(உலகளாவிய எழுத்தாளர்கள் அனைவரும் புக்கர் பரிசு பெறத் தகுதி கொண்டவர்கள் என்ற புதிய விதிமுறைகளுக்குப்பின் அப்பரிசு இஸ்மாயில் கதாரேவுக்கு 2005ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது. அப்போது Adam Kirsch நியூ யார்க் சன் என்ற பத்திரிகையில் எழுதிய கட்டுரையின் மொழிபெயர்ப்பு இது)
மேன் புக்கர் பரிசுத்தொகை வழங்குபவர்கள் இனி இப்பரிசு சர்வதேச அளவில் வழங்கப்படும் என்று அறிவிப்பு செய்தபோது அச்செய்தி பரபரப்பும் அவநம்பிக்கையும் கலந்த வரவேற்பு பெற்றது. 2012ஆம் ஆண்டு வரை முப்பதாண்டு காலமாக புக்கர் என்று அழைக்கப்பட்டு வந்த அப்பரிசின் கொடையாளர்கள் மாறி அது மேன் புக்கர் என்ற புதிய பெயர் பெற்றிருக்கிறது. இந்த முப்பதாண்டு காலத்தில் இது பிரிட்டனின் மிகவும் பெருமைக்குரிய இலக்கிய விருதாக மாறிவிட்டிருக்கிறது- அமெரிக்காவில் புலிட்சர் பரிசோ நேஷனல் புக் அவார்டோ அங்குப் பெற்றுத் தரக்கூடியதைக் காட்டிலும் அதிக கவனம் அளிப்பதாய் இருக்கிறது.
பிரிட்டன், அயர்லாந்து மற்றும் பிரிட்டிஷ் காமன்வெல்த்தில் ஒவ்வொரு ஆண்டும் பதிப்பிக்கப்படும் சிறந்த நாவலுக்கு இதுவரை இப்பரிசு அளிக்கப்பட்டு வந்தது. அதற்கே அசாத்திய விரிவு கொண்ட படைப்புகளைப் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள வேண்டியிருந்தது- அமெரிக்காவுக்கு வெளியே பதிப்பிக்கப்பட்ட அனைத்து ஆங்கில மொழி புனைவுகளுக்கும் பரிசு பெறும் தகுதி இருந்தது என்று சொல்லலாம்.
சர்வதேச மேன் புக்கர், விருது இன்று அல்பானிய எழுத்தாளர் இஸ்மாயில் கதாரேவுக்கு வழங்கப்படவிருக்கிறது.. இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை வழங்கப்படவிருக்கும் இவ்விருது 60,000 யூரோ மதிப்பு கொண்டது, “ஆங்கிலத்திலோ அல்லது ஆங்கில மொழிபெயர்ப்பிலோ பரவலாக அறியப்பட்டுள்ள புனைவு எழுதிய எழுத்தாளருக்கு அவரது வாழ்நாளில்” அளிக்கப்படுகிறது. தேர்வுக்கு தகுதி கொண்ட படைப்புகளின் வெளி முன்னைவிட இப்போது பரவலானதாக இருக்கிறது.
இப்போதுள்ள வரையறை உலகின் முக்கியமான எழுத்தாளர்கள் அனைவரையும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்கிறது. சர்வதேச மேன் புக்கர் பரிசு இப்போது நோபல் பரிசுடன் போட்டி போடுவது போல் அமைக்கப்பட்டுள்ளது என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்ட ஷார்ட்லிஸ்ட் ஸ்டாக்ஹோம் சென்றிருந்தவர்கள் (குந்தர் க்ராஸ், நாகுப் மாபூஸ், காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்) அல்லது அங்கு செல்லப்போவதாக தொடர்ந்து பேசப்படுபவர்கள் (பிலிப் ரோத், மிலன் குந்தேரா) என்று பலரைக் கொண்டதாக இருந்தது. ஆனால் நோபலுக்குரிய மர்மம் இந்த விருதைச் சூழ்ந்திருப்பதில்லை என்பதால், நோபல் பரிசு குறித்து கேட்கப்பட வேண்டிய, ஆனால் கேட்கப்படாத பல கேள்விகள் தீவிரமான வடிவில் இப்பரிசு குறித்து எழுப்பப்படுகின்றன.
பல்வேறு மொழிகள், மரபுகள், வாசகர்கள், எதிர்பார்ப்புகளை எதிர்கொண்டு எழுதும் வெவ்வேறு எழுத்தாளர்களை ஒன்றாய் ஒப்பிட்டு முடிவெடுப்பதில் அர்த்தம் உண்டா? ஒவ்வொரு எழுத்தாளருக்குமே இயல்பான இரண்டாம் மொழி ஆங்கிலம்தான் என்பது போல் உலக இலக்கியம் அனைத்துமே அவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்பில் சரியான வகையில் புரிந்து கொள்ளப்பட்டு மதிப்பீடு செய்யப்படுவது சாத்தியமா? எவ்வளவுதான் மதிப்புக்குரியவர்களாய் இருக்கட்டும், எந்த ஒரு பரிசுக்குழுவும்- முதல் சர்வதேச மேன் புக்கர் பரிசுக்குழுவினர் இவர்கள், ஆங்கில விமரிசகர் ஜான் காரி, இரானிய தன்னனுபவ எழுத்தாளர் அசார் நஃபீஸி, அர்ஜென்டினிய எழுத்தாளர் ஆல்பர்டோ மங்க்வெல்-, இவர்களுக்கு பல்வேறு வகைகளில் மேதைகளாக உள்ள வெவ்வேறு எழுத்தாளர்களை வரிசைப்படுத்தும் அதிகாரம் உண்டா?
இப்பரிசுக்குரிய முதல் தேர்வாக கதாரே தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது இக்கேள்விகளை இன்னும் முக்கியமானவையாகச் செய்திருக்கிறது. விருது பெரும் தகுதி கதாரேவுக்கு உண்டு என்பதில் சந்தேகமில்லை- ஒவ்வொரு முறையும் நோபல் பரிசு பெறப்போவதாகச் சொல்லப்படுபவர்களில் இவரும் ஒருவர்- ஆனால் ஆங்கிலத்தில் முழுமையாக புரிந்து கொள்ள மிகவும் கடினமான எழுத்தாளர் இவர். எக்காரணத்தால் மேற்கத்திய வாசகர்களின் ஆர்வத்தைத் தூண்டுபவராக இருக்கிறாரோ, அதே காரணம்தான் இவரது எழுத்தைக் கடினமானதாகவும் செய்கிறது.
ஐரோப்பாவில் பரவலாக அறியப்படாத பிரதேசங்களில் அல்பேனியாவும் ஒன்று. எந்த ஒரு நவீன ஐரோப்பிய மொழியோடும் தொடர்பற்ற ஒரு மொழி பேசும் முப்பத்து ஐந்து லட்சம் பேர் கொண்ட மக்கள் தொகை உள்ள, புறவுலக தொடர்பற்ற பால்கன் தேசம் அது. கதாரேவின் நாவல்கள் பலவற்றை பிரெஞ்சு மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்துள்ள டேவிட் பெல்லோஸ், அல்பேனிய மொழி பேசுபவர்களின் உதவி நாடியபோது, பிரிட்டன் முழுவதும் தேடியும் அல்பேனியர்கள் மிகச் சிலரையே காண முடிந்தது என்று “இஸ்மாயில் கதாரேவை ஆங்கிலப்படுத்துதல்” என்ற கட்டுரையில், குறிப்பிடுகிறார்.
ருஷ்ய அமெரிக்க உறவுகள் பரஸ்பர எதிர்ப்பில் உறைந்திருந்த காலத்தில் என்வர் ஹோக்ஸாவின் ஸ்டாலினிய சர்வதிகார அரசால் அல்பேனியா புற உலகிலிருந்து மேலும் கடுமையாக துண்டிக்கப்பட்டிருந்தது. உண்மையில் அல்பேனியாவுக்கு வெளியே ஹோக்ஸா தவிர அறியப்பட்டிருந்த ஒரே அல்பேனியர் கதாரேவாகதான் இருந்திருக்க வேண்டும். ஒரு முறை புதிய நண்பர் ஒருவரிடம் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட அவரது மகள் பற்றி கதாரே ஒரு சம்பவம் சொல்கிறார்- “அந்த தேசத்தில்தானே பயங்கரமான அந்த சர்வாதிகாரி இருக்கிறார், அவர் பெயரென்ன, இஸ்மாயில் கதாரே?“
கதாரே 1936ஆம் ஆண்டு ஆல்பானியாவின் தென்பகுதியில் உள்ள ஜிரோகாஸ்டர் என்ற ஊரில் பிறந்தவர், 1960கள் முதலே முதன்மை இலக்கிய ஆளுமையாக தன் தேசத்தில் அறியப்பட்டவர். பிரெஞ்சு மொழிபெயர்ப்புகள் வழியே எழுபதுகளில் அவரது எழுத்து வெளியுலக அறிமுகம் பெற்றது. இப்போதும்கூட, அவரது ஐம்பதுக்கும் மேற்பட்ட படைப்புகளில் பன்னிரெண்டு மட்டுமே ஆங்கில மொழிபெயர்ப்பில் உள்ளன. அவையும் நேரடியாக ஆல்பானிய மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்படவில்லை, எடிஷன்ஸ் பாயார்ட் பதிப்பித்த பிரெஞ்சு மொழிபெயர்ப்புகளை அடிப்படையாய் கொண்டவை இவை.
கடந்த பதினைந்து ஆண்டுகளாக பாரிசில் வசிக்கும் கதாரே ஆங்கிலம் பேசும் உலகைவிட பிரான்சில் கொண்டாடப்படுகிறார். எனவேதான் அவர் ஆங்கில மொழி பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது விநோதமாக இருக்கிறது. மொழியைக் காட்டிலும் அவரது புனைவின் அல்பானியச் சூழலே அவரது எழுத்துக்கு மிகுந்த அன்னியத்தன்மை அளிக்கிறது- அல்பானியாவின் சமீபத்திய மற்றும் தொல் வரலாறு, அதன் அரசியல் சிக்கல்கள், கலாசார சுட்டல்கள், உள்ளுறை தகவல்கள் போன்றவற்றை இவரது புனைவில் காண முடியும். கதாரேவை ஆங்கிலத்தில் படிப்பது என்பது, அதிலும் குறிப்பாக அமெரிக்காவில் வாசிப்பது என்பது இருண்ட ஒரு கண்ணாடி கொண்டு காண்பது போன்றது.
மொழிபெயர்ப்பு என்பது எப்போதுமே குற்றங்களை மறைப்பது போன்ற விஷயம். கதாரே விஷயத்தில் அவரது தனிப்பட்ட வாழ்க்கை வரலாற்றை அதன் சூழலில் பொருத்திப் புரிந்து கொள்வதிலும் இந்தச் சிக்கல் நிலவுகிறது. கதாரே பற்றி சர்வதச மேன் புக்கர் பரிசு அறிவிப்பு சொல்லும் முதல் சில விஷயங்களில் இது ஒன்று, “”சர்வாதிகாரமும் உண்மையான இலக்கியமும் இணைந்திருக்க முடியாது… எழுத்தாளன் சர்வாதிகாரத்தின் இயற்கை எதிரி” என்று கூறி பிரான்சில் அடைக்கலம் புக முடிவெடுத்ததைத் தொடர்ந்து அவர் 1990ஆம் ஆண்டு முதல் பிரான்சில் வசிக்கிறார்“
ஆனால் வக்லவ் ஹவெல் போலவோ அலெக்சாண்டர் சோல்ஜநிட்ஸின் போலவோ கதாரே ஒரு அரசியல் எதிர்ப்பாளர் என்று பொருள்படும் இக்குறிப்பு பிழையானது. ஓரளவாவது உடன்படாமல் ஹோக்ஸா ஆட்சியில் கதாரே பிழைத்திருக்கவோ பதிப்பித்திருக்கவோ முடியாது. அவரது ஒத்துழைப்பு எப்படிப்பட்டது என்பது இன்னும் முழுமையாய் வெளிப்படவில்லை. தன் எழுத்தே ஒரு எதிர்ப்புச் செயல் என்று மட்டும்தான் கதாரே சொல்கிறார். “நான் ஒவ்வொரு புத்தகம் எழுதும்போதும், சர்வாதிகாரத்துக்கு எதிராக நான் ஒரு கத்தியைச் செருகுகிறேன் என்ற உணர்வு எனக்கு இருந்தது“
அவரது புத்தகங்களில் சில தடை செய்யப்பட்டன, ஆனால் வேறு சில கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு ஆதரவாக இருந்தன. அவர் எழுதிய பரிதாபகரமான துவக்க கால கவிதைகள் சிலவற்றை 1997ல் வீக்லி ஸ்டாண்டர்ட் பத்திரிகையில் ஸ்டீபன் ஸ்வார்ட்ஸ் மேற்கோள் காட்டினார் (“மலைப்பிரதேச நாடோடிகளின் நீண்ட வரிசை காத்திருந்தது/ தலைவனுக்காகக் காத்திருந்தது/ அல்பானியா காத்திருந்தது/ கம்யூனிஸ்டு கட்சிக்காகக் காத்திருந்தது“). மேன் புக்கர் இணையதளத்தைச் சங்கடப்படுத்தும் வகையில் பரிசு அறிவிக்கப்பட்ட நாள் முதல் வசவுகளும் குற்றச்சாட்டுகளும் தொடர்ந்து குவிந்தவண்ணம் இருக்கின்றன (“ரத்தவெறி பிடித்த கம்யூனிஸ்ட் சர்வாதிகாரி என்வர் ஹோக்ஸாவின் நேசத்துக்குரிய ஒரு எழுத்தாளருக்கு பரிசு அளிப்பது அபத்தம்“).
கதாரே மீது எளிய தீர்ப்பு வழங்குவதாக இதைக் கொள்ளக்கூடாது. தன் தேசத்தை ஐரோப்பாவின் வட கொரியாவாக மாற்றிய ஒரு கொடுங்கோல் ஆட்சியில் முக்கியமான இலக்கியப் படைப்புகளை அளித்தவர் அவர்- “தி பாலஸ் ஆப் ட்ரீம்ஸ்” போன்ற அவரது சில படைப்புகள் வெளிப்படையாகவே சர்வாதிகார ஆட்சியமைப்புக்கு எதிரானவை. மேற்கத்திய வாசகர்களின் கைவசம் இருக்கும் அடையாளங்களில் அவரையும் அவரது எழுத்தையும் அவ்வளவு எளிதாகத் தொகுத்துவிட முடியாது என்பதை மட்டும்தான் குறிப்பிட விரும்புகிறேன். அரசியல் போலவே இலக்கிய வகைமைகளுக்கும் இது பொருந்தும். கதாரேவை முதலில் படித்த சிலர் அவரை கார்ஷியா மார்க்வெஸ் உடன் ஒப்பிட்டனர்- குறுகிய யதார்த்தத்தை திட்டவட்டமாக நிராகரித்து அவர் உவமைக் கதைகள் சொல்வதைப் புரிந்து கொள்வதற்கான முயற்சி இது. ஆனால் உண்மையில் கதாரே சிறிதும் கார்ஷியா மார்க்வெஸ் போன்றவர் அல்ல- மாந்திரிக யதார்த்தத்தைவிட காப்கா, அல்பேனிய காவியங்கள் மற்றும் தொன்ம மரபைச் சார்ந்த படைப்புகள் இவை.
“தி பாலஸ் ஆப் ட்ரீம்ஸ்” நாவலில் கதாரேவின் காப்காவிய முகத்தை நாம் காண முடியும். 1981ல் அல்பானியாவில் பதிப்பிக்கப்பட்டவுடன் அது தடையும் செய்யப்பட்டது. அதற்கான காரணங்களை முதல் சில பக்கங்களில் புரிந்து கொள்ள முடிகிறது. காப்காவின் “தி காஸ்டில்” கதையை நெருக்கமாகத் தொடரும் இந்த நாவலில் நாயகன் இளம் அல்பானிய அரசகுடியினன் மார்க் ஆலம். என்ன நடக்கிறது என்று எதுவும் விளங்கிக்கொள்ள முடியாத அவன் மிகவும் அபத்தமான அரச இயந்திரத்தில் சிக்கிக் கொள்கிறான். ஆட்டோமான் பேரரசில் ஒவ்வொரு கனவையும் பதிவு செய்து அதன் பொருள் உணரும் பிரிவு அது.
இருபதாம் நூற்றாண்டு வரை அல்பானியாவை ஆண்ட துருக்கியர்கள், கம்யூனிஸ்டுகள் என்பதை எளிதாய் புரிந்து கொள்ள முடிகிறது. அரண்மனையே ஒரு முழுமையான ரகசிய காவல்துறையாக இருக்கிறது- “”இரவு பகலாக தொடர்ந்து களைக்க வைக்கும் குறுக்கு விசாரணை, முடிவற்ற அறிக்கைகள், இயல்பிலேயே இன்னதென்று துல்லியமாக வரையறை செய்யபப்ட்ட முடியாத ஒன்று குறித்து துல்லியமான விவரணைகளைத் தேடுவது போன்ற பாவனை… இவற்றை எல்லாம் மூளைச் சலவை என்றுதான் சொல்ல முடியும்… அல்லது, அறிவின் எதிர்ப்பதம் அறிவின்மை என்பது போல் கனவின்மை என்று சொல்லலாம்“
நினைவும் உண்மையும் குறித்து கதாரே ஆழ்ந்த அக்கறை கொண்டிருக்கிறார். சர்வாதிகார ஆட்சியில் வாழ்ந்த அனுபவத்தை இது வெளிப்படுத்துகிறது என்றாலும், அவருக்கு அல்பானிய வரலாற்றிலும் அந்த வரலாறு தொல்கதைகளில் எவ்வாறு தொகுத்து மறைக்கப்பட்டுள்ளது என்பதிலும் உள்ள அக்கறையை வெளிப்படுத்துகிறது. நாவல் அடுத்து நாவல் நாட்டுப்புறப்பாடல், பேய்க்கதை, சுயநலம் அல்லது முட்டாள்தனத்தால் தவறாக புரிந்து கொள்ளப்படும் நாயகக்கதை என்று செல்கிறது. “மூன்று வளைவுகள் கொண்ட பாலம்” என்ற கதையில் மத்திம காலகட்டத்தைச் சேர்ந்த ஒரு முதலாளி தன் போட்டியாளர்களை வீழ்ந்த மூடநம்பிக்கைகளைப் பயன்படுத்திக் கொள்கிறான், அவ்வாறு கொலையையும் நியாயப்படுத்துகிறான். “கொசோவோவுக்கு ஓர் இரங்கற்பாடல்” என்ற கதையில் பதினான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த இரு நாடோடிப் பாடகர்கள், ஒருவர் செர்பியர் மற்றொருவர் அல்பானியர், ஒருவர் மீதொருவருக்குள்ள வெறுப்பை வெளிப்படுத்தும் பழம்பாடல்களைத் தொடர்ந்து பாடிக் கொண்டிருக்கின்றனர், துருக்கியர்களுக்கு எதிராக இரு தேசங்களும் கடைசி கட்ட போராட்டத்தில் இணைந்து இயங்கும்போதும் இது தொடர்கிறது- நிகழ்கால தேவைகள் கடந்த காலத்தின் இரும்புப்பிடியால் தோற்கடிக்கப்படலாம் என்பதைச் சித்தரிக்கிறார் கதாரே. அறுநூறு ஆண்டுகளுக்கு முந்தைய கொசோவோ யுத்த நினைவுகள் இன்றும் தேசியவாத வெறுப்பைக் கிளரும் என்று தெரிந்தே, நிகழ்கால பால்கன்களில் அதன் தாக்கம் எவ்வாறிருக்கும் என்பதை உணர்ந்தே இது அனுமதிக்கப்படுகிறது.
இதை எல்லாம் பார்த்துவிட்டு கதாரே தீவிரமான அரசியல் எழுத்தாளர் என்று நினைத்துக் கொள்ளக் கூடாது. பிழைபுரிதல் நகைச்சுவையின் ஊற்றும்கூட. கதாரேவின் புனைவில் எப்போதும் உலர்ந்த அபத்த நகைச்சுவை இருந்து கொண்டே இருக்கிறது. “ஹெச் மீதான கோப்பு” என்ற கதையில் பட்டிக்காட்டு அல்பானிய அதிகாரிகளும் மேற்கத்திய மானுடவியலாளர்களும் ஒருவரையொருவர் புரிந்து கொள்ளத் தவறுவதை அலங்காரமற்ற ஸ்லாப்ஸ்டிக் காமெடியாகச் சித்தரிப்பதில் அவர் வெற்றி பெறுகிறார். ஒரு அல்பானியர் ஆங்கில மொழி பரிசு வென்று, அதன்மூலம் அவரது நூல்களை அரைகுறையாக மட்டுமே புரிந்து கொள்ளக்கூடிய ஆங்கிலேய-அமெரிக்க வாசகர்களிடம் புத்தக விற்பனையை உயர்த்த உதவுவது என்பதில் உள்ள முரண்நகையை கத்தாரே நிச்சயம் அங்கீகரிப்பார்.
நன்றி – The New York Sun
ஒளிப்பட உதவி “Ismail Kadare”. Licensed under CC BY-SA 3.0 via Wikimedia Commons – https://commons.wikimedia.org/wiki/File:Ismail_Kadare.jpg#/media/File:Ismail_Kadare.jpg