மேலெழும்பும் சிலர் – ஹெலன் டூயிவிட் சிறுகதையை முன்வைத்து

பாஸ்டன் பாலா

”உங்களுக்கு பொருட்டில்லாததை விற்கிறீர்கள். தேவடியாத்தனம் செய்யும்போது அது உடம்பு. பதிப்பிக்கும்போது, அது மூளை. மூளையை வைத்துதானே புத்தகம் எழுதுகிறோம்…”

ஆஃபீஸ் ஸ்பேஸ் (Office Space) படம் பார்த்திருப்பீர்கள். அந்தப் படத்தை இன்னும் கொஞ்சம் இலக்கியத்தரமாக எழுதினால், வாசகனை கொஞ்சம் யோசிக்க வைக்குமாறு புத்தகமாக உருவாக்கினால் எப்படி இருக்கும்? ஹெலன் டூயிவிட் எழுதிய மின்னல் தடிகள் (Lightning Rods) போல் இருக்கும். அந்தப் புத்தகம் குறித்த அறிமுக விமர்சனங்கள்தான் எனக்கு ஹெலன் என்னும் எழுத்தாளரை அறிமுகம் செய்தது.

அந்தப் புத்தகத்தின் கதை என்ன?

சந்தையிலே செல்லுபடியாகாத விற்பனையாளர் அறிமுகம் ஆகிறான். எதையும் சாமர்த்தியமாகப் பேசி ஒழுங்காக விற்கத் தெரியாதவன். வெட்டிப் பேச்சும் அழையா ஆலோசனைகளுமாக காலத்தைப் போக்குபவன். அனைத்து நிறுவனங்களிலும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராக மனிதவள மேலாளர்கள் கெடுபிடியான நடைமுறைகளை வைத்திருக்கிறார்கள். அதற்கு மாற்றாக புத்தம்புதிய சாதனத்தை அறிமுகம் செய்கிறான். அலுவலில், பாலியல் தொல்லைகளை அதிகரிக்கும் சாதனம் – அனைத்து கழிப்பறைகளிலும் பொருத்தி விட வேண்டும். இந்தப் பொருளை நிறுவி விட்டால் உடன் பணிபுரியும் பெண்களைப் புணரலாம். யார் புணர்கிறார்கள் என்று தெரியாது. அலுவல் அழுத்தங்களும் அடக்கி வைத்த ஆசைகளும் இந்த மாதிரி சாதனத்தை நிறுவுவதால் நீங்கும் என்று அந்த விற்பனையாளன் அமோகமாக சந்தையில் சொல்லி, ஜாம்ஜாமென்று பணம் புரட்டுகிறான்.

இந்தக் கதையின் நாயகன் குறித்த பேட்டியில் ஹெலன் இவ்வாறு சொல்கிறார்:

“நான் பெண்ணாக இருந்தாலும், ஆண் பார்வையில் இந்தக் கதையை எழுதினேன். சொல்லப் போனால் பெண்களை முக்கிய பாத்திரமாக வைத்து எழுதுவதை விட ஆண்களை கதாநாயகனாகப் போடுவது எளிதாகவே இருக்கிறது.

என்னுடைய சின்ன வயதில் கை பாட்டுக்கு தானாக எதையாவது வரையும். ஆனால், பெண்களைத்தான் வரைய முடியும். என்னால் பசங்களை வரையவே முடியவில்லை. அந்த உருமாற்றம் எப்பொழுது நடந்தது என்று தெரியவில்லை. ஆண்களுடன் பழகும்போது கவனித்தேன்; அவர்களால் தங்களைப் பற்றியே பேச முடிந்தது. ஒரு ஆண் கதாபத்திரத்திற்குள் சென்று, அந்த பாத்திரம் மாதிரி யோசிக்க வேண்டுமானால், ரொம்ப சிரமப் பட வேண்டாம். அந்த ’ஆணுக்கு’ ஒருவிதமான மனப்பிடிப்பைக் கொடுக்க வேண்டும். அந்தப் பிடிப்பின் மேற்சென்று மிகைவிருப்பமாக்க வேண்டும். அது எப்படி அவனை ஆட்டிப்படைக்கிறது என்று எழுதினால் போதுமானது.

பெண்களை கதாபாத்திரங்களாக்குவது அவ்வளவு நேர்ப்படையானதல்ல. அவர்கள், அவ்வளவு சீக்கிரம் உணர்வு வசம் சிக்கி மாற்ற இயலா எண்ணத்திற்குள் சுழல்வதில்லை.

மின்னல் தடிகள் (Lightning Rods) நாவல் செக்ஸைப் பற்றியது. சாப்பிடும்போது கூட செக்ஸை குறித்து சகஜமாகப் பேச ஆடவர்களால் முடிகிறது. எந்த ஆணுடன் பேசினாலும் சரி… அவர்கள் இந்த மாதிரி ஏதாவது ஒன்றை உதிர்க்கிறார்கள்: ‘பருத்த மார்புகள் எல்லாருக்கும் பிடிக்கும்!’ உடனே எனக்கு நூறு கேள்விகள் தோன்றும். உனக்கு எப்படி இது தெரியும்? உனக்கு உன்னைப் பற்றித் தெரியும்… எல்லா ஆண்களும் இப்படித்தான் என்று எப்படி உன்னால் சொல்ல முடிகிறது? கருத்துக்கணிப்பு எடுத்தாயா? இதே ரீதியில்தான் என்னுடைய நாயகனும் இருக்கிறான். நம்பிக்கையாகப் பேசுவான். அவனுடைய இச்சையை வைத்து அனைவரைக் குறித்தும் அடித்துப் பேசுகிறான்.

இதே மாதிரி மக்களை பதிப்புத்துறையிலும் தொடர்ச்சியாக சந்தித்தேன். புத்தக வெளியீட்டிற்காக அவர்களுடன் உரையாடும்போது… மன்னிக்கவும்… பின்னாலிருந்து முகந்தெரியாத எவனோ ஒருத்தன் புணருவது போல் உணர்ந்தேன். தேவையில்லாத அறிவுரைகளைக் கேட்டு காது புளித்துப் போனபோது, இந்த நாவல் உருவானது.”

சரி… இப்பொழுது நவம்பர் ஹார்ப்பர்ஸ் இதழில் வெளியான ஏறுபவர்கள் (Climbers) கதைக்கே வந்து விடுவோம்.

ஹார்பர்ஸ் பத்திரிகையில் ஹெலன் (Helen DeWitt) எழுதிய ஏறுபவர்கள் (Climbers) கதை இங்கே கிடைக்கிறது: (சந்தாதாரர்களுக்கு மட்டும் படிக்க இயலும்)

கதையில் நான்கு கதாபாத்திரங்கள். முதலாவதாக நமக்கு கில் அறிமுகமாகிறான். துடிப்பானவன். சுவாரசியமாகப் பேசுகிறான். நியு யார்க்கில் வசிக்கிறான். நிறைய படம் பார்த்து, புத்தகம் படித்து, இசை கேட்டு, கணினி மேய்ந்து, விளையாட்டுகள் களித்து வாழ்பவன். அவனுடைய உபசரிப்பு விழாவில் நமக்கு சக எழுத்தாளினியான ரேச்சல் அறிமுகமாகிறாள். பரபரப்பான கல்யாண ரிசப்ஷனில் தனியே போய் பஃபே சாப்பாடு எடுத்துக் கொள்வது போல், கில் வசிக்கும் வீட்டில் நடக்கும் இலக்கிய கூட்டத்தின் நடுவே விடப்பட்டிருக்கிறாள்.

இரண்டாவதாக சிஸ்ஸி தோன்றுகிறாள். (நீங்கள் என்னை முறைப்பது தெரிகிறது. ரேச்சல் என்பவள் இரண்டாம் எண்ணுக்குரியவள் அல்லவா என்று மறுமொழியில் கேட்காதீர்கள். பெயரில் என்ன இருக்கிறது? சிஸ்ஸியாக இருந்தால் என்ன… ரேச்சல் ஆக இருந்தால் என்ன போச்சு… அல்லது இருவருமே ஒருவர்தான் என்றாலும் உங்களுக்கு என்ன? நீங்கள் தொடருங்கள்) அவள் ஆஸ்திரியா நாட்டின் வியன்னா நகரத்தில் பீட்டர் டிஜிக்ஸ்டிரா என்னும் எழுத்தாளரை அகஸ்மாத்தாக சந்திக்கிறார். இந்த எழுத்தாளர்தான் கதையின் மையக் கரு. இவரைச் சுற்றித்தான் எல்லாம் நகர்கிறது.

எழுத்தாளர் என்று ஒருவர் இருந்தால் நாவல் என்று ஒன்று உருவாகும். நாவல் என்று ஒன்று உருவானால், அதைப் பதிப்பிக்க பதிப்பாளர் என்று ஒருவர் வேண்டும். பதிப்பாளரிடம் பத்திரமாக எழுத்தாளரையும், அவ்வளவு பத்திரமில்லாமல் அவருடைய நாவலையும் கொண்டு சேர்க்க ஏஜெண்ட் என்று ஒருவர் வேண்டும். அவர் ரால்ஃப்.

கால்ஃப் ஆடுவது போல் நல்ல பெயர் ரால்ஃப். பெயருக்கேற்ப நல்ல ஆடைகளையும், கவின்மிகு பழரசங்களையும், திடகாத்திரமான கண்கவர் வழக்கங்களையும், கொண்டவன். கொஞ்சம் போல் படாடோபம். நேர்த்தியான விற்பனையாளனைப் போல் எழுத்துக்களை அற்புதமாக பிரபலமாக்குபவன். சன்னமான எழுத்துக்களையும் கோட்டையில் கோலோச்ச வைப்பவன். அவனுடைய கைபட்டு நூல் வெளியானால், ஆப்பிரிக்காவில் இருந்து எபோலா பரவுவது போல் உலகெங்கும் அந்தப் புத்தகம் நோபல் பரிசுக்காக பேசப்படும்.

இந்த நாலு பேருக்கு நடுவில் ராபர்ட்டோ பொலானோ (Roberto Bolaño) எழுதிய 2666 உருளுகிறது. எழுத்தாளர் பீட்டர் டிஜிக்ஸ்டிராவைப் அசப்பில் பார்த்தால் ராபர்ட்டோ பொலானோ கூட நினைவிற்கு வரலாம். எழுத்தாளர் பீட்டருக்கு சீக்கிரம் பணம் புரட்ட வேண்டும். சிகரெட் பிடிக்க பணம் வேண்டும். நாலு சுவற்றுக்குள் அடைந்து கிடக்க வாடகைப் பணம் கட்ட வேண்டும். காலாற நடக்க பணம் வேண்டும். அதற்காகவாது எழுத வேண்டும். பணத்திற்காக எழுத வேண்டும்.

ராபர்ட்டோ பொலானோவின் 2666 குறித்து இரண்டு விதமான விமர்சனங்களை ரேச்சலும் சிஸ்ஸியும் சொல்கிறார்கள். ஒருவரால் இரண்டு பக்கத்திற்கு மேல் படிக்க முடியவில்லை. ’இந்த வாழ்க்கையில் ஒரே ஒரு புத்தகம் மட்டும் படித்தால் போதும் என்றால் அது ரொபார்ட்டோ போலானோ எழுதிய 2666 மட்டும்தான்’ என்னும் வகையில், இன்னொருவரால் 2666ன் சில பகுதிகளைப் படித்தாலே ஜென்ம சாபல்யம் கிட்டுகிறது.

பொலானோ எழுதிய பிரும்மராட்சஸ துப்பாறிவாளர்கள் (The Savage Detectives) நாவலை நீங்கள் படித்ததுண்டா? அதில் நாற்பதுக்கும் மேற்பட்ட கவிஞர்களின் பார்வையில் கதை விரியும். புலவர்களுடன் உரையாடல், புலமைக் காய்ச்சல்கள், கவிஞர்களின் வாழ்விலே ஒரு நாள் என்று கலவையாகச் சொல்லப்பட்டிருக்கும். இந்த ஏறுபவர்கள் (Climbers) கதையும் இவ்வாறே நாலு எழுத்தாளர்களின் வாழ்வியல் சித்திரங்களுடன், பேச்சுக்களுடனும், விமர்சனங்களுடனும், எழுதவியலா தருணங்களின் தவிப்புகளுமாக விரிகிறது.

ஏறுபவர்கள் (Climbers) கதையில் – நிஜ எழுத்தாளர் ராபர்ட்டோ பொலானோ போல் உடனடியாக பணம் தேவைப்படும் கதாநாயகனாக பீட்டர் டிஜிக்ஸ்டிரா; ஆனால் ஏறுபவர்கள் (Climbers) கதையோ பொலானோவின் தி சாவேஜ் டிடெக்டிவ்ஸ் நாவலைப் போல் கட்டமைப்பைக் கொண்டிருக்கிறது.

எழுத்தாளர்களைப் பற்றி எழுதுவது சிக்கலானது. இவரைப் போல் இருக்கிறது, அவரைத்தான் குறிப்பிடுகிறார் என்று குற்றச்சாட்டுகள் எழாமல் பொதுப்படையாக, அதே சமயம் சம்பவங்களும் + விஷயங்களும் கலந்து எழுத வேண்டும். குறியீடுகள் சொல்லப் போய், கதையே புரியாமலும் போக விடாமல், நேரடியாகவும் பூடகமாகவும் புரிய வைக்க வேண்டும். எழுத்தாளர் என்றாலே இப்படித்தான் இருப்பார் என்னும் அரைத்த + புளித்த மாவான வார்ப்புருவிற்குள் சிக்காமல் கதை வளர வேண்டும். அவற்றை இந்த ஏறுபவர்கள் (Climbers) கதையில் ஹெலன் இயல்பாகக் கொண்டு வருகிறார்.

அந்த நாலு ஏறுபவர்களையும் கொஞ்சம் பார்ப்போம்.

பீட்டர் டிஜிக்ஸ்டிரா தாய்மொழியில் எழுதி பணம் சம்பாதிக்க முடியவில்லை. ஷிவாஸ் ரீகல் வேண்டாம். நல்ல பியர் கூட வாய்க்கப் பெறுவதில்லை. எனவே, ஆங்கிலத்தில் எழுத முயல்கிறார். முதலில் வார்த்தைகள்; தேர்ந்தெடுத்த வார்த்தைகளாகப் பொறுக்க வேண்டும். வார்த்தைகள் கிடைத்த பின் வாக்கியங்கள். வாக்கியங்களை எப்பொழுது நேரம் கிடைக்குமோ, அப்பொழுது மனிதர்களிடம் ஏற்றிவிடப் பார்க்கும் எழுத்தாளர்.

கில் இலக்கியவாதி பீட்டர் டிஜிக்ஸ்டிராவிற்கு மாடியறையைக் கொடுப்பதால் சமூக அந்தஸ்திலும் ஏற நினைப்பவன். உண்மையை எழுத்தில் ஏற்ற எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்று தேடியலைபவன்.

ரேச்சல் எழுத்தாளருடன் அளவளாவினால், என்ன சங்கதி கிடைக்கும் என்று அளந்து பார்க்காமல், எழுத்தாளனின் எழுத்தை அடித்தல் திருத்தலோடு, முதல் பிரதியை வாசிக்க விழையும் ஜாதி. எழுத்தாளரின் ஒரு கதை பிடித்துப் போனதால், மொழி புரியாத அயல்நாட்டுப் புத்தகங்களை அள்ளிக் கொண்டு வீட்டின் புத்தக அலமாரியில் கொலு வைத்து அழகு பார்க்கும் ஜாதி,. பீட்டர் டிஜிக்ஸ்டிராவை ஏற்றிவிடத் துடிப்பவள்.

இறுதியாக முகவர் ரால்ஃப். அமெரிக்காவின் அமெரிக்கர்களின் எடுத்துக்காட்டாக கதையில் வருகிறார். கண் துஞ்சாமல், கருமமே கண்ணென இலக்கியத்தை செய்து முடிப்பவர். இவர் போன்றோர் ஏவுவதனாலேயே, எழுத்தாளர்கள் தங்கள் காவியங்களுக்கு இறுதி வடிவைத் தருகிறார்கள்; விமர்சகர்கள் பயபக்தியோடு அந்த இலக்கியபீடத்தை அணுகுகிறார்கள்; நூல் வெளியீட்டாளர்களும் லாபம் சம்பாதித்து பங்குச்சந்தையில் ஏறுகிறார்கள்.

கதையின் அமைப்பு மிகவும் சிக்கலான அமைப்பு. சிறுகதையில் இத்தனை கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒவ்வொரு நாட்டில் உலாவுகிறது. முடிவிற்கு வெகு அருகில் கதை துவங்குகிறது. அந்த முடிவிற்கு சற்றே முன்பாக கதை முடிகிறது. முன்னும் பின்னுமாக கதை உலாவினாலும் குலுக்கிக் குலுக்கிக் கதையை விட்டு தூரப் போடாமல், சுவாரசியமாக முன்னேறுகிறது. அந்த அமைப்பிற்காகவே இன்னொரு முறை படித்தேன். மீண்டும் படிக்கும்போதுதான், வார்த்தைகளின் தேர்வும், கதாபத்திரங்களின் குணாதிசய அறிமுகங்களும், சொல்லாட்சியும் பிடிபட்டது. அந்தச் சுவைக்காக மீண்டும் மூன்றாம் முறை படித்தேன். அப்பொழுதுதான் மற்ற புத்தகங்களின் விமர்சனமும், வேற்று மொழி கற்றுக் கொள்வதை சொல்லும் நேர்த்தியும், சுற்றுலா தலங்களை விவரிக்கும் வர்ணனையும் ஈர்த்தது. அதற்காக இன்னொரு முறை படிக்க வேண்டும்.

ஒளிப்பட உதவி – InDigest

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.