12. ஆசிரியர் எங்கே?
ஜார்ஜ் ட்ருக்கர் எழுதிய ‘லைப் ஆப் எ லிவிங் செயின்ட்’ புத்தகம் வெளியானவுடன் பிரிட்டன் முழுக்க பெரிய சர்ச்சை கிளம்பியது. இதன் நம்பகத்தன்மையை பல விஞ்ஞானிகள் சந்தேகித்தனர். பெரும்பாலான கிறிஸ்துவர்கள் இதில் வரும் கிறிஸ்டோவை இரண்டாம் இயேசுவாக ஏற்க மறுத்தனர். இந்த புத்தகம் அமெரிக்காவிலும் வெளியாகி அங்கும் ஒரு சர்ச்சை கிளப்பியது. இங்கிலாந்தில் ஆன்மீகவாதிகளுக்கும் நாத்திகர்களுக்கும் இடையில் பெரிய சண்டை வந்தது. ஆன்மீகவாதிகள் இந்தப் புத்தகத்தை தடை செய்யவேண்டும் என்றும், நாத்திகர்கள் தடைக்கு எதிராகவும் போராடினர். இந்தச் சண்டை பல சமயங்களில் கைகலப்பில் முடிந்தது. தெருக்களில் இறங்கி இரண்டு கூட்டங்களும் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. என்ன செய்வது என்று தெரியாத அரசு, புத்தகத்தைத் தடை செய்தது. அதை எதிர்த்து நாத்திகர்களின் போராட்டம் சூடு பிடித்தது. இவ்வளவு எதிர்ப்பை எதிர்பார்க்காத அரசு தடையை நீக்கியது.
பிரான்சிஸ் என்ற பாதிரி தன்னுடைய சர்ச் கூட்டம் ஒன்றில் ஆவேசமாகப் பேசினார். “இரண்டாம் இயேசு என்பதெல்லாம் பொய். நம்மை ஏமாற்ற நம் எதிரிகள் செய்யும் சதி இது,” என்று முழங்கினார். “நாம் நம் மதத்தையும் இயேசுவின் நாமத்தையும் காக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். நாம் எல்லோரும் வரும் ஞாயிறன்று ஜார்ஜ் ட்ருக்கர் வீட்டின்முன் ஒரு போராட்டம் நடத்த வேண்டும்,” என்று அறைகூவல் விடுத்தார். கூடியிருந்த கூட்டம் கைதட்டி அவரை உற்சாகப்படுத்தியது.
அடுத்த ஞாயிறு அந்த சர்ச்சை சார்ந்த கிட்டத்தட்ட முந்நூறு நபர்கள் சர்ச் முன் கூடினார்கள். அவர்களைப் பார்த்து பாதர் பிரான்சிஸ் தாங்கள் செய்யப்போகும் காரியத்தின் மகத்துவத்தை குறித்து பேசினார். “நம் எல்லோருக்கும் வரலாற்றில் இடம் நிச்சயம்,” என்று ஆணித்தரமாக அவர் கூற, கரகோஷம் எழுந்தது. எல்லோரும், “‘ஜார்ஜ் ட்ருக்கர் ஹியர் வி கம்,”’ என்று கூவிக்கொண்டு நடக்க ஆரம்பித்தனர். எல்லோர் முகத்திலும் உற்சாகம். தாங்கள் முக்கியமான ஒன்றை சாதிக்கப் போகிறோம் என்ற வேகம் எல்லோர் கண்களிலும் தெரிந்தது. கூட்டம் ஆர்ப்பரித்துக்கொண்டு முன்னகர, ஒரு சிறுவன் தன் தாயிடம் கேட்டான்,
“நாம் எங்கு செல்கிறோம்?”
“ஜார்ஜ் ட்ருக்கர் என்ற ஒரு பாவியின் வீட்டிற்கு”
“அவர் வீடு எங்கிருக்கிறது?”
அவளுக்கு பதில் தெரியவில்லை. பக்கத்தில் கோஷம் எழுப்பிக்கொண்டிருந்த பெண்மணியைக் கேட்டாள். அவளுக்கும் தெரியவில்லை. அவள் பக்கத்தில் இருக்கும் ஒரு கிழவரைக கேட்க, இப்படியாக இந்த கேள்வி பாதிரியாரின் செவிகளுக்கு எட்டியது. அவர் பக்கத்தில் இருந்த சர்ச் சிப்பந்தியிடம் இந்தக் கேள்வியைக் கேட்டார். அவர் அதைக் கேட்டு முழித்தார். ஜார்ஜ் ட்ருக்கர் எங்கிருக்கிறார் என்று யார்க்கும் தெரியாது என்ற விஷயம் அப்பொழுதுதான் எல்லோருக்கும் விளங்கியது. உற்சாகமாக இருந்த கூட்டம் இப்பொழுது குழப்பத்தில் ஆழ்ந்தது.
அவர் விலாசம் தெரியாமல் கிளம்பியது முட்டாள்தனம் என்று ஒருவருடன் ஒருவர் பேசிக்கொள்ள ஆரம்பித்தனர். இதைக் கண்ட பாதிரியார் தன் பிடியை விட்டு இந்தக் கூட்டம் நழுவக்கூடாது என்ற எண்ணத்தில், “ஜார்ஜ் ட்ருக்கர் இல்லை என்றால் என்ன?. இதைப் பதிப்பித்த நிறுவனத்துக்கு செல்வோம். இனி இந்தப் புத்தகத்தை அச்சிட வேண்டாம் என்று அவர்களுக்கு ஆணையிடுவோம். எல்லோரும் அச்சகத்திற்கு செல்லத் தயாராகுங்கள்” என்றார். கூட்டத்தில் மறுபடியும் உற்சாகம் கூடி கரகோஷம் எழுந்தது. மறுபடியும் அந்தச் சிறுவன், “அச்சகம் எங்கிருக்கிறது?” என்று கேட்க, எல்லோரும் அடித்துப் பிடித்துக்கொண்டு புத்தகத்தைத் தேடினர். புத்தகம் கிடைத்தவுடன், அதை திறந்து பார்த்தால் அதில் பதிப்பாளரின் பெயரும் இல்லை, அச்சகத்தின் பெயரும் இல்லை. அதற்குள் மதிய உணவு உண்ணும் நேரம் நெருங்கி விட்டதால் இந்த போராட்டத்தை வேறொரு நாள் வைத்துக்கொள்ளலாம் என்று முடிவெடுத்து, எல்லோரும் வீடு திரும்பினர்.
இந்தச் சம்பவத்தை நக்கலடித்து ஒரு நாதிக்கவாதி பத்திரிகையில் எழுதினார்- மதத்தின் பேரில் உள்ள மூடநம்பிக்கைகளைப் பற்றி விரிவாக எழுதிவிட்டு,, “இவர்கள் இந்தப் புத்தகத்தை படித்திருந்தால் இதை எழுதியவர் அமேஸான் பக்கமே செல்லவில்லை என்பதை அறிந்து கொண்டிருப்பார்கள். இந்தப் புத்தகத்தில் அமேஸான் காடுகளின் வர்ணனை பொத்தாம்பொதுவாக இருக்கிறது. அமேஸான் சென்ற எவரும் அங்குள்ள தனித்தன்மை வாய்ந்த காடுகளைக் கவனிக்காமல் இருக்க மாட்டார்கள்,. அதே போல் அங்குள்ளவர்களை வெறும் காட்டுவாசிகள் என்று பொதுவாக சொல்லிவிடுகிறார் ஆசிரியர். அவர் அங்கு சென்றிருந்தால் அவர்களின் உயரமும், ரெட் இந்தியன் தோற்றமும் அவரை பாதித்திருக்கும். அவை ஒன்றும் இந்த புத்தகத்தில் நிகழவில்லை. அதனால் இந்த ஆசிரியர் அமேஸான் காட்டுக்குள் செல்லவில்லை என்று உறுதியாக கூறலாம். ஏன், அவர் அமேஸான் பற்றி எந்த ஒரு புத்தகமும் படிக்கவில்லை என்றும் கூறலாம்,” என்று எழுதியிருந்தார்.
“அவர் கூறுவதெல்லாம் பொய் என்றால் இதில் வரும் உண்மையான ஆய்வாளர்கள் என்னவானார்கள்? அவர்கள் அமேஸான் சென்றது நமக்குத் தெரியும். பிறகு அவர்கள் காணாமல் போனதும் நமக்குத் தெரியும். இப்படியிருக்க, இதைக் கட்டுக்கதை என்று எப்படி சொல்ல முடியும்? காணாமல் போன ஒருவரை இவர்கள் இங்கு கொண்டுவந்து எனக்கு காண்பித்தால் நானும் இயேசுவை நம்புவதை விட்டுவிட்டு ஒரு நாத்திகனாக மாறிவிடுகிறேன்” என்று ஒரு பாதிரியார் பதில் கடிதம் எழுதியிருந்தார்.
இதற்கிடையில் இந்தப் புத்தகத்தின் பாதிப்பினால் சிலர் இரண்டாம் இயேசு உண்மையாகவே அமேஸான் காடுகளில் இருந்தார் என்று நம்ப ஆரம்பித்தனர். இவர்கள் ‘சர்ச் ஆப் செகண்ட் க்ரிஸ்ட்’ சர்ச்சில் இணைந்தனர். கிறிஸ்டோவும் ஆலிசும் அவர்களுக்கு தேவதூதர்கள் ஆனார்கள்.
சில மாதங்கள் ஆனபின் சர்ச்சை மெதுவாக அடங்கியது. மக்களின் கவனம் வேறு சர்ச்சைகள் பக்கம் திரும்பியது. ஆனால் ‘சர்ச் ஆப் செகண்ட் க்ரிஸ்ட்’ மக்கள் மட்டும் தங்கள் நம்பிக்கையைத் தளரவிடவில்லை. அவர்கள் நிதி சேர்த்து நான்கு பேரை அமேஸான் பகுதிக்கு அனுப்பினார்கள். அவர்கள் கிறிஸ்டோ இருந்த இடத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். அங்கு ஒரு சர்ச் நிறுவிவிட்டு வரவேண்டும், என்று அவர்களுக்குக் கூறப்பட்டது. கோலாகலத்துடன் அவர்கள் அமேஸான் காட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். பத்திரிகையில் அவர்கள் புகைப்படங்களைப் பிரசுரித்தார்கள்.
அவர்கள் சென்றபின் இரண்டு வருடங்கள் கழித்து திரும்பி வந்தார்கள். அதற்கிடையில் இந்த விஷயத்தை எல்லோரும் மறந்துவிட்டிருந்தார்கள். இவர்கள் வந்தவுடன் மறுபடியும் எல்லோருக்கும் இந்த விஷயம் சுவாரஸ்யமான ஒன்றாக ஆனது. இவர்கள் பத்திரிகைகளுக்கு கொடுத்த பேட்டியில் தாங்கள் எல்லா உண்மைகளையும் கண்டுகொண்டுவிட்டதாகவும், அதைப் பற்றி எல்லா ஆவணங்களை சேர்த்து விட்டதாகவும், அடுத்த நாள் காலை ‘சர்ச் ஆப் செகண்ட் க்ரிஸ்ட்’ இல் எல்லோர் முன்னிலையிலும் எல்லா ஆதாரங்களுடனும் அமேஸான் காடுகளில் என்ன நடந்தது என்பதைக் கூறப்போவதாகவும் சொன்னார்கள். இந்தச் செய்தி லண்டன் நகரம் முழுவதும் பரவியது. அடுத்த நாள் ‘சர்ச் ஆப் செகண்ட் க்ரிஸ்ட்’ வர பல பேர் தயாரானார்கள்.
அன்று இரவு நால்வரும் கூடி, ஆதாரத்தை எல்லோருக்கும் புரியும்படி எப்படி முன்வைப்பது, தாங்கள் கண்டுபிடித்ததை எல்லோரும் நம்பும் வகையில் எப்படி கூறுவது என்பதை வெகு நேரம் விவாதித்துக் கொண்டிருந்தார்கள். சர்ச்சில் வேலை செய்யும் ஸ்டீவன் வெகு நேரம் இவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டு விழித்திருந்தான். ஆனால் அவனால் நள்ளிரவுக்கு மேல் விழித்துக்கொண்டிருக்க முடியவில்லை. ‘குட் நைட்’ என்று சொல்லிவிட்டு படுக்கச் சென்றான்.
சர்ச் வளாகம் உறங்கிக் கொண்டிருந்தது. ஊரே உறங்கிக் கொண்டிருந்தது. பூச்சிகளின் சப்தம் மட்டும்தான் காதில் விழுந்தது. திடீரென்று காலை மூன்று மணிக்கு ‘ஓஓஓ’ என்ற கூக்குரலை கேட்டு பலர் திடுக்கிட்டு எழுந்து தெருவுக்கு ஓடி வந்தனர். முதலில் வந்த சிலர் ‘சர்ச் ஆப் செகண்ட் க்ரிஸ்ட்’ மேல் ஏதோ பச்சைப் புகை போல் இருப்பதைக் கண்டனர். ஆனால் வெகு சீக்கிரமாக அது மறைந்து விட்டது. எல்லோரும் ‘சர்ச் ஆப் செகண்ட் க்ரிஸ்ட்’க்குள் ஓடினார்கள். ஸ்டீவென் நடுங்கிக்கொண்டிருப்பதைக் கண்டார்கள். ஆனால் அவனைத் தவிர அங்கு யாரும் இல்லை. அந்த நால்வர் என்ன ஆனார்கள் என்று எல்லோரும் ஒருவரை ஒருவர் கேட்டுக்கொண்டு எல்லா இடங்களை தேடினார்கள். ஆனால் அவர்கள் எங்கு மாயமாய் மறைந்தனர் என்ற மர்மம் இன்றுவரை விலகவில்லை. அமேஸான் காடுகளின் துர்த்தேவதை அவர்களை அழித்திருக்கும் என்று சிலரும், வேற்று கிரக மனிதர்கள் அவர்களைக் கடத்திவிட்டார்கள் என்று சிலரும் பேசிக்கொண்டார்கள். நாத்திகவாதிகளால் என்ன நடந்தது என்று விளக்க முடியவில்லை. ஸ்டீவென் பித்துப் பிடித்த நிலையிலேயே வாழ்கையை கழித்தான். அவனுக்கு சமநிலை திரும்பவேயில்லை.
இப்படியாக ஆலன் காரன்வெல் எழுதிய, “தி லெஜென்ட் ஆப் செகண்ட் கிரிஸ்ட் அண்ட் தி இன்விசிபல் ஆத்தர்” என்ற புத்தம் முடிகிறது.
(முற்றும்)