(நாம் மாநகர ரயில் அல்லது பேருந்து ஒன்றில் ஏறுகிறோம் என்று வைத்துக் கொள்வோம். இருக்கை காலியாய் இருக்கிறது, ஓடிப் போய் அமர்ந்து ஆசுவாசமடைந்ததும் மெல்ல அதிகரிக்கும் எரிச்சலுடன் கவனிக்கிறோம், நம்மருகில் அமர்ந்திருப்பவர் யாருடனோ தன் மொபைலில் உரக்கப் பேசிக் கொண்டிருக்கிறார். நமக்குச் சம்பந்தமில்லாத விஷயம் மாதிரிதான் இருக்கிறது- யாரோ இரண்டு பேர் சண்டை போட்டுக் கொள்கிறார்கள், ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் பேசும் விஷயத்தின் சுவாரசியம் நம்மையும் உள்ளிழுத்துக் கொள்கிறது- அப்படிப்பட்ட ஒரு கட்டுரை இது, J.D. McClatchy எழுதிய “உயிர்ப்பசி” (Hungry for Spirit) என்ற கட்டுரை, Boston Review என்ற தளத்தில் வெளிவந்தது. அதன் எளிய மொழிபெயர்ப்பு இது)
இதில் எனக்கு ஏன் இந்த அக்கறை என்பதை முதலில் சொல்லிவிடுகிறேன். ஹரோல்ட் ப்ளூம் தொகுத்த நூலில் நான் எழுதிய ஒரு கவிதையும் இடம் பெற்றிருக்கிறது என்பது மட்டுமல்ல, அவர் எனக்கு ஒரு ஆசிரியரும்கூட, இப்போது யேல் பல்கலைக்கழகத்தில் என் சகாவாகவும் இருக்கிறார். இந்தத் தகவல்களை நான் பாஸ்டன் ரிவ்யூ பதிப்பாசிரியரின் கவனத்துக்குக் கொண்டு வந்தேன். ப்ளூமின் வாதம் குறித்து எதிர்வினை அளிக்குமாறு விடுத்த வேண்டுகோளை அவர் திரும்பப் பெற்றுக்கொள்ள இவை போதுமான காரணங்களாக இருக்கவில்லை. ஆனால் என் சார்புநிலை என்னவென்பதை வாசகர்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன்.
உண்மையில் ப்ளூமின் சர்ச்சைக்குரிய கட்டுரைதான் என்னைப் பின்னோக்கிச் செலுத்தி அட்ரியன் ரிச்சின் தொகுப்பை முழுமையாய் வாசிக்கச் செய்தது- இதற்கு முன் இதைச் செய்யத் தவறியிருந்தேன். நல்ல காத்திரமான தொகுப்பு, “காட்டமான மருந்து” என்று சொல்வது போன்ற காத்திரம் இதில் இருக்கிறது- ஆனால் சிறப்பான தொகுப்பு என்று சொல்ல முடியாது. அதாவது, தொடரின் நோக்கத்துக்கும் நியாயம் செய்வதில்லை, ரிச்சின் உயர்ந்த, ஆத்திர அவசர லட்சியங்களுக்கும் உதவுவதில்லை.
இங்கு ஒரு விஷயத்தைக் குறிப்பிட வேண்டியது முக்கியம். தொகுப்பாசிரியர்கள் ப்ளூம், ரிச் இருவருமே ஒத்த அரசியல் கோணம் கொண்டவர்களாய்த் துவங்குகின்றனர், இருவரும் கலாசாரச் சிக்கல் குறித்து ஒரே நிலைப்பாடு கொண்டவர்களாய் இருக்கின்றனர். 1990களுக்குரிய அமெரிக்க “சமூகச் சிதைவின் விரையும் விசை” குறித்து ரிச் தன முன்னுரையில் வருந்துகிறார். நம் அரசியல் மற்றும் பொருளாதார வாழ்வின் கையறு நிலை குறித்து ப்ளூமின் கசப்புணர்வு ரிச்சுடன் ஒத்துப் போகிறது.
மனசாட்சியாகவும் அறைகூவலாகவும் இருக்கக்கூடிய கவிதையைத் தேடும் ரிச், இந்த ஆண்டுக்குரிய கவிதைகளைத் தேர்ந்தெடுக்கும்போது தான் இந்த ஒரு கேள்வியைக் கேட்டுக் கொண்டதாகக் கூறுகிறார்: “எவ்வளவுதான் அடையப்படாமல் இருக்கட்டுமே, இவ்வளவு சக்திவாய்ந்த ஒரு கருத்து, தீர்வு, எதிர்காலம் குறித்த தரிசனம் அவ்வளவு சீக்கிரம் கைவிடப்படும்போதோ அல்லது தலைமறைவு நிலைக்குத் தள்ளப்படும்போதோ அதன் தாக்கம் கவிஞர்களின்மீது எப்படிப்பட்டதாய் இருக்கும்?”.
ரிச்சைப் பொருத்தவரை கவிதை என்பது சமூகத்தை முன்வைத்து, நிகழ் தருணத்தில் நிகழ்த்தப்படும் உரை. அதன் உள்ளத்தில் சமூக நீதியும் பாக்கெட்டில் புரட்சிகரமான மாற்றத்தின் சாத்தியமும் இருக்கின்றன. நூல் முன்னுரையின் துவக்கத்திலேயே அவர் தன் பொறுப்பை மிகத் துணிச்சலாகக் கைகழுவி விடுகிறார்- தன் தேர்வுகள், “சமநிலை கொண்ட அல்லது பொதுமைத்தன்மை கொண்ட அளவைகளைக் கொண்டு அணுகப்படும்போது, 1995ஆம் ஆண்டு (வட) அமெரிக்காவில் எழுதப்பட்ட அல்லது பேசப்பட்ட அல்லது அச்சிடப்பட்ட சிறந்த கவிதைகளாய் இல்லாமல் போகலாம்,” என்று ஏற்றுக் கொள்கிறார் அவர். ஆனால், அதற்கு மாறாய், “இவ்விடத்து, இக்காலத்துக்குரிய சமூகத்தின், அரசியலின் கரிய பெருநிழல்களை ஒவ்வொரு கவிஞரும் எந்த அளவுக்குக் கண்டுகொள்கிறார் என்பதில்தான் ஆர்வம் கொண்டிருந்தேன்”, என்கிறார்.
கவிஞர்களை நோக்கி ப்ளூம் கேட்பது முற்றிலும் மாறுபட்ட கேள்வி, அவரது கோரிக்கைகளும் வேறுபட்டவை. அவர் ரிச்சின் அடிப்படை நம்பிக்கையை எடுத்துக்கொண்டு மேலும் தீவிரமான விசாரணையை மேற்கொள்கிறார். ஆம், சமூகச் சாக்காடு கலாச்சாரத்தைப் பீடித்திருக்கிறது; கலையும் விமரிசனமும், இரண்டுமே குறுகிய, கீழ்மையான செயல்திட்டங்களுக்குச் சேவகம் செய்வதற்கான அரசியலாகிவிட்டன. “கற்பனையின் நிறவெறி” என்று எதை ரிச் பார்க்கிறாரோ, அதையே, “கலாசார குற்றவுணர்ச்சி” என்று பார்க்கிறார் ப்ளூம்- காரியச் சமர்த்தர்களாய் முதுகெலும்பு இல்லாமல் கொள்கைகளைக் காவு கொடுகிறோம் என்கிறார் அவர். “அழகியல் ஆட்சி செலுத்தும் உலகம்” மட்டுமே அவருக்கு ஆன்ம-விருத்தி வெளியாக இருக்கிறது, அங்கு அரங்கேறும் போராட்டம் மரபுக்கும் தனிமனித திறனுக்கும் இடையே நிகழ்கிறது. ஆனால் உண்மையில் இதைக் காட்டிலும் பெரிய போர் அது. கவிதைகள் தீவிரமாகத் தாகக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார் ரிச். கவிதைகள் ப்ளூமுக்கோ, கவிதைகள் அரண் போன்றவை- அகத்தின் தனிச்சுதந்திரம் மீது தாக்கம் செலுத்தும் எந்த ஒரு கருத்துருவாக்கத்துக்கும் கோட்பாட்டுக்கும் போராட்டத்துக்கும் அறச்சூழலுக்கும் உணர்ச்சிநிலைக்கும் எதிரான இறுதி அரண்களாக அவர் கவிதைகளைக் காண்கிறார்.
ரிச், ப்ளூம் இருவருமே தொடர்ந்து விவாதிக்கக்கூடிய மாற்றுச் சிந்தனையாளர்கள். ப்ளூமின் மேட்டிமைத்தனத்தில் நூலாடை படிந்த ஷேக்ஸ்பியரிய வழிபாடு இருப்பதாகச் சிலர் சொல்லலாம். ஆனால் ரிச்சின் சமூக நோக்க வரையறையின் மையத்தில் அதைவிட மெல்லக் கொல்லும் நோய்மை ஒன்றுள்ளது. வழக்கமான பொம்மைகளில் வழக்கமான குண்டூசிகளை அவர் குத்திக் கொண்டிருப்பதையும் வெண்ணிற கவிஞர்களை வெள்ளையர்கள் என்றும் கருப்பு நிற கவிஞர்களை கருப்பர்கள் என்றும் அவர் சொல்வதைப் பார்ப்பதற்கோ அலுப்பாக மட்டும்தான் இருக்கிறது. ஆனால் கவிஞர்களை மக்கள் தொகை கணக்கெடுப்புப் பட்டியலின் தொகுப்புகளாக அவர் பகுப்பதைப் பார்ப்பது என்பது அலுப்பைவிடக் கொடியது. மோசமான ஒரு கவிதையை நல்ல கவிதை என்றோ அது நினைவில் வைத்துக் கொள்ளத்தக்கது என்றோ அவர் நாடகமாடுவதில் உள்ள பொறுப்பின்மை இதில் ஒரு பெரிய உறுத்தல்.
எப்போதும் புத்துயிர்ப்போடு இருப்பதற்கு மாறாய், காலத்தால் பழுப்பேறப் போகும் செய்திகளால் ரிச்சின் கவிதைத் தொகுப்பு கனக்கிறது. லத்திப் ஆசாத் அப்துல்லாவின் “கல்லறைகள்” என்ற கவிதையே தொகுப்பின் அகரவரிசையின் சந்தர்ப்பவச காரணத்தால் துவக்க கவிதையாய் வருகிறது, வருத்தத்துக்குரிய ஆனால் நோய்க்குறியாய் முன்னிற்கும் கவிதை அது. அவர் கலிபோர்னியாவின் பெலிகன் பே ஸ்டேட் சிறைக்கைதி (ஆனால் அரசியல் கைதியல்ல, ஒரு கொள்ளை வழக்கில் கைதாகி இருபத்து இரண்டாண்டு சிறைதண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்); இவர் அனேகமாக கறுப்பினத்தவராக இருக்க வேண்டும். இந்தக் கவிதை, சிறையின் செய்தித்தாளில் வெளிவந்ததாகத் தெரிகிறது. ராலே, வைல்ட், ஜெனே போன்றவர்கள் சிறையில் எழுதிய உன்னத இலக்கியத்தை நினைத்துப் பார்க்கும்போது இந்தத் தனித்தகவல்கள் எதுவுமே முக்கியமில்லை, கவிதை எவ்வளவு தட்டையாக இருக்கிறது என்பதுதான் முக்கியம். ரிச் தேர்ந்தெடுத்துள்ள கவிதையின் மத்தியில் உள்ள இரு ஸ்டான்சாக்களை மேற்கோள் காட்டுகிறேன்:
கல்லறைகளில்,
உயிருடன் புதைக்கப்பட்டிருக்கின்றனர்,
மனிதர்கள் இருந்த இடத்தில் இப்போது ஜெஸ்டபோ நடைமுறைகள்.
நுண்ணுணர்வே, நீ ஏன் என் ஆன்மாவைப் பிரிந்தாய்,
என்னைக் கைவிட்டு அறச்சிகரங்களைச் சென்றடைந்தாயே?
கல்லறைகளில்,
காட்டுமிராண்டி ஆடைகளை
நிர்வாகத்துறை மம்மிக்கள் போர்த்துக் கொண்டிருக்கின்றன,
கண்கள், சைக்கோ நாட்டங்களின் கண்ணாடி,
கருணையே, தயவு செய்து திரும்பி வா!
தேய்வழக்குகள், மிகையுணர்ச்சிகள், குழப்பமான வாக்கிய அமைப்பு, வலுவற்ற குறிச்செய்கைகள் கொண்ட என்னவொரு குவியல்! அதைவிட மோசம், இது அத்தனை “இலக்கியமாக” இருக்கிறது. நுண்ணுணர்வே, கருணையே என்ற விளிகள் அத்தனை விநோதமாக ஒலிக்கின்றன- வேண்டுமானால் ஆஷ்பரியைப் பகடி செய்ய இவை பொருந்தலாம். இதுபோன்ற கூளங்கள் எப்படி சிறைகளைச் சீர்திருத்த உதவும் என்பதோ கீட்சுடன் இணைத்து பேசும் தகுதியடையும் எனபதோ எனக்குப் புரியவில்லை. ரிச்சின் புத்தகம் இப்படிப்பட்ட அபத்தங்களால் நிறைந்திருக்கிறது. நரகத்துக்குச் செல்லும் பாதையின் சாரிகளில் பதிக்கப்பட்டிருக்கும் இந்த இரு பூச்சுக்களும் இதிலுள்ள கவிதைகளின் தனித்தன்மைகளாய் இருக்கின்றன- வீரியமும் உண்மை பேசும் தீவிரத்தன்மையும்.
கவிஞனின் இனம் அல்லது பாலினம் ரிச்சின் தேர்வுகளுக்கு அடிப்படையாய் இருக்கிறது என்று ப்ளூம் நம்புகிறார், நான் அப்படி நினைக்கவில்லை. கவிதையின் பாடுபொருளுக்கு அவர் கூடுதல் முக்கியத்துவம் அளித்திருக்கிறார் என்று நினைக்கிறேன்: கவிதை ஏதோ ஒரு பிரச்சினையின் சாட்சியமாகவோ அதை நோக்கி உரையாடுவதாகவோ இருக்க வேண்டும் என்று அவர் நினைக்கிறார். சமூக பொறுப்புக்கும் பிரச்சாரத்துக்கும் இடையிலுள்ள இடைவெளியை இப்படிப்பட்ட சிந்தனை நிரப்பி, பேதமற்றதாய்ச் செய்து விடுகிறது. வர்ஜில் முதல் ஜார்ஜ் ஹெர்பர்ட் வரை சிறந்த பல கவிஞர்களும் அதிகார அமைப்பின் அரசியல் துதிபாடிகளாக இருந்திருக்கின்றனர். ஆனால், குறிப்பாக இந்த தேசத்தில், நாம் அதிலிருந்து விலகிய, ஏன், அரசின்மைவாதப் பார்வையையும் விரும்புகிறோம்- ஒரு எமர்சன் அல்லது தோரோ, ஒரு விட்மன் அல்லது டிக்கின்சன், ஸ்டீவன்ஸ் அல்லது லவல். ஆனால், வருத்தத்துக்குரிய வகையில், ரிச் விரும்புபவர்களில் பலருக்கும் விளிம்புநிலை வர்க்கமே அதற்குரிய அதிகார அமைப்பாகவும் ஆகிவிட்டது. அந்நியன் அதன் சிந்தனையற்ற முன்முடிவுகளைப் பழக்கப்படுத்திக் கொண்டுவிட்டான், கற்பனையைத் தூண்டும் நோக்கம் தொய்வடைந்து மனசாட்சியை உறுத்தினால் போதும் என்றாகி விட்டது.
வாழ்வின் மறுபுறத்தில் உள்ள துயர்த்தன்மையைக் காட்டுவதுதான் கவிஞனின் தொழில் என்று ஒரு முறை தாமஸ் ஹார்டி கூறினார். சோகம் மட்டுமல்ல- உலக வாழ்வின் கண்ணீர் மட்டுமல்ல- அதன் அவலமும் விரக்தியும் கவிதையின் பாடுபொருட்களாகின்றன. ப்ளூம் இதை ஏற்றுக் கொள்வார் என்று நினைக்கிறேன்- நகர்ப்புறத்தைப் பற்றிய ஹார்ட் கிரேனின் பாடற்கீற்றுக்களையும் எலிசபெத் பிஷப்பின் பிரதிபலிப்புத்தன்மை கொண்ட தனிமையையும் அவர் சுட்டிக்காட்டக்கூடும். என்னதான் சொன்னாலும் அவர், “அழகியலை” “அறிநிலையுடன்” தொடர்புறுத்துகிறார். உயிர்ப்பசி கொண்டவையாய், கவிதைகள் உலகை விழுங்குகின்றன. சிறந்த கவிதைகள்- அதாவது, நீண்டகாலம் நிலைத்திருக்கும் கவிதைகள், ஆன்மாவை அசைக்கும், ஆன்மாவுக்கு ஆறுதலளிக்கும் கவிதைகள். அவை, எதிர்காலத்தை நோக்கி உரையாற்றுபவை, ஒற்றை மனிதனின் கொள்கை விளக்க அறிக்கைகள். அவை நரம்புகளின் இறுக்க நிலையில் இசைக்கின்றன. கவிதைகள் சோம்பித் திரிகின்றன. கவிதைகள் புதிர் போடுகின்றன. கவிதைகள் எதிர்வினையாற்றுவதில்லை, அவை சிந்திக்கின்றன. அவற்றின் வாசகர்களும் பிளேக் சொன்னதை நினைவில் வைத்திருக்கின்றனர்: திறமைசாலிகள்தான் உண்மையில் சிறுபான்மையினர்.
அப்புறம், முடிவில் இந்தக் கேள்வி இருக்கிறது- எந்த ஒரு ஆண்டிலும், அல்லது எந்த ஒரு பத்தாண்டிலும், நிலைத்து நிற்கக்கூடிய எழுபத்து ஐந்து கவிதைகள் உண்டா? ஆம், என்று ஆவலாய் தலையசைப்பீர்கள் எனில், இந்தக் கேள்வியில் “என்றென்றும்” என்றச் சொல்லையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போதும் ஆமோதிக்கிறீர்களா?
௦௦௦
நன்றி – Boston Review