வண்ணக்கழுத்து 12: போர் அழைக்கிறது

மாயக்கூத்தன்

ஆகஸ்டு மாத முதல் வாரத்தில், பிள்ளைகள் பிறந்து சில நாட்களில், வண்ணக்கழுத்தும் ஹிராவும் கல்கத்தாவிலிருந்து பம்பாய் சென்றார்கள். உலகப்போரில் கலந்து கொள்ள கோண்டுடன் அங்கிருந்து, கடல்வழிப் பயணத்தைத் துவக்கினார்கள். வண்ணக்கழுத்துடன் பிரமச்சாரியான ஹிராவை அனுப்ப காரணம், இரண்டு பேருமே ராணுவத்திற்குத் தேவையாக இருந்ததுதான்..

ஃபிலாண்டர்ஸ் மற்றும் ஃபிரான்ஸின் போர்க்களங்களுக்கு பயணப்படும் முன், தன்னுடைய குஞ்சுகளை வண்ணக்கழுத்து பார்த்துவிட்டதில் எனக்குச் சந்தோஷம். என் சந்தோஷத்தின் முக்கிய காரணம், வீட்டில் தன் பெடையும் குஞ்சுகளும் காத்துக் கொண்டிருக்கும்போது, போர்க்களம் செல்லும் புறா திரும்பி வராமல் போவது அரிது. வண்ணக்கழுத்துக்கும் அவன் குடும்பத்திற்கும் இடையே இருந்த அந்த அன்புப் பிணைப்பு, தூது செல்லும் வேலையை அவன் கச்சிதமாகச் செய்வான் என்ற நம்பிக்கையை அளித்தது. எந்தவொரு துப்பாக்கி சுடும் சத்தமோ தோட்டாக்களோ, அவன் உயிரோடு இருக்கும்வரை, அவன் இறுதியில் வீடு திரும்புவதைத் தடுக்க முடியாது.

ஆனால், வீடு இங்கே கல்கத்தாவில் இருக்கிறது, போர்க்களமோ பல்லாயிரக்கணக்கான மைல்கள் தூரத்தில் இருக்கிறது, பிறகு எப்படி? என்றொரு கேள்வியை யாரும் கேட்கக்கூடும். அது உண்மைதான். ஆனால் அதே சமயம், பெடையும் குஞ்சுகளும் வீட்டில் இருப்பதால், அவன் கோண்ட் இருக்கும் இடத்தில் உள்ள தன்னுடைய தற்காலிக இருப்பிடத்தை அடைய, தன்னால் ஆனமட்டும் முயற்சி செய்வான் அல்லவா?

போர் முனைக்கும், கோண்டும் தலைமைத் தளபதியும் காத்துக் கொண்டிருந்த தலைமையகத்திற்கும் இடையே வண்ணக்கழுத்து பல முக்கிய தகவல்களை கொண்டு சென்றதாகச் சொன்னார்கள். முதலில் வண்ணக்கழுத்துக்கு கோண்டிடம் தான் நெருக்கமான பிணைப்பு இருந்தது. ஆனால், தொடர்ந்த மாதங்களில் அவனுக்கு தலைமைத் தளபதியையும் வெகுவாகப் பிடித்துவிட்டது.

எனக்கு வயது போதாது என்பதாலும் எந்த விதமான ராணுவச் சேவைக்கும் நான் தகுதியானவன் இல்லை என்பதாலும், கோண்ட்தான் இரண்டு புறாக்களையும் எடுத்துக் கொண்டு போர் முனைக்குச் சென்றார். இந்தியாவிலிருந்து மர்சேலிஸ் செல்லும் போது அந்த வயதான வேடரும் வண்ணக்கழுத்தும் ஹிராவும் அணுக்க நண்பர்களாகிவிட்டார்கள். எந்தவொரு புதிய விலங்கும் கோண்டின் நட்பை அதிக காலம் தவிர்ப்பதை இனிமேல்தான் நான் பார்க்க வேண்டும். என் புறாக்களுக்கு அவரை முன்பே தெரியும் என்பதால், அவை அவரோடு பழகுவது எளிதாக இருந்தது.

இந்திய ராணுவம், செப்டம்பர் 1914 முதல் அதைத் தொடர்ந்து வந்த இலையுதிர் காலம் வரை ஃபிலாண்டர்ஸில் நிலையிருந்தபோது, கோண்ட் தன்னுடைய கூண்டோடு தலைமையகத்திலேயே இருந்தார். வண்ணக்கழுத்தும் ஹிராவும் வெவ்வேறு படைப்பிரிவுகளால் போர் முனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். அங்கிருந்து அவ்வப்போது ஒரு அவுன்ஸை விட குறைவான எடை கொண்ட மெல்லிய துண்டுக் காகிதத்தில் சேதிகளை எழுதி, அவனுடைய காலில் கட்டிப் பறக்கவிடுவார்கள். அங்கிருந்து வண்ணக்கழுத்து, தவறாமல் கோண்ட் இருக்கும் தலைமையகத்திற்கு பறந்து செல்வான். அங்கே அனுப்பப்பட்ட ரகசியச் சேதி, மொழிமாற்றப்பட்டு தலைமைத் தளபதியால் பதில் அளிக்கப்படும். அந்த தலைமைத் தளபதி வண்ணக்கழுத்திடம் பிரியமாக இருந்ததாகவும் அவனுடைய சேவையை உயர்வாக மதிப்பிட்டதாகவும் கூட ஒரு பேச்சு இருந்தது..

ஆனால், வண்ணக்கழுத்தின் கதையை அவன் சொல்லிக் கேட்பதே நன்றாக இருக்கும். ஒரு கனவை எப்படி கனவு கண்டவனைத் தவிர வேறொருவர் சொல்ல முடியாதோ, அதைப் போல வண்ணக்கழுத்தின் சில சாகசங்களை அவனே தான் சொல்ல வேண்டும்.

“கரிய நீர் போல் தோற்றமளித்த இந்தியப் பெருங்கடலையும் மத்தியத் தரைக் கடலையும் கடந்தபின், ஒரு அன்னியமான நாட்டின் ஊடே நாங்கள் ரயிலில் பயணம் செய்தோம். பிரான்ஸ் என்ற அந்த தேசத்தில், அந்த செப்டம்பர் மாதம் கூட தென்னிந்தியாவின் குளிர்காலம் போல சில்லென்று இருந்தது. இமாலயத்தை நெருங்குவதாக நான் நினைத்துக் கொண்டு, பனி மூடிய மலைகளும் ராட்சத மரங்களும் வருமென்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் தொலை தூரம் வரை நம்முடைய உயரமான மூங்கில் மரங்களைவிட உயர்ந்த மலைகளை என்னால் காண முடியவில்லை. உயரமாக இல்லாத ஒரு நாடு ஏன் குளிர்ச்சியாக இருக்க வேண்டும் என்பது எனக்குப் புரியவில்லை.

”கடைசியில் நாங்கள் போர் முனையை அடைந்தோம். நாங்கள் போர் முனையின் பின் பக்கத்தைத்தான் அடைந்திருந்தோம் என்பது பின்னால் தான் தெரிய வந்த்து. ஆனால், அங்கும் கூட நெருப்பு உமிழிகளின் பூம் பூம் பூம் என்ற சத்தத்தைக் கேட்க முடிந்தது. ஒரு சாமானிய புறாவாக நான் அனைத்து நெருப்பு உமிழிகளையும் வெறுக்கிறேன், அவை அளவும் உருவமும் எப்படி இருந்தாலும் சரி என்னால் அவற்றைச் சகித்துக் கொள்ள முடியாது. அந்த உலோக நாய்கள் குரைத்துக் கொண்டும் மரணத்தை ஏப்பம் விட்டுக் கொண்டிருந்ததும் எனக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. அங்கே சென்று இரண்டு நாட்களுக்குப் பின் எங்களுடைய சோதனை ஓட்டம் துவங்கியது. என்னையும் ஹிராவையும் தவிர நம்முடைய நகரிலிருந்து நான்கு புறாக்கள் மட்டுமே இருந்தன. ஹிரா எதையும் யோசிக்க மாட்டான் என்பது உங்களுக்கே தெரியும். ஒரு பெரிய கிராமத்தின் வீடுகளுக்கு மேலே எழும்பிப் பறந்தவுடனே ஹிரா, பூம் பூம் என்று சத்தம் வரும் இடத்தை நோக்கிப் பறந்தான். அங்கே என்ன நடக்கிறது என்று தெரிந்து கொண்டாக வேண்டும் அவனுக்கு. ஒருமணிநேரத்தில் நாங்கள் அந்த இடத்தை அடைந்துவிட்டோம். ஓ! என்னவொரு சத்தம். மரங்களுக்கு கீழே ஒளித்து வைக்கப்பட்டிருந்த இரும்பு நாய்கள் இடியைப் போல் முழக்கமிட்டுத் துப்பிய நெருப்புப் பந்துகள் எங்களுக்குக் கீழே சீறி வெடித்தன. நான் பயந்துவிட்டேன். இன்னும் மேலே மேலே பறந்தேன். ஆனால், அந்த உயரத்திலும் அமைதியில்லை. எங்கிருந்தோ மிகப் பெரிய கழுகுகள் முழங்கிக் கொண்டே வரும் யானைகள் போல, கர்ஜித்துக் கொண்டும் உறுமிக் கொண்டும் வந்தன. அந்த பயங்கரத்தைக் கண்டவுடன், கோண்ட் எங்களுக்காக காத்துக் கொண்டிருக்கும் இடத்தை நோக்கி நாங்கள் பறந்தோம். ஆனால், அந்த கழுகுகளில் இரண்டு எங்களைப் பின்தொடர்ந்தது. நாங்கள் வேக வேகமாகப் பறந்தோம். நல்லவேளையாக, அவர்களால் எங்களை முந்திச் செல்ல முடியவில்லை. நாங்கள் எதிர்பார்த்த்தைப் போலவே, நாங்கள் வாழ்ந்த இடத்துக்கே அந்தக் கழுகுகள் வந்து இறங்கின. மரணம் கைக்கெட்டிய தூரம் வந்துவிட்டதை உணர்ந்தேன். அந்தக் கழுகுகள், எங்களைக் கூண்டுக்குள்ளேயே எலிகளைப் போல விழுங்கப்போகின்றன. இல்லை. அவை முழக்கத்தை நிறுத்திவிட்டு சீக்கிரமே தரையில் செத்து விழுந்தன. அந்த இரண்டு பறவைகளின் வயிற்றிலிருந்தும் இரண்டு இரண்டு மனிதர்கள் குதித்து வெளியே வந்து நடந்து போனார்கள். கழுகுகள் மனிதர்களை விழுங்கியது ஆச்சரியமாக இருந்தது. மேலும் உள்ளே போனவர்கள் எப்படி உயிரோடு வந்தார்கள்?

“சீக்கிரமே அந்த மனிதர்கள் தங்களுடைய வேலைகளை முடித்துவிட்டு, மறுபடியும் கழுகுகளின் வயிற்றுக்குள் ஏறிக் கொண்டார்கள். பிறகு, கழுகுகள் ஒரு உறுமலோடும் முழக்கத்தோடும் உயிர்பெற்று மீண்டும் மேலே காற்றில் பறந்தன. இதைப் பார்த்த்தில், சந்தேகமே இல்லாமல் அவை மனிதர்களின் வாகனங்கள் என்பது என் மூளைக்கு எட்டியது. நான் ஆசுவாசமடைந்தேன்.

”முதலில் எல்லாமே விசித்திரமாக இருந்தன. ஆனால் போகப் போக எல்லாம் பழகிப் போய்விட்டன. ஆனாலும் இன்னமும், தொடர்ந்து முழங்கிக்க் கொண்டும் குரைத்துக் கொண்டுமிருந்த வெடிச் சத்தத்தில் எப்படி நிம்மதியாகத் தூங்குவது என்பது பிரச்சினையாகத்தான் இருந்தது. ராணுவத்தில் இருந்த அந்த மாதங்களில் நான் ஒரு போதும் சரியாகத் தூங்கியதே இல்லை. ஹிராவும் நானும், புதிதாகப் பிறந்த பாம்புகள் போல படபடத்துக் கொண்டு நிலையில்லாது இருந்தோம் என்பதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை.

”என்னுடைய முதல் சாகசம், எல்லா விதமான நாய்களும், பகலும் இரவும் குரைத்துக் கொண்டும் தீயை உமிழ்ந்து கொண்டு இருக்கும் போர் முனையில் இருந்த ரசெல்தாரிடம் இருந்து செய்தியைக் கொண்டு சென்றதுதான். ரசெல்தாரைப் பற்றி உங்களிடம் சொல்லவேண்டும். கல்கத்தாவிலிருந்து வந்திருந்த ஏராளமான இந்திய வீர்ர்களுக்கு தலைவராக அவர் இருந்தார். முழுக்க கருப்பு கேன்வாஸ் துணியால் மூடப்பட்ட ஒரு கூண்டில் என்னை எடுத்துக் கொண்டு, தன்னுடைய பொறுப்பில் இருக்கும் நாற்பது வீரர்களோடு போர்முனை பதுங்கு குழி நோக்கிச் சென்றார்., பல மணிநேரமும் பல இரவுகளும் கடந்து சென்ற பின், என்னுடைய இருண்ட கூண்டில் அப்படிதான் தோன்றியது, நாங்கள் எங்கள் இலக்கை அடைந்தது போல இருந்தது. அங்கே கருப்பு கேன்வாஸ் அகற்றப்பட்டது. இப்போது என்னைச் சுற்றி சுவர்களைத் தவிர வேறு எதையும் காணமுடியவில்லை. இந்தியாவிலிருந்து வந்திருந்த முண்டாசு கட்டிய மனிதர்கள் பூச்சிகள் போல அங்கு ஊர்ந்து கொண்டிருந்தார்கள். தலைக்கு மேலே, இயந்திரக் கழுகுகள் பயங்கர முழக்கத்துடன் பறந்தன. இங்கே முதன் முறையாக சப்தங்களை கவனிக்கத் துவங்கினேன். ஒரே குழப்பமான பூம் பூம் பூம் என்ற சத்தத்திற்கு பதிலாக, எத்தனை விதமான சத்தங்களை காதால் தனித்தறிய முடியுமோ அத்தனை விதமான வெடிச் சத்தங்களைக் கேட்டேன். புரிந்து கொள்ளவே முடியாமல் ஒன்று இருந்தது என்றால், என்னைச் சுற்றியிருந்த அந்த மனிதர்கள் பேசியதுதான். காதைப்பிளக்கும் சப்தங்களுக்கு நடுவே இவர்களின் பேச்சுச் சத்தம், புற்களின் மேல் வீசும் மந்த மாருதம் போல குசுகுசுவென்று இருந்தது. அவ்வப்போது உலோக நாய்களின் வாயைத் திறந்துவிட்டார்கள். அவை குரைத்து, நீண்ட நேரம் நெருப்பை உமிழ்ந்தன. இவற்றுக்குப் பிறகு கழுதைப் புலியின் சிரிப்பு வந்தது. நூற்றுக்கணக்கான மனிதர்கள் அந்த சின்னக் குட்டிகளை தூண்டிவிட்டு, பக் பஃப் பக் பஃப் பக் பஃப் என்று பயங்கரமாக இருமச் செய்தார்கள். மேலே கூட்டமாகப் பறந்த கழுகுகளின் அடித் தொண்டை இரைச்சலில் இந்தச் சத்தம் அமுங்கிப்போனது. அந்தக் கழுகுகள் குரைத்தன. பைத்தியம் போலக் கிறீச்சிட்டன. சிட்டுக் குருவிகள் போல ஒன்றை ஒன்று போட்டுத் தள்ளின. என்னுடைய தலைவராக இருந்த அந்த ரசெல்தார் தன்னுடைய குட்டியை வானத்தை நோக்கி உயர்த்தி, அதை சொடுக்கி விட்டார், பக் பஃப் என்றொரு சத்தம். கொஞ்சம் நெருப்பு. ஓ! அந்த நெருப்பு அந்தக் கழுகுகளில் ஒன்றை ஒரு முயலைப் போல சுட்டு வீழ்த்தியது. இப்போது இருப்பதிலேயே ஆழமான சத்தம் கேட்டது. பூம் பஸூம் புஸ் பம்! ஒரு பெரிய உருவத்தின் உறுமல் உயர்ந்து எழுந்து அனைத்து உன்னதமான சத்தங்களுக்கும் விதானம் போல பரவியது. அதனுடைய பயங்கர சத்தத்தில் அனைத்து சில்லறைச் சத்தங்களையும் விழுங்கிவிட்டது. ஓ! அந்த துன்புறுத்தம் சத்தத்தின் மயக்கத்தை. என்னால் மறக்கவும் முடியுமோ? உறுமலுக்கு மேல் உறுமல், பயங்கர சத்தத்திற்கு மேல் சத்தம், ஒலிகளினால் ஆன பெரிய பாறைகள் நொறுங்குவது போன்றொரு இரைச்சல்.

”ஏன் மரணத்திற்கு வெகு அருகில் அழகும் இருக்கிறது? என் தலைக்கு மேல் கேட்ட இந்த விண்ணுலக இசை என் ஆன்மாவை ஈர்த்து அதிக நேரம் ஆகியிருக்காது, எங்கள் மேலே நெருப்பு புயல் மழை போலக் கொட்டியது. வெள்ளம் புகுந்த பொந்துகளில் எலிகள் வீழ்வது போல மனிதர்கள் வீழ்ந்தார்கள். சிவந்த ரத்தம் சொட்டச் சொட்ட அந்த ரசெல்தார், வேகவேகமாக ஒரு துண்டுச் சீட்டில் எதையோ எழுதி என் காலில் கட்டி என்னை விடுவித்தார். அவர் பயங்கர வேதனையில் இருக்கிறார் என்பதையும், கோண்ட் உதவியை அனுப்பிவைக்க வேண்டும் என்று நினைக்கிறார் என்பதும் அவருடைய பார்வையிலேயே தெரிந்து கொண்டேன்.

“நான் மேலே பறந்தேன். ஆனால் நான் பார்த்தது என் இறக்கைகளை உறையச் செய்தது. பதுங்கு குழிகளுக்கு மேலே காற்று முழுவதும் ஒரு பறக்கும் நெருப்புக் கம்பளம் போல இருந்த்து. அதற்கு மேலே எப்படிப் போவது என்பதே என் பிரச்சனை. என் வாலை பயன்படுத்தி எல்லாத் திசைகளிலும் என் பறத்தலின் பாதையில் திரும்பினேன். ஆனால் எந்த வழியில் நான் மேலே ஏறினாலும், எனக்கு மேலே லட்சக்கணக்கான நெருப்புஊசிகள் அவை, வாழ்வெனும் தறியில் அழிவெனும் ஆடையை நெய்து கொண்டிருந்தன. ஆனால், நான் மேலே பறந்தாக வேண்டும். நான், வண்ணக்கழுத்து, என் தந்தைக்குப் பிறந்தவன். சீக்கிரமே ஒரு காற்றுச் சுழலில் மோதி, அதனால் உறிஞ்சப்பட்டு என் இறக்கைகள் முறிந்தது போலும் ஒரு இலையைப் போலும் சுழன்று மேலே இழுக்கப்பட்டேன். மேலும் மேலும் அதிக தீவிரத்தோடு தன்னை நெய்து கொள்ளும் நெருப்பாடையைத் தாண்டி மேலே ஏறும் வரை நான் மேலும் கீழும் மேலும் கீழும் புரட்டி எடுக்கப்பட்டேன். ஆனால், இப்போது எதைக் காணவும் எனக்கு நேரமில்லை. ‘கோண்டிடம் செல்லவேண்டும், கோண்டிடம் செல்லவேண்டும்’ என்று எனக்கே சொல்லிக்கொண்டேன். ஒவ்வொரு முறையும் அப்படிச் சொல்லும் போதும், அது என் ஆன்மாவைக் குத்தியது போல் ஒரு உத்வேகம் அளித்து என்னால் முடிந்த அளவுக்கு என்னை முயற்சி எடுக்க வைத்தது. இப்போது நான் வெகு உயரம் வரை ஏறிவிட்டேன். சுற்றிலும் நோக்கிவிட்டு மேற்கு நோக்கிப் பறந்தேன். அப்போது, ஒரு குண்டு என்னுடைய வாலைத் துளைத்துஅதை உடைத்தும்விட்டது. அது என்னை பயங்கர சீற்றம் கொள்ள வைத்தது.

என்னுடைய வால், என்னுடைய கெளரவத்தின் சின்னம். அதைத் தொடுவதையே என்னால் தாங்கிக் கொள்ள முடியாது. அப்படியிருக்க அதைச் சுடுவதை எப்படித் தாங்கிக் கொள்வது. ஆனால், என் இருப்பிடத்தை நோக்கி பாதுகாப்பாகப் பறந்துவிட்டேன். நான் கீழே இறங்கத் தயாராகும் போது இரண்டு கழுகுகள் எனக்கு மேலே சண்டையிடத் துவங்கின. அவற்றின் முழக்கங்களை நான் கேட்கவில்லை. முகத்தைப் பார்க்கவில்லை. அவை ஒன்றை ஒன்று கொன்று கொண்டிருந்தால் கூட நான் கவலைப்பட்டிருக்க மாட்டேன். ஆனால், அவை என் மீது தீயைப் பொழிந்தன. அவை அதிகம் சண்டையிட சண்டையிட அவற்றின் அலகிலிருந்து மேலும் தீப்பிழம்புகள் கொட்டின. என்னால் முடிந்தவரை தாழப் பறந்து, விலகிப் பறந்தேன். அங்கே மரங்கள் ஏதாவது இருந்திருந்தால் நன்றாக இருக்கும். மரங்கள் இருந்தன. ஆனால், பெரும்பாலானவை சுடப்பட்டு சிதைக்கப்பட்டு, இனிய நிழல் தரும் இலைகளும் மாபெரும் கிளைகளுமாக மறைவிடம் தருவதற்கு இல்லாது குச்சிகள் போல துருத்திக் கொண்டு நின்றன. ஆக, காட்டில் துரத்தும் யானையிடமிருந்து ஓடும் ஒரு மனிதனைப் போல, அந்த சிதைக்கப்பட்ட குச்சிகளுக்கு இடையே நான் வளைந்து நெளிந்து போக வேண்டியதாயிற்று. கடைசில் நான் வீட்டை அடைந்து, கோண்டின் மணிக்கட்டில் சென்று அமர்ந்தேன். அவர் நூலை வெட்டி, என்னையும் அந்தச் செய்தியையும் எடுத்துக் கொண்டு, தலைமைத் தளபதியிடம் போனார். அவர் பழுத்த செர்ரியைப் போல இருந்தார். அவர் மேலிருந்து ஒரு சோப்பின் சுகந்தமான வாசனை வந்தது. அனேகமாக, பெரும்பாலான வீரர்களைப் போல் அல்லாது. ஒரு நாளைக்கு மூன்று நான்கு தடவை அவர் சோப்பு போட்டு குளித்து தன்னைச் சுத்தப்படுத்திக் கொள்ளக்கூடும். அந்த காகிதத்தில் ரசெல்தார் எழுதியதை வாசித்த பிறகு, என்னைத் தலையில் தட்டிக் கொடுத்துவிட்டு மகிழ்ச்சியில் இருக்கும் காளையைப் போல உறுமினார்.

(தொடரும்…)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.