தாய்மை
– அன்னா ஸ்விர்

உயிரை நான் பிரசவித்தேன்..
அது என் குடல்களை விட்டு வெளியேறி
என்னை உயிர்ப்பலி கேட்கிறது-
ஓர் அஸ்தெக் தெய்வத்தைப் போல்.
பொம்மலாட்ட பொம்மையைக்
குனிந்து நோக்குகிறேன்-
நான்கு கண்களால்
நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.
“என்னை நீ தோற்கடிக்க முடியாது,” என்கிறேன்,
“இந்த உலகுக்கான அவசரத்தில்
நீ உடைக்கும் முட்டையாய் இருக்க மாட்டேன்,
உன் வாழ்க்கைப்பாதையில் பயன்படுத்தும் நடைபாலமாய் இருக்க மாட்டேன்.
நான் என்னைக் காத்துக் கொள்வேன்.
பொம்மலாட்ட பொம்மையைக்
குனிந்து நோக்குகிறேன்,
ஒரு சிறு விரலின் சிறு அசைவை
கவனிக்கிறேன்.
சற்று முன்வரை என்னுள் இருந்தது,
மெல்லிய சருமத்தின் கீழ்,
இதில் என் இரத்தம்தான் பாய்கிறது.
திடீரென்று வெள்ளமாய் என்னை நிறைக்கிறது
உயர்ந்த ஒளிமிகு அலையாய்,
விநய உணர்வு.
சக்தியின்றி, மூழ்கிப் போகிறேன்.
உதவி- Czeslaw Milosz & Leonard Nathan இருவரின் ஆங்கில மொழிபெயர்ப்பு
நவீன காலங்களில் அம்மாவாக இருப்பது என்பது சுலபமான விஷயம் அல்ல. இந்தத் தொடரில் ஏற்கனவே பார்த்திருக்கிறோம், நகரங்களில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஏராளமான வாய்ப்புகள் கிடைக்கின்றன. வாய்ப்புகளுடன் சோதனைகளும் வருகின்றன. அவற்றில் ஒன்று குடும்ப அமைப்பு சுருங்கிப் போய்விட்டது என்பது- இதனால் தாயின் வீட்டுக் கடமைகள் மிகவும் அதிகரித்திருக்கின்றன. அதிலும் குறிப்பாக, குழந்தையை கவனித்துக் கொள்ளும் பொறுப்பைச் சொல்ல வேண்டும். குழந்தை வளர்ப்பு என்பது இன்னும் தாயின் பொறுப்பாகவே இருக்கிறது- இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கும் இப்படிதான். இந்தக் கடமையை நிறைவேற்ற தன குழந்தைகளுக்காக தாய் நிறைய தியாகங்கள் செய்ய வேண்டும் என்பது சமூக எதிர்பார்ப்பு.
பெண்கள் வேலைக்குப் போவது இப்போது இயல்பான ஒன்றாக இருக்கிறது. வேலைக்குப் போகாமல் குடும்பத்தைப் பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தவர்கள் தவறு செய்து விட்டோம் என்று நினைக்கும் வகையில் பலரும் நடந்து கொள்கின்றனர். “வீட்டிலிருப்பது மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது. நான் என் வேலைக்குப் போகவில்லை என்று எல்லாரும் கேட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். குற்றவுணர்ச்சியாக இருக்கிறது,” என்று ஒரு பெண் என்னிடம் சொன்னார். ஹோம் மேக்கர்கள் என்று கௌரவப்படுத்தினாலும், உண்மையில் பெண்கள் வேலைக்குப் போக வேண்டும் என்றுதான் பலரும் நினைக்கிறார்கள். பெண்கள் வேலைக்குப் போவது இந்த அளவுக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டது சமூகத்து சம உரிமைக்கும் நல்ல விஷயம்தான். அதே சமயம் வீட்டைப் பார்த்துக் கொண்டிருந்தால் போதும், வேலைக்குப் போக வேண்டாம் என்று நினைப்பவர்களுக்கு மிக அதிக அளவில் அவர்களுடைய நண்பர்கள் அழுத்தம் கொடுக்கும் நிலை இப்போது இருக்கிறது. எதிர்காலத்தில் இந்தப் பெண்களைச் சமுதாயம் ஏற்றுக் கொள்ளும் என்று நம்புகிறேன். ஆனால் நானறிந்த அளவில், இன்று வேலைக்குப் போக வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் தோழியர்தான் அதிகம்.
வேலைக்குச் செல்பவர்களின் வாழ்வும் அப்படி ஒன்றும் சுலபமாக இல்லை. அலுவலக பிரச்சனைகளைப் பார்த்துக் கொள்வது போதாதென்று குழந்தை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை வேறு சமாளித்தாக வேண்டும். உயர் பதவிகளில் பெண்கள் அதிக அளவில் இல்லை என்றால் அதற்கு ஒரு காரணம், பல பெண்களும் ஏதோ ஒரு கட்டத்தில் தம் பணியைவிட குழந்தைதான் முக்கியம் என்று முடிவெடுப்பதுதான். பணியிட வளர்ச்சியைவிட குழந்தை கஷ்டப்படாமல் வளர்வதுதான் முக்கியம் என்று இவர்கள் நினைக்கிறார்கள். என்னுடன் ஒரு அருமையான ப்ராஜெக்ட் மானேஜர் இருந்தார். அவரது திறமையையும் அர்ப்பணிப்பையும் நான் மிகவும் மதித்தேன். அவருக்கு சற்றே கவனித்து வளர்க்க வேண்டிய குழந்தை பிறந்தது, சில ஆண்டுகளில் குழந்தையைப் பார்த்துக் கொள்ள வேலையை விட்டுவிட்டார். அந்தக் குழந்தையை அவர் வளர்த்து ஆளாக்கியவிதம் மகத்தானது. ஒவ்வொரு முறை அவர் தன் குழந்தை குறித்து தகவல் அளிக்கும்போதும் அவர் மீது எனக்குள்ள மதிப்பு கூடுகிறது.
நான் சொல்லியிருப்பது மிகத் தீவிரமான ஒரு நிலை. பலருக்கும் தங்கள் குழந்தையைச் சரியாக கவனித்துக் கொள்ளவில்லை என்ற குற்ற உணர்ச்சிதான் இருக்கிறது. நாளெல்லாம் குழந்தை என்ன செய்கிறது என்பதை கவனித்துக் கொண்டிருப்பதை வைத்தே நாம் இதை அறிய முடிகிறது (அப்பாக்களுக்கு அந்த அவஸ்தை எல்லாம் கிடையாது). குழந்தை ஒன்பதாவது அல்லது பத்தாவது வரும் வயதில், குழந்தையை முழு நேரமும் பார்த்துக் கொண்டிருந்தால் போதும் என்ற முடிவுக்கு வந்து விடுகிறார்கள். பெரும்பாலும் இந்த சமயத்தில்தான் வேலையை விடுகிறார்கள் அல்லது வளர்ச்சி குறைவாக இருந்தாலும் பறவாயீல்லை என்று அதிக நேரத்தை எடுத்துக் கொள்ளாத வேலையைத் தேர்ந்தெடுக்கிறார்கள். எனவே பெண்களின் பணி வளர்ச்சி இரு கட்டங்களில் தடைபடுகிறது- குழந்தை பிறந்ததும், அதன் பின் குழந்தையை முழு நேரம் கவனித்துக் கொள்ள முடிவு செய்யும்போதும்.
ஆனால் இது சுலபமான தேர்வு அல்ல. தெரிந்தே இப்படி ஒரு முடிவு எடுத்திருந்தாலும் பல பெண்களும் இது குறித்து வருத்தப்படுகிறார்கள். உதாரணத்துக்கு ஒரு பெண், தன அம்மாவையும் மாமியாரையும் கவனித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது என்பதால் அரை நாள்தான் அலுவலகம் வர முடியும் என்றார். நான் ஹெச்ஆர் அனுமதி வாங்கிக் கொடுத்தேன், அவரும் அரை நாள் வேலை செய்தார். ஆனால் பணி உயர்வு மற்றும் சமபள உயர்வு அறிவிக்கப்பட்டபோது அவருக்கு மிகவும் வருத்தமாகி விட்டது- காரணம், அவருடன் வேலைக்குச் சேர்ந்த அவரது தோழிக்கு பதவி உயர்வு கிடைத்திருந்தது, ஆனால் இவர் பாதி நாள்தான் வேலை செய்தார் என்பதால் அவருக்கு அடுத்த கட்ட பதவி உயர்வு கிடைகக்வில்லை.
தொழில் நிறுவனங்கள், அதிலும் குறிப்பாக பன்னாட்டு தொழில் நிறுவனங்கள், இந்தப் பிரச்சினையைப் புரிந்து கொண்டிருக்கிருக்கின்றன. வீட்டிலிருந்தே வேலை செய்ய இவை ஊக்குவிக்கின்றன. இது பல தாய்களுக்கு ஒரு பெரிய வரமாய் இருக்கிறது. சில நிறுவனங்கள் குழந்தை காப்பகங்களோடு நேரடி ஒப்பந்தம் செய்து கொள்கின்றன. நான் வேலை செய்த ஒரு நிறுவனத்தில் குறைந்தது 25% பெண்களாவது ஒவ்வோர் அடுக்கிலும் இருக்க வேண்டும் என்ற கொள்கை இருந்தது. பெண்ணாய் இருந்தால் இங்கே சுலபமாக பதவி உயர்வு கிடைத்துவிடும் என்று சிலர் கிண்டலாகச் சொல்வதுண்டு. இதனால் திறமைக்கு மதிப்பு குறைகிறது என்று இவர்கள் சொல்வார்கள். இது மகா முட்டாள்தனமான வாதம். பணித்திறமை திருப்தியாக இருந்தால்தான் அவர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டது. ஒரு சிலர் தகுதிக்கு மீறிய வளர்ச்சி அடைந்திருக்கக்கூடும். ஆனால் அதற்காக பிறர் எல்லாரும் தகுதி அடிப்படையில் தேர்ந்தெடுகக்ப்படுகிறார்கள் என்று சொல்ல முடியுமா? வேலை செய்யவே லாயக்கில்லாதவர்கள் உயர் பதவிகளில் இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். ஒருமுறை சீனியர் விபி ஒருவர் என்னிடம் இப்படி கேட்டார்- “வளர்ச்சிக்கான சரியான செயல்திட்டம் ஒன்று சொல்லுங்கள். அது சம்பந்தமாக நான் இப்போது பேச வேண்டும்,” என்று. நீங்க காலமாக அந்த பதவியில் இருப்பவர் அவர், நிறைய பணம் பார்த்தவர். திறமையோ தகுதியோ மட்டும் பதவி உயர்வு பெறப் போதாது என்பது இடைநிலை பதவியில் இருக்கும் எல்லாருக்கும் தெரியும். பெண்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதால் எல்லாம் மோசம் போய்விடும் என்று பேசுவது கையாலாகாத்தன புலம்பல்தான்.
ஏன் சில பெண்களாவது உயர் பதவிகளிலி இருக்க வேண்டும் என்றால் பிற பெண்களுக்கு அது ஒரு நம்பிக்கை அளிக்கிறது. பணி வளர்ச்சியுடன் உயர் அழுத்தமும் வருகிறது. அதை நாமும் எதிர்கொள்ள முடியும் என்று அவர்கள் நம்ப வேண்டும். மேற்கு நாடுகளில் உள்ளது போல் நம் நாட்டில் நிறுவன உதவி செய்வது இல்லை. பணிச்சுமையைக் காட்டிலும் நம் நாட்டில் பெண்களுக்கு வீட்டுச் சுமைதான் அதிகம். ஊக்குவிப்பதற்கு ஆள் கிடையாது. குழந்தையைச் சரியாக கவனித்துக் கொள்ளவில்லை என்ற குற்ற உணர்ச்சி வேறு. இந்த காலத்தில் தாயாய் இருப்பது அவ்வளவு இனிதல்ல.
பொதுவாக கவிஞர்கள் எதிர்காலத்தை தெளிவாக கணிப்பதில் வெற்றி பெறுகிறார்கள். அன்னா ஸ்விர் குழந்தை பிறந்ததும் அதை உணர்ந்து கொள்கிறார். தான் செய்ய வேண்டிய தியாகங்கள் அவருக்குப் புரிகிறது. மறுக்கிறார், போராடுகிறார், ஆனால் குழந்தையே வெற்றி பெறுகிறது. தாயுணர்வு மேலோங்குகிறது, இனி குழந்தைக்காக எவ்வளவு பெரிய தியாகமும் செய்யலாம். பெண் இப்போது தாயாகி விட்டாள்.
Advertisements
சுலபமாக சமைக்கும் உபகரணங்கள் எல்லாம் இருக்கும் இந்தக் காலத்திலும் பெண்களுக்கு சமையலறையும், வீட்டுப் பொறுப்புகளும் வேலைக்குப் போகும் பெண்களுக்கு ஒரு சுமையாக உள்ளது. கூட்டுக் குடும்பம் என்னும் சிறப்பம்சம் காணாமல் போனதுதான் காரணம்.தனித்து நிற்பது அவர்கள் ‘சாய்ஸ்’!