(நியூ யார்க்கர் இதழில் காரத் கிரீன்வெல் எழுதிய கட்டுரையின் தமிழாக்க வடிவம்)
தி எகானமிஸ்ட் பத்திரிக்கையில் 2010ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் “மகிழ்ச்சியின் புவிப்பரப்பு” என்று ஒரு கட்டுரை வந்தது. அப்போதைய ஐரோப்பிய யூனியனில் ரோமானியாவும் பல்கேரியாவும் புதிதாய் இணைந்திருந்தன. ஐரோப்பிய யூனியனில் மிகவும் மோசமாகப் பேசப்பட்ட பல்கேரியாவைத்தான் “உலகின் மிகவும் சோகமான இடம்” என்று எகானமிஸ்ட் கட்டுரை பிரகடனப்படுத்தியது.
அதன்பின் சரியாக ஓராண்டுக்குப்பின், பல்கேரியாவின் மிகவும் புகழ்பெற்ற எழுத்தாளர் ஜியோர்கி கொஸ்போதினோவ் “துயரத்தின் இயற்பியல்” என்ற தனது இரண்டாம் நாவலை எழுதினார் (இவ்வாண்டு அதன் ஆங்கில மொழிபெயர்ப்பை ஓப்பன் லெட்டர் புக்ஸ் பதிப்பிக்கிறது). எகானமிஸ்ட் கட்டுரைக்கும், கிழக்கு ஐரோப்பிய மனநிலை குறித்து பரவலாய் அறியப்பட்ட தேய்வழக்குகளுக்கும் ஒருவகையில் இது தன் எதிர்வினை என்று ஜியோர்கி கொஸ்போதினோவ் நேர்முக உரையாடல்களில் தனது இந்த நாவலின் இடத்தை வரையறை செய்து கொண்டார். “அடிப்படையில் என் கதையின் நாயகன் ஒரு கதை சொல்ல முயற்சி செய்கிறான். குறிப்பாக இந்த இடத்தைப் பற்றி கதை சொல்ல முற்படுகிறான், இது மிகவும் சோகம் நிறைந்த இடம். அவன், தன் சோகங்களை எதிர்கொள்ள முயற்சி செய்கிறான். அல்லது, குறைந்தபட்சம் அவற்றை ஓர் ஒழுங்குக்குக் கொணர்ந்து விவரிக்க முயற்சி செய்கிறான்”.
பல்கேரியாவில் பரபரப்பு ஏற்படுத்திய இந்த நாவலின் முதல் பதிப்பு ஒரே நாளில் விற்றுத் தீர்ந்தது, 2012ஆம் ஆண்டில் மிக அதிக அளவு விற்பனையான புத்தகம் என்ற இடத்தையும் பிடித்தது. தேசிய இலக்கிய விருதுகள் அனைத்தையும் வாரிச் சுருட்டிக் கொண்டது, அதன் மொழிபெயர்ப்பு ப்ரிமியோ ஸ்ட்ரெகா யூரோப்பியோ மற்றும் பரூக் பெர்லின் ப்ரைஸ் போன்ற முக்கியமான பல ஐரோப்பிய விருது பட்டியல்களில் இடம் பெற்றது.
கொஸ்போதினோவ் கூறியதுபோல், உலக அளவில் “அதன் இலக்கியம் குறித்து பிறருக்கு ஆர்வமில்லாத” தேசத்தைச் சேர்ந்த இந்த எழுத்தாளருக்கு சர்வதேச வெற்றியென்பது ஒரு வியப்பாகவே இருக்கிறது. பல்கேரியாவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள யாம்போல் என்ற சிறுநகரத்தில் பிறந்தவர் கொஸ்போதினோவ். அவரது குழந்தைப்பருவம் பெரும்பாலும் டோபோலவ்கிராட் என்ற நகரில் கழிந்தது- துருக்கிய எல்லைப்பகுதியிலுள்ள அந்த நகரம் யாம்போலைக் காட்டிலும் சிறியது. அவரது எழுத்தை வாசிக்கையில் நமக்குக் கிட்டும் சுகத்தில் கிராமப்புறக் காட்சிகளும் சிறுநகர வாழ்வும் நவீனத்துவ இலக்கியக் கொண்டாட்டங்களோடு கூடுவதென்பதற்கு பெரும்பங்குண்டு.
சிறப்பாக வரவேற்கப்பட்ட இரு கவிதை தொகுப்புகளுக்குப்பின், 1999ஆம் ஆண்டு, “நேச்சுரல் நாவல்” எழுதினார்- இது அவரது தலைமுறையைச் சேர்ந்த எழுத்தாளர்களில் அவரை ஒரு முன்னிலைப் படைப்பாளியாக முன்னிறுத்தியது, பல்கேரியா மக்களாட்சி அரசமைப்பாக மாறியபின் தோன்றிய முதல் எழுத்தாளரும் இவரே. இந்த நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பை 2005ஆம் ஆண்டு டால்கி ஆர்ச்சைவ் பிரஸ் பதிப்பித்தது. இதன் தலைப்பு பூக்கோவிடம் இரவல் பெறப்பட்டது- அதை நாவலில் ஒரு பின்வாசகமாகப் பதிவும் செய்கிறார்: “இயற்கை வரலாறு என்பது புலப்படுவனவற்றைப் பெயரிட்டு அங்கீகரித்தலே”. அவரது நாவல் துணுக்குப் பகுதிகளின் தொகுப்பு – கணநேரக் காட்சிகள், திசைதடுமாற்றங்கள், நீதிக்கதைகள், பட்டியல்கள், மீபுனைவுத்தன்மை கொண்ட நினைவோட்டங்கள்- அனைத்தும் கதைசொல்லியின் மணவாழ்வு சிதையுறுதலைச் சுற்றி தளர்வாய்த் தொகுக்கப்பட்டிருக்கின்றன.
“துவக்கங்களைக் கொண்டு நாவல் செய்வதே என் பெருவிருப்பம்,” என்று சொல்கிறார் கதைசொல்லி, ஆனால் அந்த வகைமை வெற்றிபெறும் சாத்தியத்தை மீண்டும் மீண்டும் கேள்விக்குட்படுத்தவும் செய்கிறார்: “உன்னதங்கள் போயாகியபின் அன்றாட வாழ்வு மட்டுமே நமக்கு அளிக்கப்பட்டுள்ளது என்ற நிலையில் நாவல் என்ற கருத்துருவாக்கமும்கூட சாத்தியப்படுவது எப்படி?” என்று கேட்கிறார். ஆனால் இந்த அன்றாட வாழ்வே கொஸ்போதினோவை வசீகரிக்கிறது, அதுவே நாடகங்கள், கட்டுரைகள், திரைக்கதைகள், “வெச்நடா மூகா” (“இறப்பற்ற ஈ”) என்ற டிராஜிகாமிக் (பல்கேரிய இலக்கியத்தின் முதல் கிராபிக் நாவல்) உட்பட அவரது படைப்புகள் அனைத்துக்கும் கருப்பொருளும் ஆகிறது.
பல்கேரியாவின் அன்றாட வாழ்வைப் பதிவு செய்தலென்பது பல்கேரிய சோகத்தின் தன்மையை வெளிப்படுத்துவதாகும். ஆனால் பல்கேரிய சோகமோ, இவற்றின் சிடுக்குகளை எந்த அளவுக்கு நீக்க முடியுமோ அந்த அளவு நீக்கிய புரிதலில்- மீபொருண்மச் சிக்கல் மட்டுமல்ல, மொழிக்கூற்றின் சிக்கலுமாகும். கொஸ்போதினோவ் பார்வையில், துகா (tuga) என்ற பல்கேரியச் சொல் (இதை நாவலின் மொழிபெயர்ப்பாளர் ஆஞ்செலா ரோடல் “துயரம்” என்று மொழிபெயர்க்கிறார்), பாமுக்கின் ஹூஜூன், நபகோவின் டோஸ்கா போன்றவற்றுடன் ஒப்புமை கொண்டது- ஆங்கிலத்தில் இதற்கு இணையான சொல் எதுவும் கிடையாது. (ஒருவேளை அனைவரும் தம் துயரங்கள் மொழிபெயர்க்கப்பட முடியாதவை என்று நம்புபவர்களாக இருக்கலாம், ஒருவேளை அவர்கள் நினைத்துக் கொண்டிருப்பது சரியாகவும் இருக்கலாம்).
கொஸ்போதினோவின் துகா என்பது, “இன்னும் நடந்திருக்காத ஒன்றுக்கான ஏக்கம்… வாழ்வு நழுவிச் சென்று கொண்டிருக்கிறது என்ற உண்மையின் திடீர் உணர்தல், சில விஷயங்கள் உனக்கு நேரப்போவதே இல்லை என்ற புரிதல், இதற்கான காரணங்களைக் கொண்டு மிக நீண்ட பட்டியலிடலாம்- அவை தனிப்பட்ட காரணங்களாக இருக்கலாம், அல்லது புவியியல் சார்ந்ததாகவோ அரசியல் சார்ந்ததாகவோ இருக்கலாம்”. இந்த துயரம் பல்கேரியாவுக்கு மட்டும் உரித்தான ஒன்றல்ல என்று ஏற்றுக் கொள்கிறார் கொஸ்போதினோவ், செலவுகளை இறுக்கிப் பிடிக்கும் காலகட்டத்தில் இது முழு ஐரோப்பியாவையும் அச்சுறுத்துகிறது. ஆனால் நடைமுறைச் சாத்தியங்களின் தொடுவானம் தொடர்ந்து அழித்து எழுதப்பட்ட ஒரு தேசத்தில் வாழத் தவறிய வாழ்க்கைகள் என்ற கருத்துருவாக்கம் குறிப்பிட்ட ஒரு உணர்வைத் தட்டியெழுப்பவே செய்கிறது. உடைந்து விழுந்துக் கொண்டிருக்கும் சோஷலிச நினைவுக்கூடங்கள் முதல் யாருமற்ற ஓய்வு விடுதிகளும் கட்டற்ற சந்தையின் கட்டிடத்தொழில் பெருவர்த்தக அடுக்ககங்கள் என்று அதன் சூழ்நிலத்தில் “வரையறுக்கப்படாத, அருவ கோட்பாடுகளின்” சிதிலங்களும் அவற்றின் பொய்த்துப்போன நம்பிக்கைகளும் சிதறிக் கிடக்கின்றன.
கொஸ்போதினோவ் பெருங்கதையாடல்களை முற்றிலுமாக நிராகரிக்கிறார், அவற்றின் இடத்தில் பலகுரல்களில் பேசும் கணங்களின் குறும்பதிவுகள் அளிக்கிறார். “நேச்சுரல் நாவல்” போலவே “துயரத்தின் இயற்பியல்” நாவலின் கதைசொல்லியும் கியோர்கி கொஸ்போதினோவ் என்றே பெயரிடப்பட்டிருக்கிறான். முந்தைய நாவலில் அதை எழுதும் கியோர்கி கொஸ்போதினோவ்தான் அவன் என்றும் சொல்லலாம், அவனல்லன் என்றும் சொல்லலாம், இரு தன்மையும் கொண்டவன் அதன் கதைசொல்லி.
சுயசரிதையின் சாத்தியங்களைச் சோதித்துப் பார்க்கும் நாவல்களாலும் மெய்ம்மைக்கும் புனைவுக்கும் இடையிலுள்ள வேறுபாடுகளைக் கேள்விக்குட்படுத்த விழையும் நாவல்களாலும் அமெரிக்க வாசகர்கள் ஈர்க்கப்படும் காலத்தில் இந்நாவல் வந்திருக்கிறது. அண்மைக்காலத்தில் பென் லெர்னர், ராச்சேல் கஸ்க், ஜென்னி ஓஃபில், தேஜு கோல் இப்படிப்பட்ட நூல்களை எழுதியிருக்கின்றனர். இவர்கள் தவிர கார்ல் ஓவ் நாஸ்கோர்ட், எலினா ஃபெரான்ட்டே இருவரையும் குறிப்பிட்டாக வேண்டும்.
ஆனால் இவை அனைத்துக்கும் பொதுமை கொண்ட மூதாதை என்று டபிள்யூ ஜி செபால்ட்டைச் சொல்ல முடியும் என்றாலும் கொஸ்போதினோவின் முன்மாதிரி போர்ஹெஸ்தான்- அவரது குறும்பு விளையாட்டுகளும் மிதமிஞ்சிய பகற்கனவுகளும் இவருக்கும் உண்டு. என்னதான் துயர் தோய்ந்திருந்தாலும் கொஸ்போதினோவ் இதயத்தை ஏய்ப்பவர், ஆங்காங்கே மிக நகைச்சுவையாகவும் எழுதுகிறார். “துயரத்தின் இயற்பியல்” நாவலை “குழப்பும் பாதைகளின் நாவல்” என்று கொஸ்போதினோவ் அழைக்கிறார். அதன் சிறு பகுதிகள் சிலவற்றுக்கு “பக்கவாட்டுப் பாதை”, “நிறுத்துமிடம்” என்றெல்லாம் தலைப்பு வைத்திருக்கிறார். முன்னனுமானிக்கப்பட்ட சாத்தியங்களைக் கொண்ட உறுதிப்பாடுகளின் நேர்க்கோட்டு கதைப்போக்கின் துயரை ஏற்க மறுக்கிறார் கதைசொல்லி. “பிற வடிவங்கள் இருப்பதற்கான வெளியை விட்டுவைக்க விரும்புகிறேன்,” என்கிறார் அவர், “கதையின் பொத்தல்கள், மேலும் பல குறுக்குப் பாதைகள், குரல்கள், அறைகள், முற்றுப்பெறாத கதைகள், நாம் மூக்கு நுழைக்க மாட்டாத ரகசியங்கள்”.
இத்தகைய கதைசொல்லல் உத்தி பல்கேரியாவின் அண்மைக்கால வரலாற்றின் நிகழ்வின்மையை நிகழ்த்திக்காட்ட கொஸ்போதினோவுக்கு உதவுகிறது- கம்யூனிச அதிகாரம் மேலோங்கியிருந்த கிழக்கு ஐரோப்பியாவின் பிற பகுதிகளில் நிகழ்ந்த பெருந்திரல் ஆர்ப்பாட்டங்கள் ஏதுமில்லாமல் கம்யூனிச சகாப்தம் அங்கு முடிவுக்கு வந்தது. 1989லும்கூட கம்யூனிச ஆட்சி மிக எளிதாகவே வீழ்ச்சியடைந்தது என்கிறார் அவர். கம்யூனிச அதிபர் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டபோது, “தொலைக்காட்சியில் நாங்கள் விடுதலை பெற்றுவிட்டதாகச் சொன்னார்கள்,” என்று நினைவுகூர்கிறார் அவர். உலக அளவில் பெரும் தாக்கம் கொண்ட வரலாற்று நிகழ்வுகள் எந்த ஒரு பாதிப்பும் செலுத்தாத வாழ்வின் இயல்பை அவரது “இயற்கை நாவல்கள்” கைப்பற்ற முயற்சி செய்கின்றன- “துயரின் இயற்பியல்” நாவலின் சொற்களில், “இஸ்தான்புல், வியன்னா, புடாபெஸ்ட் நகர்களுக்கு இடையிலுள்ள வெற்றிடத்தை” நிறைவு செய்ய முயற்சிக்கின்றன.
ஒழுங்கற்று, முன்னும் பின்னும் பல முறை பாய்ச்சல்கள் நிகழ்த்தும் இந்நாவல், கியோர்கியின் வாழ்வின் புறத்தடங்களை அவன் பிறந்த நாள் முதற்கொண்டு தொடர்கிறது- ட்ரிஸ்ட்ரம் ஷாண்டி போல் அவன் அத்தனையையும் நினைவில் வைத்திருக்கிறான். அவனது பள்ளிப்பருவம், கம்யூனிச ஆட்சியின்கீழ் ராணுவ பயிற்சி, வெற்றிபெற்ற எழுத்தாளராய் முதிரும் பருவம், நாளுக்கு நாள் அதிகரிக்கும் துயரில் தோயும் மனிதன் என்று அவனது அனுபவ வளர்ச்சி இதில் விவரிக்கப்படுகிறது.
குழந்தைப்பருவத்தில் கியோர்கி “அப்செஸ்ஸிவ் எம்பதடிக்-சொமாடிக் சிண்ட்ரோம்” என்ற நோய்மையால் பீடிக்கப்பட்டிருக்கிறான். பிறர் குறித்த புரிந்துணர்வு தன்னிச்சையாய், உச்ச உணர்வுநிலை எய்துவதால் அவனைச் சுற்றியுள்ள அனைத்து அனுபவங்களுக்கும் அவன் ஆட்படுகிறான்: குடும்ப உறுப்பினர்கள், அண்டை வீட்டார், மிருகங்கள், அல்சர் மருந்தாக அவனது தாத்தா விழுங்கும் புழுவும்கூட அவனது உணர்வு வட்டத்தில் புகுகின்றன. வயதேறும்போது அவன் இத்திறனை இழக்கிறான், அதற்கு பதிலாக பிறரின் கதைகளை ஒற்றை முனைப்புடன் செகரிக்கிறான்.
பின்னர் மத்திம வயதில் அவன் இந்த நாவலை எழுதுகிறான்- “எழுத்தாளர்களில் மிகவும் தயங்குபவன், சந்தேகங்கள் கொண்டவன்,” தன் நேரத்தை நாளுக்கு நாள் பேஸ்மெண்ட்தில் செலவழிக்கிறான். அவனுக்கு நோவா காம்ப்ளக்ஸ் வந்திருக்கிறது, நிகழப்போகிறது என்று அவன் அவதானிக்கும் உலகப் பேரழிவுக்கு எதிராக கதைகளையும் அனுபவங்களையும் சேகரித்துப் பதுக்கி வைத்துக் கொள்கிறான். பேரழிவு எவ்வடிவில் வரும் என்பதில் அவனுக்குத் தெளிவில்லை: புவி வெப்பமயம், அணு ஆயுத யுத்தம், அவனது பாட்டியின் தடைசெய்யப்பட்ட பைபிளில் உள்ள குதிரைக்காரர்கள், எதுவும் இருக்கலாம். “நேச்சுரல் நாவல்” போல் இந்த நாவல் பல்வேறு தொடர்பற்ற பகுதிகளை ஒருங்கிணைக்கும் தொகுப்பு- ஒரு வகையில் முறியடிக்கப்பட்ட கல்வியறிதலை உணர்த்துகிறது என்ற வகையில், தன் துயரத்தையும் தனக்குக் காத்திருக்கும் அழிவையும் புரிந்து கொள்ள முயலும் கதைசொல்லி என்ற அளவில், இப்பகுதிகள் ஒன்றுகூடவும் செய்கின்றன.
“துயரின் இயற்பியல்” நாவல் பாதி வாசித்து முடிக்கும்போது கியோர்கிக்கு சிறு குழந்தையொன்று இருப்பதை அறிய வருகிறோம்- இந்த நூலின் பெருமுனைப்புகள் சிலவற்றுக்குரிய அவசரத்தையும் இந்தத் தகவல் அளிக்கிறது- குறிப்பாக, கைவிடப்பட்ட குழந்தைகள் என்று மீண்டும் மீண்டும் வரும் கருப்பொருளின் விசையைச் சொல்லலாம். இந்தக் குழந்தைகளில் முதன்மையானவன் மினொடர்- கொஸ்போதினோவ் கதையில் அவன் பேஸ்மெண்ட்டில் பூட்டப்பட்டு தனித்திருக்கும் மூன்று வயது குழந்தை.
கதைசொல்லியின் மகள், புத்தகத்தின் சில பக்கங்கள் மட்டுமே தோன்றுகிறாள், ஆனால் அவனுக்கு அவள் அரியாட்னேவின் நூலாகச் செயல்படுகிறாள். கடந்த காலத்தின் சிக்கல் பாதைகளிலிருந்து அவனை மீட்டு நிகழ்கணத்துக்கு அழைத்து வருகிறாள் (“முதல் குளிர். முதல் பனி முதற்காற்று. முதல் நாய். முதல் மேகம்” என்று அவன் பட்டியலிடுகிறான்); சில சமயம் அவள் அவனது துயரங்களைத் தணிக்கிறாள்: “உலகின் துயரங்களை நான் எழுதிக் கொண்டிருக்கையில், போர்ச்சுகீசிய சாதேத், துருக்கிய ஹூஜூன், நாஸ்டால்ஜியா என்னும் சுவிஸ் நோய்மையை விவரித்துக் கொண்டிருக்கையில்.. அவள் என்னிடம் வருகிறாள், இரண்டரை மணிக்கு வந்து, என் பேனாவை திடீரென்று பறித்துக் கொள்கிறாள்”. தன் சோகத்தைக் கடக்க முடியாதெனினும், புரிந்து கொள்ளவும் அதை ஏற்றுக்கொள்ளவும் கியோர்கிக்கு உள்ள தேவை, அதில் அவன் தோல்வியடைந்தால் நாவலில் உள்ள கைவிடப்பட்ட குழந்தைகளின் பட்டியலில் அவனது மகளும் சேர்வாள் என்பதை நாம் உணரும்போது கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது; தன் மிக இருண்மையான கணங்களில் அவன் நம்மிடம் சொல்கிறான், “என் இருப்பிலிருந்து பிறரைக் காக்க முயற்சித்தேன்- அதிலும் குறிப்பாக என் மகள் தப்ப விரும்பினேன்”.
பல்கேரியாவில் நிகழ்ந்துள்ள சமீபத்திய சம்பவங்கள் இவை குறித்து கொஸ்போதினோவ் மேலும் சிந்திக்கவும் தூண்டுதலாய் இருந்திருக்கின்றன. பிப்ரவரி 2013ல் அவர் தன் கட்டுரைகளும் சிறுகதைகளும் கொண்ட, கண்ணுக்குத் தெரியாத சிக்கல், என்று பொருள்படும் தலைப்பு கொண்ட பல்கேரிய நூல் வெளியிட்டார். அதில் அவர், 2008ஆம் ஆண்டின் நிதிச் சிக்கலின் அடியாழத்தில் அதைக் காட்டிலும் கடுமையான, மிகப்பெரும் பேரிழப்பு ஒன்றிருக்கிறது என்ற வாதத்தை முன்வைக்கிறார்- “அர்த்தங்களின் கையிருப்பு” வற்றிக்கொண்டிருக்கிறது.
புத்தகம் வெளிவந்த அதே வாரத்தில், சோபியா நகரில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன. அவை வெகு வேகமாக அப்போதைய மத்திய- வலதுசாரி அரசை முடிவுக்குக் கொணர்ந்தன. “நம்மிடம் ஏழ்மை உண்டு, நம்மில் இயலாமை உண்டு,” என்று அவர் அப்போதைய நேர்முகங்களில் கூறினார், “ஆனால் அதற்கப்பால் ஒரு தொடுவானம் கிடையாது”. “நம் மின்கட்டணத்தை யார் கட்டுவார்கள், என்பதல்ல கேள்வி,” என்றார் அவர்- மின்கட்டண உயர்வே போராட்டங்களுக்குத் தூண்டுதலாக இருந்தது- “தோற்றுப்போன என் வாழ்வை யார் சரிக்கட்டப் போகிறார்கள் என்பதுதான் கேள்வி”.
கொஸ்போதினோவைப் பொறுத்தவரை, பொருளாதார நெருக்கடி எவ்வளவு உண்மையோ அதே அளவு இந்த நெருக்கடியின் இயல்பு அழகியல் சார்ந்தது என்பதும் அறிவுப்புலம் சார்ந்தது என்பதும் உண்மையே. நினைத்துப் பார்க்கக்கூடிய எதிர்காலத்தின் மாற்று நினைத்துப் பார்க்கக்கூடிய கடந்த காலமே- நாஸ்டால்ஜியா நிறைந்த சோஷலிஸ்ட் தீம் கொண்ட இரவு விடுதிகளும் பார்களும் (“நாஸ்டால்ஜியாவைப் பகுப்பாய்வு செய்து புரிந்து கொள்வதைக் காட்டிலும் அதை விற்றுப் பணம் பண்ணுவது சுலபம்”) என்று துவங்கி, கொஸ்போதினோவ் கணிப்பில் அதைக் காட்டிலும் பெரும் அச்சுறுத்தலான தீவிர வலதுசாரி அதாகா கட்சி நினைவுறுத்தும் பல்கேரியாவின் கடந்த கால மகோன்னதங்களின் பெருங்கற்பிதங்களும் தேசியமும் கலந்த கிட்ஷ் என்று விரிகிறது. பிப்ரவரியின் கண்டன ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து உருவாக்கப்பட்ட கூட்டணியில் அதாகா கட்சியினரின் செல்வாக்கு உயர்ந்திருக்கிறது.
இப்படி பார்த்தால், நாஸ்டால்ஜியாவும் தேசியமும் நிகழ்காலத்தின் சோகத்தை மறுக்கவும் தப்பவும் மேற்கொள்ளப்படும் முயற்சிகள். அவற்றை எதிர்த்துப் போராடுவது என்பது துயரை ஏற்றுத் தழுவிக் கொள்ளல் என்றாகிறது. “துயரின் இயற்பியல்” நாவலில் கியோர்கியின் மெய்யான தேடல், துயரோடு வாழும் வழி கண்டறிதலும், அதை புரிந்துணர்வுக்கும் நல்லூக்கம் அளிக்கக்கூடிய தடுமாற்றத்துக்கும் வேராக்குவதுவே- தீவிர அரசியலுக்கும் “சந்தை உத்தரவுகளுக்கும்” எதிரான மருந்தாய் இருக்கும் இவை “முரட்டு அச்சம்” தோன்றக் காரணமாக முடியாது.
நன்றி- ந்யூ யார்க்கர்
ஒளிப்பட உதவி- பல்கேரன்
One comment