இவ்வருட புத்தக கண்காட்சிக்கு ‘பிரக்ஞை’ வெளியீடாக வரவிருக்கும் புத்தகங்களைப் பற்றி தமிழ்ப்பெண் விலாசினியுடன் பதாகை நிகழ்த்திய மினஅஞ்சல் உரையாடல்.
நல்ல புத்தகங்களை தங்கள் பதிப்பகம் வழியே கொண்டு வரவேண்டும் என்ற குறிக்கோளுடன் செயலாற்றும் பிரக்ஞை பதிப்பகத்தாரின் முயற்சிகள் வெற்றி பெற உளங்கனிந்த வாழ்த்துகளை பதாகை தெரிவித்துக் கொள்கிறது.
பதாகை: உங்கள் பதிப்பகம் எத்தகைய புத்தகங்களைப் பதிப்பிப்பதில் கவனம் செலுத்துகிறது? அதன் நோக்கங்கள் என்ன?
பிரக்ஞை: நல்ல புத்தகங்கள் ‘பிரக்ஞை’ வழி வர வேண்டும். இதுதான் முதலும் முற்றுமான குறிக்கோள். ஆனால், இப்பதிப்பகம் தொடங்கலாம் என்று திட்டமிட்டபொழுது நண்பர் திரு பி.என்.எஸ் பாண்டியனுக்கும் எனக்கும் தோன்றிய முதல் விஷயம், இதுவரை வந்த பல நல்ல புத்தகங்கள், இன்றைய தேதியில் படிப்பதற்குக் கிடைக்காத புத்தகங்களை வெளிக்கொண்டு வர வேண்டும் என்பது. அதனால் முதல் முயற்சியாக, கொஞ்சம் கடினமான பரிசோதனைதான் என்றாலும், நல்ல பழைய புத்தகங்களை தேர்ந்தெடுக்க முடிவு செய்தோம். முதலில் நான்கு புத்தகங்களைக் கொண்டு வர முயன்றோம். நான்காவது புத்தகத்தைக் கொண்டு வருவதில் சில பிரச்சனைகள் இருந்ததால், இந்த முறை சென்னை புத்தகச் சந்தைக்கு மூன்று புத்தகங்கள் கொண்டுவருகிறோம். அடுத்தடுத்து, இந்த வருடத்திற்குள் இன்னும் சில புத்தகங்கள் கொண்டுவர திட்டமிட்டுள்ளோம்.
பதாகை: இவ்வாண்டு பதிப்பிக்கப்படும் மூன்று புத்தகங்களில் இரண்டு தமிழ், ஒன்று ஆங்கிலம். இந்த ஆங்கில நூல் எம் வி வெங்கட்ராம் எழுதிய நித்யகன்னி நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு. இதைத் தேர்ந்தெடுக்க என்ன காரணம், தற்போது அதிகம் பேசப்படாத நிலையில் உள்ள நித்ய கன்னி நாவலின் சமகால முக்கியத்துவம் என்ன?
பிரக்ஞை: இந்தப் பதிப்பகத்தின் மற்றொரு முக்கிய நோக்கமாக மொழிபெயர்ப்புகளைச் சொல்லலாம். மற்ற மொழி இலக்கியங்கள் தமிழுக்கு எவ்வளவு முக்கியமோ, அதே அளவு முக்கியத்துவம் வாய்ந்தது தமிழ் எழுத்தை, தமிழ் எழுத்தாளரை, பிற மொழிகளுக்குக் கொண்டு செல்வது. முதலில், இந்தியாவின் அறிவிக்கப்படாத அலுவல் மொழியான ஆங்கிலத்தில் தொடங்கியுள்ளோம்.
‘நித்யகன்னி’ நாவலைத் தேர்ந்தெடுத்தது ஏன் என்றால் நாவலின் கருதான் அதன் காரணம். நாவலைப் படித்தபொழுதே ‘பெண்ணியம்’ என்ற கருத்து எத்தனை அற்புதமாக, இதிகாசக் காலத்தில்கூட பொருத்தி வாசிக்கப்படும் வகையில் திரு எம் வி வெங்கட்ராம் அவர்களால் கையாளப்பட்டிருக்கிறது என்ற வியப்பு மேலோங்கியது. அதுமட்டுமல்லாமல், நாவலின் மொழியும் மற்றொரு காரணம். பொதுவாக புராண, இதிகாசங்களை அடிப்படையாகக் கொண்ட புனைவுகளின் மொழி வாசிப்பதற்கும், புரிந்துகொள்வதற்கும் சற்று கடினமாக இருக்கும். ஆனால், இந்த நாவலில் அப்படி ஒரு குறையையே பார்க்க முடியாது. அத்தனை இனிமையான நடையில், மிக ஆழமான விஷயத்தை மிகச் சிறப்பாக ஆசிரியர் கையாண்டிருக்கிறார். இது தமிழ் படிக்கத் தெரிந்தவர்களுக்கு மட்டும் தெரிந்தால் போதுமா? உலகின் அத்தனை மொழிகளைவிடவும் பெண்ணியம் பேசிய எமது தாய்மொழியின் பெருமையை எங்ஙனம் நாம் மற்ற மொழியினருக்கும் எடுத்துரைப்பது, மொழிபெயர்ப்பு வழி அல்லாது?
இந்நாவலுக்கு திரு.மாலன் அவர்களின் ஆங்கில முன்னுரை இன்னும் சிறப்பு சேர்க்கும் என்று நம்புகிறோம்.
பதாகை: சத்யஜித் ராய் நூலில் உள்ள கட்டுரைகள் மற்றும் நேர்முகங்கள் எந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு தொகுக்கப்படுகின்றன? இதில் சிறப்பாகச் சொல்லக்கூடிய கட்டுரைகளும் நேர்முகங்க்ளும் உண்டா? இதன் உள்ளடக்கம் என்ன?
பிரக்ஞை: திரைக்கதை, ஒலியமைப்பு, கலைஞன், நடிப்பு, இன்றைய சினிமா, ராயின் தத்துவக்கோட்பாடு, நேர்காணல், பார்வையாளர்கள், சினிமாவில் இசை போன்ற திரைத்துறையின் பல்வேறு தளங்களைப் பேசும் தொகுப்பு இது. அதாவது ராய் பற்றிய அறிமுகம், அவருடைய நேர்காணல், யதார்த்த சினிமா போன்ற அடிப்படையில் கட்டுரைகள் உள்ளன.
இப்புத்தகத்திற்கு பிரசாத் ஸ்டூடியோசின் இயக்குனர் திரு. வெங்கடேஷ் சக்ரவர்த்தி முன்னுரை எழுதியுள்ளார் என்பது புத்தகத்திற்கான கூடுதல் மதிப்பைப் பெற்றுத் தரும் என்று நம்புகிறோம்.
பதாகை: மறைந்த எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன், எண்பதுகளில் எழுதிய “புயலின் மையம்” நாவலைத் தமிழில் மறுபிரசுரம் செய்கிறீர்கள், அல்லவா? இந்த நாவல் சமகாலத்தன்மை கொண்டது என்று கருதுகிறீர்களா, ஏன்?
பிரக்ஞை: கற்பனைக்கு ஏது காலத்தின் கட்டுப்பாடு? நமது இதிகாசங்களும் புராணங்களும் வெறும் கற்பனையென்று வைத்துக் கொண்டாலும், அவை இன்றளவும் வாசிக்கப்படவில்லையா, அவற்றின் மொழிக் கடினத்தையும் கடந்து? புயலின் மையம் என்ற நாவல் கற்பனையே என்றாலும், நாவலின் காலம் முப்பது ஆண்டுகளுக்கு முந்தையது என்றாலும், நாவலின் கரு சாதாரண மனிதர்களைப் பற்றியது.
அதுமட்டுமில்லாமல், நாவலின் மறுபிரசுரத்தில் ராஜம் கிருஷ்ணனுக்கான அஞ்சலியாக அவருடைய இரண்டு நண்பர்களின் கட்டுரைகளும், அஞ்சலிக் குறிப்பும், எழுத்தாளர் அம்பை அவர்களின் முன்னுரையும் இடம் பெற்றுள்ளன. ஒரு நாவலில் இது போன்று கட்டுரைகளை இணைத்து வெளியிடுவது நிச்சயம் புது முயற்சி என்றும், எழுத்தாளருக்கு உண்மையான அஞ்சலியாக இது இருக்கும் என்றும் நம்புகிறேன்.
பதாகை: இந்தப் புத்தகங்களை வெளியிடுவது நிறைவான அனுபவம் என்று சொல்ல முடியுமா, இதில் எதிர்கொண்ட சவால்கள் என்ன?
பிரக்ஞை: நிறைவான அனுபவமா என்று சொல்வதற்கு இது மிகக் குறுகிய காலம் என்று நினைக்கிறேன். பதிப்பகம் தொடங்கி இரண்டு மாதங்களே ஆகின்றன. நிச்சயம் மற்ற பதிப்பகங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் எங்களுக்கும் இருந்தன, இருக்கின்றன. ஆனால் அதையும் தாண்டிய சில சவால்களையும் நாங்கள் சந்திக்க நேர்ந்தது. முதன்முதல் புத்தகங்கள் வெளியிடும் பதிப்பகமாக இருந்தாலும் பழைய புத்தகங்களைக் கொண்டு வர முடிவு செய்தது, எழுத்தாளர்களுக்கு தக்க ராயல்டி வழங்கியது, காப்பீட்டு உரிமம் பெறுவது என்று அனைத்தையும் முதலிலிருந்தே வெளிப்படையாக, நேர்மையாக அணுகியது எங்கள் பலம். இதில் தடங்கல்களும் இருக்கவே செய்தன. அவற்றைக் கடந்து இந்த மூன்று புத்தகங்களைக் கொண்டு வருவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.
பதாகை: இந்த மூன்று நூல்களும் எத்தகைய தாக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? பண்பாட்டுப் புலத்துக்கு அப்பால், வணிக வெற்றி அடையும் என்ற நம்பிக்கை இருக்கிறதா?
பிரக்ஞை: இலக்கியம், ஆத்ம திருப்தி, சேவை என்பதைக் கடந்து லாபம் பெறும் நோக்கம் எங்களுக்கும் இருக்கிறது என்பதை ஒப்புக் கொள்வதில் தயக்கமேதுமில்லை. ஆனால் நோக்கம் வெறும் லாபம் ஈட்டுவதாக இருக்காது என்பதிலும் கவனமாக உள்ளோம். அதற்கேற்றவாறு புத்தகங்களைத் தேர்ந்தெடுப்பதிலும், சந்தைப்படுத்துவதிலும் கவனமாகவே செயல்பட உள்ளோம். எண்ணிக்கையை விடவும் தரம் என்றும் முக்கியம். அதிலிருந்து வழுவமாட்டோம் என்று அறிவிப்பதில் பெருமை அடைகிறோம்.
இந்த நேர்காணலுக்கு வாய்ப்பளித்த பதாகைக்கும், திரு. ராஜ்மோகன், மொழிபெயர்ப்பாளர் திரு. சுரேஷ் அவர்களுக்கும் ‘பிரக்ஞை’ வழி எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
பிரக்ஞை பதிப்பக வெளியீடுகள், 2015 சென்னை புத்தக கண்காட்சியில் 460, 488 மற்றும் 577 அரங்குகளில் கிடைக்கும்.
சத்யஜித் ராய் திரைமொழியும் கதைகளமும் புத்தகம் எனக்கு தேவை எப்படி வாங்குவது?
பிரக்ஞை பதிப்பக வெளியீடுகள், புத்தக கண்காட்சியில் 460, 488 மற்றும் 577 அரங்குகளில் கிடைக்கும்.