர்ச ஒருமை கொண்டிருந்தது என்றால், அகத்தின் பன்மைத்தன்மை பிற்கால விக்டோரியர்களால் பரவலாக ஏற்கப்பட்டது.
1830களில் நனவிலி குறித்து ஆய்வுகள் நிகழ்த்திய உளவியலாளர்கள், “இரட்டை அகவுணர்வு” வெளிப்படும் கட்டங்களை விவாதிக்கத் துவங்கினர். பொய் என்று தெரிந்தாலும் தம்மைக் குறித்த பிரமைகளில் இருப்பவர்களின் மனநிலை இத்தகைய விசாரங்களுக்குக் காரணமானது. ஒவ்வொரு மனிதனும், “இருவேறு தனித்தன்மை கொண்ட, ஆனால் முழுமையான மூளைகளைக் கொண்டுள்ளான். ஒரு மூளை…. மற்றொன்றைக் கவனிக்கிறது, அது மனம் போன போக்கில் நடந்து கொள்வதைக் கண்டு நகைக்கவும், ரசிக்கவும்கூடச் செய்கிறது,” என்று 1844ஆம் ஆண்டில் ஓர் உளவியலாளர் எழுதுகிறார்.
இந்த இரட்டை உளநிலையில் புதிது எதுவுமில்லை- இது உள்ளார்ந்த ஒரு மனிதத் திறன், மிக இளம் வயதிலேயே குழதைகள் இதை வெளிப்படுத்துகின்றனர். இதில் புதுமை என்னவென்றால், பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைகாலம் துவங்கி அன்நூற்றாண்டு முடிவதற்குள் பரவலான பண்பாட்டு ஏற்பு நிகழ்ந்துவிட்டது என்பதுதான். இந்த வாசகர்கள், தங்கள் அவநம்பிக்கையை விரும்பித் தளர்த்திக் கொண்டு புனைவை அணுகவில்லை. மாறாய், அவர்கள் இவற்றை விரும்பி ஏற்றுக் கொண்டனர்- மாயத் தோற்றம் என்று தெரிந்தே இந்த இரட்டை மனநிலையைக் கைகொண்டனர்.
சுருக்கமாகச் சொன்னால், விக்டோரிய காலகட்டத்தின் பிற்பகுதியில் முரண்நகைத்தன்மை கொண்ட கற்பனை வளர்ச்சியைக் காண முடிகிறது- வளர்ந்தவர்களும்கூட ஏககாலத்தில் கற்பனை உலகிலும் யதார்த்த உலகிலும் சஞ்சரிக்க அனுமதிக்கப்பட்டனர். இந்த இரட்டை மனநிலை வாய்க்கப்பெற்ற ஓர்மையின் காரணமாக மக்கள் ஒரே சமயத்தில் வசியத்தையும் மாயமின்மையையும் உணர முடிந்தது.
ஆனால் இதெல்லாம் தப்பிச் செல்லும் செயல்களாகாதா? புனைபடுதலை எஸ்கேபிசம் என்று சொல்லிவிட முடியாது. இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில், புனைவுலகமும் யதார்த்த உலகமும் ஒன்றையொன்று கட்டமைக்கின்றன என்பதை தத்துவவியலாளர்களும் உளவியலாளர்களும் ஏற்றுக்கொள்ளத் தலைப்பட்டனர், யதார்த்தத்தை மறுவார்ப்பு செய்யவும் புனைவுகள் உதவுகின்றன என்பதையும் ஏற்றுக் கொண்டனர்.
அதற்காக, அனைத்தும் சார்புத்தன்மை கொண்டவை என்று சொல்வதாகவோ, இயல்புநிலை என்ற ஒன்றை நிராகரிப்பதாக்கவோ நாம் புனைபடுதலை கருதக்கூடாது. உதாரணத்துக்கு வைஹிங்கர், புனைவுகளுள் வேறுபாடு கண்டார்- பொய்கள் என்று ஏற்றுக் கொள்ளப்படும் புனைவுகள் வேறு, உண்மை என்று தன்னை முன்னிருத்திக் கொள்ளாத அறிவியல் கோட்பாடுகள் வேறு என்றார் அவர்.
புனைவுப் படைப்புகளையும் புனைவுலகங்களையும் பல்வகைப்பட்ட வாசிப்புகளுக்கு உட்படுத்தும் சமூகங்களில் ஏற்படும் இணக்கமும் இயல்பு நிலை உருவாக உதவலாம். “கற்பனையின் பொதுவெளிகள்” என்று இவற்றை அழைக்கிறேன் – இந்தச் சமூகங்கள், பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் செழித்து வளர்ந்தன- விக்டோரிய சமய, அறக் கோட்பாடுகளிலிருந்து விடுபட்ட, தனித்தன்மை கொண்ட வடிவம் என்று புனைவு பரவலாக ஏற்றுக்கொள்ளப்படத் துவங்கிய காலம் அது.
புனைவுப் பத்திரிக்கைகளின் கடித பக்கங்களில் கற்பனையைக் கொண்டு புனையப்பட்ட பாத்திரங்களையும் புனைவுகளையும், புனைவில் கடைபிடிக்கப்பட வேண்டிய விதிமுறைகளையும் வாசகர்கள் விவாதிப்பதன் மூலம் அவற்றுக்கு சமூகத்தின் புனைவுகள் என்ற நிலை உருவாயிற்று. இந்த விவாதங்கள் புனைவு குறித்த விவாதங்கள் என்ற எல்லையை அவ்வப்போது கடந்து அவற்றுக்கு ஒப்பான யதார்த்த தளத்துக்கும் சென்றன. கருப்பு வெள்ளைச் சித்திரங்கள் சோதனைக்குட்படுத்தபட்டன, அவற்றின் இடத்தில் நுண்மையான புரிதல் ஏற்பட்டது. இவற்றோடுகூட, சுயவிருப்ப அடிப்படையிலான நட்புறவைக் கொண்டு நவீனத்துவ உலகின் அலுப்பைப் போக்கவும் இந்தப் பொதுவெளிகள் துணை செய்தன.
ஆக, மாயமிழத்தலின் கதையாடலில் எழுந்த அதிருப்திகளைச் சரிக்கட்டுவதாக புனவுபடுதல் இருந்தது. முரண்நகைத்தன்மை கொண்ட கற்பனை, தர்க்கத்தைத் தவற விடாமல் அதிசய உணர்வையும் அர்த்தத்தையும் தோற்றுவித்தது. அதன் செயல்பாடு சமயசார்பு கொண்டவர்களுக்கும் அல்லாதவர்களுக்கும் ஏற்றதாக அமைந்தது.
இதனால் இயல்புத்தன்மை இன்னும் இழக்கப்படவில்லை, சமூக அமைப்பும் சேதமடையவில்லை. சொல்லப்போனால், இணையம் கற்பனை உலகுகளின் மாபெரும் கருவூலமாக இருக்கிறது. ஜேம்ஸ் ஜாய்ஸின் யூலிசஸ் முதல் கணினி விளையாட்டு வரை, கற்பனைக்குத் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட பொதுவெளிகள் இணையமெங்கும் நிறைந்திருக்கின்றன. சமயச் சமூகங்கள் போல், சமய உணர்வற்ற இந்தச் சமூகங்களும் புனைவுலகுகளில் தம் காலத்தைச் செலவழிக்கின்றன, அவற்றைப் போலவே நட்பையும் வழிகாட்டுதலையும் அளிக்கின்றன, தமக்கேயுரிய ஆசார அனுஷ்டானங்களைக் கொண்டு தம்மை பாதுகாத்துக் கொள்கின்றன. ஆனால் சமயம் அளிக்கும் மரபார்ந்த மாயங்களுக்கு பதில், புனைபடுதல் தற்காலிகத் தன்மையும் சமயசந்தர்ப்பங்களுக்கு உட்பட்ட தன்மையும் கதையாடல்களுக்கு உண்டு என்ற விழிப்பு நிலையை வளர்க்கின்றது. மாயையில் ஆழ்த்தாத மோக வடிவங்களை அளிக்கின்றது.
இந்தக் கட்டுரையின் மையப் புள்ளிகளைச் சுருக்கமாகக் கூறி நிறைவு செய்கிறேன்-
வசியப்படுதல், மாயமிழத்தல் முதலானவை பல்பொருள் கொண்ட பதங்கள், இதுவரை இவை பல்வகைப்பட்ட பயன்பாட்டுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன- அதிலும் குறிப்பாக வரலாற்றுப் போக்கையும் மானுட தாக்கத்தையும் விவரிக்க இவ்விரு பதங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. பெரும்பாலும் நாம் இச்சொற்களின் பொருள் என்ன என்று தெளிவாக வரையறை செய்து கொள்ளாமல்தான் இவற்றைப் பயன்படுத்துகிறோம். வழிவழியாக நமக்குக் கிடைத்துள்ள நவீனத்துவம் மற்றும வசியப்படுதல் குறித்த பிரதான கதையாடல் விஷயத்தில் இதுதான் உண்மை. இந்தக் கதையாடல் மாயமிழத்தல் என்ற வரலாற்றுப் போக்கை, வசீகரமிழத்தல் என்ற மானுட தாக்கத்துடன் இணைத்து ஒருசேர புரிந்து கொண்டது. உண்மையில் சார்பற்ற சமூக அறிவியல் வேடம் கட்டிய பண்பாட்டு துயரத்தின் அலறலே இது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இது எங்கும் நீக்கமற நிறைந்திருந்தது.
ஆனால், இக்காலகட்டத்தில்தான் பல்வகைப்பட்ட நவீனத்தன்மை கொண்ட வசீகரங்களால் இது கேள்விக்குட்படுத்தப்பட்டது. இவற்றில் ஒன்று, புனைவுபடுதலை நோக்கித் திரும்பிற்று – முரண்நகைத்தன்மை கொண்ட கற்பனை இத்திருப்பத்துக்கு துணை செய்தது. ஒரே சமயத்தில் வசியப்படுதலும் மயக்கமின்றி இருத்தலும் இக்கற்பனையின் காரணமாக சாத்தியமானது. மானுட கற்பனை, நவீன வசியத்தின் மிக முக்கிய வளமாக இருப்பதை புனைவுபடுதல் சுட்டுகிறது- புனைவைக் கொண்டு எங்கும் நிறைந்த, அனைத்துக்கும் அப்பாற்பட்ட உலகை பல்வகைப்பட்ட வழிகளில் மீள்விவரணை செய்வதைப் புனைவுகள் சாத்தியப்படுத்துகின்றன. இதன் காரணமாக, அதீதங்கள் சமய உணர்வற்ற அமைப்பினுள்ளும் பாதுகாக்கப்படுகின்றன. சமரசமற்ற நம்பிக்கையைல் கோரும் கதையாடல்களின் இடத்தில் நம்பிக்கைகளின் தற்காலிகத் தன்மையையும் அவை சமய சந்தர்ப்பங்களுக்கு உட்பட்டிருப்பதன் தன்மையையும் வலியுறுத்தும் கதையாடல்கள் கைப்பற்றுகின்றன என்பதை இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டும். இதன் அடிப்படையில், “இது போலிருக்கலாம்” என்ற கோணத்தில் இவ்வுலகம் அணுகப்படுகிறது. புனிதம், புனிதமற்றவை என்று இவ்வுலகம் காணப்படுவதற்கு மாறாய், பலரும் புனைவு, யதார்த்தம் என்ற வேறுபாடுகளைக் கொண்டு இவ்வுலகை அறிகின்றனர்- இவ்விரண்டுமே வசியப்படுத்தும் பாதைகளாக இருக்கின்றன.
ஒருவேளை இதனால்தானோ என்னவோ, ஆத்திரமூட்டும் ஒப்பீடு ஒன்றை லுட்விக் விட்கென்ஷ்டீன் செய்தார்- மைண்ட் என்ற தத்துவ இதழையும், தன் விருப்பப் பத்திரிகையான டிடெக்டிவ் ஸ்டோரிஸ் இரண்டையும் ஒப்பிட்டு, அவர் தன் சகா ஒருவருக்கு இவ்வாறு எழுதினார்: “தத்துவத்துக்கும் ஞானத்துக்கும் எந்த தொடர்பாவது இருக்குமென்றால், மைண்டில் எள்ளளவும் உண்மை கிடையாது, துப்பறியும் கதைகளில் திணையளவேனும் அவ்வப்போது அதைப் பார்க்க முடிகிறது”
நன்றி – The Immanent Frame