– பாஸ்டன் பாலா –
காட்டுப் பறவைகளுக்கு குளிர் காலத்தில் உணவு எளிதில் அகப்படுவதில்லை. நான் இருக்கும் வனாந்திரத்தில் குருவிகளும் மரங்கொத்திகளும் போதாதென்று சிவப்பு, நீலம் என எல்லா நிறங்களிலும் பட்சிகளைப் பார்க்க முடிகிறது. புள்ளினங்களைக் கவர்வதற்காகவே வீட்டின் கொல்லைப்புறத்தில் தீனி வைத்திருக்கிறேன். சிட்டுகளும் சிறகடித்து வரும். கொஞ்சம் கொத்தும். முதலில் சோதனைக்காக, நண்பர்களை அழைத்துச் சாப்பிடச் சொல்லும். அதன் பிறகு பக்கத்து வீட்டு அமுதசுரபிக்கு ஓடிவிடும். அங்கேயும் முகர்ந்தும் ஊர்ந்தும் உரசியும் சோதித்தபின் இன்னொரு கிளையைத் தேடிக் காணாமலேயே போய்விடும்.
இதையெல்லாம் காண்பதற்கு முன்பே, இப்படி புரட்டிப் பார்த்து சோதிக்கும் நிலை எனக்கும் வாய்க்கப் பெற்றிருந்தேன். காய்கறிச் சந்தையில் அரை கிலோ காரட் மட்டும் வாங்கி வரச் சொல்லி அனுப்பியிருப்பார்கள். முதலில் கண்ணில் பட்டவரிடம் ஐந்து கிலோவிற்கான விலை கேட்டு, கேரட்டைத் தொட்டுப் பதம் பார்த்து, பேரம் பேசி, அதன்பின் அந்தக் கடையிலிருந்து விலகி, நாலு கடை தள்ளி, மீண்டும் காரட் ‘கிலோ என்ன விலை’ என்று கேட்டு, ஆதியிலிருந்து அலசலைத் தொடங்குவதில்தான் இந்த சுகானுபவத்துக்கான அஸ்திவாரம் இடப்பட்டது. தொலைக்காட்சியில் தூர்தர்ஷனும் தூர்தர்ஷன் இரண்டாம் அலைவரிசையான மெட்ரோவும் மட்டுமே இருக்கப் பெற்றிருந்தாலும், அவை இரண்டையும் மாற்றி மாற்றி வேடிக்கை பார்ப்பதில் இந்த விளையாட்டு வளர்ச்சியடைந்தது. இப்பொழுது புத்தகக் கடையில் நூல்களை மேய்வதில் வந்து நிற்கிறது.
பத்து பன்னிரெண்டு புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றில் விருப்பமில்லாத பலவற்றை வடிகட்டுவது முதல் நிலை. அப்படியெல்லாம் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, எப்போதும் கண்ணெதிரே இருந்து கவனத்தை ஈர்த்தாலும், கடைசி பதினொன்றில் ஒருவராகக் களமிறங்காத நான்குப் புத்தகங்கள் குறித்த அறிமுகம், இந்தக் கட்டுரையாக வந்திருக்கிறது.
1. The World of Raymond Chandler: In His Own Words :: Edited by Barry Day
எழுத்தாளர் எஸ். சுரேஷ் சொல்வனம் இணையஇதழில் எழுதிய “தன்மானத் தேடல் – ரேமண்ட் சான்ட்லரின் ஃபிலிப் மார்லோ” என்ற கட்டுரையின் தீவிர இலக்கியக்குரலைக் கேட்டு (“சாண்ட்லரின் மொழியில் ஓர் இறுக்கம் உண்டு. மைக் டைசனின் நாக் அவுட் பஞ்ச்கள் போல அவரது ஒன்லைனர்கள் எங்கிருந்து வந்தது என்றே தெரியாமல் சரியான நேரத்தில் சரியான இடத்தில் வந்து விழுகின்றன”)- இப்படியும் ஒரு துப்பறியும் கதையை ரசிக்க முடியுமா என்ற ஆவலில் ரேமண்ட் சாண்ட்லர் கதைகளைக் கறாரான வாசிப்புக்கு உட்படுத்தியபோதுதான் இந்தப் புத்தகத்தை எடுத்துப் புரட்ட ஆரம்பித்தேன்.
எழுத்தாளரின் புனைவை வைத்தே அவருடைய வாழ்க்கையைச் சொல்ல முடியுமா? இந்தப் புத்தகத்தில் ரேமண்ட் சாண்ட்லரின் எழுத்துக்களை வைத்தே அவரைப் பற்றிய குணச்சித்திரத்தை எழுப்புகிறார்கள். 250 பக்கங்கள்; ஒரு பக்கத்திற்கு இரண்டு டஜன் மேற்கோள்கள்.
- கதை எழுதும் வேலை குறித்து: – ‘எல்லாப் புத்தகங்களையும் படித்ததால் மட்டும் நல்ல புத்தகங்களை எழுதி விட முடியாது!’
- கதாபாத்திரங்களின் முகலட்சணங்கள் குறித்து: – ‘அவனுடைய வாய்க்குள் பல் மருத்துவரின் முழங்கையே நுழைந்து விடும்.’
- குரல்களும் பேச்சொலிகளும் குறித்து: ‘அப்பொழுதுதான் ரொட்டி தின்னும் போட்டியில் வெற்றி பெற்றவன் போன்ற சாரீரத்தில்…’
- ‘அவனது தோற்றத்தில் இரும்படிப்பவனின் கௌபீனம் போன்ற கவர்ச்சி இருந்தது.’
எனக்கு பட்டியல்கள் மிகவும் பிடிக்கும். இந்தப் புத்தகம் ரேமண்ட் சாண்ட்லர் எழுதிய நூல்களில் இருந்தும் கடிதங்களில் இருந்தும் எடுக்கப்பட்ட மேற்கோள்களின் தொகுப்பு. அந்த மேற்கோள்களைக் கொண்டு, ரேமண்ட் எப்படி சிந்திக்கிறார் என்றும் அவரின் எண்ணங்கள் எவ்வாறு காலப்போக்கில் மாறுகின்றன என்றும் இங்கிலாந்து, சிகாகோ, லாஸ் ஏஞ்சலீஸ் போன்ற நகரங்கள் குறித்த அவருடைய விவரிப்புகளையும் ஒருங்கே அறிய முடிகிறது. அதனால் இந்தப் புத்தகம் என்னைக் கவர்கிறது.
ஆனால், கடகடவென்று நாலைந்து சொற்றொடர்களைப் படிக்கும்போது ஒரு கோர்வை கிடைக்க வேண்டும். நாவலில் அது கிடைக்கும். இந்தப் புத்தகமோ மதச்சார்பற்ற பைபிள் போல, மறைச்சார்பற்ற திருக்குறள் போல- அதனால், இருபத்தி இரண்டாம் பக்கத்தில் இரு மேற்கோள்கள், எழுபத்தி ஆறாம் பக்கத்தில் மூன்று வாக்கியங்கள் – எனப் படித்து, மூடி வைத்து விட வேண்டியதாகிறது. முதலில் ரேமண்ட் சாண்டலரின் ஒரு நாவலையாவது முழுமையாகப படித்து வாசிப்போம், அதன் பின் இது போன்ற தொகுப்புகளுக்குள் நுழையலாம் என்று நினைத்துக் கொண்டு எடுத்த இடத்திலேயே வைத்து விடுகிறேன்.
2. Your Fathers, Where Are They? And the Prophets, Do They Live Forever? by Dave Eggers
டேவ் எக்கர்ஸ் மெக்ஸ்வீனியைத் (McSweeney’s) தோற்றுவித்தவர். சுவாரசியமான பல நூல்களை எழுதியவர். பின் நவீனத்துவம் தனக்குப் பிடிக்கும் என்பதை உணர்த்தியவர்.
‘உங்கள் தந்தையர்கள் எங்கே? புனித குருமார்கள், அவர்கள்தான் சாஸ்வதமா?’ என்று பொருள் தரும் தலைப்பு சுண்டியிழுத்தது. அது விவிலியத்தில் இருந்து கையாளப்பட்டுள்ள மேற்கோள்.
இந்த நூல் முழுக்க முழுக்க உரையாடல்களால் ஆனது. ஒரு கதாபாத்திரத்தை அறிமுகம் செய்ய வேண்டுமென்றால், அவளின் உயரம், அங்க அடையாளம், உடை அலங்காரம், நடை பாணி என்றெல்லாம் விலாவரியாக இதில் சித்தரிக்க முடியாது.
நீங்கள் கேட்கலாம்- திரைப்படங்களிலும் தொலைக்காட்சிகளிலும் உரையாடல் மட்டும்தானே வெளிப்படுகிறது, என்று. ஆனால், சினிமாவில் அந்தக் கதாபாத்திரத்தின் முகமும் நடிப்பும் தசைகளும் அவர்களுக்குப் பின்னே இருக்கும் அரங்கப்பொருட்களும் அந்தக் குறிப்பிட்ட மனிதரின் குணச்சித்திரத்தை நமக்கு நன்கு அறிமுகம் செய்யும். இந்த நாவலில் அந்த மாதிரி பின்னணிக்கே இடமில்லை.
எதற்கெடுத்தாலும் சந்தேகப்படுபவர்களை, ‘டவுட்டிங் தாமஸ்’ என்பார்கள். இந்த நாவலின் முக்கிய கதாபாத்திரத்தின் பெயர் தாமஸ். அவனுடைய அத்யந்த சிநேகிதனை இரண்டாண்டுகளுக்கு முன்பு காவல்துறை சுட்டுக் கொன்றுவிட்டது. அவனுடைய தோழனை ஏன் கொன்றார்கள் என்றறிந்து கொள்வதற்காக ஏழு பேரை தாமஸ் கடத்துகிறான். அந்த ஏழு பேர் யார்? எப்படி அவர்களை கடத்துவதற்கு தீர்மானிக்கிறான்? இதுதான் நாவல்.
அமெரிக்காவில் இப்பொழுது எங்கு பார்த்தாலும் காவல்துறை கொடுத்த காசுக்கு அதிகமாகவே கூவுகிறது என்னும் சஞ்சலம் வீதிகளில் வீரியமான கோஷங்களாகவும், போராட்டச் செயலாக்கத்திற்கும் அடிக்கல்லாக முழங்குகிறது. ஃபெர்கூசனில் மைக்கேல் பிரவுன் கொல்லப்பட்டது போன்ற சம்பவம்தான் – இந்தக் கதையில் தாமஸின் நண்பனுக்கு நிகழ்ந்திருக்கிறது. வெறுங்கையை வீசிக் கொண்டிருப்பவன் தன்னைத் தாக்கி, தீர்த்துக்கட்டிவிடக் கூடும் என்ற அச்சத்தைகே காரணம் காட்டி, காவல்துறை சிறுபான்மையினரை ‘தற்காப்புக்காக’ கொல்வதை அன்றாடம் செய்திகளில் பார்க்கிறோம். நியுயார்க் நகரத்தின் கார்னர் ‘என்னால் மூச்சு விட முடியவில்லை’ என்று கதறினாலும், கறுப்பராக இருப்பதால் கண்டு கொள்ளாத காவல்துறையை செய்தித்தாளில் படிக்கிறோம். உண்மையறியும் குழுவின் ஒற்றை படைவீரனான தாமஸ், அப்படிப்பட்ட ஒரு செய்தியாகி மறைந்து போன நண்பன் கொலையை எப்படி துப்பு துலக்குகிறான் என்பது நாவலின் உள்ளடக்கம்.
இந்த மாதிரிக் கதையில் தாமஸ் போன்ற பாத்திரத்தை படு புத்திசாலியாகச் சித்தரிக்க முடியாது. அவ்வளவு சாமர்த்தியமானவர்கள் ஏன் மனநிலை பிழற்ந்தவர் போல் ஆட்கடத்தலில் ஈடுபட்டு கஷ்டப்படுகிறார்கள்? அப்படிப்பட்ட அதிமனிதர்கள் வேண்டுமானால் நேரடியாக பிரச்சினையின் மூல சூட்சுமத்தை அறிய முடியும். அதற்காக தாமஸ் கதாபாத்திரத்தை படுமுட்டாளாகவும் சித்தரிக்க முடியாது. அப்படி காண்பித்தால், அமெரிக்க அரசியல்வாதியையும் மருத்துவமனை தலைமை பொறுப்பில் இருப்பவரையும் அவர்களுக்குரிய பாதுகாப்பு கெடுபிடிகளிலிருந்து கவர்ந்து, கடத்திக் கொண்டு வருவது நம்ப இயலாமல் போய்விடும். இந்த மாதிரி சித்தரிப்பையெல்லாம், உரையாடலின் மூலமாகவே, இருவருக்குள் நடக்கும் சம்பாஷணைகளாகவே, எவ்வாறு எக்கர்ஸ் எழுதி இருக்கிறார்?
நிச்சயம் வாசிக்க வேண்டும்.
ஆனால், புனைவுகள் நூலகத்தில் கடன் வாங்கி படிக்கப்பட வேண்டியவை என்பது என் கருத்து. நான் பல்லாண்டு காலமாக நெட்ஃப்ளிக்ஸ் வைத்திருக்கிறேன். நெட்ஃப்ளிக்ஸில் பார்க்க வேண்டிய திரைப்படங்கள் என்று சென்ற வார கணக்கு வழக்கின்படி நூற்றி ஆறுபத்தி நான்கு படங்களைப் பட்டியலில் சேமித்து வைத்திருக்கிறேன். அந்த 164 சினிமாக்களை விட்டுவிட்டு, நேற்று வந்த “இடா” படத்தை இன்றே பார்த்தும் விடுகிறேன். ஏற்கனவே விழைவுப் பட்டியலில் இருக்கும் 164ம் அப்படியே படு பத்திரமாக நீடுழி பன்னெடுங்காலம் அவ்வாறே அந்தந்த\ இடத்தில் நீடிக்கும். இப்படிப்பட்ட சோம்பேறிக்கு நூலகக் கெடுவே சாலச் சிறந்தது. நான்கு வாரம் தருவார்கள். அதற்குள் கிடுகிடுவென்று படித்து விட்டு திருப்பிக் கொடுத்தாக வேண்டும். நூலின் சுவாரசியமும் குன்றாமல், அதற்கான அவசரத்தையும் கருத்தில் கொண்டு, புத்தம் புதிய, பரபரப்பான விற்பனையில் உள்ள புத்தகத்தையும் பத்து பைசா செலவில்லாமல் படிக்கலாம். இதை எல்லாம் விலை கொடுத்து வாங்கி வீட்டில் வைத்துக் கொள்வது தப்பு என்று தெரிகிறது.
இரண்டு புத்தகங்கள் ஆகிவிட்டது. பாக்கி இரண்டு புத்தகங்கள்? படித்தால்தானே, அவற்றைப் பற்றி குறிப்புகள் எழுத முடியும்!?!