வண்ணக்கழுத்து 11: கூடல்

மாயக்கூத்தன்

வண்ணக்கழுத்தின் காயங்கள் மெல்ல ஆறின. பிப்ரவரி மாத மத்தி வரை அவனால் கூரைக்கு மேல் பத்து கஜம் தூரம் கூடப் பறக்க முடியவில்லை. அவன் பறக்கும் நேரம் கூட மிகக் குறைந்துவிட்டது. எத்தனை முறை திரும்பத் திரும்ப கூரையிலிருந்து அவனை விரட்டினாலும், என்னால் அவனை கால் மணிநேரத்திற்கு மேல் வானில் பறக்க வைக்க முடியவில்லை. முதலில் அவனுடைய நுரையீரல்தான் சரியாக வேலை செய்யவில்லை என்று நினைத்தேன். சோதித்துப் பார்த்ததில் நுரையீரல் ஆரோக்கியமாக இருப்பது தெளிவானது. பிறகு, அவனுடைய இருதயத்தில் பிரச்சனை இருக்கலாம் என்று நினைத்தேன். ஒருவேளை நடந்த விபத்தில் இருதயம் பாதிக்கப்பட்டிருக்கக் கூடும். இரண்டாவது சோதனையில் அந்த அனுமானமும் தவறு என்பது தெளிவானது.

ஆக, வண்ணக்கழுத்தின் நடத்தையில் கடுமையாக எரிச்சலடைந்து, நடந்த எல்லாவற்றையும் விவரித்து கோண்டுக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதினேன். அவரோ சில ஆங்கிலேயர்களோடு வேட்டைச் சுற்றுலா போயிருந்திருக்கிறார். அவரிடமிருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை என்பதால், நானே என் புறாவை மிக கவனமாக ஆராய முடிவு செய்தேன். ஒவ்வொரு நாளும் அவனை எங்கள் மாடியின் மீது ஏற்றுவிட்டு பார்த்துக் கொண்டிருப்பேன். ஆனால் அவனுக்கு என்ன பிரச்சனை என்பதைப் பற்றி ஒரு துப்பும் கிடைக்கவில்லை. அவன் மீண்டும் பறப்பான் என்ற நம்பிக்கையை முழுவதுமாக நான் இழந்துவிட்டேன்.

பிப்ரவரி மாத கடைசியில், அடர்ந்த காட்டின் உட்பகுதியிலிருக்கும் கோண்டிடமிருந்து எனக்கு சுருக்கமாய் ஒரு குறிப்பு வந்தது. ”உன் புறா பயந்து போய்க் கிடக்கிறது. அவனுடைய பயத்தைக் குணப்படுத்து. அவனைப் பறக்கவை.” என்று எழுதியிருந்தது. ஆனால் அவர், எப்படி என்பதைச் சொல்லவில்லை. அவனை இன்னும் உயரமாகப் பறக்கவைக்க என்னாலும் எதுவும் செய்ய முடியவில்லை. அவனைக் கூரையிலிருந்து விரட்டுவதில் எந்தப் பிரயோஜனமும் இல்லை. நான் ஒரு மூலையிலிருந்து விரட்டினால், அவன் பறந்து போய் இன்னொரு மூலையில் உட்கார்ந்து கொண்டான். மிகவும் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், மேகத்தின் நிழலோ, வானத்தில் பறக்கும் பறவைக் கூட்டத்தின் நிழலோ அவன் மீது விழுந்தால் அவன் பதற்றத்தில் நடுங்கினான். தன் மீது விழும் எந்த ஒரு நிழலையும், தன் மீது பாயந்து வரும் ராஜாளி என்றே அவன் நினைத்துக் கொண்டான். அவன் எவ்வளவு மோசமாக நிலை குலைந்திருக்கிறான் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. அவனை அவனுடைய பயத்திலிருந்து மீட்பது எப்படி என்பது என்னை இன்னும் திணறச் செய்தது. நாங்கள் இமாலயத்தில் இருந்திருந்தால், அவனை முன்பொருமுறை குணப்படுத்திய லாமாவிடம் கொண்டு போயிருப்பேன். ஆனால், இந்த நகரத்தில் லாமா இல்லை. நான் காத்திருக்க வேண்டியதாயிற்று.

மார்ச் மாதம் வசந்த காலத்தை அழைத்து வந்தது. வழக்கத்துக்கும் அதிகமான ரோமங்கள் உதிர்ந்து மீண்டும் முளைத்திருந்த வண்ணக்கழுத்து, ஒரு பெரிய அடர்ந்த கருநீலப்பச்சைக் கல்லின் மையத்தைப் போல இருந்தான். விவரிக்க முடியாத அளவிற்கு அவன் அழகாயிருந்தான். எப்படி என்று தெரியவில்லை ஆனால் ஒருநாள், அவன் ஜகோரேவின் மனைவியுடன் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். வசந்த காலம் தொடங்கியிருக்க, அவள் மிகவும் பிரகாசமாக இருந்தாள். அவளுடைய கருவண்ண மாணிக்கக்கல் மாதிரியான நிறம் சூரிய ஒளியில், நட்சத்திரங்கள் ஒளிரும் வெப்பமண்டல இரவு போல இருந்தது. இவளும் வண்ணக்கழுத்தும் கூடுவது இவர்களுடைய பிள்ளைகளுக்கு நல்லதில்லை என்பதை நான் அறிந்திருந்தாலும், அது அவனுடைய பயத்தைப் போக்கக் கூடும் என்று நினைத்தேன். மேலும், ஜகோரே இறந்த பின்னர் அவளிடம் வளர்ந்திருக்கும் கடுகடுப்பிலிருந்து அவளை விடுபட வைக்கும் என்றும் நினைத்தேன்.

அவர்கள் இரண்டு பேரின் நட்பை மேலும் வளர்க்க, இரண்டு பேரையும் ஒரே கூண்டில் போட்டு, இருநூறு மைல்களுக்கு அப்பால் ஒரு காட்டின் முனையில் வாழும் என் நண்பன் ரட்ஜாவிடம் கொண்டு சென்றேன். அவனுடைய கிராமத்தின் பெயர் காட்சிலா. அந்தக் கிராமம் ஒரு நதிக்கரையில் இருந்தது. நதிக்கு அந்தப்புறம் அடர்ந்த காடுகளும் அனைத்து வகை மிருகங்களும் கொண்ட உயர்ந்த குன்றுகள் இருந்தன. ரட்ஜா அந்த ஊரின் பூசாரி. அவனுடைய முன்னோர்கள் பத்து நூற்றாண்டுகளாக தொடர்ந்து பூசாரிகளாக இருந்திருக்கிறார்கள். அவன் அந்த ஊரின் பூசாரி என்பதால், அவனும் அவனுடைய பெற்றோரும் ஒரு பெரிய கான்கிரீட் கட்டிடத்தில் குடியமர்த்தப்பட்டிருந்தார்கள். கான்கிரீட்டால் கட்டப்பட்ட அந்தக் கிராமத்தின் கோவில், இவர்கள் வீட்டிற்குப் பக்கத்தில் இருந்தது. உயரமான சுவர்களால் சூழப்பட்ட அந்தக் கோவிலின் முற்றத்தில், ஒவ்வொரு இரவும், வேதங்களை வாசித்து அவற்றை அங்கு கூடியிருக்கும் குடியானவர்களுக்கு விளக்கும் கடமையை ரட்ஜா செய்து வந்தான். உள்ளே அவன் சத்தமாக வாசித்துக் கொண்டிருக்கையில், வெளியே தூரத்திலிருக்கும் குறுகிய நதியின் பக்கத்திலிருந்து புலியின் உறுமலோ யானையின் பிளிறலோ கேட்கும். அது அழகிய, ஆனால் அச்சுறுத்தும் இடம். காட்சிலா கிராமத்தில் ஆபத்தான விஷயம் எதுவும் நடக்கவில்லை தான். ஆனால், நமக்கு வேண்டாத வேட்டை விலங்கினங்களை எதிர்கொள்ள அதிக தூரம் செல்ல வேண்டியதில்லை.

நான் வந்த ரயில், இரவில் காட்சிலாவை அடைந்தது. ரட்ஜாவும் அவர்கள் வீட்டு வேலையாட்கள் இருவரும் என்னை அழைத்துப் போக ரயில் நிலையம் வந்திருந்தார்கள். ஒருவர் என்னுடைய பொதியை வாங்கி தன் தோளில் போட்டுக் கொண்டார். மற்றொருவர் இரண்டு புறாக்களும் இருந்த கூண்டை வாங்கிக் கொண்டார். நாங்கள் ஒவ்வொருவரும் ஒரு அரிக்கேன் விளக்கை ஏந்திக் கொள்ள வேண்டிருந்தது. எனக்காக ஒரு விளக்கை கொண்டு வந்திருந்தார்கள். ஒரு வேலையாள் முன்னால் போக, இன்னொருவர் பின்னால் வர நாங்கள் ஒற்றை வரிசையில் ஒரு மணிநேரம் நடந்தோம். எனக்கு சந்தேகங்கள் எழுந்தன. “நாம் ஏன் இப்படிச் சுற்றிப் போகிறோம்?” என்றேன்.

“வசந்த காலத்தில் வடக்கே போகும் மிருகங்கள் இந்த வழியைக் கடக்கும். காட்டுக்குள் குறுக்கு வழியில் எல்லாம் போக முடியாது” என்றான் ரட்ஜா.

”சுத்த அபத்தம். எத்தனையோ தடவை நான் போயிருக்கிறேன். எத்தனை மணிக்குத்தான் வீடு போய்ச் சேர்வோம்?” என்றேன் நான்.

“இன்னும் அரை மணியில்…”

பிறகு, எங்கள் காலடியில் பூமி பிளந்து எரிமலையாய் ஏப்பம் விட்டது போல ஒரு பயங்கர சத்தம். “ஹோய், ஹோ ஹோ ஹோ ஹோய்!” என்று கூக்குரல்.

பயத்தில் புறாக்கள் கூண்டுக்குள் தங்கள் இறக்கைகளை அடித்துக் கொண்டன. சும்மா இருந்த கையால் ரட்ஜாவின் தோளைப் பற்றிக் கொண்டேன். ஆனால், அவனோ என் உணர்வைப் புரிந்து கொள்ளாமல் சத்தம் போட்டு சிரித்தான். எஜமானைப் போலவே வேலையாட்கள், அவர்களும் சிரித்தார்கள்.

அவர்களுடைய களிப்பு அடங்கியவுடன், ”எத்தனையோ முறை போயிருக்கிறாயா? அப்படியா? பிறகு ஏன் விளக்கொளியைக் கண்டு பயப்படும் குரங்குகளின் அலறலுக்கு பயப்படுகிறாய்?” என்றான் ரட்ஜா.

”குரங்கா?” என்றேன்.

“ஆமாம். நிறைய குரங்குகள் இந்த சமயத்தில் வடக்கு நோக்கிப் போகும். நம் தலைக்கு மேலிருந்த மொத்த கூட்டமும் நம்மைக் கண்டு பயந்துவிட்டது. அவ்வளவு தான். இனிமேல் குரங்குச் சத்தத்தைப் புலியின் உறுமல் என்று நினைத்துக் கொள்ளாதே.”

அதிர்ஷ்டவசமாக, என் மரியாதைக்கு மேற்கொண்டு பங்கம் வருவதற்கு முன் விரைவாக நாங்கள் வீட்டை அடைந்துவிட்டோம்.

அடுத்த நாள் காலை, ரட்ஜா தன் கடமையை நிறைவேற்ற அவர்களுடைய கோவிலுக்குச் சென்றான். நான் கூரைக்குச் சென்று என்னுடைய பறவைகளை திறந்துவிட்டேன். முதலில் அவை குழம்பிப்போயின. ஆனால், கையில் நெய்க் கடலைகளோடு என்னை அருகில் பார்த்த பின்னர், அவை எந்தத் தயக்கமும் இல்லாமல் காலை உணவை எடுத்துக் கொண்டன. கிட்டத்தட்ட அந்த நாள் முழுக்க நாங்கள் கூரையில் செலவிட்டோம். புதிய இடத்தின் சூழல் அவற்றை பதற்றம் கொள்ளச் செய்யும் என்பதால் அவர்களை தனியே விட்டுவிட்டுப் போக நான் விரும்பவில்லை.

தொடர்ந்த ஒருவாரத்தில், இரண்டு புறாக்களும் காட்சிலாவிக்கு தங்களை பழக்கிக் கொண்டுவிட்டன. மேலும், ஒன்றோடு ஒன்று மிக நெருக்கமாகவும் ஆகிவிட்டன. நான் புத்திசாலித்தனமாகத்தான் இவ்விரண்டையும் மற்ற புறாக்களிடமிருந்து விலக்கிக் கொண்டுவந்திருக்கிறேன் என்பதில் இப்போது எந்தச் சந்தேகமும் இல்லை. நாங்கள் அங்கு வந்த எட்டாவது நாள் வண்ணக்கழுத்து, தன் பெடையைத் தொடர்ந்து பறந்து செல்வதைக் கண்டு நானும் ரட்ஜாவும் ஆச்சரியப்பட்டோம். அவள் தாழ்வாகப் பறந்து போனாள். வண்ணக்கழுத்து பின் தொடர்ந்தான். அவன் அவளை நெருங்குவதைக் கண்டு, அவள் உயர்ந்து திரும்பிப் பறந்தாள். அவனும் அப்படியே செய்து, அவளைப் பின் தொடர்ந்தான். அவள் மீண்டும் உயர்ந்தாள். இந்த முறை அவன் பின் வாங்கினான். அவளுக்கு கீழே காற்றில் வட்டமிடத் துவங்கினான். ஆனாலும், அவன் தன் தன்னம்பிக்கையை மீண்டும் அடைவதை நான் உணர்ந்தேன். கடைசியில் புறாக்களுக்கே எடுத்துக்காட்டாகத் திகழும் வண்ணக்கழுத்து பறப்பதில் தனக்கிருக்கும் பயத்திலிருந்தும் திகிலிலிருந்தும் தன்னை குணப்படுத்திக் கொள்கிறான். மீண்டும் அவன் காற்றை தனதாக உணர்ந்தான்.

அடுத்த நாள் காலை அவர்கள் இருவரும் உயரப் பறந்து ஒருவரோடு ஒருவர் விளையாடினார்கள். வண்ணக்கழுத்து மீண்டும் அவளோடு போகாமல், அவசர அவசரமாய் கீழே வந்து அவளுக்குக் கீழ் வட்டமடித்தான். எனக்கு குழப்பமாக இருந்தது. ஆனால், கூர்மையான ரட்ஜா எனக்கு விளக்கினான். “காற்றாடியைப் போல பெரிய மேகம் ஒன்று சூரியனை மறைத்திருக்கிறது. அதன் நிழல் விழ, வண்ணக்கழுத்து அதை தனது எதிரி என்று நினைத்துக் கொண்டுவிட்டான். மேகம் விலகும் வரை காத்திரு, பின்னர் பார்” என்றான்.

ரட்ஜா சொன்னது சரிதான். சில நொடிகளில் சூரியன் வெளிவந்து, அதன் பிரகாசத்தில் வண்ணக்கழுத்தின் இறக்கைகள் ஒளிர்ந்தன. அவன் கீழே இறங்குவதை நிறுத்திவிட்டு, காற்றில் வட்டமடிக்கத் துவங்கினான். அவனுக்குத் துணையாக இருக்க கீழே இறங்கிக் கொண்டிருந்த அவனுடைய துணையோ, நூறு அடிக்கு மேலே நின்று அவனுக்காக காத்திருந்தாள். இப்போது வண்ணக்கழுத்து, கூண்டிலிருந்து விடுவிக்கப்பட்ட கழுகு போலே வேகமாக இறக்கையை அடித்து மேலே உயர்ந்தான். அவன் திசையைத் திருப்பி மேலே மேலே பறக்க சூரிய ஒளி அவனைச் சுற்றில் வண்ணக்குளத்தை உண்டாக்கியது. சீக்கிரமே பின் தொடர்வதை விட்டுவிட்டு, தன் பெடையை வழி நடத்தினான். அவர்கள் வானத்தில் ஏறினார்கள். அவனுடைய பயம் முழுக்க விலகிவிட்டிருந்தது. அவனுடைய சுறுசுறுப்பாலும் சக்தியாலும் அவள் ஈர்க்கப்பட்டாள்.

அடுத்த நாள் காலை இருவரும் சீக்கிரமே கிளம்பினார்கள். அவர்கள் நீண்ட தூரமும் அதிக நேரமும் பறந்தார்கள். மலையுச்சிகளைத் தாண்டி அதற்கப்பால் கீழே சென்றது போல, அவர்கள் கொஞ்ச நேரம் மலைகளுக்குப் பின்னால் காணாமல் போனார்கள். குறைந்தது ஒரு மணிநேரமாவது அங்கே இருந்திருப்பார்கள்.

கடைசியில் பதினோரு மணி சுமாருக்கு, ஒவ்வொருவர் அலகிலும் ஒரு பெரிய வைக்கோலோடு அவர்கள் வீடு திரும்பினார்கள். முட்டையிடுவதற்காக அவர்கள் கூடு கட்டப் போகிறார்கள். அவர்களை வீட்டுக்கு கொண்டு போய்விடலாம் என்று நான் நினைத்தேன். ஆனால், ரட்ஜா நாங்கள் மேலும் ஒரு வாரமாவது இருக்க வேண்டுமென்று வற்புறுத்தினான்.

கடைசி வாரத்தின் ஒவ்வொரு நாளும் நதிக்கு அந்தப்பக்கம் இருக்கும் ஆபத்தான காட்டில் நாங்கள் சில மணிநேரம் செலவிட்டோம். இரண்டு புறாக்களையும் எடுத்துக் கொண்டு போய், ரட்ஜாவின் வீட்டிலிருந்து ஐந்து மைல் தொலைவிலிருக்கும் அடர்ந்த காட்டில் விடுவதற்காகத் தான் இந்தக் காட்டுப் பயணம். வண்ணக்கழுத்து எல்லாவற்றையும் மறந்துவிட்டு தன்னுடைய திசையறிவை சோதித்துக் கொண்டு, உயர உயரப் பறந்தான். வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், தன் துணை மீதான அன்பும், புதிய இடமும் வானிலையும் அவனை பயமென்னும் நோயிலிருந்து குணப்படுத்தி விட்டன.

நம்முடைய எல்லா துன்பங்களுமே பயத்தினாலும், கவலையினாலும் வெறுப்பினாலுமே வருகின்றன என்பதை இங்கு பதிவு செய்தாக வேண்டும்.. எவனொருவனை இந்த மூன்றில் ஒன்று பற்றிக் கொண்டாலும் மீதி இரண்டும் தானாகச் சேர்ந்துவிடும். எந்தவொரு விலங்கும் தன்னுடைய இரையை முதலில் அச்சுறுத்தாமல் கொல்ல முடியாது. எந்தவொரு விலங்கும் தன்னுடைய எதிரி குறித்த பீதி பீடிக்கப்படாமல் அழிவதில்லை. சுருக்கமாகச் சொல்வதென்றால், எதிரியின் இறுதி தாக்குதலுக்கு முன்பே ஒரு விலங்கின் பயம் அதைக் கொன்றுவிடுகிறது.

(தொடரும்…)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.