(Can Xue எழுதிய “The Fair-haired Princess” and Serious Literature என்ற கட்டுரையை Karen Gernant, Chen Zeping ஆகிய இருவரும் Words Without Borders என்ற தளத்தில் ஆங்கில மொழியாக்கம் செய்துள்ளனர். அதன் தமிழ் வடிவம் இது)
அப்பாவின் புத்தக அலமாரிகளில் பெருமளவு மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் புத்தகங்கள் நிறைந்திருக்கும். அடுக்கப்பட்ட புத்தகங்களின் பக்கவாட்டு அட்டைகளில் பொறிக்கப்பட்டிருந்த சில தலைப்புகள் நினைவிருக்கின்றன. புரிந்துகொள்ளக் கடினமாக இருந்த சில தலைப்புகளை மறந்து விட்டேன். தினமும் அப்பாவின் புத்தக அலமாரியைச் சுற்றி வந்து கொண்டிருப்பேன். அப்போது ஒருநாள் திடீரென்று லைப்ரரியிலிருந்து சில ஃபேரி டேல்களை அப்பா வீட்டுக்குக் கொண்டு வந்தார் (அவர் அப்போது நூலக வேலைக்கு அனுப்பப்பட்டு தீவிர கண்காணிப்பில் இருந்தார்- “உழைப்பு வழி மறுகல்வி” என்று இது அழைக்கப்பட்டது). என் அக்கா படிப்பதற்காக அவர் இந்தப் புத்தகங்களை எடுத்து வந்தார். அவள் அப்போது ப்ரைமரி ஸ்கூலில் படித்துக் கொண்டிருந்தாள், நிறைய சொற்களை அறிந்திருந்தாள். அவர் கொண்டு வந்திருந்த புத்தகங்களில் ஒன்றுதான், “பொற்சிகை இளவரசி” (ராபுன்ஸல்). அப்பா புத்தகத்தின் பெயரை ஒரு முறைதான் சொன்னார், ஆனால் எனக்கு அது மறக்க முடியாததாகிவிட்டது. புத்தகத்தின் அட்டையை ஒரு இளவரசியின் படம் அலங்கரித்தது, அவளது பொன்னிற தலைமுடி, கணுக்கால்வரை நீண்டிருந்தது. நான் அந்தப் படத்தை விரிந்த கண்களுடன் வெகு நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். இவ்வளவு அழகிய மஞ்சள் வண்ண முடி யாருக்கு இருக்க முடியும்? அந்தப் பொன்னிற முடியின் ஒரு கற்றையாவது எனக்குக் கிடைத்தால் எவ்வளவு அற்புதமாக இருக்கும்!
அதன் பின் பல நாட்கள், அந்தப் புத்தகத்தைக் கையில் எடுத்ததும் பழக்கமில்லாத புது உணர்ச்சிகள் தோன்றுவதை என்னால் உணர முடிந்தது. யாரும் பக்கத்தில் இல்லாத சமயங்களில் அவ்வப்போது என் பொற்சிகை இளவரசியை எடுத்து கூர்ந்து கவனிப்பேன். அவளது தலைமுடி நிஜமான தங்கத்தால் இழைக்கப்பட்டது என்று நினைத்தேன். அவளது முகம்தான் எவ்வளவு கருணை நிறைந்ததாகவும் மென்மையாகவும் இருந்தது, அவளது அழகில் மயங்கி, அட்டையை என் கன்னத்தில் அழுத்தி வைத்து அணைத்துக் கொண்டேன். அவளைத் தேடிக் கொண்டு என் வீட்டுக்குள் கெட்டவர்கள் வந்தால் யாரும் கண்டுபிடிக்க முடியாத மிக ரகசியமான இடத்தில் என் பொற்சிகை இளவரசியை ஒளித்து வைப்பேன் (எங்கள் வீட்டுக்குப் பின்னால் இருந்த மலையின் குகை போன்ற ஒன்றில்). கெட்டவர்கள் திரும்பிப் போனபின்தான் அவளை மீண்டும் வெளியே எடுப்பேன். அவள் சாப்பிடுவதற்கு எதுவும் இல்லாமல் பசியால் வாடும்போது, எங்களுக்கு இருந்த அந்த ஓரே கறுப்புக் கோழியின் முட்டைகள் அத்தனையையும் அவளுக்குக் கொடுத்து விடுவேன். நேற்று அப்பா எனக்காகக் கொண்டு வந்த சர்க்கரை மிட்டாயையும் அவளுக்குத் தருவேன். அவளது உயிர்த்தோழியாக இருக்க ஆசைப்பட்டேன்.
வெகு காலம் அந்தப் புத்தகம் நூலகத்துக்குத் திருப்பப்படவில்லை. அதை எங்கள் வீட்டுப் புத்தகம் என்றே நினைத்துக் கொண்டிருந்தேன். அடுத்த வீட்டுக் குழந்தையுடன் சண்டை போடும்போது, திடீரென்று என் குரலை உயர்த்தி, “ஹா! எனக்கு பொற்சிகை இளவரசி இருக்கிறாளே, உன்னிடம் இருக்கா, உன்னிடம் இருக்கா?” என்று கத்துவேன். இந்த என் உயர்ந்த நிலையைப் பார்த்து அவள் அடங்கிப் போவாள்.
புத்தகங்களின் தோழமையில்தான் நான் வளர்ந்தேன். என் மிகச்சிறு வயதிலேயே சில புத்தகங்களை, “தீவிர எழுத்து” என்று நினைத்துக் கொண்டுதான் வளர்ந்தேன். அவற்றை உடனே புரிந்து கொள்ள முடியாது. நான் ‘வளர்ந்த’ பின்தான் அவற்றை நெருங்க முடியும். மேலைத் தத்துவம் குறித்து மார்க்ஸ் லெனின் உட்பட பலர் எழுதிய “தீவிர எழுத்து” அப்பாவின் புத்தக அலமாரியில் இருந்தது. நீலவண்ண அட்டை போட்ட காபிடல் புத்தகங்கள், சீன செவ்வியல் இலக்கியம் குறித்த சில தொகுப்புகள் அவற்றில் மிகவும் முன்னின்ற சில நூல்கள்.- பல ஆண்டுகளாக ஒவ்வொரு நாளும் அப்பா இந்தப் புத்தகங்களைப் படித்துக் கொண்டிருந்தார். இவற்றுள் பலவற்றை மீண்டும் மீண்டும் படித்துக் கொண்டிருந்தார்.
இந்தப் புத்தகங்களிலிருந்து பரவிய விசேடமான ஒரு நறுமணம் என்னைக் கனவு நிலைக்குக் கொண்டு சென்றது. எப்போதெல்லாம் நான் வீட்டில் தனியாக இருந்தேனோ, அப்போதெல்லாம் இந்தப் புத்தகங்களை மேஜையில் அடுக்கி, ஒவ்வொன்றாக எடுத்து கவனமாகப் படித்துப் பார்ப்பேன். மிக நெருக்கத்தில் கொண்டு வந்து அவற்றை முகர்ந்து பார்ப்பேன், மீண்டும் மீண்டும் தடவிப் பார்ப்பேன். இந்தப் புத்தகங்களின் கெட்டி அட்டைகள் அலங்காரமில்லாதவை, நுட்பமாய் வடிவமைக்கப்பட்டவை, இவற்றின் பக்கங்கள் அப்பாவின் குறிப்புகளால் நிறைந்திருந்தன. இப்படிப்பட்ட கணங்களில் என் இளநெஞ்சின் உணர்வுகள் போற்றுதலுக்கும் பரவசத்துக்கும் அப்பாற்பட்ட நிலைக்கு உயர்ந்தெழுந்தன. அப்போது நானும் புத்தகங்கள் வாசிக்கத் துவங்கியிருந்தேன், அவற்றில் பெரும்பாலானவை கேளிக்கை எழுத்து..என்னால் அவற்றை அப்பாவின் புத்தகங்களுக்கு இணையாய்க் கருத முடியவில்லை. தற்காலிகமாய் என்னை வசியப்படுத்தக்கூடிய புத்தகங்களை வாசிப்பதில் பெரும் நாட்டம் கொண்டிருந்தேன். படித்து முடித்தபின் அவற்றின் தேவை அடங்கிவிடும். பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்காது. அப்படியே நான் ஆசைப்பட்டிருந்தால் என்னால் அவற்றை வைத்துக் கொண்டிருக்கவும் முடியாது- ஏனெனில், இவற்றில் பெரும்பாலானவை இரவல் புத்தகங்கள். அந்தக் காலத்தில் யாரால் புத்தகம் வாங்க முடியும்?
அப்பாவின் புத்தகங்கள் அலமாரிகளில் மௌனமாய் நின்றிருந்தன- எப்போதும் அவை அமைதியாய் என்னைத் தம்மை நோக்கிக் கவர்ந்து கொண்டேயிருந்தன. அந்தப் புத்தகங்களில் மிக ஆழமான உலகொன்று பொதிந்திருப்பதாய் உள்ளுர உணர்ந்தேன். அந்த உலகினுள் புகுந்து அதன் ஆழங்களை அறிய ஒருவன் தன் வாழ்நாளைச் செலவழிக்க வேண்டியிருக்கலாம். அப்பா அந்தப் புத்தகங்களை இரவெல்லாம் வாசித்தார், பல ஆண்டுகளாக ஒவ்வொரு இரவும் வாசித்துக் கொண்டிருந்தார். அவர் அணிந்திருந்த கண்ணாடிக்குப் பின்னிருந்த தியான முகம் நிச்சயம் ஒரு பாவனையல்ல. வாசிப்பு அவர் உள்ளத்தில் கிளர்த்திய உணர்வுகள் சாதாரண புத்தகங்களைப் படிக்கும்போது எனக்கு ஏற்படும் உணர்ச்சிகளைக் காட்டிலும் மிக வேறுபட்டவை. அது என்ன? யாரும் அதைச் சொல்லிக் கொடுக்க முடியாது- அப்பாவால்கூட முடியாது. “வருங்காலத்தில் நீ என் புத்தகங்கள் அத்தனையையும் படிக்க வேண்டும்,” என்று மட்டும்தான் சொன்னார். எதிர்காலத்தில் நானும் அவரைப் போல் செய்ய வேண்டும் என்று சொன்னாரா என்ன என்று தெரியவில்லை. நானும் தியானத்தில் ஆழ்ந்து அதே புத்தகத்தின்முன் பல ஆண்டுகளாக அமர்ந்திருக்க வேண்டும் என்று சொன்னாரா? புரியவில்லை.
அந்த நாளும் வந்தது- இலக்கியத்துடன் எனக்குப் பிணைப்பு ஏற்பட்ட காலம். எனக்கென்று சில “தீவிர இலக்கிய” புத்தகங்கள் இருந்தன- அவற்றின் எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்தது. என் தேடலின் பிந்தைய நாட்களில், சில புத்தகங்களுக்கு மந்திர சக்தி உள்ளது என்ற உணர்வு அதிகரித்தது. அடர்த்தியாய் தொகுக்கப்பட்ட அந்தச் சொற்களுள், ஆழம் காணப்பட முடியாத உலகம் ஒன்றிருந்தது- அது மொழியின் உலகம், அல்லது இலக்கியம், கலை, தத்துவம், மானுடம் ஆகியவற்றின் உலகம். இந்த உலகம் இன்டராக்டிவ் உலகம் என்பதுதான் விநோத விஷயம்: இந்த உலகை அடைய நாம் தீவிரமாய் தியானித்தால் மட்டுமே இது நமக்குத் திறந்து கொண்டு, தன் செறிவான அடுக்குகளை வெளிப்படுத்துகிறது. உன் தேடலில் சோம்பல் இருந்தால், உனக்கு என்னதான் இயற்கையாய் அமைந்த திறமைகள் இருந்தாலும், அவ்வப்போது மட்டுமே உன்னால் இந்த அதிசய உலகைப் பார்க்க முடியும், ஆனால் ஒருபோதும் உன்னால் இதன் உள்நுழைய முடியாது. ஏக்கப் பெருமூச்சு விட மட்டுமே முடியும். நவீன வாசகன், மீண்டும் மீண்டும் படித்தால் மட்டும் போதாது, அவன் மீண்டும் மீண்டும் தியானித்தால் மட்டும் போதாது, அவன் எழுதியாக வேண்டும்- எழுத்தைக் கொண்டு அவனோ அவளோ, தானறிந்த உலகை விரித்துக் கொள்ள முடியும். இந்த வாசிப்பே நம்மை மிகவும் களைப்படையச் செய்யும் வாசிப்பு, ஆனால் இதுவே நமக்கு மிகுந்த நன்மை பயப்பதாகவும் அமைவது.
தேர்ந்த நவீன வாசகன் ஒரு துப்பறியும் நிபுணன் போல் நடந்து கொள்கிறான். புத்தகங்கள் நிறைந்த காட்டில், அவன் துப்புகளைத் தொடர்ந்து செல்கிறான், அவற்றால் சுட்டப்பட்டு மறைந்திருக்கும் மாபெரும் புதையல்களைக் கண்டுபிடிக்கிறான். இவை அவனுக்குச் செய்திகளை அளிக்கின்றன, அவனது அகத்தினுள் விளங்கும் இருப்பின் அடர் சாரம் உடனே புதிய செய்திகளை உத்பவிக்கின்றது. ஒன்றுடனொன்று ஊடாடும் இந்தச் செய்திகள், ஆன்மாவின் குகைக்குள் அவனை இட்டுச் செல்கின்றன, அங்கே அவன் ஒரு மகத்தான தேடலைத் துவக்குகிறான். இது மர்மம் நிறைந்தது, ஆனால் தெளிவானது: மானுடமும் அமானுடமும் சந்தித்துக் கொள்ளும் கணங்கள் இவை. தீவிர புத்தகங்கள் அனைத்துக்கும் இந்த தன்மை உண்டு. நவீன வாசிப்பு சுவையானதாக இருக்கவேண்டுமென்றால், நம் அகத்தின் சாரத்தைக் கொண்டு, ஆபத்து நிறைந்த இந்த ஆன்மிகத் தேடலில் பயணப்பட வேண்டும்.