நான் நல்ல பெண்ணாக இருக்கவில்லை – கில்லியன் ப்ளின்

-கில்லியன் ப்ளின்  (Gillian Flynn)- 

நான் நல்ல பெண்ணாக இருக்கவில்லை. வெயில்காலத்தில் எனக்குப் பிடித்த பொழுதுபோக்கு, எறும்புகளைத் தாக்கி அவற்றைச் சிலந்திகளுக்குத் தின்னக் கொடுப்பதுதான். “கெட்ட அத்தை ரோஸி” என்ற விளையாட்டுதான் வீட்டில் பொழுதுபோக்க உதவியது- அதில் நான் என் கசின்களைப் பார்த்துக் கொள்பவள், ஆனால் சூனியக்காரி, அவர்கள் என்னிடமிருந்து தப்பியோட வேண்டும்.

எண்பதுகளில் சிறு பெண்கள் பலரும் பிளாஸ்டிக்கில் ஒரு பிங்க் கலர் பொம்மை போன் வைத்திருப்பார்கள் (அழகான பெண்களுக்கு போன் பேசுவது என்றால் ரொம்ப பிடிக்கும்), அது எங்களுக்கு மிகவும் அடிப்படையான விளையாட்டுப் பொருளாய் இருந்தது- அவர்கள் உதவிக்கு ஆள் அழைக்கும்போது எப்போதும் அவர்களிடமிருந்து அதைப் பிடுங்கி விடுவேன்.

எதுவும் செய்யாமல் சும்மா இருக்கும்போது பொதுவில் தெளிவாகத் தெரியாத கேபிள் சானல்களில் ஒலிபரப்பப்படும் சாப்ட் கோர் போர்ன்களைப் பார்த்துக் கொண்டிருப்பேன் (முலைகள், பிருஷ்ட பாகங்கள், ஸ்டாட்டிக், ஸ்டாட்டிக், முலைகள்!). என் பொம்மைகளில் எதுவாவது பிடிவாதம் பிடிக்க ஆரமபித்தால், அவளது முடியை வெட்டிவிடுவேன்.

இங்கு நான் சொல்ல வருவது இதுதான்- நான் ஒன்றும் வித்தியாசமாய் இருந்த குழந்தையல்ல (ஆனால் இதை எல்லாம் காகிதத்தில் படித்துப் பார்க்கும்போது கவலையாய்தான் இருக்கிறது). நான் கெட்ட பெண்ணும் அல்ல (இங்குதான் என் மீது மிகுந்த பாசம் வைத்துள்ள என் பெற்றோருக்காக இதைச் சொல்ல வேண்டும் – அந்த காலத்து கான்சாஸ் நகரில் நான் அதிசயமும் சந்தோஷமுமான ஆண்டுகள் பல வாழ்ந்திருக்கிறேன்). ஆனால் சிறுவயதினர் வளரும்போது சில சாகசங்கள் செய்ய வேண்டுமே- வசதியில்லாத இடத்தில் தங்கியிருப்பது, வயசுக்கு மீறிய பாலுணர்வு அனுபவங்கள், அதிகார விளையாட்டின் முதல் மலர்ச்சி, இதெல்லாம் பல பெண்களின் வாய்மொழிக் கதைகளிலும் இடம் பெறுவதில்லை.

குழந்தைமையின் ஆத்திரம், முதிரா வயதில் படுதோல்வியடையச் செய்த பால்விழைவு போன்றவற்றின் பீறிட்டுக் கிளம்பும் வினோத வெடிப்புகள் பற்றி ஆண்கள் ஆனந்தமாய் பேசுகிறார்கள். பாலுணர்வையும் வன்முறையையும் பேச அவர்களுக்கு சொற்கள் இருக்கின்றன, பெண்களுக்கு அப்படி எதுவும் இல்லை. வளர்ந்த பின்னும்கூட சுய இன்பம் பற்றியோ கலவியின் உச்சம் பற்றியோ எந்தப் பெண்ணும் நிஜமான சந்தோஷத்துடன் பேசியதாய் நினைவில்லை. செக்ஸ் அண்ட் தி சிட்டிதான் அதன் கொஞ்சலான புத்திசாலித்தன சொற்றொடர்களை முன்அனுமதி அளிக்கப்பட்ட வகையில் பொட்டலம் கட்டி அறிமுகப்படுத்தியது.

இப்போதும் நாம் நம் வன்முறையை விவாதிப்பதில்லை. தங்கள் குழந்தைகளைத் தண்ணீரில் மூழ்கடித்துக் கொன்ற சூசன் ஸ்மித் அல்லது ஆண்டிரியா யேட்ஸ் பற்றிய செய்திகளை ஆசை தீரத் தெரிந்து கொள்கிறோம், ஆனால் இந்தக் கதைகள் நயமாகச் சொல்லப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். பிரசவத்துக்குப் பின் ஏற்படும் மன அழுத்தம் பற்றி இறுக்கமான குரலில் தனியாய்ச் சொல்லப்பட வேண்டும் என்றும், அவளை அப்படிச் செய்ய வைத்தான் அவன் என்றும் கதை கேட்க விரும்புகிறோம்.

ஆனால் இதிலெல்லாம் அலட்சியப்படுத்தப்படும் ஒத்திசைவு ஒன்று உண்டு. கொலைகாரத் தாய்மார்களைப் பற்றியும் தொலைந்து போன சிறுமிகளைப் பற்றியும் பெண்கள் வாசிக்க விரும்புவதன் காரணம் பெண்ணின் வன்முறையை அந்தரங்க தளத்தில் பேசுவதற்கு மைய ஊடகத்தில் நமக்கிருக்கும் ஒரே வாய்ப்பு இவையாகவே இருக்கின்றன என்பதுதான் என்று நினைக்கிறேன்.

பெண்ணின் வன்முறை என்பது குறிப்பிட்ட தனித்தன்மை கொண்ட சீற்றம். அது எல்லைகளை மதிப்பதில்லை. பெண்களுக்குள் நடக்கும் சண்டை என்பது எல்லாம் பற்கள், தலைமுடி, எச்சில், நகங்கள் என்று நடக்கிறது- இரு ஆண்கள் ஒருவரையொருவர் அடித்துக் கொள்வதைவிட இரு பெண்கள் இப்படி சண்டை போட்டுக் கொள்வதைப் பார்க்க பயங்கரமாக இருக்கிறது. அதிலும் மனதளவில் நிகழ்த்தப்படும் வன்முறை மிகக் கொடூரமானது. பெண்கள் பின்னிப் பிணைகின்றனர்.

நான் பார்த்த உறவுகளில் மனதை மிகவும் துன்புறுத்துவதும், நோய்மை கொண்டதாகவும் இருந்த உறவுகள் நீண்டகால தோழியர் சிலரிடையே இருந்த உறவே- இன்னும் குறிப்பாக தாய்- மகள் உறவைச் சொல்லலாம். வம்புப் பேச்சு, திரித்தல், ஊக்குவிப்பது போல் நாடகமாடுதல், உறவை முறித்துக் கொண்டு தண்டித்தல், பாலுணர்வு காரணமான பொறமை- பெண்கள் சண்டை போட்டுக் கொள்வதைப் பார்ப்பது என்பது பல்லாண்டு காலம் நிகழும் படுபயங்கர ஊர்வலத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதைப் போன்றது.

வன்முறைச் சுழலில் சிக்கிக்கொண்ட இரக்கமற்ற ஆண்களை தலைமுறை தலைமுறையாய் பேசும் கதைகளால் நூலகங்கள் நிறைந்திருக்கின்றன. பெண்களின் வன்முறையை நான் எழுத விரும்பினேன்.

எனவே அப்படி எழுதவும் செய்தேன். இருண்மையான, மிக இருண்மையான ஒரு புத்தகம் எழுதினேன். அதன் நாயகி, கதைசொல்லி, அதிகம் குடிக்கிறாள், அதிகம் கலவியில் ஈடுபடுகிறாள், வெகு காலமாய் வார்த்தைகளைக் கத்தரித்துத் தன்னைக் குத்திக் கொள்கிறாள். விஷம் என்பதற்கு இலக்கணமாக இருக்கும் அம்மா, போதை மருந்துகள், பாலுறவு, அதிகாரம் முதலானவற்றின் பண்டமாற்று வர்த்தகத்தில் தேர்ந்த பயிற்சியுள்ள பதின்மூன்று வயதான ஒன்றுவிட்ட சகோதரி. அமைதியற்ற அந்தச் சிற்றூரில் இரு சிறுமிகள் கொலை செய்யப்படுகிறார்கள்.

அந்த நாவல் பெண்களை உயர்வாய்ச் சித்தரிக்கவில்லை, அதில் எனக்கு ஒன்றும் பிரச்சினையில்லை. பெண்களின் அழகற்ற முகத்தை ஏற்றுக் கொள்ளும் நேரம் எப்போதுதான் வரப்போகிறது? துணிச்சலான நாயகிகள், கற்பழிக்கப்பட்டபின் போராடும் வீராங்கனைகள், ஆன்ம சோதனை செய்து கொள்ளும் உயர்குடிப் பெண்கள் எத்தனை எத்தனை புத்தகங்களை நிறைத்துக் கொண்டிருக்கிறார்கள்- எனக்கு இதெல்லாம் மிகவும் அலுத்துப் போய்விட்டது.

அதிலும் குறிப்பாக, வில்லிகள் இல்லை என்பது வருத்தமாக இருக்கிறது- நல்ல ஆற்றல் வாய்ந்த வில்லிகள். ஒழுக்கமான ஆண்களைக் கல்யாணம் செய்து கொண்டு வசதியாக வாழத் திட்டமிடும் கோபக்கார பெண்கள் அல்ல (போருக்குக் கிளம்ப இதைவிட சுவாரசியமான எதுவும் எங்களுக்கு இல்லை என்பது போலிருக்கிறது). உணர்வுகளை வெளியே காட்டிக் கொள்ளாத, ஆனால் அதற்காக கெட்டவர்கள் என்று சொல்ல முடியாத பெண்கள், அழுது புலம்பும் சதிகாரிகள் (வம்பு வளர்த்தால் மட்டும் போதாது போல்)- இப்படிப்பட்ட வில்லிகளைச் சொல்லவில்லை. வன்முறைக்கு அஞ்சாத, தீய மனம் கொண்ட பெண்களைப் பற்றி பேசுகிறேன். அச்சுறுத்தும் பெண்கள். உங்களுக்கு அப்படி யாரையும் தெரியாது என்று சொல்லாதீர்கள்.

இத்தனை நாட்களாக நாம் நமக்கு பெண்ணாற்றல் சேர்த்துக் கொண்டிருந்ததில் – பகடி என்று சொல்லக்கூடிய அளவுக்கு இந்த ஊக்குவிப்பு போய்விட்டது- நமக்கு நம் இருண்ட பகுதியை ஒப்புக்கொள்ள இடமே இல்லை. இருண்ட பகுதிகள் முக்கியமானவை. விஷப் பூச்செடிகள் போல் அவற்றை நாம் வளர்க்க வேண்டும். எனவேதான் ஷார்ப் அப்ஜெக்ட்ஸ் நான் செய்த விஷப் பூங்கொத்து.

ஷார்ப் அப்ஜெக்ட்ஸ் நாவலில் நல்ல பெண்கள் கிடையாது. நாவலின் கதைசொல்லி, நான் வெறித்தனமாய் நேசிக்கும் காமில்லா- புத்திசாலித்தனமாகப் பேசுபவள், தன்னை அறிந்திருப்பவள், உற்சாகமானவள்- அவள்தான் நல்ல பெண்ணுக்கு மிக அருகில் வருபவள். ஆனால் ஒவ்வொரு நாளையும் ஓட்ட சரக்கு, போதை வஸ்துக்கள், செக்ஸ், கத்தரிக்கோல்கள் பயன்படுத்துகிறாள்.

காமில்லா பற்றி எழுதிக் கொண்டிருக்கும்போது, திருப்திப்படுத்த முடியாத, நச்சுத்தன்மை கொண்ட வீட்டில் எல்லாரையும் திருப்திப்படுத்தச் சொல்லி வளர்க்கப்படும் பெண் எப்படி வளர்வாள் என்று நினைத்துப் பார்த்தேன். எப்போது பார்த்தாலும் குத்திக் குடைந்து கொண்டிருக்கும் ஒரு அம்மா, உடலளவிலும் இதைச் செய்கிறவள், கொஞ்சம்கூட தாய்மையுணர்வு இல்லாதவள், அவளால் வளர்க்கப்படும் பெண் தன் அம்மாவிடம் எப்படி நடந்து கொள்வாள்? அவள் தன் பெண்ணுக்கு எப்படிப்பட்ட வன்முறையைப் புகட்டுவாள்? அது ஒரு சுழல் மாதிரி இருக்கும் என்று உணர்ந்தேன்.

காமில்லா தன்னையே துண்டம் போட விரும்புகிறாள். வெட்டுபவளே பலி கொள்கிறாள், பலியாகிறாள்- மிரட்டுபவளும் மிரள்பவளும் அவளே. ஆனால் இதில் நோய் தீர்த்தலும் உண்டு- பின்னர் காயங்களைக் கழுவி மருந்திட்டு கட்டு போட வேண்டும். காயப்படுத்து, துயரம் கொள், குணப்படுத்து, காயப்படுத்து, துயரம் கொள், குணப்படுத்து. இது வன்முறையின் முப்புடி, ஒரே ஆளில் உருவம் பெறுகிறது. உலகின் மிகத் தனித்த செயல் இது. காமில்லா அடிப்படையில் தனித்து இருப்பவள்.

நான் சிறுமியாய் இருந்தபோது பிரதர்ஸ் கிரிம் கதைகள் படித்ததைக் கொண்டு காமில்லாவின் அம்மாவைப் படைத்தேன். சுருள் முடி கொண்ட மென்மையான நாயகிகள் நாசமாய்ப் போகட்டும். கெட்ட புத்தி படைத்த இந்த அரசிகளையும் தீய நெஞ்சம் கொண்ட மாற்றாந்தாய்களையும் நான் நேசித்தேன். எனவே காமில்லாவின் அம்மா அப்படி இருக்கிறாள்- அவள் அழகி, ராணி, ஊசிகள் நிறைந்தவள். அவள் பிறர் வலியைத் துய்ப்பவள். காமில்லாவின் வன்முறை தனக்குள் அடங்குவது என்றால், அவளது தாயின் வன்முறை தன்னை மையம் கொண்டது.

கொலை செய்யப்பட்ட சிறுமிகளை எடுத்துக் கொண்டால், இவர்கள் கன்னக்குழியும் ரிப்பன்களுமாய் இருப்பதை நான் விரும்பவில்லை. அது மிகச் சுலபமாய் இருந்திருக்கும் (“அழகிய பெண்ணின் மரணம் கவித்துவமானது,” என்றார் போ, அழகிய சிறுமியின் மரணம் இன்னும் அழகாக இருக்குமோ என்னவோ- தொலைந்து போன பெண்கள் குறித்து நம் ஊடகங்கள் பைத்தியம் பிடித்து அலைவதைப் பார்த்தால் அப்படிதான் இருக்கிறது). கொலையுண்ட பெண்கள் பொம்மை போன்ற பலிகள் அல்ல- அவர்களுக்குள்ளும் ஒரு கொடூரம் உண்டு, அவர்கள் போராளிகள். காமில்லாவின் ஒன்றுவிட்ட சகோதரி அமா, அவள் கோபக்காரி. ஆனால் காமில்லா போலல்லாமல், பேய் பிடித்த அவள் வீடு அவளது கோபத்தை மேல்நோக்கித் திருப்பவில்லை, மாறாய் கண்கவரும் திசையில் செலுத்துகிறது.

ஷார்ப் அப்ஜெக்ட்ஸில் வரும் பெண்களை நினைத்துப் பார்க்கும்போது 1948ஆம் ஆண்டு பிரடரிக் சம்மர் எடுத்த புகைப்படத்தை நினைத்துப் பார்க்கிறேன்- அதன் பெயர் லிவியா. லிவியா ரோமானிய கொலைகார பேரரசி. அது கருப்பு வெள்ளை புகைப்படம், அதில் இருப்பவள் ஓர் இளம் பெண், அப்பாவித்தனத்தின் அலங்காரங்கள் அனைத்தும் அவளிடம் இருக்கின்றன- பின்னி வாரப்பட்ட சுருள் கேசம், லேஸ் நுனியிட்ட ஆடைகள். ஆனால் அவள் கண்களின் புத்திசாலித்தனத்தைப் பார்த்தால் தூக்கிவாரிப் போடுகிறது, அவளது உதடுகள் பிடிவாதமாய் இறுகி இருக்கின்றன, அவள் முகம் முழுக்க குறும்பு- ஒருவேளை அவள் துட்டியாய் இருக்கலாம். உலகில் எனக்குப் பிடித்த புகைப்படங்களில் ஒன்று அது. சிறுமிகள்- பெண்களும்- கெட்டவர்களாக இருக்கக்கூடும் என்று அது நினைவூட்டுகிறது.

நன்றி – http://www.powells.com/essays/flynn.html

ஒளிப்பட உதவி – விக்கி ஆர்ட்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.