திர்கந்தரா ரெக்சா (Dirgantara Reksa)
“… இலக்கியம் மீதான நேசமில்லையேல், நீங்கள் புத்திசாலி மிருகங்கள் பலர் என்ற நிலையில்தான் இருப்பீர்கள்”
– பிரமோதய ஆனந்த தோயர், பூமி மனுஷியா
ஏப்ரல் 2014ல் இந்தோனேஷியாவின் கல்வி மற்றும் கலாசாரத்துறை துணை அமைச்சர் வியந்து நூர்யந்தி, தேர்ந்தெடுக்கப்பட்ட 150 இந்தோனேஷிய இலக்கியப் படைப்புகளை பஹாசா இந்தோனேஷியா மொழியிலிருந்து ஆங்கிலம் மற்றும் ஜெர்மன் மொழிகளில் மொழிபெயர்த்து அக்டோபர் 2015ல் நடைபெறவிருக்கும் பிராங்க்பர்ட் புத்தகச் சந்தையில் அறிமுகப்படுத்தும் நோக்கத்தில் 1100 கோடி ரூபியாக்களை இந்தோனேஷிய அரசு ஒதுக்கீடு செய்கிறது என்று செய்தார். இது இந்தோனேஷிய மக்களுக்கும் உலக மக்களுக்கும் ஒரு நற்செய்தியாய் அமையும் சாத்தியம் கொண்டிருக்கிறது- ஏனெனில், உலக இலக்கிய சமூகத்தில் இந்தோனேஷிய இலக்கியத்துக்கு என்று ஒரு இடத்தை பெற்றுத் தரும் முன்னெடுப்பு இது, இதன் பயனாக உலக மக்களுக்கு இந்தோனேசிய இலக்கியத்தை ரசித்து வாசிக்கும் வாய்ப்பு கிடைக்கவிருக்கிறது.
சர்வதேசச் சந்தையில் இந்தோனேஷிய இலக்கியத்தை எளிதில் அறிமுகப்படுத்திக் கொள்ள முடியாது எனினும் நீண்ட காலமாகவே அது உலக அரங்கில் அங்கீகாரத்தையும் பரிசீலனையையும் பெற்று வந்திருக்கிறது. உதாரணங்களைச் சுட்டுவதானால், 1979ஆம் ஆண்டுக்குப்பின் இதுவரை முப்பதுக்கும் மேற்பட்ட இந்தோனேஷிய எழுத்தாளர்கள் வருடாந்தர தென்கிழக்கு ஆசிய எழுத்தாளர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்; 1967க்கு பின்னர் இதுவரை முப்பத்தைந்துக்கும் மேற்பட்ட இந்தோனேஷிய எழுத்தாளர்கள் ஐயோவாவின் சர்வதேச எழுத்தரங்கில் பங்கேற்றுள்ளனர்; 2011ஆம் ஆண்டு கிராணி பரோக்கா வேர்மொன்ட் ஸ்டூடியோ சென்டரின் அமர்வு எழுத்தாளராக நியமிக்கப்பட்ட முதல் இந்தோனேஷிய எழுத்தாளரானார்; இவை தவிர, இந்தோனேஷியாவின் பிரமோதய ஆனந்த தோயர் இலக்கியத்துக்கான நோபல் விருதுக்கு பலமுறை பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
மொழிபெயர்ப்பு என்பது ஒரு மொழியில் உள்ளதை வேறொரு மொழிக்கு மாற்றுவது மட்டுமல்ல- அது சிந்தனைகளையும் பண்பாடுகளையும் வரலாற்றையும் புரிதலையும் மானுடம் அனைத்தின் மேன்மைக்காகவும் பகிர்ந்து கொள்ளும் செயல். ஊழல், மனித உரிமை மீறல்கள், சுற்றுச்சூழல் சீரழிவு முதலான்வற்றுக்காக இழிபெயர் கொண்ட தேசமாக இந்தோனேஷிய கருதப்படக்கூடாது. மாறாய், உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் அது தன் எழுத்தாளர்களுக்கும், இலக்கியத்துக்கும், பண்பாட்டுக்கும் மதிக்கப்பட்டு புரிந்து கொள்ளப்பட வேண்டும். உலகளாவிய உத்வேகமொன்று தற்போது தொடர்ந்து அழுத்தம் தந்து கொண்டிருக்கிறது என்ற சூழலில் இந்தோனேஷிய இலக்கியத்தை மொழிபெயர்ப்பதற்கான தேவை உருவாகியுள்ளது. ஆசியன் பொருளாதார அமைப்பு 2015ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது- அது போட்டியோடு வாய்ப்புகளையும் கொணரவிருக்கிறது, ஒருமைப்பாட்டுடன் பரவலாக்கத்தையும் ஏற்படுத்தவிருக்கிறது- இந்தோனேஷிய படைப்புகளை மொழிபெயர்க்கும் முயற்சிகளுக்கு புதிய ஒரு பொருளாதார கட்டளையை இது பிறப்பிக்கிறது. இவை அனைத்தையும் கருத்தில் கொள்கையில், இந்தோனேஷிய இலக்கியத்துக்கு மொழிபெயர்க்கும் உரிமை உள்ளது என்பது மட்டுமல்ல, அது மொழிபெயர்க்கப்படுவதும் அவசியமாகிறது- ஆசியன் சந்தையில் இந்தோனேஷிய இலக்கியம் தனக்கென்று ஒரு இடத்தை நிலைநிறுத்திக்கொள்ள முடியும் என்பது மட்டுமல்ல, அது பிற தேசங்களின் இலக்கியங்களுக்கு இணையாகவும், ஏன், அவற்றைக் காட்டிலும் சிறப்பாகவும் உணரப்பட்டு, மானுடத்துக்கு தன் பங்களிப்பை அளிக்க இயலும்.
இன்று உலகளாவிய இலக்கியத்தின் வரைபடத்தைப் பார்க்கும்போது அது இனியும் ஐரோப்பிய மையம் கொண்டதாகவும் மேலைப் பண்பாட்டை உயர்வென்று கருத்தும் உள்ளுணர்வால் கட்டமைக்கப்பட்டதாகவும் இல்லை என்பதை அறிகிறோம். கடந்த பத்தாண்டுகளில் அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் பல படைப்புகள் புலம் பெயர்ந்து குடியேறியவர்களால் எழுதப்படுகின்றன, ஆசியா ஆப்பிரிக்கா, லத்தின் அமெரிக்கா முதலான கண்டங்களில் காலனியத்துக்கு உட்பட பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே இந்த எழுத்தாளர்கள்.
இலக்கியமும் வரலாற்று அனுபவமும்
இலக்கியம் என்பது அழகியலோ குறியீட்டு மதிப்போ மட்டுமல்ல. எந்த கணத்திலும் எந்த இடத்திலும் அது கூட்டு வரலாற்றுக் கதையாடலின் பகுதியாகவே விளங்குகிறது- மானுடத்தின் பல்வேறு சமூக, அரசியல் அனுபவங்களின் சாட்சியாக இருந்து, ஒரு சின்னமாக காணப்பட்டும் வாசிக்கப்பட்டும் இருப்பதோடல்லாமல், எதிர்காலத்தின் பிரதிபிம்பமாக்வும் இருக்கிறது. இந்தோனேஷிய இலக்கியத்தின் தனித்தன்மை அதன் கலாசார பிரக்ஞையே என்றார் அஜிப் ரோசிடி. உண்மையில் இந்த கலாசார பிரக்ஞை என்பது அரசால் சார்பு கொண்டது; இந்தோனேசிய இலக்கியம் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகளும் உலகெங்கும் உள்ள மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு அரசியல் பிரச்சினைகளிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாதது.
நியோமன் குத்தரத்னா, இந்தோனேசியாவின் காலனிய அனுபவத்தைப் பதிவு செய்யும் பதின்மூன்று நாவல்களை விவாதிக்கிறார். இந்தோனேஷிய மக்கள் மீதான காலனிய தாக்கத்தை இந்த நூல்கள் விரிவாக விவரிக்கின்றன, என்பது மட்டுமல்லாமல் அக்காலத்துக்குரிய சமூக, அரசியல் கூட்டுமனத்தின் இயக்கத்தையும் பதிவு செய்கின்றன: தம் ‘தேசிய அடையாளத்தை’ வரையறுத்து புரிந்து கொள்வதற்கான போராட்டம், சுதந்திரத்துக்குப் பிற்பாடு தேசத்தின் எதிர்காலம் எப்படிப்பட்டதாகை இருக்க வேண்டும் என்ற கேள்விக்கான விடை நோக்கிய தேடல்.
இன்றைய இந்தோனேசிய இலக்கியம் தன் வரலாற்று மூதாதையர்களுக்கு இணையானதாகவே இருக்கிறது; இயற்கைக்கும் மக்களுக்கும் ஏற்பட்டுள்ள நெருக்கடி, போராட்டம் மற்றும் மோதல்களின் உச்சங்களும் வீழ்ச்சிகளும், முன்னெப்போதையும் போலவே இப்போதும் மிக முக்கியமாக இருக்கின்றன. சீர்திருத்தம் நோக்கிச் செல்லும் இந்தோனேஷியாவின் சமூகச் சூழலை விளக்கும் நூல்களையும், இன்றைய இந்தோனேஷியாவின் நகர்புற வாழ்வை விவரிக்கும் நூல்களையும் காண முடிகிறது.
நடைமுறைச் சவால்கள்.
இந்தோனேஷிய இலக்கியத்தை மொழிபெயர்ப்பதில் உள்ள மிகப்பெரும் சவாலாகவும் தடையாகவும் உள்ளது எதுவென்று நோக்கிடில், அதன் மக்களின் கலாசார பழக்க வழக்கங்கள்தான் என்று கூற வேண்டும். இலக்கிய படைப்பு ஒன்று அந்நிய மொழியில் மொழிபெயர்க்கப்படுவதற்கு முன், ஆதர்ச உலகில், அது தான் பிறந்த மண்ணில் வாசிக்கப்பட்டு பெருமைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் துரதிருஷ்டவசமாக, இந்தோனேஷியாவில் அந்த நிலை இல்லை- இந்தோனேஷிய மக்கள் பலருக்கும் தங்கள் இலக்கியத்தின் கொடை என்னவென்ற உணர்வே இல்லை. இலக்கியம் பெரிய அளவில் ரசிக்கப்படுவதில்லை என்பதற்கான காரணங்களில் ஒன்று இந்தோனேஷிய சமூகங்கள் எழுத்துச் சமூகங்களாக உள்ளதைக் காட்டிலும் வாய்மொழிச் சமூகங்களின் கூறுகள் மேலோங்கிய சமூகங்களாய் இருக்கின்றன என்பதுதான். தலைமுறைகளுக்கு இடையே பண்பாட்டு பரிமாற்றம் வாய்மொழியாகவே நடைபெற்று வருகிறது.
இந்தோனேஷியாவெங்கும் உள்ள பெரும்பாலான புத்தகக்கடைகளில் இந்தோனேஷிய இலக்கியப் படைப்புகளை விற்பதோ வாங்குவதோ கடினமாக இருக்கிறது என்பது மற்றொரு சவால். இந்தோனேஷிய இலக்கிய நூல்களை அதன் வாசகர்கள் பழைய புத்தகக் கடைகளைப் புரட்டிப் போட்டு தேட வேண்டியிருக்கிறது. அதற்குக் காரணம், குறிப்பிட்ட ஒரு எண்ணிக்கையில் விற்கக்கூடிய வாய்ப்பு இருந்தால் மட்டுமே இந்தோனேஷிய புத்தகக் கடைகள் தம் சந்தையில் இலக்கியப் படைப்புகளுக்கு இடம் கொடுக்கின்றன. நல்ல வேளையாக\, இளைய தலைமுறையினர் இதற்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கின்றனர்- மாற்று புத்தகக் கடைகளைத் திறக்கின்றனர், கலாசார, இலக்கிய நூல்கள் வாசிப்பதற்கு ஏற்ற, சுமூகமானச் சூழல் கொண்ட வாசிப்பிடங்கள் அமைத்து வருகின்றனர்.
இறுதியாகச் சொன்னாலும், மிக முக்கியமான காரணமாக, இந்தோனேஷிய இலக்கியப் படைப்புகள் சர்வதேசச் சந்தையில் எதிர்கொள்ளும் போட்டியைச் சொல்ல வேண்டும். புதிதாய் களமிறங்கியுள்ள காரணத்தால் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து தேசங்களின்தம்மை நிறுவிக் கொண்ட தொன்மையான, பெரும்பதிப்பகங்களை இவை எதிர்கொண்டாக வேண்டும். ஆனால் இந்தோனேஷியாவுக்கு சாதகமாக அதன் பறந்து விரிந்த மாபெரும் பண்பாட்டு, சமூகக் கேணி இருக்கிறது. அதன் வரலாறு பல்லாயிரம் ஆண்டு தொன்மை கொண்டது, அதன் களம் பதினேழாயிரத்துக்கும் மேற்பட்ட தீவுகளில் விரிவது- கலாசாரத்தையும் சமூக அமைப்பையும் தொடர்ந்து மறுபுரிதலுக்கு உட்படுத்தி வளர்ச்சி கண்ட சமூகம் இது. கல்வெட்டில் பதிக்கப்பட்ட மாற்றமுடியாத வரலாற்று விசைகளால் மட்டுமல்ல, வாயாங் முதல் தொலைகாட்சி வரையும், மாஜாபாஹித் முதல் நவீன குடியரசு வரையிலும் அரசமைப்பின் பல்வேறு கருவிகளைக் கொண்டு ஆட்சி செய்யப்பட்ட மக்களை வழிநடத்திய, மாறிக் கொண்டேயிருக்கும் அதிகார இயங்குவிசைகளாலும் கட்டமைக்கப்பட்ட சமூகம் இது. இவையனைத்தும் சந்தேகத்துக்கிடமின்றி இலக்கியத்துக்கான உயர்ரக பேசுபொருட்கள்.
நம்பிக்கைச் சாசனம்
இந்தோனேஷிய இலக்கியத்தை மொழிபெயர்ப்பது என்பது வசதிக்கேற்ப செய்துகொள்ளக்கூடிய தேர்வல்ல, அது ஒரு தார்மீக கடமை. எத்தனை இலக்கியப் படைப்புகள் மொழிபெயர்க்கப்படுகின்றனவோ, அந்த அளவுக்கு இந்தப் படைப்புகள் இன்னும் அதிக வாசகர்களைச் சென்று சேரும் வாய்ப்பைப் பெறுகின்றன. இதனால் இந்தோனேஷிய இலக்கியமும் அதன் எழுத்தாளர்களும் மேலும் வளர்ச்சியடையும் வாய்ப்பைப் பெறுகின்றனர். இந்த முயற்சியின் வெற்றியும் தோல்வியும் அரசாங்கம், எழுத்தாளர்கள், வாசகர்கள் மற்றும் பதிப்பாளர்கள் எந்த அளவுக்குச் சிறப்பாக ஒத்துழைக்கின்றனர் என்பதையொட்டி அமையும். எதிர்காலம் குறித்த ஒரு பொதுப் பார்வை இவர்கள் முன்னிற்க வேண்டும், அதில் இவர்கள் உறுதியாய் நிலைத்து இயங்க வேண்டும்: இவர்கள் இந்தோனேஷியாவின் இலக்கியத்தைப் பாதுகாத்து அதற்கு செறிவூட்ட வேண்டும், அப்போதுதான் அது தன்கடந்த காலத்தின் வளமையைக் கையகப்படுத்திக் கொள்ள முடியும், அப்போதுதான் அதன் எதிர்காலம் பிரகாசமாய் இருக்க முடியும்; எல்லாம் முடிந்தபின் பார்க்கும்போது எந்த ஒரு மாபெரும் தேசமும் தன் இலக்கியத்தையும் அதன் படைப்பாளிகளையும் மதித்து பெருமைப்படுத்தியதாகவே இருந்திருக்கிறது என்பதை அறிகிறோம்.
நன்றி- Whiteboard Journal