வண்ணக்கழுத்து பகுதி 9: போர்ப் பயிற்சி

நாங்கள் ஊர் திரும்பிய பிறகு, ஐரோப்பாவில் எங்கோ வரப்போகும் யுத்தத்தைப் பற்றிய வதந்தி காற்றெங்கும் நிரம்பியிருந்தது. இப்போது குளிர்காலம் வந்துவிட்டதால், வண்ணக்கழுத்துக்கு போர்ப் பயிற்சி கொடுக்க முடிவு செய்தேன். ஒருவேளை பிரிட்டிஷ் போர்த் துறை சார்பில் தூது செல்ல அவன் அழைக்கப்பட்டால் இப்பயிற்சி அவசியமானதாக இருக்கும். வடகிழக்கு இமாலயத்தின் தட்பவெட்பநிலைக்கு அவன் பழக்கப்பட்டுவிட்டதால், எந்தவொரு ஐரோப்பிய நாட்டிலும் அவன் ராணுவத்தின் இன்றியமையாத தூதுவனாக இருக்கமுடியும். இன்றும் கூட, கம்பியில்லாத் தந்தி, வானொலி போன்றவை இருந்தாலும் கூட எந்தவொரு படைக்கும் தூதுப் புறாக்கள் இல்லாமல் முடியாது. இந்தக் கதை தானாக விரியும் போது இந்த விஷயங்களெல்லாம் உங்களுக்குப் புரியவரும்.

போருக்கான தூதுப் புறாக்களைப் பயிற்றுவிக்க நானாகவே வகுத்துக்கொண்ட ஒரு திட்டத்தைப் பின்பற்றினேன். அதற்கு கோண்டின் ஒப்புதலும் இருந்தது. சொல்ல மறந்துவிட்டேன், அந்த வயசாளியும் எங்களுடனேயே நகரத்திற்கு வந்தார். இரண்டு மூன்று நாட்கள் எங்கள் வீட்டில் தங்கினார். பிறகு, கிளம்ப முடிவு செய்தார். “இந்த நகரைப் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை. எந்த நகரத்தையும் நான் விரும்பியதில்லை என்றாலும் இந்த நகரம், ட்ராம் வண்டிகளாலும் மோட்டார் வண்டிகளாலும் என்னை பயமுறுத்துகிறது. சீக்கிரமே இந்த நகரின் தெருப்புழுதியை என் காலிலிருந்து உதறித் தள்ளாவிட்டால், நான் கோழையாகிப் போய் விடுவேன்.. காட்டுப் புலியும் என்னை பயமுறுத்தியதில்லை, ஆனால் ஒருமோட்டார் வண்டி பற்றி அப்படிச் சொல்ல முடியாது. நவீன நகரங்களில் சாலையைக் கடப்பதில் ஒரு நிமிடம் பணயம் வைக்கப்படும் உயிர்களின் எண்ணிக்கை, மிகப்பயங்கரமான காடுகளில் ஒரு நாள் முழுக்க இருக்கும் ஆபத்தில் இருக்கும் உயிர்களைக் காட்டிலும் அதிகம். போய் வருகிறேன். எங்கே மரங்கள் அமைதியை ஆடையாய் உடுத்தியிருக்கின்றவனோ, எங்கே காற்று மாசும் வாடைகளும் அற்று இருக்கிறதோ, வெட்டி எடுக்கப்பட்ட ரத்தினம் போன்ற வானம் எங்கு  கம்பங்களாலும் தந்திக் கம்பிகளாலும் குறுக்கும் நெடுக்கும் வெட்டப்படாமல் முழுமையாக இருக்கிறதோ, அங்கே போகிறேன். தொழிற்சாலையின் சங்குகளுக்கு பதில் பறவைகளின் சத்தங்களைக் கேட்கலாம், திருடர்களுக்கும் கொலைகாரர்களுக்கும் பதிலாக அப்பாவி புலிகளையும் கருஞ்சிறுத்தைகளையும் நேருக்கு நேர் பார்க்கலாம். போய் வருகிறேன்!” என்று கிளம்புவதற்கு முன் சொன்னார்.

ஆனால் அவர் கிளம்புவதற்கு முன், நான் மேலும் நாற்பது தூதுப் புறாக்களையும் சில டம்ப்ளர் ரக புறாக்களையும் வாங்க எனக்கு உதவி செய்தார். இந்த இரண்டு வகையையும் ஏன் தேர்ந்தெடுத்தேன் என்று நீங்கள் கேட்கலாம். கரணம் போடும் புறாக்களிடமும் தூதுப் புறாக்களிடமும் எனக்கு ஏதும் பிரத்யேக விருப்பம் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், ஃபேண்டெயில்கள், பெளட்டர்கள் மற்றும் பிற புறாக்கள் அழகாக இருப்பதைத் தவிர வேறொன்றுக்கும் பிரயோஜனமில்லை. எங்கள் வீட்டில் இந்த வகையிலும் சில புறாக்களை வைத்திருந்தோம் ஆனால் அவற்றை தூதுப் புறக்களோடும் தொலைதூரம் பறக்கும் புறாக்களோடும் வைத்திருப்பதில் நிறையச் சிரமங்கள் இருந்தன. கடைசியில் என்னுடைய கவனம் முழுவதையும் தூதுப் புறாக்களுக்கே தந்துவிட்டேன்.

இந்தியாவில் எனக்குப் பிடிக்காத விசித்திரமான ஒரு வழக்கம் இருக்கிறது. நீங்கள் ஒரு தூதுப் புறாவை விற்றால், என்ன விலைக்கு விற்றிருந்தாலும் சரி, அது புதிய எஜமானிடமிருந்து பறந்து மீண்டும் உங்களிடமே வந்துவிட்டால், அது மீண்டும் உங்களுடையதாக ஆகிவிடும். எவ்வளவு பணம் வாங்கியிருந்தாலும் நீங்கள் அதைத் திருப்பித் தர வேண்டியதில்லை. புறா வளர்ப்பவர்களிடம் இந்த வழக்கம் இருக்கிறது என்பது தெரியும் என்பதால், வேறு எதைச் செய்வதைவிடவும் முதலில் நான் வாங்கிய புறாக்களை என்னை விரும்பச் செய்ய வேண்டும். அவற்றை விலை கொடுத்து வாங்கியிருப்பதால், அவை மீண்டும் பழைய எஜமானரிடம் போவதை நான் விரும்பவில்லை. தங்களுடைய புதிய வீட்டில் அவை விசுவாசமாக மகிழ்ந்திருக்க என்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்தேன்.

ஆனால் நடைமுறை வாழ்க்கை என்று ஒன்று இருக்கிறதே. மிகவும் தேவையான செயல்களிலிருந்து நான் தொடங்கியாக வேண்டும். முதல் சில வாரங்களுக்கு அவற்றை எங்கள் கூரை எல்லைக்கு உள்ளேயே வைத்திருக்க அவற்றின் இறக்கைகளைக் கட்டியாக வேண்டும். புறாக்களைப் பறக்கவிடாமல் இறக்கைகளைக் கட்டும் கலை கொஞ்சம் நுணுக்கமானது. ஒரு நூலை எடுத்துக் கொண்டு, ஒரு சிறகின் அடியை ஒட்டி, அதன் ஒரு முனையை விட்டு பின் மறு சிறகிற்கு மேலே விட்டு, பின் அடுத்த சிறகிற்கு கீழே விட்டு, என்று இப்படி மாறி மாறி கடைசி சிறகு வரை செய்ய வேண்டும். பின், நூலின் மறுமுனையை எடுத்து, முதல் சிறகின் கீழே செலுத்தி, அடுத்த சிறகிற்கு மேலே செலுத்தி கடைசி சிறகு வரைக் கொண்டு போய் பின் இரண்டு முனைகளையும் முடிச்சுப் போட வேண்டும். கிட்டத்தட்ட தைப்பதைப் போன்றது. பறக்க முடியாமல் செய்தாலும், இது கொஞ்சமும் வலியில்லாத சிறை. இறக்கைகளை விரிக்கவோ, அடித்துக் கொள்ளவோ எந்த்த் தடையும் இல்லை. இறக்கைகளை விரிக்கலாம், தன் அலகினால் மசாஜ் செய்து கொள்ளலாம்.

பிறகு என்னுடைய புதிய புறாக்களை மொட்டை மாடியின் வெவ்வேறு முனைகளில் அமர்த்தினேன். அவை அங்கிருந்து தங்கள் புதிய சுற்றத்தின் நிறத்தையும் தரத்தையும் காணமுடியும். குறைந்தபட்சம் பதினைந்து நாட்களாவது இப்படிச் செய்ய வேண்டும்.

இந்த இடத்தில், இதே போல வண்ணக்கழுத்து கட்டப்பட்டிருந்தபோது அவன் செய்த சேட்டையைச் சொல்லியாக வேண்டும். நவம்பரில் அவனை வேறு ஒருவருக்கு விற்றிருந்தேன். அவன் இறக்கைகள் நூலில் இருந்து விடுபட்டபின் என்னிடம் திரும்பி வருகிறானா என்பதைச் சோதிக்கவே அவனை விற்றேன்.

விற்ற இரண்டு நாட்களுக்குப் பின், அவனை வாங்கியவர் என்னிடம் வந்து, “வண்ணக்கழுத்து ஓடிவிட்டான்என்றார்.

எப்படி?” என்றேன்.

எனக்குத் தெரியாது. ஆனால், அவனை என் வீட்டில் எங்கும் காணவில்லை.”

அவன் இறக்கைகளை கட்டியிருந்தீர்களா? அவனால் பறக்க முடியுமா?” என்று கேட்டேன்.

அவன் இறக்கைகள் கட்டப்பட்டுத்தான் இருந்தனஎன்றார்.

பீதி என்னைப் பிடித்துக் கொண்டது. “ஒட்டகத்தின் சகோதரனே, கழுதைக்குச் சொந்தக்காரனே, இங்கே ஓடி வருவதற்கு பதிலாக, உன்னுடைய சுற்றுவட்டாரத்தில் அல்லவா அவனைத் தேடியிருக்க வேண்டும். அவன் இறக்கைகள் கட்டப்பட்டிருக்க, அவன் பறக்க முயற்சித்து உன்னுடைய கூரையிலிருந்து விழுந்து விட்டான் என்பது உனக்குத் தெரியவில்லையா? இவ்வளவு நேரத்திற்கு ஏதாவது ஒரு பூனையால் கொல்லப்பட்டு விழுங்கப்பட்டிருப்பான். இது ஒரு படுகொலை. தூதுப் புறாக்களின் சிகரமாக இருந்த ஒன்றை மனிதர்களிடமிருந்து பறித்துவிட்டாய். புறாக்களின் பெருமையை நீ கொன்றுவிட்டாய்என்று அவனைக் கடிந்து கொண்டேன்.

என் வார்த்தைகள் அந்த மனிதனை மொத்தமாக பயமுறுத்திவிட்டன. அவன் தன்னுடன் வந்து வண்ணக்கழுத்தைத் தேடுமாறு என்னைக் கெஞ்சினான். என் முதல் எண்ணமே வண்ணக்கழுத்தை பூனைகளிடமிருந்து மீட்பதாகத்தான் இருந்த்து. ஒரு நாள் மதியம் முழுக்கச் செலவழித்தோம். ஆனால் ஒன்றும் பிரயோஜனமில்லை. பன்னிரெண்டு மணிநேரத்தில் என் வாழ்நாளில் அதுவரை பார்த்திருந்ததை விட மகா மட்டமாக சந்துகளில் எல்லாம் தேடினேன். ஏதாவது ஒரு மோசமான பூனை அவனைக் கண்டு கொள்ளும் முன் நான் அவனைக் கண்டுபிடித்து விட விரும்பினேன். ஆனால், அவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அன்றைய இரவு, வீட்டிற்கு தாமதமாகத் திரும்பி, அதற்காக வாங்கிக்கட்டிக் கொண்டேன். நெஞ்சம் உடைந்த சிறுவனாக படுக்கச் சென்றேன்.

என்னுடைய நிலைமையை உணர்ந்த என் அம்மா, நான் வலியோடும் கொந்தளிக்கும் மனநிலையோடும் உறங்கப் போவதை விரும்பவில்லை. “உன் புறா பத்திரமாக இருக்கிறது. அமைதியான மனதோடு தூங்குஎன்றார்.

ஏம்மா?”

நீ அமைதியாக இருந்தால், உன்னுடைய சாந்தமான எண்ணங்கள் உனக்கு உதவ முடியும். நீ நிம்மதியாக இருந்தால், உன்னுடைய அமைதி அவனையும் பதற்றமில்லாமல் வைத்திருக்கும். அவன் பதற்றமில்லாமல் இருந்தால் அவனுடைய மூளை நன்கு வேலை செய்யும். உனக்குத் தெரியுமே வண்ணக்கழுத்தின் மூளை எத்தனை கூர்மையானதென்று. அமைதியாக வேலை செய்தால், எல்லாத் தடைகளையும் உடைத்து வீட்டையும் பாதுகாப்பையும் அவன் அடைவான். இப்போது எங்கெங்கும் நிறைந்திருக்கும் கருணையிடம் பிரார்த்தித்து நம்மை சாந்தப்படுத்திக் கொள்வோம்.” பின், இரவின் அமைதி எங்களைச் சூழ்ந்திருக்க அரை மணிநேரம்நான் சாந்தமாக இருக்கிறேன். இருக்கும் எல்லாமே சாந்தமாக இருக்கின்றன. அமைதி அமைதி அமைதி எல்லாருக்கும் போய்ச் சேரட்டும். ஓம் ஷாந்தி, ஷாந்தி, ஷாந்தி!” என்று சொல்லிக் கொண்டிருந்தோம்.

உறங்கப் போகும் முன் என் அம்மா, “இப்போது உனக்கு எந்த கெட்ட கனவும் வராது. இப்போது தெய்வத்தின் அமைதியும் கருணையும் உன்னில் கிளர்ந்து எழுந்திருக்கின்றன, நீ அமைதியான முழுமையான ஓய்வைப் பெறுவாய்என்றார்.

அது பயன் தந்தது என்பதில் சந்தேகம் ஏதுமில்லை. காலை பதினோரு மணி சுமாருக்கு, வண்ணக்கழுத்து வானில் பறந்து வந்தான். உயரத்தில் பறந்தான். அவன் தன் இறக்கைகளை எப்படி விடுவித்துக் கொண்டான் என்பதை அவனுடைய மொழியிலேயே உங்களுக்குச் சொல்ல வேண்டும். மீண்டும் கனவின் இலக்கணத்தையும் கற்பனையின் அகராதியையும் உபயோகப்படுத்துவோம்.

எங்கள் வீட்டுக் கூரையில் உட்கார்ந்து கொண்டு, “பல மொழிகளை அறிந்தவரேஎன்று தொடங்கினான். “அந்த மனிதனின் வீட்டில் ஒரு நாள் கூட என்னால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. உண்பதற்கு புழுத்துப் போன தானியங்களையும், குடிப்பதற்கு கெட்டுப்போன தண்ணீரையும் எனக்குத் தந்தான். என்ன இருந்தாலும் நானும் ஒர் உயிர். என்னை ஏன் கல்லைப் போலவோ கண்ணாடிச் சில்லைப் போலவோ நடத்த வேண்டும். மேலும், என் இறகுகளை மிக மட்டமாக நாறும் மீன்பிடி நரம்பைக் கொண்டு கட்டிவிட்டான். அப்படிப்பட்டவனோடு எப்படி இருக்க முடியும்? இருபோதும் இருக்க முடியாது. அவன் வீட்டின் வெள்ளைக் கூரையின் மேல் என்னை வைத்துவிட்டு கீழே போய்விட்டான். பிறகு என் இறக்கைகளை அடித்து நான் பறந்தேன். ஆனால் என் இறக்கைகள் கனமாக இருந்தன, பறக்கும் போது வலித்தது. அதனால், பக்கத்துச் சந்திலிருந்த ஒரு கடையின் பந்தலில் விழுந்தேன். அங்கு உட்கார்ந்து கொண்டு, உதவிக்கு யாரும் வருகிறார்களா என்று காத்துக் கொண்டிருந்தேன். சில உழவாரக் குருவிகள் பறந்து போவதைப் பார்த்தேன். அவற்றை அழைத்தேன், ஆனால் அவை என் நண்பர்கள் அல்ல. ஒரு காட்டுப் புறாவைப் பார்த்தேன். அதையும் அழைத்தேன். ஆனால், அதுவும் எதுவும் செய்யவில்லை. அப்போது ஒரு கருப்பு நிற பூனை என்னை நோக்கி வருவதைக் கண்டேன். சாவு நான்கு கால்களோடு வருகிறது. அது கிட்டே வர வர, அதன் நீலக் கண்கள் சிவந்தன. அது பதுங்கிப் பாயத் தயாரானது. நானும், அதன் தலைக்கு மேல் தாவி, அந்த பந்தலுக்கு ஐந்தடிக்கு மேலே இருந்த விளிம்பிற்குப் பறந்தேன். அங்கு ஒரு உழவாரக் குருவி குடித்தனம் வைத்திருந்தது. மிகக் கடினமாக இருந்தாலும், அந்தக் கருப்புப் பூனை மறையும் வரை நான் அந்த விளிம்பில் ஒட்டிக் கொண்டிருந்தேன். இப்போது மீண்டும் தாவினேன். எனக்கு நான்கு அல்லது ஐந்தடிக்கு மேலேதான் கூரை இருந்தது. அங்கே உட்கார்ந்து கொண்டேன். ஆனால், என் இறக்கை வலித்தது. வலியைக் குறைக்க, என் சிறகுகளின் வேர்களை மசாஜ் செய்து கொண்டேன்.

ஒவ்வொரு சிறகாக என் அலகு ஒத்தி தடவிக் கொண்டிருந்த போது, ஏதோ ஒன்று நழுவியது. என்னுடைய சிறிய சிறகு ஒன்று, மட்டமாக நாற்றமடித்த மீன்பிடிக்கும் நரம்பிலிருந்து வெற்றிகரமாக வெளிவந்துவிட்டது. அடுத்த சிறகையும் ஒத்தி தடவிக் கொடுத்தேன். அதுவும் வெளிவந்துவிட்டது. என்னவொரு பெருமை! சீக்கிரமே மொத்த இறக்கையும் விடுபட்டது. அதே நேரத்தில் அந்தக் கருப்புப் பூனை மறுபடியும் கூரையில் தோன்றியது. ஆனால், இப்போது என்னால் பத்தடி தூரமாவது பறக்க முடிந்தது. ஒரு உயர்ந்த கட்டிட்த்தின் விளிம்பை அடைந்தேன். அங்கு உட்கார்ந்து கொள்ள ஏதுவாய் ஓரிடம் இருந்தது. அங்கிருந்து அந்த கொலைகாரப் பூனையை கவனித்தேன். என் இறக்கையிலிருந்து விழுந்த மீன்பிடி நரம்பின் மீது பாய்ந்து குதித்துக் கொண்டிருந்தது. அதன் செய்கை எனக்கு புதிய விஷயத்தை உணர்த்தியது. நான் அதை ஈர்க்கவில்லை, அந்த மீன்பிடி நரம்பின் வாடையே அதை ஈர்த்திருக்கிறது. தொடர்ந்து என்னுடைய மற்றொரு இறக்கையில் கட்டப்பட்டிருந்த நரம்பையும் கடித்து அழுத்தம் கொடுத்தேன். பாதி சிறகுகளை விடுவிப்பதற்க்குள் இரவு வந்துவிட்டது. அந்த நாற்றமெடுக்கும் நரம்பை என்னிலிருந்து முழுவதும் தூக்கி எறிந்தபின் வீட்டிற்குப் பறக்க விடியல் வரை காத்திருக்க வேண்டியதாகிவிட்டது. ஏனென்றால், அந்தியில் ஆந்தைகள் பறக்கும் அதைத் தொடர்ந்து பருந்துகள் வரும். காற்று முழுதும் பாதுகாப்பான பாதையாக இருக்க நான் விரும்பினேன். இப்போது நான் வீட்டில் இருக்கிறேன். எனக்குப் பசிக்கிறது. தாகமாகவும் இருக்கிறது.”

என்னுடைய புதிய புறாக்களுக்கு நான் செய்த முதல் காரியம், உணவும் நல்ல தண்ணீரும் கொடுத்தது தான். ஒரு நாளும் அவை தாம் குளித்த தண்ணீரைக் குடிக்கவிட்டதில்லை. வண்ணக்கழுத்தின் இறக்கை மீன் வாடை அடித்ததால், மற்ற புறாக்களிலிருந்து அவனுக்கு மட்டும் தனியே ஒரு கூண்டைக் கொடுத்தேன். ஒரு நல்ல சமூகத்தில் நுழைய அவனுக்கு மூன்று நாட்களும் மூன்று குளியல்களும் தேவைப்பட்டன. இப்படி வருத்தப்பட வைக்கும் அளவிற்கு செய்துவிட்டான் என்னிடம் வண்ணக்கழுத்தை வாங்கியவன். அவனிடம் வாங்கிய காசை என் தந்தை திருப்பிக் கொடுக்க வைத்துவிட்டார் என்பதையும் இங்கே சொல்லிவிடுகிறேன். உண்மையில் எனக்கு அந்தக் காசைக் கொடுக்க மனம் இல்லை. ஆனால், இப்போது என் அப்பா சொன்னபடி நடந்து கொண்டது தான் சரி என்று உணர்கிறேன். பதினைந்து நாட்களுக்குப் பின், என்னுடைய புதிய பறவைகளின் கட்டுக்களை அழித்துவிடும் முன், என்னை விரும்ப அவற்றுக்கு லஞ்சம் கொடுத்தேன். ஒவ்வொரு நாள் காலையிலும் கொஞ்சம் சிறுதானியத்தையும் வேர்க்கடலைகளையும் நெய்யில் நெய்யில் கலந்து வைப்பேன். ஒருநாள் முழுக்க அவை ஊறிய பின், என்னுடைய ஒவ்வொரு பறவைக்கும் ஒரு டஜன் கடலைகளைத் தருவேன். அவற்றுக்கு இந்த ருசியான கடலைகள் பிடித்துப் போய் விட்டன. இரண்டே நாட்களில், மாலை ஐந்து மணிக்கு முன் என்னிடம் வந்து நெய்க் கடலைக்காக கெஞ்சும் பழக்கத்தை உருவாக்கிக் கொண்டுவிட்டன. அடுத்த மூன்று நாட்களில், ஐந்து மணிக்கு இன்னும் பதினைந்து நிமிடங்கள் இருக்கும் போது அவற்றின் இறக்கைகளை மெதுவாக விடுவித்தேன். தங்கள் விடுதலையை உணர்ந்த நொடியில் அவை அனைத்தும் பறந்தன. ஆனால் பாவம், தங்கள் சுதந்திரத்தை உணர்ந்த பரவசம் தணிந்த பிறகு, நெய்க் கடலைக்கும் சிறுதானியங்களுக்கும் ஆசைப்பட்டு மீண்டும் கூரையில் வந்த அமர்ந்தன. புறாக்களின் நம்பிக்கையை வெல்ல, அவற்றின் வயிற்றை நிறைக்க வேண்டியிருப்பது பரிதாபம் தான். ஆனால், அந்தோ பரிதாபம், இந்த விஷயத்தில் புறாக்களைப் போலவே நடந்து கொள்ளும் ஆண்களையும் பெண்களையும் நான் பார்த்திருக்கிறேன்.

(தொடரும்…)

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.