மஞ்சளடைந்த
பழைய செய்தித்தாள்
கொண்டு சேர்க்கப்பட்ட
கண்ணாடிச் சில்லுகள்
கதவுச் சட்டத்தின் செவ்வகம்
ஒவ்வொன்றும்
ஓரு திரள்கலையின்
படைப்பு
அடைப்புச்சட்டத்துள்
இருத்தப்படாமல்
கீழ்நோக்கி துருத்திக்கொண்டிருக்கும்
நிச்சயமற்ற சரிவகங்கள்
நெருக்கியடித்துக்கொண்டு
அடுக்கடுக்காக அலமாரி முழுக்க
நிறைந்திருக்கிறார்கள்
தங்கநிறக் கடவுளர்கள்
வெட்டப்பட்ட தலையங்கங்கள்
நித்திய வாலிப வாக்குறுதிகளின்
பின்னால் இருந்தபடி
எட்டிப்பார்க்கிறார்கள்
பங்குச்சந்தை நிலவர
பத்திகளுக்கு அப்பாலும்
பார்க்கலாம் நீங்கள்
தங்கநிற கடவுளர்களை
கஞ்சிப்பசையால்
கெட்டிப்பட்ட
கருத்துக்களத்தின் பின்னால்
தெரிகிறது ஒரு தங்கக் கை
அந்தக்கதவின் மீது
எதிர்பார்த்ததைப் போலவே
இயல்பாக இருக்கிறது
ஒரு பெரிய பூட்டு
***
அருண் கொலாட்கர் எழுதிய The Cupboard என்ற ஆங்கில கவிதையின் தமிழாக்கம் இது
