(அமெரிக்க சிறுபத்திரிக்கைகள் மற்றும் இலக்கிய இதழ்கள் குறித்த அவதானிப்புகள் நிறைந்திருந்தாலும், கட்டுரையின் பிற்பகுதி இலக்கிய இதழ்களின் அவசியச் செயல்பாடுகள் குறித்த முக்கியமான கருத்துகளை முன்வைப்பதால் நியூ யார்க்கர் தளத்தில் Stephen Burt எழுதியது இங்கு மொழிபெயர்க்கப்படுகிறது)
நீ ஏன் இலக்கிய இதழ் தொடங்கப் போகிறாய்? இதனால் நீ பணக்காரனாகப் போவதில்லை, உனக்கு அதிகம் புகழ்கூட கிடைக்கப் போவதில்லை. நீ உன் பகற்பொழுதில் வேலைக்குப் போகத்தான் வேண்டும். நீ ஒரு மாணவனாகவோ வேலைக்குப் போக வேண்டிய அவசியமில்லாத அளவு பணக்காரனாகவோ இருந்தால்தான் இதிலிருந்து தப்பிக்க முடியும். நீயும் உன் அதிர்ஷ்டக்கார நண்பர்களும் நீ வேலைக்கு அமர்த்துபவர்களும்- அதாவது, அவர்களுக்கு உன்னால் சம்பளம் கொடுக்க முடியுமானால்- உங்கள் நேரத்தையும் சக்தியையும் பக்க வடிவமைப்புக்கும், கணக்கு வழக்குக்கும், புத்தக விநியோகத்துக்கும் இணையதள நிரல் எழுதவும் அதை நிர்வகிக்கவும் பொது வாசிப்புகளுக்கும் கூடுகைகளுக்கும் நிதி கோரிக்கைகளுக்கும் செலவிடுவீர்கள். அப்போதுதான் இரண்டாம் இதழ் வெளியிட முடியும், அடுத்து மூன்றாம் இதழ் வரும். நீ உன் கட்டுரைகளுக்கோ புனைவுகளுக்கோ கவிதைகளுக்கோ அளிக்கும் நேரம் இல்லாது போகும். உன் முதல் இதழ் உருவானதும், ஏற்கனவே உள்ள இதழ்கள் நிறைந்த உலகுக்குள் அது விரையும்- மறுசுழற்சித் தொட்டிக்குள் செல்லும் காகித விமானம் போல்; அல்லது, இலக்கிய தளங்கள் நிறைந்திருக்கும் இணையத்துக்குப் போகும். நீ ஏன் இதைச் செய்யப் போகிறாய்?
ஆனாலும் செய்கிறார்கள், பல பத்தாண்டுகளாய் செய்து கொண்டிருக்கிறார்கள்- இல்லை, நூற்றாண்டுகளாய் இதைச் செய்து கொண்டிருக்கிறார்கள். 1890களின் மலிவு விலை அச்சுக்களில், 1960ன் பிரதி செய்யும் இயந்திரங்களில், கடந்த இரு பத்தாண்டுகளாய் ஆப்செட் பிரிண்டிங்கில். இணைய வழி பதிப்பு புதிய ஒவ்வொரு தலைமுறைக்கும் இதை இன்னும் எளிதாக்குவதுபோல் தெரிகிறது.
ஒவ்வொரு ஆண்டும் அளிக்கப்படும் புஷ்கார்ட் பரிசுக்கு பெயர்பெற்ற புஷ்கார்ட் பிரஸ் எழுநூற்று ஐம்பது பக்க அளவில் “அமெரிக்காவில் சிறுபத்திரிக்கை” என்ற தலைப்பில் ஒரு பெரிய புத்தகத்தை 1980ஆம் ஆண்டு வெளியிட்டது. சிறுபத்திரிக்கை பதிப்பாசிரியர்களின் நேர்முகங்கள் மற்றும் நினைவுக் குறிப்புகள் அதில் இடம் பெற்றன. இவ்வாண்டு ஏப்ரல் மாதம், “சமகால அமெரிக்காவில் சிறுபத்திரிக்கை” என்ற தொகுப்பு வந்திருக்கிறது. கையாளச் சற்றே எளிதான இந்தப் புத்தகத்தில் உள்ள கட்டுரைகளும் நேர்முகங்களும் 1980க்குப் பிற்பட்ட காலத்தை நோக்குகின்றன. இந்த ஆண்டுகள், “அச்சிதழ்களின் உயர்வான இடத்தை முடிவுக்குக் கொண்டு வந்தன”, என்று எழுதுகிறார்கள் இதன் தொகுப்பாசிரியர்களான இயன் மோரிஸ் மற்றும் ஜோன் டயாஸ் ஆகிய இருவரும். அதாவது, சிறந்த இலக்கிய இதழ்கள் இப்போது இணையம் சென்று விட்டன.
ஆம், அவர்கள் இணையம் சென்று விட்டனர், இதில் ஆச்சரியமும் இல்லை: வாசகர்கள் அங்குதான் இருக்கின்றனர். டயக்ராம் (கவிதைகள், கட்டுரைகள் மற்றும் மெய்யாகவே வரைபடங்கள்) என்றொரு வினோத சஞ்சிகை நடத்துகிறார் ஆண்டர் மொன்சன். சென்ற ஆண்டு ஒவ்வொரு மாதமும் நாற்பதாயிரம் பேர் அதை வாசித்திருக்கின்றனர். பாட்ரிஷியா ராக்வுட் எழுதிய “ரேப் ஜோக்” என்ற கவிதை இணையத்துக்கு வெளியே எந்த அச்சு இதழும் அத்தனை வீரிய ஆற்றல் பெற்றிருக்க முடியாது+ த ஆvல் என்ற இதழில் அச்சானபின் அது இணையத்தில் மீண்டும் மீண்டும் பகிரப்பட்டு சுற்றி வந்தது. “எழுதி அழிக்கப்படும் பலகைகளில் எழுதப்பட்ட கவிதைகள்”, போன்றவையல்ல இன்றுள்ள இணைய இதழ்கள் என்கிறார் மொன்சன். பிட்ச் முதல் யேல் ரிவ்யூ வரை சந்தாதாரர்களாலும் பல்கலைக்கழகங்களாலும் போஷிக்கப்படும் அச்சு இதழ்கள் போலவே இணைய இதழக்ளும் “காத்திரமாகவும், மெய்ம்மை கொண்டவையாகவும் நிலையானவையாகவும் தொழில் நேர்த்தி உள்ளவையாகவும்” இருக்கின்றன. நமக்கு அச்சு இதழ்கள் தேவையில்லை என்பதோ நாம் அவற்றை வாசிப்பதில்லை என்பதோ அல்ல, நமக்கு இவ்வளவு அதிக எண்ணிக்கையில் இலக்கிய இதழ்கள் தேவையில்லை- திரைகள் காரணமாக இவ்வளவு கிடைக்கும் என்கிறபோது அச்சு இதழ்களுக்கு அவ்வளவு அவசியமில்லை. இதனால் சில மரங்கள் அழிவிலிருந்து தப்பவும் செய்கின்றன.
சிறுபத்திரிக்கைகள் இணையத்துக்கு ஏன் சென்றன என்ற கதை மாரிஸ்-டயாஸ் தொகுப்பில் உள்ள இருபத்து இரண்டு கட்டுரைகளில் முதல் மற்றும் கடைசி சிலவற்றை வாசித்தால் புரிகிறது. இதில் பிற கதைகளும் இருக்கின்றன, தம் புத்தகம் சொல்லியிருக்கும் சில கதைகளை மாரிஸ்- டயாஸ்கூட அறியாதிருக்கலாம். முன் அட்டை முதல் பின் அட்டை வரை வாசிக்கும்போது இந்தப் புத்தகத்தில் உள்ள ஆஸ்கார் இரவுக்குரிய நன்றி நவிலல்களும் சுய தம்பட்டங்களும் நம்மை எரிச்சல்படுத்தக்கூடும்: “விமரிசன உள்ளங்களையும் விமரிசன கற்பனையையும் நாங்கள் தொடர்ந்து ஒன்றுகூடச் செய்திருக்கிறோம்”; “நாங்கள் உண்மையாகவே மதித்த, நேசித்த, உரையாட விரும்பியவர்களுடன்… நேர்முகங்கள் செய்திருக்கிறோம்” என்கிறது பிட்ச்; இது போல் பல. இலக்கிய இதழ் நடத்துவதற்கும் தெளிவான, தேய்வழக்கற்ற நடைக்கும் இடையே மிக மெல்லிய தொடர்பே உள்ளது கண்டு நீங்கள் ஆச்சரியப்படக்கூடும்…
ஆனால் வலுவற்ற கட்டுரைகளில் உள்ள இந்த விஷயங்கள் வலுவான கட்டுரைகள் சொல்ல வரும் விஷயத்தை அழுத்திச் சொல்கின்றன- ரெயின் டாக்சி மற்றும் நியூ இங்கிலாந்து ரிவ்யூவைச் சேர்ந்த கரோலின் குவெப்ளர் சொல்வது போல், ஒவ்வொரு இலக்கிய இதழின் ஒவ்வொரு பதிப்பிலும் அதிலுள்ளவர்களே “மெய்ப்பு பார்த்தல், வடிவமைப்பு செய்தல், இணக்கமான முடிவு காணுதல்”” என்று அனைத்தையும் செய்ய வேண்டும்- “திட்டமிட்டு அதை நிர்வகித்துச் செய்து முடிக்கும் வேலை”. இதைச் செய்தவர்கள் பொறி பறக்கும் வாக்கியங்களை எழுதலாம், எழுதாமல் போகலாம். ஆனால் நீ சுடர் விட்டுப் பிரகாசிக்கும் வாக்கியங்களை எழுதுவதாயிருந்தால், உன் வாக்கியங்கள் வாசிக்கப்பட வேண்டும் என்று நீ விரும்பினால் இவர்களைச் சார்ந்திருக்கத்தான் வேண்டும், எனவே இவர்கள் உன் மதிப்புக்குரியவர்கள்.
இருப்பினும், நேர்த்தியான தயாரிப்புக் குழு, அழகிய பக்கங்கள், கச்சிதமான பட்ஜெட் என்று எல்லாமிருந்தாலும் வாக்கியங்கள் வாசகர்களைச் சென்றடைய அவை போதாது: ஒரு இலக்கிய இதழ் வெற்றி பெற வேண்டுமென்றால், ஜாய்ஸ் கரோல் ஓட்சும் ரேமண்ட் ஸ்மித்தும் இணைந்து ஒண்டாரியோ ரிவ்யூ துவக்கிய 1974 போலவே இப்போதும்,- ஏன், அதற்கு முன்னிருந்த பத்திரிக்கைகளைவிடத் தீவிரமான வகையில் அந்நாளின் இலக்கியப் படைப்புகளை நீண்ட விசாரணைக்கு உட்படுத்திய கடுமையான மதிப்பீட்டு-கட்டுரைகளுக்குப் புகழ்பெற்ற எடின்பர்க் ரிவ்யூவை பிரான்சிஸ் ஜெப்ரியும் அவரது மூன்று நண்பர்களும் 1802ஆம் ஆண்டு துவங்கிய நாள் முதலே- இதற்கு முன் நன்றாகச் செய்யப்படாத ஏதோவொன்றை நீ செய்தாக வேண்டிய கட்டாயம் உண்டு. இலக்கிய இதழின் “வெற்றியை” தீர்மானிக்க பல வரையறைகளைப் பயன்படுத்தலாம் – அதன் தொடரும் இருப்பு, நிதிநிலை, புதிய எழுத்தாளர்கள் மீதான தாக்கம், வாசகர்கள் எண்ணிக்கை, அது போன்ற பிற இதழ்களை துவக்குவோர் எண்ணிக்கை என்று பல. ஆனால் இது போன்ற எப்படிப்பட்ட வெற்றியும், உன் இதழ் அதன் களத்தில் புதியதாய் என்ன கொண்டு வருகிறது என்பதைப் பொறுத்த விஷயம்.
நீயும் உன் நண்பர்களும் உண்மையாகவே புதுவகை கவிதையோ புனைவோ படைப்பவர்களாய் இருந்தால் அது உதவியாக இருக்கும்- பிற அமைப்புகளாலும் அவற்றின் ரசனை அளவீடுகளாலும் ஏற்றுக்கொள்ள முடியாத படைப்புகளை எழுதுபவர்களாக இருந்தால் நல்லது. 1978 முதல் 1981 வரை இயங்கிய தன் லா=ங்=கு=வே=ஜ் என்ற இதழ் குறித்து பரோல் ஆண்ட்ரூஸ், “அது ஒரு மொபைல் பாண்ட்வேகன், கோட்டையுமல்ல நினைவுச் சின்னமுமல்ல” என்று சொல்கிறார். லா=ங்=கு=வே=ஜ் மற்றும் டி.சி., வெஸ்ட் கோஸ்ட் பகுதிகளில் இருந்த அதன் சகோதர இதழ்களின் தயவால் இன்று, சமகால கவிதையைத் தீவிரமாக வாசிப்பவர்கள் “லாங்குவேஜ் கவிஞர்கள்” குறித்து அறிந்திருக்கின்றனர்- இவர்களது வாசிக்கக் கடினமான புதிய நடை முதலியத்தையும் உரைநடைக்குரிய தெளிவான அர்த்தத்தையும் நிராகரித்தது. இவர்களின் துவக்க கால கவிதைகள்- மற்றும் அது குறித்த கோட்பாடுகள்- நியூ யார்க்கரிலோ பொயட்ரியிலோ அப்போது பிரசுரிக்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை (இப்போது பிரசுரமாகிறது என்றாலும்). தங்களுக்குரிய பத்திரிக்கைகள் அளிக்கக்கூடிய சுதந்திர வெளி இவர்களுக்கு அவசியமாக இருந்தது.
இவற்றின் வெற்றி சிறுபத்திரிக்கைகளின் முக்கியத்துவம் இன்னும் அதிகமாய் இருக்கிறது என்பதையும் அவற்றின் இலக்குகள் எவ்வளவு புதுமையாகவும் வித்தியாசமாகவும் இருக்கின்றனவோ அந்த அளவுக்கு அவை வெற்றி பெறுகின்றன என்பதையும் காட்டுகிறது. அட் லென்த், என்ற இதழின் ஜானதன் பார்மர் சொல்வதுபோல், ஒரு சிறுபத்திரிக்கையின் வெற்றி, “ஒரு கம்யூனிட்டியை உருவாக்குவதில் இருக்கிறது”. அந்தச் சமூகத்துக்கு ஒரு பொதுத்தன்மை இருக்க வேண்டும்- அது அழகியலாகவோ கோட்பாடாகவோ இனக்குழுவாகவோ புவியியலாகவோ, ஏன், தலைமுறையாகவோ இருக்கலாம்- ஆல்ட்-லிட் கவிஞர் காபி பெஸ் நடத்தும் இல்லூமினாட்டி கேர்ள் கேங்க் என்ற சிறந்த இணைய இதழின் முக்கியமான விஷயங்களில் ஒன்று, அது பதின்பருவத்தின் விளிம்பில் இருக்கும் பெண்ணியர்களால் நடத்தப்படும் அவர்களுக்காகவே அவர்களைப் பற்றியே பேசும் இதழ் என்பதுதான்.
புதிய இலக்கிய இதழ் என்பது வெறுமே படைப்புகளைச் சாகுபடி செய்து கொடுக்கும் குழுவாக இருக்கக்கூடாது: அது போன்ற பல நம்மிடையே இருக்கின்றன. உங்களுக்கு என்று நீங்கள் முன்வைக்க விரும்பும் குறிப்பிட்ட ஓர் அழகியலோ, வாசிப்புத் தன்மையோ, எழுத்து வகையோ இல்லை என்றால் நீங்கள் பதிப்பனுபவம் பெற ஒரு இலக்கிய இதழ் நடத்தலாம், அல்லது உங்கள் வடிவமைப்புத் திறனை வெளிப்படுத்த ஒரு இதழ் நடத்தலாம். அல்லது, உங்கள் நண்பர்களின் படைப்புகளைப் பெரிதுபடுத்துவது உங்கள் நோக்கமாக இருக்கலாம் (“கலை, அங்கு துவங்காதபோதும், நம் நண்பர்களை மகிழ்விக்கும் முயற்சி,” என்று எழுதினார் டபிள்யூ ஹெச் ஆடன், “அங்கேதான் சென்று முடிகிறது”). அல்லது நீங்கள் உங்கள் நண்பர்களுடன் இணைந்து ஏதாவது செய்ய விரும்பலாம் (ஆனால் நான்காம் இதழின் முகப்பு அட்டை குறித்து சண்டை போட்டபின் அவர்கள் உங்கள் நண்பர்களாக இல்லாது போகலாம்). ஆனால்- நேரடி நட்பு தவிர- ஏன் புகழ் பெற்ற எழுத்தாளர் ஒருவர் அத்தனை சாத்தியங்கள் இருந்தாலும் உங்களுக்குத் தன் எழுத்தைக் கொடுக்க வேண்டும்? அத்தனை இதழ்கள் இருக்கும்போது ஒரு வாசகர் ஏன் நீங்கள் பதிப்பிப்பதை வாசிக்க வேண்டும்?
உங்களுக்கு என்று வரையறுக்கப்பட்ட இலக்குகளோ தெளிவான அழகியலோ இல்லை என்றால், உங்கள் நண்பர்களாக இல்லாத எழுத்தாளர்களையும் வாசகர்களையும் நிதியுதவி நல்குபவர்களையும் வரவேற்க ஒரு காரணம் உங்களுக்கு இருக்க வேண்டும். கொஞ்சமாவது பழக்கம் இருந்தால் அவர்கள் உங்களுக்கு உதவும் சாத்தியங்கள் சிறிது அதிகம்தான். என்+1 துவங்கியது ஏன் என்று கீத் கெஸ்ஸன் சொல்கிறார், “நாங்கள் நியூ யார்க்கில் இருந்தோம், என்ன செய்தாலும் அது தனக்கென வேகம் பிடிக்கக்கூடிய இடம் அது”, என்று. ஆனால், அந்த விசை எங்கிருந்து வந்தது என்பதை அவர் சொல்வதில்லை. இந்தத் தொகுப்பில் உள்ள கருத்துகளில் நம்புவதற்கு மிகக் கடினமான விஷயம் இது- இணையம் இருப்பதால் நீ எங்கு வாழ்கிறாய் என்பது முக்கியமில்லாமல் போய்விட்டது என்று சொல்கிறார்கள். கலாசார மையமொன்றில் வாழ்வதன் முக்கியத்துவம் இன்னும் மறையவில்லை, அது குறைந்துவிட்டது என்று வேண்டுமானால் சொல்லலாம். நீங்கள் ஒரு இணைய இதழ் துவங்கலாம், உங்கள் நண்பர்கள் எழுதுவதைப் பதிப்பிக்கலாம், நன்றாக அறியப்பட்ட எழுத்தாளர்களின் படைப்புகளைக் கோரிப் பெறலாம்; ஆனால், அவர்களை நேரில் சந்தித்திருந்தால் அது உதவியாக இருக்கும்; அவர்களைச் சந்திக்க விரும்புவதானால், நீங்கள் டொராண்டோ அல்லது சான் பிரான்சிஸ்கோ அல்லது நியூ யார்க்கில் வாழ்பவராகவோ வாழ்ந்து கொண்டிருந்தவராகவோ இருந்தால் உதவியாக இருக்கும்.
நீங்கள் இலக்கிய இதழ்களுக்கு அடுத்து ஒரு பல்கலைக்கழகத்தில் வேலைக்குச் சேரக் கூடும், அங்கு அதன் மாணவர்களுக்கு இலக்கிய பத்திரிக்கை நடத்துவது குறித்து நீங்கள் வகுப்பெடுக்கலாம், அல்லது அதற்கு வரும் படைப்புகளை எப்படி படித்துப் பார்ப்பது என்றாவது சொல்லிக் கொடுக்கலாம். ஒரு சில ஆண்டுகள் தொடர்ந்து இயங்கும் புனைவு மற்றும் கவிதை இதழ்கள் பலவும் ஏறத்தாழ எப்போதும் கல்வித்துறை சார்ந்த செயல்பாட்டில் சென்று முடிகின்றன, முதலில் கல்வித்துறைக்கு எதிரான தாக்குதலோடு துவங்கினாலும் இதுவே முடிவு; எழுத்தையும் இதழியலையும் கற்றுக்கொள்ள மாணவர்கள் தொடர்ந்து வருகிறார்கள், இருக்க ஒரு இடம் கிடைக்கிறது, ஹெச் ஆர் ஆபிஸ் ஒன்று வைத்துக் கொள்ள முடிகிறது, அஞ்சல் முகவரி ஒன்று கிடைக்கிறது என்ற அனுகூலங்களுக்கு முன் கருத்தளவில் மட்டுமே உள்ள சுதந்திரத்தைத் தியாகம் செய்வது அப்படி ஒன்றும் பெரிய விலை அல்ல. ஆனால் கல்வித்துறையில் ஏதோவொரு படைப்பிலக்கிய வகுப்பு நடத்தும் இடத்தில் அவற்றுக்குப் பொருத்தமான வகையில் உள்ள இலக்கிய இதழ்களுக்கு மட்டும்தான் இத்தகைய நிறுவன உதவி கிடைக்கிறது. லேடி சர்ச்சிலின் ரோஸ்பட் ரிஸ்லட் (அறிவியல் புனைவு மற்றும் மிகுகற்பனை), காமிக்ஸ் ஜர்னல் (காமிக்ஸ் மற்றும் கிராபிக் நாவல்கள் பற்றிய விவாதங்களும் விமரிசனங்களும்) போன்ற கற்பனையைக் கோரும் இதழ்கள் வேறு வழிகளில் பிழைத்திருக்கின்றன.
ஒரு ரசனையை அல்லது இலக்கிய வகைமையை முன்னிருத்தலாம் (கிரியேட்டிவ் நான்பிக்சன்), அல்லது ஒரு இடத்தையோ சமூக குழுவையோ (ஆசியன் அமெரிக்கன் லிடரரி ரிவ்யூ), அல்லது ஒரு கலவையை (கல்லலூ, முதலில் “தெற்கில் வாழும் ஆப்பிரிக்க-அமெரிக்க எழுத்தாளர்களின்” தளம்); புத்தக மதிப்பீடுகள் மற்றும் எழுத்தாளர் நேர்முகங்கள் தவிர வேறு எதுவும் ரெயின் டாக்ஸி பதிப்பிப்பதில்லை; பல இதழ்களிலும் பதிப்பிக்கப்பட முடியாத நீண்ட கவிதைகளை அட் லென்த் பதிப்பிக்கிறது (சியாட்டில் ரிவ்யூவும் இதைச் செய்கிறது). இவை அனைத்தும் நீங்களே ஒரு இலக்கிய இதழ் துவங்குவதற்கான நல்ல காரணங்கள்.
ஆனால் இவை மட்டுமல்ல காரணங்கள்- புதிய ஒரு இலக்கிய இதழ் துவங்குவதற்கு ஒரு காரணம் இருக்க வேண்டும்: இதுவரை உள்ள இதழ்கள் விட்டு வைத்திருக்கும் வெற்றிடம் ஒன்றை நிரப்ப வேண்டும், ஒரு புதுவகை வாசிப்பு இன்பம், ஒரு புது வகை எழுத்து, புதிய அல்லது அதிகம் பதிவு செய்யப்படாத சமூகப் போராட்டத்துடன் கூட்டணி வைத்துக் கொள்ளலாம், தம் எழுத்தை வெளியிடக் காத்திருக்கும் எழுத்தாளர்களின் ஆதரவு, இலக்கிய வாசகர்களின் ரசனையின் ஏதோ ஒரு சிறு பகுதியை நிஜமாகவே மாற்றக்கூடிய ஒரு செயல்திட்டம் என்று எதுவாவது இருக்க வேண்டும். இணையம் வந்துவிட்டதால் இது எதுவும் மாறிவிடவில்லை. அதே போல் டயாஸ்-மோரிஸ் புத்தகத்தில் அல்லது சிறுபத்திரிக்கை நடத்தும் எவருடனும் செலவிடும் ஒரு நாள் அனுபவத்திலும் வெளிப்படும் வேறொரு உண்மையும் மாறிவிடவில்லை- ஓர் இலக்கிய இதழை எடுத்துச்க் செய்வது என்பது உற்சாகமாக இருந்தாலும், களைப்பூட்டும் செயல்.
நன்றி- New Yorker,
http://www.newyorker.com/books/page-turner/the-persistence-of-litmags