நாஞ்சில் நாடனை முதலில் எப்போது வாசித்தேன் என்பது நினைவில் இல்லை. வாழ்க்கைச் சுழலில் முங்காமல் முழுகாமல் ‘மிதவை’ பற்றி நீந்தி ‘சதுரங்கக் குதிரையில்’ ஏறி ‘எட்டுத் திக்கும் மதயானைகளை’ வீழ்த்தி ஆசுவாசமாகி திரும்ப நாஞ்சில் நாடனை கண்டடைந்தபோது வருடங்கள் ஓடியிருந்தன.
புத்தகக் கண்காட்சியில் முதன் முறையாக வாங்கிய புத்தகங்கள் கி.ராவுடையதும் நாஞ்சில் நாடனுடையதும். எழுத்துக்களால் கை குலுக்கிய நட்பு அது. நம்மை, நம் சுமைகளை, நம் சின்னச் சந்தோஷங்களை, வருத்தங்களை, இழப்புக்களை பகிர்ந்து கொள்ளும் எழுத்து அது.
’எழுத்து என்பது தன் வாழ்க்கையைப் புரிந்து கொள்ளும் முயற்சி, தன் சுயத்தைத் தேடும் முயற்சி’ என்று நாஞ்சில் நாடன் சொன்னாலும் அவரின் படைப்புகள் வாசகர்களையும் அந்த முயற்சிக்காழ்த்துவது மறுக்க முடியாதது. கதைகள், கட்டுரைகள், இலக்கியம், கவிதை என்று பல தளத்தில் நாஞ்சில் நாடனின் வீச்சு பரவியிருந்தாலும் எனக்கு கும்பமுனியும் கண்ணுவிள்ளையும் போதும். எனக்கென்றில்லை. ஒரு முறை கும்பமுனி கதைகளில் ஒன்றைப் படித்தாலே மனதிற்கு நெருக்கமாகி விடுவார்கள் இருவரும். கதை மொழி தரும் உவகை, கீரியும் பாம்புமாய் சீறியபடி அந்நியோன்னியமாய் கிண்டலும் வசவும், இவற்றோடு சிரிக்கச் சிரிக்க, மனம் கனக்க, சமுதாயத்தில் புரையோடிக் கிடக்கும் கேடுகளைச் சாடவென்று நாஞ்சில் நாடனின் முழுமையான படைப்புக்களாக நான் நினைப்பது கும்பமுனிக் கதைகள். மனம் சலித்த நேரங்களில் என்னை மீட்டெடுக்க நான் தஞ்சமடைவோர் கும்பமுனியும் கண்ணுவிள்ளையும்.
பார்வதி சன்மான் கும்பமுனி கதைகளில் எத்தனை முறை வாசித்தாலும் சலிக்காத ஒன்று.
”என்னவே, செத்த பொறவு அவிச்சு வச்சு கும்பிட்டு திங்கச்சிலே நான் இருக்கமாட்டம்ணுட்டு இப்பமே அவிச்சிட்டேரா?” என்றார் கும்பமுனி.
”ரெண்டும் ஒண்ணுதாலா!” என்றார் தவசிப்பிள்ளை.
இப்படித் தொடங்கி விருது படுத்தும் பாடு கும்பமுனியின் நாச்சவுக்கு சொடுக்கில் உச்சமாகும்.
”இலக்கியச் சுடர்னு ஒருத்தன் ஒண்ணரை மணிக்கூர் பேசுவான், அவன் முப்பது வருசத்துக்கு முந்தி படிச்சதை. சொளவால் புள்ளிப்புலியை அவனுக்க அம்மையாக்கும் அடிச்சு வெரட்டுனாண்ணு…எல்லாத்தையும் அவுத்து வீசிட்டு அப்படியே அம்மணமா ஓடிரலாம்னு இருக்கும்.”
இதை நாம் எத்தனை முறை அனுபவித்திருக்கிறோம்.
குருடனுக்கு பார்வை வந்து போனாற்போல் கும்பமுனி பார்லிமெண்ட் மெம்பராகி குருட்டாம் போக்கில் ஆளும் கட்சிக்கு ஆதரவாகி மூன்றே மாதத்தில் அரசு கவிழும் அபாயத்தில் பதைக்கிற பதைப்பு ‘கவிழ்ந்தென்ன மலர்ந்தென்ன காண்’ கதையில் அட்டகாசமாயிருக்கும்.
’நீ என்ன எழவைக் கண்ட? அரசாங்கம் கவுந்தா பார்லிமெண்டைக் கலச்சு மறு தேர்தல் வந்திரும்லடா? நான் வந்து மூணு மாசம்தானே ஆகீருக்கு. பென்சன் பத்தணும்ணா குறஞ்சது அஞ்சு வருசம் மெம்பரா இருக்கணும். இன்னும் ஒரு வீடு வேங்கல்லே, சொந்தமா காரு வாங்கல்லே, வடக்கு மலையிலே ஒரு தோட்டம் வாங்கல்லே, பேங்கிலேஎந்த டெபாசிட்டும் கெடையாது. பொறந்த நாளு கொண்டாடி பத்து அறுநூறு குதிரைப் பவும் சேக்கல்லே, நாக்கா மடத்திலே அஞ்சு ஸ்டார் ஓட்டல் கட்டல்லே….’
வெறும் சிரிப்பும் சீண்டலுமல்ல கும்பனியும் தவசிப் பிள்ளையும். சாலாச்சி மீதான காதல் கை கூடாத கும்பமுனியைச் சீண்டிவிட்டு பரிதவிக்கும் கண்ணுவிள்ளையின் தவிப்பு சொல்லக் கூடாது. ’சீடனாக வந்த குரு’ காட்டும் அந்நியோன்னியம் அது. கண்ணுவிள்ளையை எழுத்தாளராக்கப் போய் மடைமாறி கும்பமுனியின் காதல் தோல்வியில் கலங்கடித்து கும்பமுனியின் சதாபிஷேகக் கொண்டாட்ட ஏற்பாடுகளில் நம்மைப் பைத்தியமாக்கும் எழுத்து நாஞ்சில் நாடனுடையது.
”ஒரு காரியம் மறந்திராதே! பொறந்த நாள் அண்ணைக்கு நம்ம வீட்டு முற்றத்திலே இருந்து நாம ஆன மேல அம்பாரியாட்டுதான் விழா மேடைக்குப் போவோம்”
”அதுக்கு உமக்கு குண்டி உறப்பிருக்கா?”
”என்னது?”
”இந்த சூம்பின குண்டியோட ஆனைக்கு முதுகிலே உக்காந்து மூணு மைல் போனேருண்ணா இடுப்பு எலும்பு அச்சப்பம் மாரி நொறுங்கீராதா?”
எழுதுவது ஏறக்குறைய மறந்து போன கும்பமுனி தீபாவளி மலருக்காக இரண்டு கதை எழுதினால் வரக்கூடிய இரண்டாயிரம் ரூபாய்க்காக கண்ணுவிள்ளையிடம் கதைக்கரு வேண்டி அடிக்கும் கூத்து ‘கதை எழுதுவதன் கதை’.
”இல்லாட்டா பிச்சைக் கோனாருக்க பசுமாடு எருமைக் கன்னுக்குட்டி போட்டுல்லா..அதை எழுதும்..”
”அதெல்லாம் சயின்ஸ் ஃபிக்ஷன்லா? அதெல்லாம் சுஜாதாதான் எழுத முடியும்…”
”போன பூவுலே, நெல்லுக்கு வெலயே இல்லேண்ணு, சாமிக்கண்ணு புலைமாடன் கோவில் உண்டியல்லே பேண்டு வச்சாம்லா, அதை எழுதும்”.
வல்விருந்து தொகுப்பின் மணிமகுடம் ‘வெள்ளித் தாம்பாளம் சொன்ன கதை’. சிரித்து மாளாது.
”பேப்பூர் சுல்தான்னு பட்டப் பேரு. ஒரு பேட்டியிலே சொல்லிருக்காரு. வாசல்லே கெடந்த நாயைக் காணிச்சு – இது ஸ்டேட் சாகித்ய அகாதமி, செண்ட்ரல் சாகித்ய அகாதமி, ரெண்டு பட்டயத்தாலயும் எறி வாங்கீருக்குன்னு”
”நீரு அப்ப பீக்குண்டி சுல்த்தானாக்கும்”
தவசிப்பிள்ளை போட்ட லெக் ஸ்பின் கும்பமுனி வாயைத் தற்காலிகமாக அடைத்தது..
இப்படி 19 சிறுகதைகளின் தொகுப்பு வல்விருந்து. இந்தக் கதைகள் வெறும் சிரிப்புக்காக மட்டும் எழுதப்பட்டவை அல்ல. முகவுரையில் நாஞ்சில் நாடன் சொன்னபடி ”கும்பமுனி வலுவான காயங்கள் பெற்றவர். சமூகத்திடம் எதைப் பெற்றாரோ அதைத் திருப்பிச் செலுத்துவார், பைசா பாக்கி இல்லாமல், வட்டி இல்லாக் கடனாக. நகுதற் பொருட்டன்று, மேற்சென்று இடித்தற் பொருட்டு.”
மேலோட்டமான வாசிப்போ, பின், முன் இடை நவீனத்துவம் தேடி, படிமம் கண்டு புல்லரிப்பு பெறும் வாசிப்போ நாஞ்சில் நாடனின் எழுத்து எப்போதும் அவரவர் கை மணல்.