அம்மாவுக்காக – மஹ்மூத் தார்விஷ்

(ஆங்கில மொழியாக்கம் – ஏ. இசட். ஃபோர்மேன்)

என் அம்மாவின் ரொட்டிக்கு ஏங்குகிறேன்,
அம்மாவின் காப்பிக்கு;
அம்மாவின் தடவிச் செல்லும் ஸ்பரிசத்துக்கு..
ஒவ்வொரு நாளும்,
என்னுள் குழந்தைமை வளர்கிறது.
வாழ்வை அவ்வளவு நேசிக்கிறேன்-
ஏனெனில், நான் இறந்தால்
அம்மாவின் கண்ணீர் என்னை வெட்கச் செய்யும்..

என்றேனும் நான் திரும்ப நேர்ந்தால்,
உன் இமைகளில் போர்த்துக் கொள். உன் கையால்
என் எலும்புகள் மீது புற்களை வீசு;
புனித மண்போல்
களங்கமற்ற உன் காலடித்தடங்களால் பெயரிடப்பட்டவன்.
ஒரு கற்றை மயிரால் என்னைக் கட்டிக் கொள்,
உன் ஆடையின்பின் ஒரு நூலில் பிணைத்துக் கொள்.
நானும் தெய்வம் தொட முடியும்
என் ஆன்மா தெய்வம் தொட முடியும்
உன் இதயத்தின் சுவாசத்தை நான் தொட முடிந்தால்.

என்றேனும் நான் திரும்ப நேர்ந்தால்,
உன் அடுப்பில் சமைக்க என்னை எரியாக்கு,
கூரையில் துணியுலர்த்தும் கொடியாய் உன் கைகளில் விரித்துக் கொள்.
உன் தினசரி பிரார்த்தனைகளின்றி
என்னால் நிற்கவும் முடியாது..

எனக்கு வயதாகிவிட்டது..
என் குழந்தைமையின் நட்சத்திரங்களைக் கொடு,
வீடு நோக்கிய பாதையில் நான் செல்ல வேண்டும்.
வீடு திரும்பும் பறவைகளோடு
என்னை அழைக்கும் உன் கூட்டுக்கு.

நன்றி – http://poemsintranslation.blogspot.in/2009/12/mahmoud-darwish-to-my-mother-from.html

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.