கவியின் கண்- “இறைச்சிக்கும் உதவாதவர் நூறு கோடி”

எஸ். சுரேஷ்

இனி என்ன விற்பார்கள்?
– விஜயலட்சுமி

ஆற்றையும் காற்றையும் வெயிலையும் விற்கவும்
மழையையும் மண்ணின் துகள்களை விற்கவும்
பதினான்காம் காலையின் அழகை விற்கவும்
காலைப்பொழுதின் சப்த ஸ்வரங்களை விற்கவும்

அழைப்பு விடுக்கிறார்கள்! – வருக, உலகின்
பெரும் பணப்பை கொண்ட கனவான்களே –

நீல மலைகளை உங்களுக்காகத் தோண்டி எடுக்கவும்
அழகிய மரங்களைப் பிடுங்கி எடுக்கவும்
மகரமும் பனியும் குளிரும் உங்களுக்கு
மறந்து விடாமல் முடிந்து கொள்ளவும்

சலவை செய்த வெள்ளைச் சிரிப்புடன் நாட்டை
கூறு போட்டு விற்பதற்குக் காதலுடன் நிற்பவர்கள்
உரக்கக் கூவுகிறார்கள்- கேரளத்தைக் கூறு போடுங்கள்,
வெட்டி எடுங்கள் கசாப்பு கத்தியால்.

இனி விற்பனைக்கு இருப்பது – தம்மை வேறுபடுத்தும்
அடையாளங்களைக் கழுத்தில் தொங்க விட்டிருப்பவர்,
இறைச்சிக்கும் உதவாதவர் நூறு கோடி-
இவர்களை வாங்கிக் கொள்ள இனி யார் வருவார்?

மலையாளத்திலிருந்து தமிழாக்கம் – app_engine 

இப்போதெல்லாம் வளர்ச்சி என்ற சொல் அதிகம் பேசப்படுகிறது. விரைவான வளர்ச்சி வேண்டும் என்று பலர் விரும்புகின்றனர், அவர்களுக்கு அதன் பின்விளைவுகளைப் பற்றி பெரிய கவலை ஒன்றுமில்லை. ஆனால் வளர்ச்சியின் பெயரால் சுற்றுச்சூழல் அழிவும் வாழ்வாதார இழப்பும் ஏற்படுவதை எதிர்க்கும் ஒரு சிறு பிரிவினர் இருக்கின்றனர். அவர்களுக்கு இது நல்ல காலமல்ல, ஏனெனில் இது வர்த்தகர்களின் காலம். அதிலும் குறிப்பாக, “பெரும் பணப்பை கொண்ட கனவான்களின்” காலம். இதெல்லாம் முன் எப்போதும் இருந்ததில்லை என்பதல்ல, ஆனால், “வளர்ச்சி” என்ற மந்திரம் இப்போது உடனடி தேவை என்பது போலாகி விட்டது.

அதற்காக, பேராசை என்பது என்னவோ இந்திய குணம் என்று நினைத்துக் கொள்ளக்கூடாது. உலகெங்கும் பேராசை நிலவுகிறது. ஆனால் அது வளரும் நாடுகளைதான் அதிகம் பாதிக்கிறது. வளர்ந்த நாடுகளில் வலுவான சட்டங்கள் இருக்கின்றன, பொதுக் கருத்து உரத்து ஒலிக்கிறது- எனவே சுற்றுச்சூழல் அழிவு தவிர்க்கப்படுகிறது. ஆனால் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் சட்டங்கள் இருந்தாலும், அனைத்து தளங்களிலும் அது அச்சமின்றி மீறப்படுகிறது. இதை நாம் ஏற்றுக் கொண்டுதானாக வேண்டும். சுற்றுச்சூழல் நலனுக்கு ஆதரவான குரல்கள் உரக்க ஒலிப்பதுமில்லை, நம்மைவிட தொலைதூரத்தில் வாழ்பவர்களின் வாழ்வாதாரம் குறித்து நம் எவருக்கும் அக்கறையும் கிடையாது. உண்மையில், இல்லாதவர்களைப் பார்த்து இரக்கப்படுவதைவிட அவர்களைக் கீழ்மையானவர்களாக நினைப்பவர்கள்தான் அதிகம்.

இதற்கு ஒரு உதாரணம் தருகிறேன். ஒரு முறை கடலோர நகரம் ஒன்று பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. உடைகள், உணவு, பணம் முதலிய உதவிகள் கோரப்பட்டன. ஆனால் பலரும் பழைய துணிகளை தானம் அளித்ததால், இனி யாரும் உடை கொடுக்க வேண்டாம் என்று பொது அறிவிப்பு செய்ய வேண்டியதாயிற்று. இதைப் படித்த என் நண்பர் ஒருவர் மிகவும் கோபமாக, “நாம் என்ன கொடுக்க வேண்டும் என்று சொல்ல அவர்கள் யார்? நாம் கொடுப்பதை வாங்கிக் கொண்டு போக வேண்டியதுதானே? அவர்கள் இப்பொழுது பிச்சைக்காரர்கள் போல் தானே?” என்று சொன்னார். அவர் சொன்னதைக் கேட்டு அதிர்ந்து போனேன். எல்லாரும் இப்படி இருக்கிறார்கள் என்று சொல்லவில்லை, ஆனால் இல்லாதவர்களை இழிவாக நினைக்கும் சிலர் இருக்கவே செய்கின்றனர். இத்தனை நாட்களாக கடும் உழைப்பால் வாழ்ந்தவர்கள் இவர்கள் என்பதை நண்பர் புரிந்து கொள்ளவில்லை. யாரானாலும் சுயமரியாதை என்று ஒன்று இருக்கத்தான் செய்யும்.

நமக்குள்ளும் முர்ணபாடுகள் இருக்கவே செய்கின்றன. நம் தேசத்தில் ஆன்மிகம் ஒரு பொதுச் சரடாக எல்லாருக்கும் முக்கியமான விஷயமாக இருக்கிறது. என்ன சமயமாக இருந்தாலும் சரி, பேராசை இருக்கக்கூடாது என்றுதான் எல்லாரும் சொல்கிறார்கள். சுயமரியாதையுடன் வாழ அதிகம் தேவையில்லை என்று அவை போதிக்கின்றன. எளிமை எப்போதும் கௌரவிக்கப்படுகிறது, எளிய மனிதனே நம் அனவைருக்கும் ஆதர்சமாக முன்னிருத்தப்படுகிறான். நிலைக்கு மீறி செலவு செய்வது கண்டிக்கப்படுகிறது.

ஆனால் நாம் எப்போதும் பணம் காசு முக்கியம் என்று நினைப்பவர்களாகதான் இருந்திருக்கிறோம். அரச குடும்பத்தினரும் ஜமீன்தார்களும் எவ்வளவு ஆடம்பரமாக வாழ்ந்திருக்கின்றனர் என்று நாம் ஆச்சரியத்தோடு பேசுகிறோம். படாடோபமான வாழ்க்கை முறை கண்டிக்கப்படுகிறது. பணமும் பகட்டுமான வாழ்வு நமக்கு எவ்வளவு வசீகரமாக இருக்கிறது எனபதை பாலச்சந்தர் தன் “பாமா விஜயம்” நகைச்சுவை திரைப்படத்தில் மிகச் சிறப்பாகச் சித்தரித்திருந்தார். இப்போது அதிக வாய்ப்புகள் கிடைக்கின்றன, அதிக வளர்ச்சிக்கு வாய்ப்பு இருக்கிறது, நாமும் பகட்டான வாழ்வுக்கு ஆசைப்படுகிறோம்.

சகாக்களின் அழுத்தம் என்று இதைப் புரிந்து கொள்கிறோம். இது எனக்கு இன்றும் நினைவிருக்கிறது- பெங்களூருவில் நான் முதன் முதலில் வேலைக்குச் சேர்ந்தபோது அந்த நிறுவனத்தின் மானேஜர் ஒரு மாருதி ஆம்னி வைத்திருந்தார். அவருக்கு அதை மாற்றும் விருப்பம் இல்லை. அப்போது புதுப்புது கார்கள் சந்தைக்கு வந்து கொண்டிருந்தன. பழைய காரின் லீஸ் முடிந்துவிட்டதால் புதிய கார் வாங்கிக் கொள்ளலாமே என்று நான் சொன்னேன். ஆனால் அவருக்கு அந்த விருப்பமில்லை. ஆனால் சில மாதங்களுக்குப்பின் என் சகா ஒருவர், அவரும் என் மானேஜரின்கீழ் வேலை செய்பவர்தான், புத்தம்புதிய ஹோண்டா சிட்டி கார் வாங்கினார். தவிர அவர் என் மேனேஜரின் உறவினரும்கூட. எனவே இரண்டு நாட்களுக்குப்பிறகு, “என்ன கார் என்று தெரியாது, ஆனால் உடனே புதிய கார் வாங்கியாக வேண்டும். இவன் ஹோண்டா வாங்கி விட்டான், சொந்தக்காரர்கள் என்னையும் புதிய கார் வாங்கிக் கொள்ளச் சொல்லி தொல்லை செய்கிறார்கள்,” என்று அவர் சொன்னது எனக்கு ஆச்சரியமாக இல்லை

ஒற்றைக் கார் வைத்திருக்கும் காலம் போய்விட்டது. நீங்கள் நகரத்தில் இருந்தால், உங்களுக்கு மத்திம வயது என்றால், இரண்டாம் கார் வாங்கியாக வேண்டிய கட்டாயம் உங்களுக்கு இருக்கும். அமெரிக்கர்கள் போல், குடும்பத்தில் ஆளுக்கு ஒரு கார் என்பது நகர்ப்புற உயர் நடுத்தர வர்க்கத்தினரின் லட்சியமாக மாறி வருகிறது. வீடு வாங்கும் விஷயத்திலும் இந்த மாற்றத்தைப் பார்க்கிறோம்.

அமெரிக்கர்களும் மற்றவர்கள் பலரும் தங்கள் பொருளாதார வெற்றியைக் கொண்டாடுகின்றனர், ஆனால் நம்மை ஒன்றாய்ப் பிணைக்கும் ஆன்மிகம் இந்தக் கொண்டாட்டத்தில் நம்மை முழுமையாக மறக்கவிடாமல் பின்னிழுத்துக் கொண்டே இருக்கிறது என்பதுதான் நம் முரண்பாடு. ஏதோ ஒரு இடத்தில் பொருளாதார் வெற்றி மட்டும் போதுமா என்று கேட்டுக்கொள்ளத் துவங்கிவிடுகிறோம். அதனால்தான் இன்று மத்திய வயதில் இருப்பவர்கள் தங்களைவிட முதிவர்களை ஆச்சரியமாகப் பார்க்கின்றனர். சொல்லிக்கொள்ளும் பொருளாதார வெற்றி அவர்களுக்குக் கிடைக்காமல் போயிருக்கலாம், ஆனால் அவர்களுக்கு குழந்தைகளுக்கு நல்ல உணவளித்து, நல்ல படிப்பு கொடுத்த திருப்தி இருக்கிறது, சந்தோஷமாக தங்கள் பேரன் பேத்தியர்களை கவனித்துக் கொண்டு இருக்கின்றனர்.

ஓட்டப்பந்தயம் அலுத்துப் போனவர்கள் தங்கள் விதியை ஏற்றுக் கொண்டு இந்த முரண்பாட்டைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். விரக்தி வேறு ஏற்றுக் கொள்ளுதல் வேறு. போராட மனம் இல்லாதவர்கள், “இது ஒரு முடிவில்லாத ஓட்டம். எல்லா இடத்திலும் அரசியல் இருக்கிறது,” என்று பலவும் சொல்கிறார்கள். குரலிலேயே கசப்பு இருக்கிறது. ஆனால், தன் வாழ்க்கைக்கு என்ன வேண்டும் என்பதை ஏற்றுக் கொண்டு, தான் எதில் கவனம் செலுத்த வேண்டும் என்று முடிவு செய்தவர்கள் எப்போதும் கசந்து போவதில்லை. இவர்கள் எதைச் செய்தாலும் அதில் ஒரு உற்சாகம் தெரிகிறது.

இந்தியா போன்ற ஒரு தேசத்தில் ஒருவருடன் ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு மேலும் மேலும் நுகர்வது என்பது மிகவும் ஆபத்தான விஷயம். வளர்ச்சி வேண்டாம் என்று சொல்வதாக அர்த்தம் இல்லை, ஆனால் சில எல்லைகளுக்குள் நம் தேவைகளைக் கட்டுப்படுத்தி வைத்துக் கொள்வது நல்லது. எளிமை என்பது ஒரு ஆன்மீக சரடாய் நம்மை இணைக்கிறது, இது அறுபடுவது அவ்வளவு சுலபமல்ல. அதுவே தொலைநோக்குப் பார்வையில் நமக்கு நன்மை செய்து நம்மை வாழ வைப்பதாகவும் இருக்கும். அல்லாவிடில், கவிஞர் விஜயலட்சுமி சொல்பவர்களில் ஒருவர் போலாவோம் நாம்- நம்மால் யாருக்கும் ஒரு பயனும் இருக்காது. எவ்வளவு பணம் வைத்டிருந்தாலும் நாம் பைசா பிரயோசனப்பட மாட்டோம், யாரும் நம்மை விலை கொடுத்து வாங்க மாட்டார்கள்.

ஒளிப்பட உதவி – www.poyi.org

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.