கால்களுக்கிடையில்
வாலை நுழைத்து
தகடு வேய்ந்த உடலின் கீழ்
காலை வைத்து
பீடத்தில் அமர்ந்திருக்கும்
காளைக்கன்று –
கோயிலின் முற்றத்தில்.
கொம்பை வருடிக்கொடுத்து
திமிலை தட்டிக்கொடுத்து
புனித காளைக்கன்றையே
மிரள வைத்த
சித்திரவதைக் கருவியின்
விசித்திரத்தை ஆராய்ந்தால்
கிறீச்சிடும் மூட்டுகள்
கட்டி இழுக்கும் குறுக்குப் பட்டைகளாக
கற்பீடத்திலிருந்து மேலெழும் அது –
ஒரு வகைச் சிலுவை.
மனதுக்குள்
அதில் ஒருமுறை
அமர்ந்து பார்த்தால்
முட்களும்
கொக்கிகளும் இருப்பதால்தான்
அதன் இடத்தில் இருக்கிறது
குறுக்குப்பட்டையின் சேணம்
இன்னொன்று
கால் முதல் கால்வரை
உங்களுடன் சுற்றி வருகிறது
மலைகளும் கோயில்களும்
ஆடுகின்றன
நந்திகளும் ஆமைகளும்
நீந்துகின்றன
பிரம்மாண்ட ராட்டினமாகி
தலைக்கு மேலே
கழுகுகளைப்போல் சுற்றுகின்றன
நட்சத்திரக் கூட்டங்கள்
சட்டவிரோதமானது
அதைப்போல
செய்வதற்கில்லை
தவிரவும்
நட்சத்திர கூட்டங்களுக்கு
தவறான நேரமும் கூட
எல்லாத் திசையிலிருந்தும்
எந்நேரமும்
உடனே உதவிக்கு வரும்
தீயணைப்பு வீரனைப்போல
அவசரகதியில் வந்தாலும்
இரத்தம் சிந்துவதற்கில்லை
விரிந்துவரும் இளிப்புடன்
உள்ளங்கையைக் குவித்து
காளையின் பின்னந் தொடையில்
அத்துமீறி நுழைந்து
தரையாணியால் ஒடுங்கிய
பித்தளையின் கீறலை
விரல் நகத்தால்
வேண்டுமானால்
சரி செய்யலாம்.
குறிப்பு – 40 வருடம் முன் கொலாட்கர் சென்றபோது வேறொரு நந்தி இருந்ததா தெரியவில்லை ஆனால் ஜெஜூரி கோயிலில் தற்போது இருக்கும் நந்தியின் படம் இதுதான்.
(அருண் கொலாட்கர் எழுதிய A Kind of Cross என்ற கவிதையின் தமிழாக்கம்).