நித்ய கன்னி – ஆங்கில மொழிபெயர்ப்பாளர் எஸ் சுரேஷ் குறிப்பு

(கருத்து சுதந்திரம் அனைத்து திசைகளிலிருந்தும் கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

நித்யகன்னி நாவலை தான் எழுத நேர்ந்தது குறித்து எம் வி வெங்கட்ராம் முன்னுரையில் இவ்வாறு எழுதுகிறார்-

“பெறற்கரிய பேறு பெற்றாள் மாதவி என்னும் பெண்.

“மகவு ஈன்றதும் இழந்த கன்னித்தன்மையைத் திரும்பப் பெறும் பேறுதான் அது. அதன் பயனாக மூன்று அரசர்களையும் ஒரு முனிவரையும் மணந்து, நான்கு குழந்தைகளைப் பெற்று, பெற்ற இடத்திலேயே அவைகளை விடுத்து- கன்னியாகவே தந்தையிடம் திரும்புகிறாள் அவள். அவளுக்கு சுயம்வரம் வைக்க விழைந்த தந்தையின் விருப்பத்தை மறுத்து நித்யகன்னி காட்டுக்குத் தவம் செய்யக் கிளம்பினாள் என்று பாரதம் கூறுகிறது.

“நான் இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்தவன்; மனித இனத்துக்குப் பெரும் பேறாக இருக்க வேண்டிய அணுசக்தி அசுரசக்தியாக உலகை வதைக்கும் கொடுமையைக் கண்டவன்! வரபலத்தால் இன்பமாக வாழவேண்டிய மாதவி, கானகத்துக்குத் தவம் இயற்றப் போகும் அளவு விரக்தி கொண்டதைக் கண்டு அவள்பால் பரிவு கொண்டேன். இந்தப் பரிவைச் சுற்றித்தான் கதையை வளர்த்தேன்”

எம்விவியின் கற்பனையில் மாதவி, சமூக வெளியின் பல்புழக்கத்தாலும் பல்வகைப் பயன்பாட்டாலும் களங்கப்படாமல் சுதந்திரமாய்த் தன்னிலை நிற்றலின் உருவகம் ஆகிறாள். ஆன்மிக அற விழுமியங்களும் சமூக ஒழுக்க நியதிகளும் பெண்மையை மட்டுமல்ல, உடைமை ஆக மறுக்கும் அத்தனை சுதந்திரங்களையும் கட்டுப்படுத்த முடியாது என்கிறார் எம்விவி.

கலாசார காவலர்களாய் இருக்கும் உரிமை, ஆன்மிக அற விழுமியங்களை நிர்ணயிப்பவர்களுக்கா, சமூக ஒழுக்க நியதிகளைக் கட்டிக் காப்பவர்களுக்கா, எழில்நோக்கு கொண்டவர்களுக்கா என்ற கேள்வி பட்டிமன்றத்துக்கு உரியது எனத் தோன்றக்கூடும். ஆனால், தத்துவ தளத்தில் நீண்ட உரையாடல்கள் கொண்ட ஒரு கதையை அமைத்து மனிதனைப் பண்படுத்தும் பார்வையாய் அழகியலை முன்னிருத்துகிறார் எம்விவி.

ஹிருதயங்களுக்கும் உணர்ச்சிகளுக்கும் போதுமான அளவு கௌரவத்தை தர்மம் அளிக்க வேண்டும்,” என்று அறைகூவல் விடுக்கும் இந்த நாவல் இன்று நமக்கு மிகவும் அவசியப்படுகிறது. கருத்து சுதந்திரம் அறிதலைக் காட்டிலும் புரிதலையே சாத்தியப்படுத்துகிறது; அதற்கெதிரான நடவடிக்கைகள் உண்மைகளை மறைத்து அறியாமையில் அல்ல, உணர்வுகளை மறுத்து ஆன்மிக இருளில் ஆழ்த்துகின்றன.

இதற்கு எதிரான எச்சரிக்கையாய் ஒலிக்கும் எம் வி வெங்கட்ராமின் நித்யகன்னி நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கும் நண்பர் எஸ் சுரேஷ், ஒரு அவசிய சேவை செய்திருக்கிறார், வாழ்த்துகள்.)

oOo

மொழிபெயர்ப்பாளர் குறிப்புகள்- எஸ். சுரேஷ்

குறுந்தொகை பாடல்கள் சிலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததுதான் என் கன்னி முயற்சி. இந்த முயற்சியைத் துவங்கியபோது மொழிபெயர்ப்பில் உள்ள சிக்கல்களை ஓரளவுக்கு நன்றாகவே உணர்ந்தேன் (சங்கப் பாடல்களை மொழிபெயர்த்து உலக அளவில் பாராட்டப் பெற்றுள்ள ஏ கே ராமானுஜன், இந்தப் பாடல்களை மொழிபெயர்ப்பதன் சிக்கல்களை மிக விரிவாகவே எழுதியிருக்கிறார்). நான் மொழிபெயர்த்த பாடல்களில் பதின்மூன்று, சாகித்ய அகாதெமி பிரசுரமான ‘இந்தியன் லிடரேச்சர்” ஏப்ரல் 2014 இதழில் பதிப்பிக்கப்பட்டன.

எம் வி வெங்கட்ராமின் ‘நித்யகன்னி’, நான் மொழிபெயர்த்திருக்கும் முதல் நாவல். பாரதத்தில் உள்ள ஒரு சிறு குறிப்பை விரிவாக்கம் செய்து எம் வி வெங்கட்ராம் இந்த நாவலைப் படைத்திருக்கிறார் (\”மகாபாரதத்தை ஆர்வத்துடன் வாசிப்பவரும்கூட மாதவியைத் தவற விட்டிருக்கலாம்,” என்று இந்த நூலின் முன்னுரையில் மாலன் குறிப்பிடுகிறார்).  நாவல் மகாபாரத காலகட்டத்தில் அமைந்திருப்பதால், பண்டைய பிரதிகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை நானும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

இந்த நாவலின் அடிப்படை விவாதம், தர்மத்தின் தன்மை குறித்தது. இது அவ்வளவு எளிதாக மொழிபெயர்க்கப்படக்கூடிய சொல்லல்ல. ஒரு இந்தியனுக்கு தர்மம் என்ற சொல், ஒழுக்கம், அறம், நீதி மற்றும் பல பொருள் உணர்த்தும் கூட்டுச்சொல்லாக இருக்கிறது. தர்மத்தின் பாதையில் நடப்பதையே ஒவ்வொரு மனிதனும் தன் லட்சியமாகக் கொண்டாக வேண்டும் என்று இதையே நம் புனித நூல்கள் சொல்கின்றன. ஆனால் தர்மத்தின் பொருள் இந்தியர்களுக்கு மட்டுமே விளங்கும் தனித்தன்மை கொண்டது, அதன் சாரத்தை இந்தியரல்லாத வாசகருக்கு மொழிபெயர்ப்பைக் கொண்டு உணர்த்துவது கடினம். இந்த புத்தகத்தில், சூழ்நிலைக்கேற்ற வகையில் தர்மத்தைக் குறிக்க ‘morality’, ‘justice’, ‘ethics’ முதலான சொற்களைப் பயன்படுத்தி இருக்கிறேன்,. பல பொருட்களை உணர்த்தும் சொற்களைக் கையாள இதே உத்தியைத் தொடர்ந்திருக்கிறேன். குறிப்பிட்ட ஒரு சூழ்நிலைக்கு எந்த ஆங்கில சொல் பொருத்தமாக இருக்குமோ, அதையே தேர்ந்தெடுத்திருக்கிறேன்.

வரலாற்று நாவல்களில் ஒரு பாத்திரத்தின் பெயரையும் அவரது விளிப் பெயரையும் மாற்றி மாற்றி பயன்படுத்துவது இயல்பே. உதாரணத்துக்கு, யயாதி, தர்மத்தின் காவலன் என்று பொருள்பட, தர்மராஜன் என்று அழைக்கப்படுகிறான். எனவே, யயாதியைப் பேசும்போது, யயாதி, தர்மராஜன் என்ற இரு பதங்களுமே பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இதை ஆங்கிலத்தில் செய்வது இந்தியரல்லாத வாசகர்களைக் குழப்பக்கூடும். எனவே, எல்லா இடங்களிலும் யயாதி என்ற பெயரையே இந்த நாவலில் பயன்படுத்துகிறேன். குறிப்பிட்ட ஓர் இடத்தில் தர்மராஜன் என்ற பதத்தைப் பயன்படுத்துவது முக்கியமாக இருக்கும்போது, அங்கு நான், ‘Yayati, the King of Justice’ என்று மொழிபெயர்த்திருக்கிறேன். அதேபோல், விஸ்வாமித்திரர், இந்த நாவலில் விஸ்வாமித்திரர் என்றும் கௌசிக முனி என்றும் அழைக்கப்படுகிறார். நான் விஸ்வாமித்திரர் என்ற பதத்தை மட்டுமே பயன்படுத்துகிறேன்.

காலவனைப் பற்றி பேசும்போது, காலவன், காலவர் என்ற இரு பதங்களும் பயன்படுத்தப்படுகின்றன. காலவனோடு பேசுபவர் யார் என்பதை இந்த இரு பதங்கள உணர்த்துகின்றன. காலவ்ர் என்பது மரியாதையை உணர்த்துகிறது, இதை தமிழ் வாசிப்பவர் அறிந்து கொள்வார். ஆனால் இந்த இரு பதங்களையும் பயன்படுத்துவது பிறரைக் குழப்பக்கூடும். அதற்காக, காலவர் என்பதை, ‘ஸார்’, என்று சொல்வதும் சரியாக இருக்காது. எனவே அனைத்து இடங்களிலும் காலவன் என்ற சொல்லையே பயன்படுத்துவதாக முடிவு செய்தேன்- பிற பாத்திரங்கள் அவர் மேல் வைத்திருக்கும் மரியாதையை வாக்கிய அமைப்பே உணர்த்தட்டும். காலவர் இது குறித்து குறைப்பட்டுக் கொள்ள மாட்டார் என்று நம்புகிறேன்.

வேறு சில இடங்களில், சம பொருள் கொண்ட ஆங்கில சொல்லைப் பயன்படுத்துவதும் சாத்தியமில்லை. அந்த இடங்களில் நான் தமிழ் சொல்லையே பயன்படுத்தியிருக்கிறேன், அதன் பொருளைத் தனியாக அருஞ்சொற்பொருள் அட்டவணையில் தந்திருக்கிறேன். குருபத்தினி என்ற சொல்லை எடுத்துக் கொள்ளலாம். இதை குருவின் மனைவி என மொழிபெயர்க்கலாம் என்று சொல்வது எளிதாக இருக்கிறது. ஆனால் குருபத்தினி குருவின் மனைவி மட்டுமல்ல, சீடனின் தாயாகவும் இருக்கிறார். அதேபோல், தேவன், கந்தர்வன் போன்ற சொற்களையும் மொழிபெயர்க்கவில்லை.

இந்த நாவலில் மற்றொரு முக்கியமான சவால், இதன் மொழி இன்றைய வாசகர்களுக்கு ஏற்ற வகையில் நவீனத்தன்மை கொண்டதாகவும், பழங்காலத்துக்கு உரிய அழகு கொண்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய வேண்டியிருந்தது. கதை பழங்காலத்தில் நடக்கிறது என்ற உணர்வைக் குலைக்கும் அளவுக்கு நவீனத்தன்மை கொண்டதாக இல்லாத வகையில் சொற்றொடர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது. இந்த விஷயத்தில் நான் எந்த அளவுக்கு வெற்றி பெற்றிருக்கிறேன் என்பதை வாசகர்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.

என்னைப் போன்ற ஒரு வளரும் எழுத்தாளன் மீது நம்பிக்கை வைத்து முக்கியமான ஒரு நாவலை மொழிபெயர்க்கும் பணியை அளித்த, பிரக்ஞை பதிப்பகத்தைச் சேர்ந்த விலாசினிக்கும் நண்பர் ராஜ்மோகனுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் என்மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நியாயம் செய்துள்ளேன் என்று நம்புகிறேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.