நினைவின் பாழ்நிலம்- இஸ்மாயில் கதாரேவின் நாவலை முன்வைத்து

அஜய் ஆர்

thegeneralofthedeadarmy-title

இலியட்டின் இறுதிப் பகுதியில், ட்ராயின் மன்னர் ப்ரயம் (Priam), தன் மகன் ஹெக்டரின் உடலை மீட்க அவனைப் போரில் கொன்ற அக்கிலீஸிடமே யாசகம் கேட்க வருகிறார். பெரும் மீட்புப் பொருளைக் கொடுத்து ஹெக்டரின் உடலை மீட்டு 9 நாட்கள் துக்கம் அனுசரித்தபின் 10வது நாள்,

At last,
when young Dawn with her rose-red fingers shone once more,
the people massed around illustrious Hector’s pyre…
And once they’d gathered, crowding the meeting grounds,
they first put out the fires with glistening wine,
wherever the flames still burned in all their fury.
Then they collected the white bones of Hector –
all his brothers, his friends-in-arms, mourning,
and warm tears came streaming down their cheeks.
They placed the bones they found in a golden chest,
shrouding them round and round in soft purple cloths.
They quickly lowered the chest in a deep, hollow grave
and over it piled a cope of huge stones closely set,
then hastily heaped a barrow, posted lookouts all around
for fear the Achaean combat troops would launch their attack
before the time agreed. And once they’d heaped the mound
they turned back home to Troy, and gathering once again
they shared a splendid funeral in Hector’s honor,
held in the house of Priam, kind by will of Zeus.

And so the Trojans buried Hector, breaker of horses.

என்ற உணர்ச்சிகர நிகழ்வோடு இலியட் முடிகிறது.

ஹெக்டர் இளவரசன் என்பதால் இத்தகைய பிரமாண்டமான இறுதிச் சடங்கு நடந்தது என்றோ ஹோமர் ஒரு உச்ச நிகழ்வோடு தன் காவியத்தை முடிக்க இப்படி விவரித்தார் என்றோ சொல்ல முடியுமா?

“.. I deserve more pity…..
I have endured what no one on earth has ever done before –
I put to my lips the hands of the man who killed my son.”

என்று ப்ரயம் அக்கிலீஸிடம் மன்றாடும்போது அவர் ட்ராயின் மன்னர் அல்லர், தான் மரணமடைவதற்கு முன்பே தன் மகன் இறந்த சோகத்தைத் தாள இயலாமல் கதறும் ஒரு தந்தை மட்டுமே.

ஒருவன் சிப்பாயோ, தளபதியோ அல்லது அரசனோ, போர்க்களத்தில் அவன் வீழ்ந்தபின் அவன் உடலை ராணுவத்தில் அவன் படிநிலைக்கேற்ற வகையில் எளிமையாகவோ பிரமாண்டமாகவோ அடக்கம் செய்வது என்பது தொன்றுதொட்டு வரும் ஒரு சடங்கு. ஆனால் வீழ்ந்த வீரனுக்குச் செலுத்தப்படும் மரியாதையில் எந்த பாகுபாடும் இருப்பதில்லை. இறந்த வீரனின் உடலை இழிவுபடுத்துவது என்பது, அவனுக்கு இழைக்கக்கூடிய மிகப் பெரிய அவமரியாதையாக, போர் அறத்தை மீறும் படுபாதகச் செயலாக இன்றும் கருதப்படுகிறது. போரில் வீழ்ந்த அனைத்து வீரர்களின் உடல்களையும் கண்டுபிடிக்க முடியாத யதார்த்தச் சூழலில் “Tomb of the Unknown Soldier” என்றழைக்கப்படும் கூட்டு நினைவுச் சின்னங்கள் பல தேசங்களில் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் உடல் கிடைக்காதவரை, வீரனின் குடும்பத்தாருக்கு ஒரு முடிவு (closure) கிடைப்பதில்லை, அவனை இழந்த சோகம் இருப்பினும், பிறந்த மண்ணில் அவனைச் சார்ந்தவர்களுடன் அவனை அடக்கம் செய்வது என்பது ஒருவித ஆறுதலைத் தரக்கூடியதாக இருக்கிறது.

இந்தப் பின்புலத்தில் இஸ்மாயில் கதாரேவின் (Ismail Kadare)The General of the Dead Army‘ என்ற நாவலை நாம் வாசிக்கலாம். இரண்டாம் உலகப் போரில் அல்பேனியாவில் இறந்த இத்தாலிய வீரர்களின் கல்லறைகளை/ அவர்கள் புதைக்கப்பட்ட இடத்திலிருக்கும் சடலங்களில் எஞ்சியவற்றை 20 ஆண்டுகள் கழித்து மீட்டு மீண்டும் இத்தாலிக்கு கொண்டு செல்ல பணிக்கப்பட்டுள்ள பெயரிடப்படாத ராணுவ படைத்தலைவர் ஒருவரின் எத்தனத்தை இந்த நாவல் விவரிக்கிறது. ‘தளபதி’ என்றவுடன், மார்குவஸ் படைப்புக்களில் வரும் பல சாதனைகளை புரிந்து- பிறகு சர்வாதிகாரியான தளபதியை நினைவு கூற வேண்டாம்.

இரண்டாம் உலகப் போரில் ‘ஆப்ரிக்காவில்’ போரில் ஈடுபட்டார் என்பததைத் தவிர நம் ‘படைத்தலைவர்’ குறித்து கதாரே அதிகம் சொல்வதில்லை. இந்தக் குழுவின் தலைவர் வேறொரு துறையின் அதிகாரியாகவும் (bureaucrat) இருந்திருக்கக்கூடும். ராணுவம் சார்ந்த விஷயம் என்பதால் ராணுவத்தினரே தலைமையேற்க வேண்டுமென்றால், இந்தப் பாத்திரம் ஒரு கர்னலாகவோ, ப்ரிகேடியராகவோ இருந்திருக்கலாம். அல்பேனியாவில் இத்தாலியர்கள் அடைந்த தோல்வி படைத்தலைவரை இன்னும் வருத்திக் கொண்டிருக்கிறது, அப்போதிருந்த தளபதிகள் மீது அவருக்கு மதிப்பு இல்லை, அவர்கள் தம் வீரர்களைச் சரியாக வழிநடத்தவில்லை என்றும், தான் இங்கு நடந்த போரில் பங்கு பெற்றிருந்தால், அவர்களைவிட திறமையாக படைகளை நடத்தி இருக்கலாம் என்று நினைக்கிறார் . எனவே, தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பின் கனத்தை உணரும் அதே நேரத்தில், அதை தூய்மையான ஒன்றாக, 20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவங்களுக்கு பரிகாரமாக அவர் கருதுகிறார்.

எதிரி நாட்டில் வீழ்ந்த வீரர்களை அங்கிருந்து மீட்டு, மீண்டும் தாய் மண்ணில் அடக்கம் செய்வது என்பது அவர்களின் குடும்பத்தினருக்கு அமைதியை மட்டுமல்ல, தேசத்திற்கே ஒரு களங்கத்தைத் துடைத்த உணர்வைத் தரும். எனவே, இந்த புதிய/ வேறு வகையான படையெடுப்பிற்கு ஒரு ‘தளபதி” தானே தலைமை தாங்க வேண்டும்! நாவல் முழுதும் அல்பேனியர்களில் மிகச் சிலரைத் தவிர மற்ற (இத்தாலியர்/ அல்பேனியர்) யாருடைய பெயரும் குறிப்பிடப்படவில்லை என்பதோடு எந்தப் பாத்திரத்தின் பின்புலமும் விவரிக்கப் படுவதில்லை என்பதையும் இங்கு நினைவில் கொள்ளலாம். (நாவலின்) நிகழ்காலத்தில் அவர்களின் செயல்களை மட்டும் பார்க்கும் நாம் அவர்களின் கடந்த காலம் குறித்து யூகம் செய்துகொள்ள வேண்டியதுதான். படையெடுப்பு/ போர் என்று வந்த பிறகு அனைத்தும் புள்ளிவிபரமாக மாறி விடும் நிலையில்தான் ‘தளபதி’ மற்றும் பலரின் பெயரைப் குறிப்பிடாமல் இருப்பதற்கும், யாருடைய பின் புலத்தைப் பற்றியும் அதிகம் சொல்லாமல் இருப்பதற்கும் கதாரே முடிவு செய்திருக்கக் கூடும்.

பெருமித உணர்வுடன் பணியை ஏற்றுக்கொள்ளும் படைத்தலைவர், இது இறந்தவர்களின் சடலங்களில் எஞ்சியுள்ள எலும்புக்கூடுகளை கொண்டு வரும் வேலை மட்டுமல்ல என்பதை விரைவில் – அல்பேனியாவிற்கு பயணிக்கும் முன்பே- புரிந்து கொள்கிறார். ஏனென்றால் ஒரு வீரனின் மறைவுக்குப் பின் ஒரு குடும்பத்தின் வீழ்ச்சியும் உள்ளது. இறந்தவர் குறித்த இறுதியான முடிவுரை எழுத முடியாது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளவர்கள் / ஒருவாறு ஏற்றுக்கொண்டவர்கள் மனதில், இறுதி மரியாதை செய்யவேண்டும் என்ற ஆசை, அவரின் பயணம்/ அதன் குறிக்கோள் குறித்த செய்தியால் மீண்டும் உயிர்த்தெழுகிறது.

கணவன் போரில் இறந்தபின், இரண்டாவதாக இன்னொருவரை மணந்து, அவருக்குத் தெரியாமல் தன் முதல் கணவனைப் பற்றிய தகவல்களைக் கண்டுபிடித்து உதவுமாறு கேட்கும் பெண், கருவிலிருக்கும்போதே தந்தையை இழந்து அவர் முகம்கூட பார்த்தறியாத இளைஞன், தன் மகன் குறித்த தகவல்களைத் தருமாறு வேண்டி பேரனுடன் வரும் முதியவர், ‘Stalingrad‘ போர் முனையில் இழந்த மகனைப் பற்றி அல்பேனியாவில் தகவல் கிடைக்கும் என எண்ணுமளவுக்கு மனம் பேதலித்துள்ள தாய் என, தங்கள் மகன்/ கணவன்/ தந்தை குறித்த செய்திகளை கண்டுபிடிக்குமாறு அவரிடம் வேண்டுகோள் வைக்க அவர் வீதி தேடி வரும் கூட்டம், படைத்தலைவருக்கு தன் பணியின் பல பரிமாணங்களை உணர்த்துவதோடு, அவர் சிந்தையில் சில சஞ்சலங்களையும் உருவாக்குகின்றன.

கிருத்துவ மதகுரு ஒருவருடன் படைத்தலைவர் அல்பேனியா வந்தவுடன், வீழ்ந்தவர்களின் கல்லறைகளை/ புதைக்கப்பட்டுள்ளதாக சந்தேகப்படும் இடங்களைத் தேடும் பணி ஆரம்பிக்கிறது. ஓர் இடத்தில் தேடல், சில சம்பவங்கள்/ அனுபவங்கள், வார இறுதியில் விடுதியில் இளைப்பாறுதல், அடுத்த நாள் இன்னொரு இடத்தில் அதே தேடல், அதே போல் அல்லது புதிய சம்பவங்கள்/ அனுபவங்கள் என விரியும் பல அத்தியாயங்கள் சம்பவங்களின்/ பாத்திரங்களின் மரபார்ந்த தொடர்ச்சி கொண்டிருக்காமல் சிதறுண்ட காட்சி பிம்பங்கள் போல் முதலில் தோற்றமளிப்பது, கதாரே நாவலின் கட்டமைப்பைப் பற்றி யோசிக்கவில்லை என்றோ, இப்படி சிதறுண்ட எழுத்தை அவர் தெரிந்தே தேர்ந்தெடுத்துள்ளார் என்றோ எண்ண வைக்கலாம். அதே போல், ஒரே மாதிரியான நிகழ்வுகள் திரும்பத் திரும்ப வருகின்றனவே என்ற சலிப்பும் வாசகனுக்கு ஏற்படக்கூடும். ஆனால் இப்படிப்பட்ட பலவீனங்களில் சிக்காமல், போகப் போக இந்த அத்தியாயங்கள் நாவலின் உலகிற்குள்ளும் மிகச் சரியாக பொருந்தி விடுவதையும் உணர முடிகிறது.

இதற்கு, ராணுவத்தில் சேர்வதைப் பற்றிய உற்சாகம் முதலில் இருந்தாலும், பிறகு போரின் அவலத்தைக் கண்டு மனம் கொஞ்சம் கொஞ்சமாக கலைய ஆரம்பிக்க ராணுவத்தை விட்டு ஓடிப்போய், அல்பேனியர் ஒருவரின் ஆலையில் சில காலம் வேலை பார்த்த வீரனின் டைரிக் குறிப்பு பற்றிய விவரணை ஓர் உதாரணம் . ஆலை முதலாளிக்கும் அவனுக்கும் இடையில் இருந்த உறவு, அவர் மகள் மேல் இவன் கொண்ட மையல்/ காமம், எப்போது பிடிபடுவோமோ என்று எப்போதும் தொடரும் அச்சம் என ஒரு சிறுகதையாக தனியே படிக்கக்கூடிய இந்தப் பகுதி நாவலின் மையத்தை விட்டு அதிகம் விலகவும் இல்லை.

அவன் (மற்றும் பலர்) ஓடிப்போனதைப் பற்றி படைத்தலைவர் கோபம் கொண்டாலும், அதை அவமானமாகக் கருதினாலும், இந்தப் பகுதி எழுப்பும் கேள்விகள் வேறு. ஓடிப்போனவனை ஏன் அவனின் பரம எதிரியான அல்பேனியர் ஒருவர் வேலைக்கு வைத்துக்கொள்ள வேண்டும்?. அவர் மிகவும் கருணை மிக்கவர் என்றோ அல்லது மிக குறைந்த கூலியில்/ வேறெங்கும் போக முடியாத வேலையாள் ஒருவனை விட மனமில்லாத தந்திரமான வியாபாரி என்றோ கருணை X இரக்கமின்மை என்ற இரட்டை நிலைக்குள் அவர் செய்கையைப் பொருத்திவிடமுடியமா என்ன? வீரனின் கல்லறைப் பெட்டியை கொண்டுத் தரும் அவரிடம்,
அவர் செயலுக்காக ஏதேனும் பணம் தர வேண்டும் என்று படைத்தளபதி சொல்லும்போது “‘I too am in his debt’, he said. ‘I didn’t pay him his last wages. Perhaps you would like me to give them to you!’” என கம்பீரமாக அந்த முதியவர் சொல்வதில் உள்ள தன்மான உணர்வை எப்படி புரிந்து கொள்ள?.

நாவலின் மையக் கருவிலேயே பொதிந்துள்ள ‘bleakness‘ நாவல் முழுதும் பரவி உள்ளது. இங்கு ‘bleak’ என்பதை ‘இருண்மையான’ அல்லது ‘கொடூரமான’ அல்லது ‘வறண்ட’ என்ற பொருளில் கொள்ளாமல், யாரும் தப்பிக்கவியலாத மோசமான சூழ்நிலையைச் சுட்டுவதாகக் கொள்ளலாம்.

இத்தாலியிலிருந்து இவர்கள் வந்ததுபோல் இன்னொரு நாட்டிலிருந்தும் தங்கள் படை வீரர்களை மீட்க வருகிறார்கள். வேறு ஏதோ இயல்பான வேலையைச் செய்பவர்கள் போல் அந்தக் குழுவின் தலைவருடனான உரையாடல், கல்லறைகளைத் தோண்டும்போது அவர்கள் உபயோகிக்கும் கிருமி நாசினி, அவற்றின் சாதக பாதகங்கள் என்று துவங்கி இருவருக்கும் வரும் துர்ககனவுகள் என நீளும்போது, அவர்கள் எவ்வளவு பேசினாலும் அவர்களிருவருக்கும் எந்தவித ஆசுவாசமும் கிடைக்காது என்ற ஆயாச உணர்வு அவர்களுக்கு மட்டுமின்றி வாசகனுக்கும் தோன்றுவது ஒரு உதாரணம். அதே நேரம் முற்றிலும் அவநம்பிக்கையை வலியுறுத்தும் நாவலும் இல்லை இது. அவ்வப்போது ஆயாசமடைந்தாலும் அதையும் மீறியே படைத்தலைவர் முன்னேறுகிறார்.

இன்னொரு நாட்டின் தேடுதல் குழு, இத்தாலி நாட்டு வீரர்களின் கல்லறைகளைச் சூறையாடி (தங்கள் நாட்டு வீரர்கள் அல்ல என்று தெரியாமலோ/ தங்கள் அரசிடம் கணக்கு காட்டவோ) கொண்டு போவது, அல்பேனிய நாட்டு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இத்தாலிய வீரனொருவனின் கல்லறையை பழங்கால வீரனொருவன் என்று எண்ணி அருங்காட்சியகத்தில் வைப்பது என இந்த ஆயாச சூழலின் மீது அபத்த நகைச்சுவையும் விரவியுள்ளது.

இதை ஜோசப் ஹெல்லர் பாணியிலான ‘maximalism‘ , hysterical realism‘ கொண்ட அபத்த நகைச்சுவையோடு ஒப்பிட முடியாது. ஊளைச் சதையோ, அலங்காரமோ இல்லாமல் நிகழ்வுகளை விவரிக்கும் உரைநடையே நாவலில் உள்ளது. 100 டாலருக்கு கல்லறையில் உள்ள ஒரு பிணத்தைத் தருவதாக பேரம் பேசுவதை

“”Why not? I’ve got heaps. You’re a friend, I can let you have one for a hundred dollars.”
“No!”
“But I’ve got so many that height! I even got some six foot four if you want. And six foot six too. And even some seven foot! Our soldiers were taller than yours. Would you like some?”

என்று விவரிப்பதில் எந்த மிகைப்படுத்தலும் இல்லை.. சந்தையில் தினந்தோறும் நடக்கும் பேரம் போலவே இருக்கும் இந்த உரையாடல், அதன் பேரப்பொருளினாலேயே அவலச்சுவை கொண்டதாக மாறுகிறது.

அலங்காரமில்லாமல் இருந்தாலும்,

“The October night had now descended over the plain. The moon having given up its vain attempts to break through, was pouring its brightness down into the spongy layers of cloud and mist, which now seemed to have become saturated with its pale light and were slowly, gently, evenly letting it drift down onto the horizon and the vast open plain. The sky above them had acquired a fecund flow, and the horizon, the plain, the road, all seemed to be covered with pools of milky light”

போன்ற மாயத்தன்மை கூடிய காட்சிகளையும்/ நிகழ்வுகளையும் உருவாக்கும் உரைநடை நாவலில் உள்ளது.

எப்போதும் மழை பெய்து கொண்டிருக்கும் அல்லது கருமேகங்கள் சூழ்ந்திருக்கும், ஊசி போல் குத்தும் குளிர் காற்று வீசும் பீட பூமிகள், சமவெளிகள், மலைகள் என இவர்கள் கல்லறைகளைத் தேடிச் செல்லும் இடங்களின் நிலவியலும் நாவலின் ஒரு முக்கியப் பாத்திரமாக மாறி, இவ்வளவு கடினமான நிலவியலை வெற்றி கொள்வது என்பது இன்று படைத் தலைவருக்கு மட்டுமின்றி, போரின்போது இத்தாலிய வீரர்களுக்கு இதைவிட கடினமாக இருந்திருக்கும் என்ற உணர்வைத் தருகிறது.

ஓடி வந்தவர்களை வேலையாட்களாக வைத்துக் கொண்டு அடைக்கலம் கொடுத்தல், இத்தாலிய ராணுவ வீரர்கள் ரொட்டிக்காக துப்பாக்கி ரவைகளை பண்டமாற்று செய்தல் ( தாங்கள் ஆக்கிரமித்திருக்கும் மக்களுக்கே ஆயுதங்களைத் தருவது எவ்வளவு மடத்தனம் என்பதை அறியாதவர்களா அவர்கள்? இதையும் அழுத்திச் சொல்லாமல், நடந்தவற்றை மட்டும் சொல்லி அதன் அபத்தத்தை உணரச் செய்கிறார் கதாரே), பாலியல் விடுதி ஒரு கிராமத்தில் ஏற்படுத்தும் மாற்றங்கள் என இத்தாலியர்-அல்பேனியர் இடையிலான போர்க்கால உறவு பற்றியச் செய்திகள் பல நாவலில் உள்ளன.

இவற்றை விவரிப்பதில், குறுகிய தேசியவாதமோ/ இனவாதமோ கொண்ட, வெறுப்பை விதைக்கும் நாவலாக இது இருந்திருப்பதற்கு நிறையவே சாத்தியக்கூறுகளும், அப்படி இருப்பதை நியாயப்படுத்துவதற்கான வாதங்களும் இரண்டாம் உலகப்போரில் ஆக்கிரமிக்கப்பட்டு பல கொடுமைகளை அனுபவித்தவர்களான அல்பேனியர்களிடமும் கதாரேவிடமும் உள்ளன. ஆனால் நாவல் முழுவதையும் இத்தாலியர்களான படைத்தலைவர் மற்றும் மதகுரு இவர்களின் பார்வையிலேயே – மதகுருவுக்கும் தாங்கள் தேடும் உயரதிகாரியின் மனைவிக்கும் ஏதோ உறவு இருப்பதாக படைத்தலைவர் எண்ணுவது, அந்தப் பெண்ணிடம் அவருக்கும் ஓர் ஈர்ப்பு உருவாவது என வரும் ஒரு சில இடங்கள் மட்டும் நாவலின் போக்கோடு ஒட்டாமல் இருக்கின்றன – சொல்வது போல் எழுதி இருப்பதால் கதாரே இதை தவிர்த்திருக்கிறார். இதற்கு அல்பேனியர்கள் கடந்த காலத்தை மறந்து விட்டோ/ மன்னித்து விட்டோ இத்தாலியர்களுடன் நெருங்கி பழக சித்தமாக உள்ளார்கள் என்று அர்த்தமில்லை.

படைத்தலைவர் மற்றும் மதகுரு செல்லும் இடங்களிலெல்லாம் சந்திக்கும் மக்களின் பார்வைகள், சூசகமாக தங்கள் வெறுப்பை உணர்த்தும் முறைகள், இவற்றின் மூலமே அல்பேனியர்களின் தரப்பை அறிய முடிகிறது. ஓர் இடத்தில் முதியவர் ஒருவர் தனக்களிக்கப்பட்ட பதக்கங்கள் அனைத்தையும் குத்திக் கொண்டு இவர்களைச் சீண்டுவது போல் நின்று கொண்டிருக்கிறார். இத்தகைய சிறு நிகழ்வுகள் மூலம் அவர்களுக்கு இன்னும் போர்க் கசப்பின் கசடுகள், காயங்கள், கோபங்கள் உள்ளன என்பது தெரியவருகிறது.

நேர்மாறாக படைத்தலைவரும், மதகுருவும் அல்பேனியர்களை, வன்முறையையே வாழ்க்கை முறையாகக் கொண்ட காட்டுமிராண்டிகளாகவே பார்க்கிறார்கள். தாங்கள் அவர்கள் நாட்டை ஆக்கிரமித்ததால்தான் போர் உருவானது என்பதை உணராமல்/ ஒப்புக்கொள்ளாமல் தங்கள் வீரர்களை அவர்கள் கொன்றதைப் பற்றியே பேசுகிறார்கள்.

தன் நாட்டின் தரப்பை மட்டுப்படுத்துவதன் மூலம், வாசகனின் கவனத்தை இத்தாலியர்களின் இந்த மனநிலை மீது பிரதானப்படுத்தி, சுற்றி வளைத்து அவர்களை இழிவாக கதாரே காட்டுகிறார் எனவும் ஒருவர் வாதிடக்கூடும். அதே போல் அல்பேனியர்ககளின் தரப்பு மிகவும் குறைவாகவே உள்ளது என்பது முப்பரிமாணத் தன்மையை நாவலுக்கு அளிக்கவில்லை என்பதும் ஒரு பலவீனமாக சொல்லப்படலாம், அது ஒரு கோணத்தில் உண்மையும் கூட. நாவலின் மைய நோக்கம், – ஒரு அசாதாரண சூழலில் சிக்குபவனை பின்தொடர்தல் – அதைச் சார்ந்த கட்டமைப்புக்கு அல்பேனியர்களின் தரப்பு என்ன என்பது இன்னும் அதிகமாக இருந்திருந்தால் மதிப்புகூட்டலாக இருந்திருக்கும், ஆனால் அவ்வாறு இல்லாதாலும் அதிகம் பாதகம் ஏற்படவில்லை.

நேரடி சம்பந்தமில்லாமல் இருந்தாலும், எந்தப் போரிலும், வன்புணர்வு செய்யப்படுவது, பாலியல் தொழிலில் தள்ளப்படுவது என துன்புறுபவர்களாக பெண்கள் இருப்பதை நாம் அறிவோம். (ஜப்பான் ராணுவத்தால் கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட ‘Comfort women‘ என்றழைக்கப்படும் பல நாட்டுப் பெண்கள் பற்றிய சர்ச்சைகள் – ஜப்பானில் இன்றும் அது குறித்த மறுப்பு மனநிலையைக் காண முடிகிறது – இன்னும் நடந்து வருகின்றன). அல்பேனிய கிராமம் ஒன்றில் அமைக்கப்படும் பாலியல் விடுதியினால் ஏற்படும் மாற்றங்கள் இந்த உண்மையை மீண்டும் வலியுறுத்துகின்றன.. எந்தக் காரணத்தினாலோ இந்தத் தொழிலில் தள்ளப்பட்டு, எங்கிருந்தோ வேறொரு நாட்டின் சிறு கிராமத்திற்கு வந்து, துர்மரணம் அடைந்த அந்தப் பெண்ணிற்கு இறுதியில் கிடைத்தது “For Leader and for Country” என்ற கல்லறை வாசகம்தான். அவர் கல்லறையை மீண்டும் இத்தாலிக்கு கொண்டு சென்றாலும், அவரைப் பெற்றுக்கொள்ள யார் இருப்பார்கள்?

கல்லறைகளைத் தோண்டத் தோண்ட மீளவே முடியாத துர்க்கனவின் புதைகுழியில் மூழ்கிக்கொண்டே வருவது போல் படைத்தலைவர் உணர்கிறார். ஆரம்பத்தில் வார இறுதியில் மது அருந்தி இதிலிருந்து மீள முயலும் அவர், மண்டைக்குள் ட்ரம்ஸ் வாசிப்பது போல் உணர ஆரம்பித்ததும் மதுவின் போதாமையை தெரிந்து கொள்கிறார். பிறகு தான் மீட்கும் இந்த இறந்தவர்களின் படையை தானே முன்நடத்தி எந்தப் போர்களை எப்படி சந்திக்கக்கூடும் என்று சீஸரில் ஆரம்பித்து, நெப்போலியன், உலகப் போர்கள் என பல முக்கிய போர்க்களங்களில் தன் படையை கற்பனையாக களமிறக்கி வெற்றியும் பெறுகிறார். இந்தக் கற்பனைகளில் தான் வென்று விட்டோம் என்பதைவிட , தன் படையை வெற்றி பெறச் செய்து விட்டோம் என்பதே அவருக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு கட்டத்தில் தன் பணியில் வெற்றி பெறவேண்டும் என்பதைவிட, எப்படியாவது அதை சீக்கிரம் முடித்துவிட்டு நாடு திரும்ப வேண்டும் என்று எண்ண ஆரம்பிக்கிறார். அவருடைய மனநிலைக்கு காரணமில்லாமல் இல்லை. அவர்களின் தேடுதல் போது அல்பேனிய நிலம் இத்தாலியர்களை மட்டும் விழுங்கவில்லை என்று அவர் உணர்கிறார். இங்கிலாந்து வீரர் ஒருவரின் கல்லறை , இரண்டாம் உலகப் போருக்கு பல காலம் முன்பு நடந்த வேறு ஏதோ போரில் மரித்தவர்களின் கல்லறைகள் என பல போர்க்களங்களின் எச்சங்கள் அவருக்கு காணக்கிடைப்பது அவரது சமநிலையைக் குலையச் செய்கிறது.

தன் பணியின் இறுதி கட்டத்தில் இருக்கும் அவருக்கு, வார இறுதியில் தான் தங்கியுள்ள ஊரில் நடக்கும் ஒரு திருமணத்தில் (அழையா விருந்தாளியாக) கலந்து கொள்ளும் ஆவல் திடீரென தோன்றுகிறது. வாழ்வின் முடிவோடு தொடர்புடைய கோரமான பணியில் இரண்டாண்டுகளாக ஈடுபட்டிருக்கும் அவருக்கும், வாழ்வின் ஒரு புதிய அத்தியாயத்தை ஆரம்பித்து வைக்கும் ஒரு நிகழ்விற்கும் உள்ள தொடர்புதான் என்ன? ஒரு வேளை இரண்டுக்கும் இடையே உள்ள இடைவெளிதான் அவரைத் தூண்டியதா?. என்ன காரணமாக இருந்தாலும் சரி, அவர் திருமணம் நடக்கும் இடத்திற்குச் செல்ல, அவர் வருகையை விரும்பாவிட்டாலும் தங்கள் கலாசார மரபுப்படி வரவேற்று அமர வைக்கிறார்கள். ஆனால் அங்கும் அவர் நிம்மதியாக இல்லை.

மேளங்களின் ஓசை, அதற்கேற்ப திருமணத்திற்கு வந்தவர்களின் நடனம், பைப் பிடித்துக் கொண்டிருக்கும் முதியவர்கள், சிகரெட் புகைபிடித்துக் கொண்டிருக்கும் இளைஞர்கள், பாடிக் கொண்டிருக்கும் பெண்கள், எங்கும் வியர்வை எனச் சுற்றிலும் வைரிகள்- தன் நாட்டு மக்களை கொன்றவர்கள் -மிக சந்தோஷமாக இருப்பதே அவருக்குள் ஏற்படுத்தும் கிலியை

“Now the feast seemed to him like a great organism, powerful and amorphous, breathing, moving, murmuring, dancing, and filling the whole atmosphere around him with its warm, disturbing, intoxicating breath”

என்று ஒரு surreal நிகழ்வை உருவாக்குகிறார் கதாரே. இதுவும் எந்த அலங்காரமும் இல்லாமல் ஒரு சாதாரண திருமண விவரிப்பைப் போலவே இருந்தாலும் அத்துடன் நிகழ்வில் கலந்து கொள்ளுபவர்களின் மனநிலையைக் கோர்த்து அங்கு ஒரு வினோத/ bizarre சூழலை உருவாக்குவதில் கதாரே வெற்றி பெறுகிறார்..

தாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கும் உயரதிகாரி பற்றிய உண்மை இந்தத் திருமணத்தில் தெரிய வர, மனதில் கொதி நிலையை அடைகிறார். அது, தான் இத்தனை நாட்கள் குறிப்பாகத் தேடிய வீரனின் எலும்புக்கூட்டை எட்டி உதைத்து ஆற்றில் தள்ளவும் செய்கிறது.

இப்படி தான் தேடிய ஒன்றையே எட்டி உதைப்பதால் மட்டும், தன்னைச் சூழ்ந்துள்ள புகை மூட்டத்தை படைத்தலைவரால் விலக்கிவிட முடியுமா என்ன? தான் செய்ததைக் குறித்த வருத்தமும் இப்போது அவரை வாட்ட ஆரம்பிக்கிறது. பணிநிறைவின் இறுதி நாளன்று ஜன்னி கண்டவர் போல் பிதற்ற ஆரம்பிக்கிறார். கொஞ்சம் தெளிவு பெற விடுதியின் மாடிக்கு செல்ல அவர் நெஞ்சை உறைய வைக்கும்

“As the dark squares neared the bridge they could make out the cold reflections on the wet helmets and bayonets, the long columns of soldiers, the officers with drawn swords, and the gaps between companies and battalions. The earth shook under the heavy boots, and the curt cries of command rang out like bayonets clashing.

“The formations kept coming; the whole boulevard was now teeming with soldiers, and the street lamps lining the roadway were reflected to infinity on the wet, shiny helmets, looking as cold and mysterious as world going putrid”

காட்சியைக் காண்கிறார். தான் மீட்க வந்த வீரர்களின் ஆவிகளின் ராணுவ அணிவகுப்பையா அவர் (பித்து நிலையில்) பார்க்கிறார்? இல்லை, அடுத்த நாள் அல்பேனியாவின் தேசிய தினம் என்பதால் அதற்கான அணிவகுப்பு பயிற்சியையே பார்க்கிறார், ஆனால் அவருடைய மனநிலையில் அந்த இயல்பான நிகழ்விலேயே கூட தன் ராணுவத்தை பார்ப்பதாகவே ஒரு கணம் உணர்கிறார்.

ஒட்டகத்தின் முதுகை உடைத்த இறுதி ஒற்றை வைக்கோல் போல், அவரை பித்து நிலைக்குத் தள்ளும் நிகழ்வாக இது உள்ளது. தன்னிடம் உள்ள (கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்ட/ கண்டுபிடிக்கப்படாத) வீரர்களின் பெயர் பட்டியல், அவர்கள் குறித்த தகவல் அட்டைகள் என அனைத்தையும் தரையில் வீசுகிறார். தன்னுடன் இத்தனை காலம் பணியாற்றியுள்ள மதுகுருவின் அறை என்று நினைத்து வேறொரு அறையின் முன்பு நின்று அவரை ஏசுகிறார்.

பொறுத்தார் பூமி ஆள்வார் என்று சொன்னாலும், இறுதியில் ஆதிக்கம் செலுத்தும் எவரையும் தன்னுள் ஐக்கியமாக்கி நிலமே வெற்றி பெறுவதைப் போல், இங்கும் மீண்டும் அல்பேனியாவின் நிலமே – இந்த புதிய/ வேறொரு வகையான ஆக்கிரமிப்பையும் எதிர்கொண்டு அதன் தலைவரையும் தன் வசப்படுத்துவதோடு தன்னுள் இன்னும் பல இத்தாலிய வீரர்களை மறைத்து வைத்திருப்பதால்- வெற்றி பெறுகிறது.

கடினமான பணி என்று தெரிந்திருந்தாலும், அது ஏற்படுத்தக்கூடிய பாதிப்பை முழுதும் உணராது, ஆர்வமாக ஆரம்பித்து, கொஞ்சம் கொஞ்சமாக அந்தப் பணியின் விபரீதத்தன்மையை உணர ஆரம்பித்து, அதன் விஷச் சூழலில் சிக்கி, மனதளவில் அதல பாதாளத்தை நோக்கி பாய்ந்து கொண்டிருக்கும் ஒருவர் – அடுத்த நாள் கொஞ்சம் தேறி, இத்தாலிக்கு கிளம்பினாலும் – தான் தூக்கி எறிந்த ஆவணங்களை அவர் மீண்டும் பொறுக்க முயன்று தோற்கும் காட்சிதான் நம் மனதில் இறுதியில் நிற்கிறது. அவர் உடலளவில் இத்தாலி திரும்பினாலும், அவர் மனம், இன்னும் மீட்கப்படாத மற்ற பல நாட்டினரின் வீரர்களைப் போலவே அல்பேனியாவில்தான் இறுதி வரை சிறைபட்டிருக்கும்.

படைத்தலைவர், அல்பேனிய நிலத்தில் வீழ்ந்தவர்கள் என்றில்லை, ட்ராயில் கிரேக்க வீரர்கள், குருக்ஷேத்திரத்தில் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் வந்த வீரர்கள் போன்ற புராண கால போர்க்களங்கள் முதல் Waterlooவில் பிரெஞ்சு/ ஆங்கில வீரர்கள், உலகப்போர்களில் கண்டம் தாண்டி யுத்தத்தில் ஈடுபட்ட இந்திய ராணுவ வீரர்கள், Somme/Stalingradல் பலியானவர்கள் வரை பலப் போர்க்களங்களில் வீழ்ந்த பல்வேறு நாட்டு வீரர்களில் எண்ணற்றவர்கள் தாங்கள் பிறந்த மண்ணை விட்டு வேறெங்கோ தங்கள் இறுதி ஓய்வைக் கழித்துக்கொண்டிருப்பவர்கள் அனைவரின் தப்பிக்கவியலாத சிறைவாசம் தரும் துயரை வாசகன் எளிதில் கடந்து விட முடியாது.

பின்குறிப்பு:

கட்டுரையின் ஆரம்பத்தில் இலியட்டிலிருந்து மேற்கோள் தரப்பட்டிருக்கும் வரிகள் ‘Robert Fagles’ன் இலியட் மொழிப்பெயர்ப்பு பதிப்பிலிருந்து (Penguin Classics) எடுக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.