அமேசான் காடுகளிலிருந்து…

மித்யா

ஒன்று

ஜார்ஜ் ட்ருக்கர் என்பவர் எழுதிய ‘லைப் ஆப் எ லிவிங் செயின்ட்’ என்ற புத்தகம் பத்தொன்ம்பதாம் நூற்றாண்டு இறுதியில் வெகு பிரபலமடைந்து பல சர்ச்சைகளுக்கு வித்திட்டது. பிரிட்டன் மற்றும் அமெரிக்கா இந்தப் புத்தகத்தைத் தடை செய்யவும், அந்தத் தடையை எதிர்த்து பல வாசகர்கள் வீதியில் இறங்கினார்கள். இவர்களுக்கு எதிராக தடை கோரியவர்களும் வீதியில் இறங்கவே கைகலப்பு நடந்து பிறகு போலீஸ் தடியடி நடந்து பலர் காயப்பட்டு லண்டன் நகர வீதிகள் நான்கு நாட்களுக்கு மூடப்பட்டன.

இந்தப் புத்தகம் கார்ல் கிறிஸ்டோ என்பவரின் இறுதி ஐந்தாண்டு கால வாழ்க்கையைச் சித்தரிக்கிறது. கிறிஸ்டோ என்பவர் 1850இல் பிறந்து 1882 வரை முப்பத்திரண்டு வருடங்கள் உயிர் வாழ்ந்தார். இருபத்தேழு வயது வரை சாதாரண இளைஞனாக இலக்கில்லாமல் சுற்றிய இவர், பல ஐரோப்பிய ‘எக்ஸ்ப்ளோரர்’ கதைகளைக் கேட்டு தானும் அது போல் ஏதாவது சாகசம் செய்ய வேண்டும் என்று எண்ணி அமேசான் காடுகளுக்கு 1877இல் புறப்பட்டார்.

அமேசான் காடுகளில் அங்குள்ள வனவாசிகள் துணையுடன் சுற்றிக்கொண்டிருந்தவர், எல்லோரும் அந்தக் காட்டின் ஒரு பகுதிக்குள் நுழைய மறுப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டார். விசாரித்ததில் அந்தப் பகுதியில் புலிகள், சிங்கங்கள், கரடிகள், அனகோண்டாக்கள் மற்றும் பிரான்ஹா மீன்கள் அதிகமாக இருப்பதாகவும், அந்தப் பகுதிக்குள் சென்ற யாரும் உயிருடன் திரும்பியதில்லை என்றும், எல்லோரும் கோர மரணத்தை அடைந்தார்கள் என்றும் தெரிய வந்தது. இதையெல்லாம் நம்ப மறுத்த அவர், தான் அந்தக் காட்டுக்குள் சென்று உயிருடன் திரும்பி வருவதாக சவால் விட்டு, எல்லோரும் தடுத்ததை பொருட்படுத்தாமல், வனவாசிகள்கூட வர மறுத்ததைக் கண்டுக்கொள்ளாமல், அந்தக் காட்டுப்பகுதிக்குள் நுழைந்தார்.

அங்கே மரங்கள் ஒன்றுடன் ஒன்று பிணைந்து சூரிய கிரணங்களை தடுத்து காட்டை இருளில் மூழ்கச் செய்திருந்தன. பறவைகளின் கூக்குரலும் பூச்சிகளில் இடைவிடாத கர்ணகடூரமான சப்தத்திற்கும் நடுவே வியர்க்க விருவிருக்க கிறிஸ்டோ நடந்து கொண்டிருந்தார். திடீரென்று புதருக்குள் சலனம் ஏற்பட, அது என்ன என்று கிறிஸ்டோ திரும்பிப் பார்ப்பதற்குள் அவர் மேல் ஒரு புலி பாய்ந்தது. இளைஞரான கிறிஸ்டோ சட்டென்று குனிய புலி உயரத் தாவிச் சென்று ஐந்தடி தாண்டி இறங்கியது. இறங்கியவுடன் சட்டென்று திரும்பி மறுபடியும் அவரை நோக்கி தாவி வந்துக் கொண்டிருந்தது. கிறிஸ்டோ ஓட்டம் பிடிக்க, புலி அவரை துரத்த, ஓடும் நதி முன் வந்து மாட்டிக் கொண்டார் கிறிஸ்டோ. புலி அவர் மேல் வேகமாகப் பாயவும், இந்த முறை சட்டென்று தரையில் படுத்துக் கொண்டார் கிறிஸ்டோ. புலி அவரைத் தாண்டிச் சென்று ஓடும் நதியில் விழுந்தது. கீழே விழுந்து கிடந்த கிறிஸ்டோ எழுந்து நிற்க முடியாத அளவிற்கு முட்டியில் காயம் பட்டிருந்தது. இதை கவனித்த புலி நதியில் மெதுவாக நீந்திக்கொண்டு கிறிஸ்டோவை நோக்கி வந்தது. இனி தனக்கு மரணம்தான் என்று கிறிஸ்டோ எண்ணிக் கொண்டிருக்கையில் காட்டைப் பிளப்பது போல் புலியிடமிருந்து ஓர் ஓலம் எழுந்தது. முதலில் திடுக்கிட்ட கிறிஸ்டோவிற்கு நிலைமை மெதுவாக பிடிபட ஆரம்பித்தது. அந்தப் புலியை நதியில் இருக்கும் பிரான்ஹா மீன்கள் தின்ன ஆரம்பித்து விட்டன. அந்த வலி தாங்க முடியாமல் புலி கத்திக்கொண்டிருந்தது. மூன்று நிமிடத்திற்குப் பின் காடு நிசப்தமானது. புலியின் எலும்புக்கூடு தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தது.

தான் காட்டுவாசிகளின் சொல்லை கேட்டு நடந்திருக்க வேண்டும் என்றும் இனி இங்கிருந்து தப்பிச் செல்வது முடியாத காரியம் என்றும் கிறிஸ்டோ நினைத்துக் கொண்டார். நாலாபுறமும் காடு சூழ்ந்திருக்க அவருக்குத் திரும்பிச் செல்லும் வழி எதுவென்று தெரியவில்லை. போதாததற்கு முட்டியில் பலத்த அடி. இனி எல்லா பாரமும் இறைவன் மேல் போட்டுவிட்டு ஏதோ ஒரு திசையில் நடந்து செல்ல வேண்டும் என்று கிறிஸ்டோ முடிவெடுத்தார்.

மெதுவாக நொண்டிக் கொண்டு நதியோரமாக கிறிஸ்டோ நடந்தார். ஆழ்ந்த சிந்தனையில் நடந்து கொண்டிருந்தவர் ஒரு மரத்துக்குப் பின்னாலிருந்து அவரைப் பார்த்துக் கொண்டிருந்த சிங்கத்தை கவனிக்கவில்லை. சப்தம் செய்யாமல் தன் பிடரியை சிலிர்த்துக்கொண்டு அவரைச் சிங்கம் பின்தொடர்ந்தது. தன் இளமைக் காலம் பற்றியும், லண்டனில் இருந்திருந்தால் இந்நேரத்திற்கு அருமையான தேநீர் அருந்திவிட்டு ஷேக்ஸ்பியர் நாடகத்தை பார்த்துக் கொண்டிருக்கலாம் என்றும் கனவுலகில் மிதந்து கொண்டிருந்த கிறிஸ்டோ தரைக்குத் தள்ளப்பட்டார். ஆம், கீழே விழுந்து உருண்டு மல்லாக்கப் படுத்திருந்த கிறிஸ்டோ, அந்தச் சிங்கம் தன்னைப் பார்த்து சிரிப்பது போலிருக்கக் கண்டார். இப்போது தனக்கு மரணம் நிச்சயம் என்று அறிந்த கிறிஸ்டோ சிங்கத்தைப் பார்த்து விரக்தியாகச் சிரித்தார்.

சிங்கம் அவரிடம் மெதுவாக வந்து அவர் கழுத்தைக் கவ்வ இருந்த நேரத்தில் தண்ணீரிலிருந்து ஒரு ராட்சத அனகோண்டா வெளியே பாய்ந்து வந்தது. அனகோண்டா வருவதை கிறிஸ்டோவோ சிங்கமோ உணர்வதற்குள் அனகோண்டா சிங்கத்தைச் சுற்றிக்கொண்டது. சிங்கம் பலம் கொண்ட மட்டும் போராட, அனகோண்டாவும் சிங்கமும் சகதியில் புரண்டன. கடைசியில் அனகோண்டாவின் அணைப்பைத் தாங்க முடியாத சிங்கம் உயிர் விட்டது. அனகோண்டா ஊர்ந்து வந்து கிறிஸ்டோவை சுற்றிக்கொண்டு, ஒரு பந்து போல் உருண்டு சென்று கிறிஸ்டோ எங்கிருந்து புறப்பட்டாரோ அதே இடத்திற்கு வந்து அவரை தன் பிடியிலிருந்து அவிழ்த்துவிட்டு மறுபடியும் காட்டுக்குள் சென்று விட்டது. இந்த நிகழ்வைக் கண்ட வனவாசிகள் வாயடைத்துப் போனார்கள்.

இதறக்கு பிறகு என்ன நடந்தது என்பதை அடுத்த வாரம் பார்ப்போம்.

ஒளிப்பட உதவி – Shukernature

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.