லூயி ஏட்ரிக்- எழுத்து ஒரு பித்து நிலை

அமெரிக்க பூர்வகுடி எழுத்தாளர் லூயி ஏட்ரிக் எழுதிய The Round House என்ற நாவல் குறித்து குறித்து இவ்விதழில் அஜய் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். பாரிஸ் ரிவ்யூ தளத்தில் லூயி ஏட்ரிக் அளித்த நேர்முகம் ஒன்றின் சில பகுதிகள் அதையொட்டி இங்கு மொழிபெயர்க்கப்பட்டு அளிக்கப்படுகின்றன.

மொழி குறித்து

கேள்வி-

“சிஸ்டர் கொட்சில்லா” கதையில் வருபவருக்கும் உங்கள் ஆசிரியைக்கும் ஏதாவது தொடர்புண்டா?

ஏட்ரிக்-

இல்லை, ஆனால் அப்புறம் எனக்கு பிரான்சிஸ்கன் டீச்சர்கள் இருந்தார்கள். அவர்களில் சிலரை தேவதைகள் என்றுதான் சொல்ல வேண்டும், வேறு சிலர் கொஞ்சம் குழப்பமான மனநிலையில் இருந்தார்கள். நான் ஆறாவது கிரேட் படித்துக் கொண்டிருந்தபோது எனக்கு ஆசிரியையாக இருந்தவர் சிஸ்டர் டோமினிகா, அவர் உணவு இடைவேளையில் ஹோம் ரன்கள் அடிப்பார், எனக்கு அவரை மிகவும் பிடித்திருந்தது, ஆனால் சிஸ்டர் கொட்சில்லா என்று சொல்லக்கூடிய வகையில் அச்சு அசலாக யாரும் இருக்கவிழலி. ஆனால் மிஸ் ஸ்மித் பற்றிச் சொல்ல வேண்டுமானால், இன்னும் நான் அவரது புகைப்படத்தை வைத்திருக்கிறேன். அவர் பூனைக்கண் கண்ணாடி போட்டிருந்தார், தன பொன்னிற முடியை நெடிய கூந்தலாக வைத்துக் கொண்டிருந்தார், தலையில் ஷிபான் ஸ்கார்ப் போர்த்து மோவாய் நுனியில் முடிச்சிட்டிருந்தார். மிஸ் ஸ்மித் வருவதற்கு முன்பே சில காலமான எனக்கு வாசிக்கும் பழக்கம் இருந்தது, ஆனால் சொற்களின் உள்ளே உள்ள உயிர்ப்பு பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஒவ்வொரு சொல்லுக்கும் ஆன்மா உண்டு என்று ஒஜிப்வேக்கள் சொவ்லதுண்டு. லுக் என்ற சொல்லில் உள்ள ஓ என்ற எழுத்துக்கு மிஸ் ஸ்மித் கண்ணிமைகள் வரைந்தார், அதன் மத்தியில் விழித்திரை வரைந்தார்- இப்போது திடீரென்று பார்த்தால், லுக் என்ற சொல் பார்த்தல் எனும் செயலாயிற்று. என் மனதில் ஆனந்தம் ஒரு மின்னலென வெட்டியது.

கேள்வி-

நீங்கள் வளரும் பருவத்தில் அவர் ஒஜிப்வேமோவின் பேசினாரா?

ஏட்ரிக்-

என் தாத்தாவின் குடும்பம் ரெட் லேக் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர் அப்பகுதியின் வட்டார வழக்கு பேசுவதுண்டு. ஆனால் அவர் மிக அருமையாக ஆங்கிலம் பேசவும் எழுதவும் செய்தார். என் அம்மா சொற்களை இங்கும் அங்கும் கற்றுக் கொண்டவர், ஆனால் ஒரு குழந்தையாய் ஒரு மொழிச்சூழலில் ஆழ்ந்திருந்தால்தான் அதை இயல்பாகவே கற்றுக் கொள்ள முடியும்.

கேள்வி-

அது எப்படி?

ஏட்ரிக்-

மொழி கற்பதற்கான வாய்ப்புள்ள ஒரு பருவம் நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது, நம் மூளை அப்பருவத்தில் மொழிகளைக் கற்கத் தயாராகி இருக்கிறது. எட்டு அல்லது பத்து வயதுக்குப்பின் மொழிகளைக் கற்பது கடினமாகிறது. அதுதவிர ஒஜிப்வே கற்பதற்கு மிகக் கடினமான மொழிகளில் ஒன்றாகவும் இருக்கிறது.. அதற்குக் காரணம் அதன் வினைச்சொற்கள் அசாதாரணமான வடிவங்கள் கொள்பனவாக இருக்கின்றன. பெயர்ச்சொற்களில் ஆண்பால் பெண்பால் வேறுபாடு கிடையாது, ஆனால் அவை உயிருள்ளவை உயிரற்றவை என்று பகுக்கப்படுகின்றன. பெயர்ச்சொல் உயிர் உண்டு என்றோ உயிரற்றது என்றோ குறிப்பதற்கு ஏற்ப வினைச்சொல்லின் வடிவம் மாறுகிறது. அதே போல் மானுட உறவுகளுக்கேற்பவும் வினைச்சொல் வடிவம் மாறுகிறது. வினைச் சொற்களுக்கு முடிவே இல்லை. பல முறை நான் ஒஜிப்வே பேச முயற்சிக்கும்போது என் மூளை ஸ்தம்பித்து நிற்கிறது. ஆனால் என் மகள் அதைப் பேசப் பழகிக் கொண்டிருக்கிறாள், இது எனக்கு ஒரு புதிய உத்வேகத்தைக் கொடுத்திருக்கிறது.

ஆனால் ஆங்கிலம் மிகவும் சக்திவாய்ந்த ஒரு மொழி என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. அது காலனியாதிக்கம் செய்தவனின் மொழி, அது எழுத்தாளனுக்கு ஒரு வரம். பிற பண்பாடுகளின் மொழிகளை ஆங்கிலம் அழித்து உட்கொண்டிருக்கிறது- அதன் குரூரமே அதன் உயிர்ப்பாக இருந்து வந்திருக்கிறது,. ஒஜிப்வே கல்லூரிகளில் கற்றுக் கொடுக்கப்படுகிறது, அதில் ஆழ்ந்து பயிலும் வகையில் வகுப்புகள் நிறைய நடக்கின்றன. ஆனால் என் தாத்தா அரசுப் பள்ளியில் தங்கியிருந்து படித்தபோது அவர் ஒஜிப்வே பேசக்கூடாது என்று சொல்லி விட்டார்கள். கத்தோலிக் பள்ளிகளில் தங்கியிருந்து படித்தவர்களும் ஒஜிப்வே பேச அனுமதிக்கப்படவில்லை. என் அம்மா அங்கேதான் படித்தார், என் குடும்பத்தில் பலரும் கத்தோலிக்கர்களாகவே இருந்தோம்.

சமயம் பற்றி

கேள்வி-

நீங்கள் பக்தியுள்ள ஒருவராக வளர்க்கப்பட்டீர்களா?

ஏட்ரிக்-

ஒவ்வொரு கத்தோலிக்கரும் பக்தியுள்ள வகையிலும் காஸ்பல்கலை நேசிப்பவர்களாகவும்தான் வளர்க்கப்படுகின்றனர். ஆனால் பழைய ஏற்பாடு என்னைக் கெடுத்துவிட்டது என்று சொல்ல வேண்டும். நான் வாசிக்கத் துவங்கியது என் மிக இளம் வயதில், அப்போது பழைய ஏற்பாடு என்னை உள்ளிழுத்துக் கொண்டது. சிந்தனையில் மாயங்கள் நிறைந்த வயது அது- கைததடிகள் பாம்புகளாக மாறும் என்றும் பற்றியெரியும் புதரிலிருந்து குரல் கேட்கக் கூடும் என்றும் மனிதர்களோடு தேவர்கள் பொருதினார்கள் என்றும் நம்பினேன். ஆனால் பள்ளிக்குப் போய் வேதாகமம் படிக்க ஆர்மபிதபோது சமயம் என்பதில் எல்லாமே விதிமுறைகள்தான் என்பதைப் புரிந்து கொண்டேன். என் பக்கத்து வீட்டில் ஒரு மணமாலை செய்யப் பயன்படுத்தப்படும் இலைகள் கொண்ட செடி புதர்மண்டிக் கிடந்தது, அதை வெறித்துப் பார்த்துக் கொண்டே இருந்தது நினைவிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் அது பூக்கும், ஆனால் ஒரு முறைகூட பேசியதில்லை. தேவதைகள் யாரும் வரவில்லை, செந்நதி எதுவும் விலகவில்லை. அற்புதமான ஒன்றும் நடக்கப்போவதில்லை என்று நான் புரிந்து கொண்டதும் எல்லாம் சுரத்தின்றிப் போனது.

எனக்கு பாரம்பரிய ஒஜிப்வே சடங்குகள் இப்போது பிடித்தவையாக இருக்கின்றன, ஆனால் சமய விதிமுறைகளை வெறுக்கிறேன். அவை பெரும்பாலும் பெண்களைக் கட்டுப்படுத்தவே இருக்கின்றன. ஞாயிற்றுக்கிழமைகளில் எல்லாரும் கல்லும் மரமுமாய் கட்டப்பட்ட ஆலயங்களுக்குப் போகும்போது நான் என் பெண்களை காட்டுக்கு அழைத்துச் செல்கிறேன். அல்லது வேலையில் போய் தொட்ட வேலையாவது செய்கிறேன். நமக்கு இருக்கும் எந்த கடவுளானாலும் அங்கே வெளியேதான் இருக்கப் போகிறார்கள். அப்படியெல்லாம் யாரும் கிடையாது என்பதை உறுதியாக உணர முடியுமென்றால் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்றுதான் நினைக்கிறேன். கடவுள் விஷயத்தில் நான் சந்தேக மனநிலையைக் கொண்டாடுகிறேன்.

தன் எழுத்து குறித்து

கேள்வி-

லவ் மெடிசின் நாவலில் வரும் ஒரு பாத்திரம் இப்படிச் சொல்கிறது- “நீ லூலூ லமார்டைனைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் உலகில் மூன்று வகை மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்- வாழ்க்கையை வாழ்பவர்கள், வாழ அஞ்சுபவர்கள், இவ்விரண்டுக்கும் இடைப்பட்டவர்கள். என் அம்மா முதல் வகை”. நீங்கள் எந்த வகை?

ஏட்ரிக்-

நான் எப்போதும் முதல் வகையில் இருக்கத்தான் ஆசைப்பட்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன், ஆனால் உண்மையில் நான் கடைசி வகையைச் சேர்ந்தவள். என்னால் உயிர் வாழ முடியாத வழிகளிலெல்லாம் நான் எழுத்தின்மூலம் வாழ முடியும். இரண்டு தகப்பன்களிடம்தான் பிள்ளை பெற்றுக் கொண்டிருக்கிறேன். லூலூ எத்தனை பேரிடம் குழந்தை பெற்றுக் கொண்டாள், எட்டுத்தானே? உனக்கு நிஜமாகவே இந்த மாதிரி அனுபவங்கள் ஏற்பட்டிருக்கிறதா என்று சில சமயம் என்னிடம் கேட்கிறார்கள். உனக்கு என்ன பைத்தியம் பிடித்திருக்கிறதா என்று சிரிக்கிறேன். அத்தனை அனுபவங்கள் ஏற்பட்டிருந்தால் செத்துப் போயிருப்பேன், ஐம்பது முறை செத்துப் போயிருப்பேன். எனக்கு என் நேரடி அனுபவங்களை எழுத விருப்பம் இருக்கிறது என்று சொல்வதைவிட, அதை உணர்வுப்பூர்வமாக புரிந்துகொள்ள ஆசைபடுகிறேன் என்று சொல்லலாம்.

ஆனால் நாம் நம் பல்வேறு ஆளுமைகளை உருவாக்கி ஒளித்து வைத்துக் கொள்கிறோம் என்று நினைக்கிறேன், எழுதும்போது அவை எழுந்து வருகின்றன. எழுத்தைக் கட்டுப்படுத்துவது என்பது அப்புறம்தான் வருகிறது. எனக்கு ஒரு உண்மையான குரல் கேட்டுக் கொண்டிருக்கும்போது அதை எழுதுவது அவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது, அந்தக் குரலையும் பாத்திரத்தையும் பின்பற்றிச் செல்லப் பிடித்திருக்கிறது. அது ஒரு பித்து நிலை போன்றது. அப்படிச் சில முறை நேர்ந்தபின், நான் என் வாழ்நாளெல்லாம் எழுதிக் கொண்டிருந்தாக வேண்டும் என்பது எனக்குத் தெரிந்துவிட்டது. அந்த பித்து நிலைக்கு நான் ஏங்க ஆரம்பித்துவிட்டேன். நான் எப்போது வேண்டுமானால் என் கதைக்குத் திரும்பி வர முடியும், அது என் கண்முன்னே நடந்து கொண்டிருக்கும், நான் எந்த முயற்சியும் செய்ய வேண்டியிருக்காது. என் கதைகளில் பல அந்த மாதிரி உருவாகிறது என்று சொல்ல மாட்டேன். பெரும்பாலான கதைகளும் விடாமுயற்சியில் உருவானவைதான். இருபது ஆண்டுகளாக சில கதைகளைச் சுமந்து கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு வார்த்தையாக அவற்றைத் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன்.

ஆனால் பித்து என்று வந்துவிட்டால், அது எவ்வளவு அற்புதமாக இருந்தாலும், அதை நான் சந்தேகத்துடன்தான் அணுகுகிறேன். அது ஒரு ஆனந்தமயமான காதல் அனுபவம் போன்றது, அல்லது, “இது இவ்வளவு அருமையாக இருக்க முடியாது,” என்று உன்னை யோசிக்கச் செய்யும் மோகநிலை போன்றது. உண்மையில் அவ்வளவு அருமையாக எதுவும் இருக்கவும் முடியாது. எப்போதும் நான் திரும்பிச் சென்று அந்தக் குரலின் சில பகுதிகளைத் திருத்தி எழுத வேண்டியிருக்கிறது. எனவே, எழுதி முடித்தபின் அந்தக் கட்டுப்பாடு வேலை செய்கிறது, முடிவை அடைய அது உதவுகிறது. தலைப்பு எப்போதும் இருக்கும், துவக்கம் எப்போதும் இருக்கும், சில சமயம் மத்திய பகுதிகளுகுக் காத்திருக்க வேண்டியிருக்கலாம், வேறு சமயங்களில் நான் முடிவுக்கு அப்புறம் எழுதிக் கொண்டிருந்துவிட்டு இரண்டு பக்கம் போல வெட்ட நேரிடலாம்.

கேள்வி-

ஏன் அப்படி ஆகிறது?

ஏட்ரிக்-

என்னால் கதையை முடிக்க முடியாதபோது. பொதுவாகவே நான் முடிவுக்கு அப்புறம் எழுதிக் கொண்டிருபப்துதான் வழக்கம். ஆனால் விஷயம் என்னவென்றால் திரும்பிப் போய் கதையின் கடைசி வாக்கியம் எங்கு வருகிறது என்பதைத் தீர்மானிப்பதுதான்.

கேள்வி-

உங்கள் பாத்திரங்களை குழப்பிக் கொள்ளாமலிருக்க என்ன செய்கிறீர்கள்?

ஏட்ரிக்-

முதலில் என் மனதில் அதைச் செய்து கொண்டிருந்தேன், ஆனால் உண்மையில் அவர்கள் என்ன மாதிரி குழம்பிப் போகிறார்கள் என்பது பற்றி நான் கவலைப்பட்டது கிடையாது. பாத்திரப்படைப்பில் செய்வது குறித்து நான் அலட்டிக் கொண்டது கிடையாது. அழகியல் காரணங்களுக்காக, அல்லது ஏதோ ஒரு மரபைக் கடைபிடிக்க இப்படிச் செய்தேன் என்று என்னால் சொல்ல முடிந்தால் நன்றாக இருக்கும், ஆனால் உண்மையில் எனக்கு அந்த விஷயத்தில் எந்த அக்கறையும் இருந்தது கிடையாது. கதையைச் சொல்ல வேண்டும் என்பதுதான் தேவையாக இருந்தது. ட்ரெண்ட் டஃப்பி, நியூ யார்க்கின் ஆகச் சிறந்த காப்பி எடிட்டர், அவர் மட்டும் இல்லையென்றால் நான் எழுதுவது எல்லாம் முன்னுக்குப்பின் முரணாக இருந்திருக்கும், நானும் இன்றுவரை அது பற்றி எதுவும் செய்திருக்க மாட்டேன். ஆனால் இப்போது முரண்பாடுகள் இருக்கின்றன, இல்லையா?

கேள்வி-

ஏற்கனவே பதிப்பிக்கப்பட்டதைத் திருத்தி எழுதுகிறீர்களா?

ஏட்ரிக்-

வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அதைச் செய்கிறேன். பொதுவாக தாமதமாக எழுதி அச்சுக்குப் போகும்போது சேர்க்க முடியாமல் போன அத்தியாயங்களைச சேர்க்கிறேன். அல்லது புத்தகத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள ஒஜிப்வே மொழியை மேம்படுத்தப் பார்க்கிறேன். நான் கற்கக் கற்க, என் ஆசிரியர்களுடன் பேசப்பேச எனக்கு எவ்வளவு தெரியாமல் இருக்கிறது என்பது புரிகிறது. ஒஜிப்வே விஷயத்தில் நான் வாழ்நாள் தோல்வியாளர் என்று நினைக்கிறேன்- நான் டான் க்விசோட் என்றால் அதுதான் என் காற்றாலை. லவ் மெடிசின் நாவலை நிறைய மாற்றியிருக்கிறேன், ப்ளூ ஜே’ஸ் டான்ஸ் நாவலையும் திருத்தி எழுத விரும்பினேன். குறிப்பாக அதில் உள்ள சமையல் குறிப்புகளை நீக்க விரும்பினேன்- அதில் உள்ள லெமன் மெரிங் பை சமைத்துப் பார்க்க வேண்டாம், அதை வாயில் வைக்க முடியாது. எனக்கு அந்த மாதிரி கடிதங்கள் வந்திருக்கின்றன. ஃபோர் சோல்ஸ் நாவலை திருத்தி எழுதக் காத்திருக்கிறேன்- அதில் மிகப்பெரும் பிழைகள் பல இருக்கின்றன.

மாந்திரிக யதார்த்த எழுத்து

கேள்வி-

சிலர் உங்கள் எழுத்தை மாந்திரிக யாதார்த்தம் என்று வகைமைப்படுத்துகின்றனர். அது வேறொரு புறாக்கூட்டில் உங்களை அடைப்பதாக நினைக்கிறீர்களா?

ஏட்ரிக்-

என்னோடு உடன்பிறந்தவர்கள் ஆறு பேர், ஏறத்தாழ அவர்கள் அனைவரும் ஒஜிப்வே அல்லது டகோட்டா அல்லது வேறெந்த பூர்வகுடி மக்களுடனோ வேலை செய்கின்றனர். என் கடைசி தம்பி, கடைசி தங்கை, என் கணவனின் சகோதரன் என்று பலரும் இந்தியன் ஹெல்த் சர்வீஸில் நாற்பது ஆண்டுகளுக்கும் மேல் வேலை செய்திருக்கின்றனர். என் இரண்டாம் அண்ணன் வர மின்னசோட்டாவில் வேலை செய்கிறார்- மிட்வெஸ்ட்டில் உள்ள ஒஜிப்வே தேசங்கள் அனைத்துக்கும் உரிய சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது அவர் பொறுப்பு. அவர்களது அனுபவத்தைப் பார்க்கும்போது மாந்திரிக யதார்த்தம் கொட்டாவி விடவைக்கிறது. அவர்கள் அனுபவத்தை நான் என் எழுத்தில் பயன்படுத்திக் கொள்ள முடியாது என்பது வருத்தத்துக்கு உரிய விஷயம்- அவர்கள் யாரென்று எல்லாருக்கும் தெரிந்து விடும். ஆனால் நம்புங்கள், என் எழுத்து சாதாரண வாழ்க்கையிலிருந்து வருவது.

கேள்வி-

ஆண்டிலோப் வைப் என்ற கதையில் ஒருவன் தன் குழந்தைக்கு பால் கொடுக்கிறான், அது?

ஏட்ரிக்-

அதிலென்ன ஆச்சரியம் இருக்கிறது?| ஆண்கள் பால் சுரந்தது குறித்து பல ஆவணங்கள் இருக்கின்றன. ஆண்களும் பெண்களுமாய் இருக்கும் கூட்டத்தில் இந்தக் காட்சியைப் படிப்பது எனக்கு சில சமயம் சங்கடமாகி இருந்திருக்கிறது. ஆண்கள் நிலைகுலைந்துப் போகிறார்கள். ஆனால் அது நல்ல ஐடியாதான் என்று நினைக்கிறேன். உலகின் பிரச்சி\னைகளில் பாதி தீர்ந்துவிடும்.

கேள்வி-

த பிளேக் ஆப் டவ்ஸ் என்ற கதையில் யாருமற்ற ஒரு படகில் வயலின் கரைசேர்கிறதே, அது?

ஏட்ரிக்-

அதுதான் கதையே.

கேள்வி-

நீங்கள் எழுதிக் கொண்டிருக்கும்போது ஒரு பாத்திரமோ கதைச்சூழலோ அமானுடத்தை நோக்கிச் செல்லத் துவங்கும்போது அதை எழுத ஒரு முறைக்கு இரு முறை யோசிப்பதுண்டா?

ஏட்ரிக்-

நீங்கள் சொல்லும் பொருளில் நான் அமானுடத்தை உணர்வதில்லை/ எனவே, எங்கு அமானுடத்தை நோக்கி கதை செல்லத் துவங்குகிறது என்பதற்கு என்னால் பதில் சொல்ல முடியாது. ஒரு வேளை இது என் குசந்தைப்பருவத்திலேயே துவங்கியிருக்கலாம், பழைய ஏற்பாடு இன்னும் என் கற்பனையைக் கெடுத்து வைத்திருக்கிறதோ என்னவோ. ஒரு வேளை அது கத்தோலிக்க சமய தாக்கமாய் இருக்கலாம், அதிசயங்கள் நடக்கும், படகில் வயலின் வரும் என்பது போன்ற விஷயங்களில் அதனால் நம்பிக்கை வந்திருக்கலாம். எனக்கென்னவோ அதெல்லாம் சாத்தியம் என்று தோன்றுகிறது. ஒரு கதை தானாகவே தன்னை எழுதிக் கொள்வது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது, நீங்கள் குறிப்பிடும் கதை அப்படிதான் வந்தது. பிளேக் ஆப் டவ்ஸ் கதையில் வரும் மனிதர்கள் சர்ரியலான ஒரு பயணம் செய்யும் இடம் இருக்கிறதே, அதில் கொஞ்சம் கூட மாந்திரிகத்தன்மை கிடையாது. வாப்பேட்டனில் முடிந்த ஒரு சரித்திரப் பயணத்தின் அடிப்படையில் டவுன் பீவர் எழுதப்பட்டது. அவர்கள் பசியால் ஏறத்தாழ செத்தே போனதன் நினைவாக அங்கே ஒரு கல்வெட்டுகூட இருக்கிறது. நான் இதோ இங்கே இருக்கும் மின்னியோபோலிஸ் ஆற்றங்கரைக்கு ஒரு வாரம் இல்லாவிட்டால் மறுவாரம் போகும் இடத்தில்தான் அவர்கள் ஆரம்பித்தார்கள் என்பது எனக்கு வசீகரமாக இருந்தது. அப்போது இந்த நகரம் இல்லைதான். எருமை பூட்டிய வண்டியில் இப்போது இண்டர்ஸ்டேட் 94 என்றிருக்கும் சாலையில் அவர்கள் பயணித்தார்கள். எனக்கு அவர்கள் எந்த பாதையில் சென்றார்கள் என்பது துல்லியமாகத் தெரிந்திருந்தது, அந்த யதார்த்தத்தின் அடிப்படையில்தான் என் விவரணைகள் அமைந்திருந்தன. பயணம் குறித்து எழுதிய டானியல் ஜான்ஸ்டன், பயணம் செய்தவர்களுக்கு மலக்குடல் பிரச்சினைகள் வந்தன என்றும் அதனால் ஒரு மருந்து சாப்பிட்டதாகவும் பதிவு செய்திருக்கிறார். அது என்ன மருந்து என்று பார்ப்பது மட்டும்தான் நான் செய்த வேலை, அந்த மறுத்து லாடானம். பயணம் செய்த காலம் முழுவதும் அவர்கள் ஓபியம் சாப்பிட்ட போதையில் இருந்திருக்கிறார்கள். அதன்பின் பரசூட் ஆப் அப்லிவியன் படித்தேன், நாளெல்லாம் போதை மருந்தின் லாஹிரியில் இருந்தால் என்ன ஆகும் என்று அறிய விரும்பினேன். போனவாரம் நான் மேத்லாண்ட் படித்ததைப் பார்த்தீர்கள். எனக்கு போதை மறுத்து பித்து பிடித்திருக்கிறது என்று நினைப்பீர்களோ என்னவோ!

சிறார் எழுத்து

கேள்வி-

குழந்தைகளுக்காக எழுதுவது என்பது வளர்ந்தவர்களுக்கு எழுதுவதிலிருந்து எந்த வகையில் வேறுபட்டிருக்கிறது?

ஏட்ரிக்-

முன்னாட்களில் நான் செய்த வேலைகளில் ஒன்று, குழந்தைகளுக்கான பாடபுத்தகங்கள் எழுதுவது. ஒவ்வொரு வாக்கியத்திலும் எந்த அளவு கடின வார்த்தைகளும் எளிய வார்த்தைகளும் இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு கணித சூத்திரம் பயன்படுத்தினேன். இளம் எழுத்தாளர் ஒருவருக்கு பைத்தியம் பிடிக்கச் செய்யும் சவால் இது. இப்போது குழந்தைகளுக்கு எழுதும்போது விவரணைகளைக் குறைத்துக் கொள்கிறேன், செயலை மட்டும் விவரிக்கிறேன், கூடவே நகைச்சுவை, பிரச்சினைகள், வெற்றி பெறுவதை எழுதுகிறேன். சாவு இருக்க வேண்டும் என்பதும் உண்டுதான், ஆனால் நிறைய இருக்கக்கூடாது. அதில் நான் கவனம் செலுத்தியாக வேண்டும். நான் வளர்பருவத்தினரின் கோர்மாக் மக்கார்த்தி ஆகிவிடக்கூடாதில்லையா!

புத்தகக்கடை

கேள்வி-

பிறரைச் சந்திப்பதற்கான ஒரு இடமாக உங்கள் புத்தகக்கடை இருக்கிறது என்று சொன்னீர்கள். இன்னும் அந்தக் கடை செயல்பட்டுக் கொண்டிருக்கிறதா?

ஏட்ரிக்-

பிர்ச்பார்க் புக்ஸ் இன்னும் உயிரோடுதான் இருக்கிறது! உண்மையில், அது வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் நான் தொழில் முனைப்பு கொண்டவள் அல்ல. முதலில் நான் புத்தகக்கடையை ஒரு கலைப்படைப்பாகதான் பார்த்தேன், அது தன கலைத்தன்மையால் மட்டுமே நீடிக்க முடியும் என்று நம்பினேன். ஆனால் இது ஒரு வணிகம் என்பதை இப்போது புரிந்து கொள்கிறேன், ஆனால் அதுதவிர இன்னும் பலவுமாக இருக்கிறது. என்ன ஒரு நல்ல வர்த்தகமும் அதில் தொடர்புடைய மக்கள் சமபந்தப்பட்டது. பிர்ச்பார்க் புக்ஸில் அற்புதமானவர்கள் பலர் பணியாற்றுகின்றனர். அதனால்தான் அது இன்னும் உயிரோடு இருக்கிறது. மிகப்பெரிய ஒரு புத்தகக்கடைக்குள் நுழைவது என்பது என்னவோ அமேசான்.காம் தளத்தில் நுழைவது போலிருக்கிறது. ஆனால் சிறிய ஒரு புத்தகக்கடைக்குள் புகும்போது உடனே நீங்கள் அதன் அலமாரிகளில் உள்ள புத்தகங்களைத் தேர்ந்தெடுத்த மனதின் இருப்பை உணர்கிறீர்கள். புத்தகம் வாங்குபவரோடு அறிவுத்தளத்தில் உரையாடுகிறீர்கள். உங்களுக்கு அதிர்ஷ்மிருந்தால் அருமையான வாசகர் இன்னுமொருவரை நீங்கள் சந்திக்கிறீர்கள்- எங்கள் மேனேஜர், சூசன் வைட், நீங்கள் என்ன வாங்கலாம் என்று பரிந்துரைகள் அளிக்கத் தயாராய் இருப்பவர். மனிதர்களுக்கு புத்தகக்கடைகள் தேவை, பிற வாசகர்களும் தேவை. புத்தகங்களை நேசிக்கும் பிறரொரு நமக்கும் நெஞ்சார்ந்த உரையாடல் தேவைப்படுகிறது.. நமக்கு அது தேவை என்று நாம் நினைப்பதில்லை, காரணம், இனையம் புத்தகம் வாங்குவதைச் சுலபமாக்கியிருக்கிறது. ஆனால் நாம் நினைப்பதைவிட அதிகம் நமக்கு பருண்ம உலகம் அவசியப்படுகிறது. சிறு புத்தகக்கடைகள் சமூக சேவைகளாக இயங்குகின்றன, லாபநோக்கம் கொண்ட வணிக நிறுவனங்களாக அல்ல. இணையத்தில் புத்தகங்கள் மிகவும் மலிவான விலையில் கிடைக்கின்றன, ஏராளமாக கிடைக்கின்றன. எனவே பருண்ம வடிவில் உள்ள புத்தகக்கடைகள் மாறுபட்ட வேறொன்றை அளித்தாக வேண்டும். லாபநோக்கமற்ற அமைபுகளுகுரிய சலுகைகள் சிறு புத்தகக்கடைகளுக்கு கிடைக்கக்கூடும்.. ஒருநாள் அரசு அவற்றுக்கு மானியம் அளிக்கக்கூடும், அப்போது அவை லாபமின்றி வெற்றிகரமாக இயங்கக்கூடும். ஏதோவொரு புத்திசாலித்தனமான புத்தகக்கடை அதைச் செய்யலாம், நாங்கள் செய்யப்போவதில்லை, அவை பிறருக்கு நல்ல ஒரு முன்னுதாரணமாகவும் அமையலாம்.

கேள்வி-

உங்கள் கடையை நீங்கள் எப்படி வேறுபடுத்திக் காட்டுகிறீர்கள்?

ஏட்ரிக்-

நாங்கள் எழுத்தாளர்களை ஈர்க்கிறோம், குறிப்பாக, பூர்வகுடியினரை. இலக்கிய நிகழ்வுகள் நடத்துகிறோம், இது நாங்கள் வணிக நிறுவனமல்ல, கலை அமைப்பு என்பதைத்தான் உணர்த்துகிறது. பூர்வகுடிகளைச் சேர்ந்த கலைஞர்களுக்கு ஆதரவு அளிக்கிறோம், அவர்கள் கூடை பின்னுபவர்கள் அல்லது நகை செய்பவர்கள், ஓவியர்கள் என்று பலதரப்பட்டவர்களாக இருக்கின்றனர். டகோட்டா குடும்பத்தினர் வளர்த்த மருந்து விற்கிறோம். என் சகோதரியும் நானும் ஒஜிப்வே மற்றும் டகோட்டா மொழிகளில் புத்தகங்கள் வெளியிடும் லாபநோக்கமற்ற ஒரு அச்சகம் துவங்கியுள்ளோம். ஒரு சிறு புத்தகக்கடை இருந்தால் நீங்கள் உங்கள் கோட்டித்தனங்களுக்கு நிறைய இடம் கொடுக்க முடியும். இந்தப் புத்தகக்கடை ஒரு அருமையான இடம். என் பெண்களுக்கான ப்ராஜெக்ட்டாக இருக்கும், நாங்கள் இணைந்து ஏதாவது செய்யலாம் என்று நினைத்துதான் இதைத் துவக்கினேன், அப்படிதான் நடந்திருக்கிறது. என் ஒவ்வொரு மகளும் இங்கு பணியாற்றியிருக்கிறாள்.

நம் தேசத்தில் ஏதோ ஒரு தப்பு இருக்கிறது- புத்தக வியாபாரத்தில் மட்டுமல்ல. கட்டுப்பாடுகளற்ற முதலியம் எப்படியிருக்கும் எனபதை நாம் இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறோம். நாம் சிறியதாகவும், மனதுக்கு நெருக்கமானதாகவும் உள்ளவற்றை அழித்துக் கொண்டிருக்கிறோம். இதை நாம் அனைவரும் உணர்ந்திருக்கிறோம், ஏன் எல்லாமே ஒரே மாதிரி இருக்கத் துவங்கிவிட்டது என்பது பிடிபட மாட்டேனென்கிறது. பெருநகரங்களின் மையங்களில் இப்போது சுவாரசியமான இடங்கள் இருக்க ம்டுயும். ஆனால் நம் தேசத்தின் பிற இடங்களில் எல்லாமே பெரிய பெரிய நிறுவனங்களின் கிளைகளைத் துவங்கிக் கொண்டிருக்கிறோம், அவற்றுக்கு என்று ஒரு தனித்தன்மையும் கிடையாது, அங்கு பணியாற்றுபவர்களுக்கு மிகக் குறைவான ஊதியமே கிடைக்கிறது. நாம் நம் தனித்தன்மையை இழந்து கொண்டிருக்கிறோம். நாம் நம் சூழ்நிலத்தின் ஆன்மாவைக் கொன்று கொண்டிருக்கிறோம். ஆனால் நாம்தான் தேசங்களில் தனித்தன்மை கொண்டவர்களாகக் கருதப்படுகிறோம். பார்கோ, மினியபொலிஸ் போன்ற நகரங்களின் ஊடே பயணம் செய்யும் ஒவ்வொரு முறையும், அதன் பிரதான சாலைகளில் நடந்து சென்று அதன் எல்லைகளைக் கடந்து ஏக்கர் ஏக்கராக விரிந்திருக்கும் கான்கிரீட் பெட்டிகளைத் தாண்டித் திரியும்போது அந்த சோகத்தை உணர்கிறேன். நம் தேசம் லெகோலாண்ட் போலிருக்கத் துவங்கிவிட்டது.

நன்றி – The Paris Review

ஒளிப்பட உதவி – Poetry Foundation

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.