Pebbles. Shingles. கூழாங்கற்கள். சிதைகற்கள்.- மாத்யூ அர்னால்டின் டோவர் பீச்.

பதாகையில், “பூமணியின் அஞ்ஞாடி- இருட்டில் நிகழும் மோதல்கள்” என்றொரு கட்டுரை இரு பகுதிகளாக பதிப்பிக்கப்பட்டது. ஆங்கிலத்தில், “Clashing by night,” என்ற தலைப்பில் The Caravan என்ற இதழில் என்.. கல்யாணராமன் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் அது. பூமணிக்கும், அஞ்ஞாடிக்கும் இரவில் நிகழும் மோதல்களுக்கும் என்ன தொடர்பு என்று புரியாமல் வேறொரு தலைப்பு கோரப்பட்டது. அப்போது அவர், The Dover Beach, என்ற ஆங்கிலக் கவிதையைச் சுட்டிக் காட்டினார். அதன் இறுதி சொற்கள்- “And we are here as on a darkling plain/ Swept with confused alarms of struggle and flight,/ Where ignorant armies clash by night//“. “இருள்சூழும் சமவெளியில் இருப்பது போலிருக்கிறோம்’, என்கிறார் கவிஞர். “ஓட்டம் போராட்டம் என்றெழும் ஓலங்களின் குழப்பத்தில் கொண்டு செல்லப்படுகிறோம்”- இதன் முத்தாய்ப்பாய் வரும் சொற்கள்- “இங்கு சூதறியாப் படைகள் இரவில் மோதிக் கொள்கின்றன”. வரலாறோ விதியோ, மனிதர்கள் அதன் சூதறியா கைப்பாவைகள்

ஆனால் கவிதையே இரவில்தான் துவங்குகிறது- “The sea is calm tonight,” என்ற துவக்கம், “ignorant armies clash by night” என்று முடியும் கவிதைக்கு எப்படிப்பட்ட துவக்கம் அளிக்கிறது! முடிவைப் போலவே கவிதையின் துவக்கத்திலும் இரவில் நிகழும் ஒரு மோதல்- கடல்களின் நீர்ச்சந்தி, கடல் நிறைந்திருக்கிறது, அமைதியாய் இருக்கிறது, பௌர்ணமி நிலவு அதன் மேல் ஒளிர்கிறது- “The tide is full, the moon lies fair/ Upon the straits;“.

இந்தக் கவிதையை எழுதும்போது மேத்யூ ஆர்னால்டும் அவர் மனைவியும் புதுமணத் தம்பதியர், தேனிலவு கொண்டாட கடற்கரைப் பகுதிக்கு வந்திருக்கிறார்கள்- இப்போது தன் துணையை ஜன்னலுக்கு அழைக்கிறார் கவிஞர்- “Come to the window, sweet is the night-air“| தொலைதூரத்தில் தெரியும் பிரெஞ்சு கடற்கரையில் ஒளி மின்னி மறைகிறது. இங்கிலாந்தின் மலைச்சிகரங்கள் ஓங்கியுயர்ந்து நிற்கின்றன- ‘Glimmering and vast‘, என்கிறார் ஆர்னால்ட் ‘out in the tranquil bay‘, கடலும் நிச்சலனமாய் நிற்கிறது. தன் காதலியை வா என்று அழைக்கிறார், வெளியே பார், இரவின் காற்று எவ்வளவு இனிதாய் இருக்கிறது.

ஆனால் இனிதாகவா? Only, என்ற வார்த்தை ஒரு அவலக்குரலாய் வந்து விழுகிறது. நாமிருக்கும் இடத்தில் கடல் அமைதியாய் இருக்கிறது, ஆனால் தூரத்தே வேறொரு ஓசை கேட்கிறது, அது வேறொரு சந்திப்பின் ஓசை, இங்கு அங்கு என்றல்ல, ஒரு நீண்ட கோடாய், நிலவொளியில் வெளிறிக் கிடக்கும் மண்ணில் கடலலைகள் மோதும் ஓசை. “Only, from the long line of spray/ Where the sea meets the moon-blanched land,”. கேள், என்று கவிதையின் ஓட்டத்துக்குத் தடை போட்டுத் தொடர்கிறார், கூழாங்கற்கள் அரைபடும் ஓசை கேட்கிறதா,அவற்றைக் கொண்டு செல்லும் கடலலைகள் திரும்பி வரும்போது, உயர்ந்து நிற்கும் கரை மீது வீசி எறிகின்றன- “Listen! you hear the grating roar/ Of pebbles which the waves draw back, and fling,/ At their return, up the high strand,“. கவிதையின் முடிவில் வரும் வரிகளை இங்கு நோக்கலாம் – “And we are here as on a darkling plain/ Swept with confused alarms of struggle and flight“. Swept with confused alarms– இதற்கும் அதற்கும் எத்தனை பொருத்தம், நாம் சூதறியா கைப்பாவைகள் என்பதுகூட அவ்வளவு சரியில்லை, நம்மைக் காட்டிலும் ஆற்றல் வாய்ந்த சக்திகளின் போராட்டத்தில் அரைபடும் கூழாங்கற்கள்- இதுதான் நாமறியாச் சூது..

ஒளியையும் ஒலியையும் கொண்டு தெளிவையும் குழப்பத்தையும் விவரிக்கும் கவிதையில் அடுத்து வரும் வரிகள் செவிக்குரியவை- “Begin, and cease, and then again begin,/ With tremulous cadence slow, and bring/ The eternal note of sadness in.//” அலையோசை உயர்கிறது, ஓய்கிறது, மீண்டும் உயர்கிறது, அதன் தீனமாய் நடுங்கி மெல்லத் தேயும் ஒலி, நித்திய துயரத்தின் நாதத்தைக் கொணர்கிறது. பெருமளவு முரண்களைக் கொண்டு கட்டியெழுப்பப்பட்ட இந்தக் கவிதையில், கடலின்- கர்ஜனை grating roar – தீனமாய் நடுங்கித் தேயும் கீதமாய் ஒலிப்பது – tremulous cadence slow– பொருத்தமாய் இருக்கிறது அதற்கு முன், Begin, and cease, and then again begin என்று இதற்கான சூழல் உருவாக்கப்பட்டு விட்டது.

கடலின் துயரம் காலங்காலமாய் உள்ள துயரம்- வெகுகாலம் முன்னர் ஒரு கிரேக்க காவியகர்த்தா தன் கடற்கரையில் இதைக் கேட்டு நின்றிருக்கிறான்- அது மானுட துன்பங்களின் கொந்தளிக்கும் ஏற்ற இறக்கங்களை அவனுக்கு நினைவுபடுத்தியிருக்கிறது. காலத்திலும் இடத்திலும் அவனுக்கு வெகு தொலைவில் உள்ள இந்தக் கடற்கரையில், அதன் ஓசையில் நமக்கும் ஒரு எண்ணம் கிட்டுகிறது- . “Sophocles long ago/ Heard it on the Ægean, and it brought/ Into his mind the turbid ebb and flow/ Of human misery; we/ Find also in the sound a thought,/ Hearing it by this distant northern sea.”

கண்முன் காணக்கிடைக்கும் காட்சிகள், செவிக்குரிய ஓசைகள் என்று இதுவரை விவரித்த ஆர்னால்ட் கடலின் slow, tremulous cadence என்பதை eternal note of sadness என்று உருவகித்து காலவெளியில் விலகிச் சென்று சொபோகிலஸ் என்ற தொல் காவியகர்த்தாவைத் தொடுவதால் அவர் இப்போது தனிமனித அவஸ்தைகளிலிருந்து விலகி பொதுநிலைகளைப் பேச முடிகிறது. கவிதையில் இந்த இடம் மிக அழகாக, எந்தப் பிசிறுமின்றி எட்டப்படுகிறது- ,

ஒருகாலத்தில் நம்பிக்கை ஒரு கடலாய் இருந்தது. அது நிறைந்திருந்தது. பூமியின் கரைகளை வளைத்திருந்தது.- இதன் இழப்பு சோகம் நிறைந்தது. முன்னமே நாம் ‘slow, tremulous cadence’, ‘eternal note of sadness‘, என்பதை எல்லாம் படித்துவிட்டதால், “The Sea of Faith/ Was once, too,” என்ற இடத்தில் நம்பிக்கையின்மையை ஒரு பெருஞ்சோகமாய் நாம் எதிர்கொள்கிறோம், “Was once, too, at the full, and round earth’s shore/ Lay like the folds of a bright girdle furled“” என்பதை எல்லாம் இல்லாத ஒன்றாகவே வாசிக்கிறோம். கடல் ஒரு நீண்ட பெருமூச்சு போல் பின்வாங்குவதன் சோகத்தை உணர்கிறோம்.

இதை எப்படி விவரிப்பது என்று தெரியவில்லை, சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்வது போலிருக்கலாம் – ஒரு இசைப்பாடல் போல் மாத்யூ ஆர்னால்ட் இந்தக் கவிதையில் ஆரோகண, அவரோகணங்களை அமைத்திருக்கிறார். முன்னர், “Listen! you hear the grating roar/ Of pebbles which the waves draw back, and fling,/ At their return, up the high strand,/ Begin, and cease, and then again begin,” என்பதில் நாம் ஒரு தொடர் எழுச்சியைக் கண்டோம்- ஆனால் அது எழுச்சியல்ல, வீழ்ச்சி என்பது இங்குதான் தெரிகிறது- “But now I only hear/ Its melancholy, long, withdrawing roar,/ Retreating, to the breath/ Of the night-wind, down the vast edges drear/ And naked shingles of the world.Grating roar என்பது melancholy, withdrawing roar என்றாகிறது; ‘Begin, and cease, and then again begin‘ என்று எத்தனை தொடர்ந்தாலும் அது, நீண்டகால பார்வையில், “melancholy, long, withdrawing” என்று தோற்கிறது; “pebbles which the waves draw back, and fling,” என்பது போய் கடல் எல்லாம் விட்டுச் செல்லும் பெருந்தோல்வியாகிறது- “naked shingles of the world“. “Come to the window, sweet is the night-air!” என்று சொன்னவர்தான், “Retreating, to the breath/ Of the night-wind,” என்றும் சொல்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.

we/ Find also in the sound a thought,” – அலையோசை கேட்டுப் பிறந்தது ஒரு எண்ணம்தான், அது கிரேக்க துயர்காவியங்களுக்குச் சென்று அமைதியைக் குலைத்து பெருஞ்சோகத்தால் நிறைத்துவிட்டது. எழுச்சி கண்ட உணர்வுகள் வீழ்ச்சியின் முன் நிற்கின்றன.

இது ஏன் சாதாரண ஒரு காதல் கவிதையாக நிற்பதில்லை என்றால் இங்கு ஒரு சுத்திகரிப்பு நிகழ்ந்திருக்கிறது. எல்லாம் அமைதியாய், நிர்மலமாய், நிச்சலனமாய் இருக்கின்றன என்ற திரை விலகிவிட்டது. பரஸ்பர காமத்தின் நிர்வாணத்தை அல்ல, சமய நம்பிக்கை அளிக்கும் நிச்சயங்களின் உறுதிப்பாடற்ற “naked shingles of the world” என்ற நிர்மூல நிர்வாணத்தை எதிர்கொள்கிறது காதல். இனிவரும் வரிகள் மிகவும் உருக்கமானவை, அவ்வளவு எளிதில் மறக்கப்பட முடியாதவை. தேசீய கீதத்துக்குரிய உணர்ச்சி மேலீடு கொண்டவை.

Ah, love, let us be true/ To one another! for the world, which seems/ To lie before us like a land of dreams,/ So various, so beautiful, so new,”- இதில் உள்ள ah, என்ற சொல், நாம் ஒருவருக்கொருவர் உண்மையாய் இருப்போம் என்ற விருப்பத்தை வெளிப்படுத்தும்போது எவ்வளவு இனிதாய் நம் மனதில் ஒலிக்கிறது. இந்த உலகம் நம் முன் கனவுகள் நிறைந்த ஒன்றாய் காணப்படுகிறது, இதில் எத்தனை எத்தனை காட்சிகள், எத்தனை எத்தனை அழகுகள், இது எத்தனை புதிதாய்ப் பிறந்தது போலிருக்கிறது” – ஆனால். ஆனால், இங்கு ஆனந்தமில்லை, காதலில்லை, ஒலியில்லை, உறுதிப்பாடில்லை, அமைதியில்லை, வலிக்கு மருந்தில்லை “Hath really neither joy, nor love, nor light,/ Nor certitude, nor peace, nor help for pain;“. இங்கு நாம் ஒருவருக்கொருவர் உண்மையானவர்களாய் இருப்பதைத் தவிர நமக்கு வேறென்ன மெய்ம்மை இருக்கிறது?

சமய உணர்வுகளும் சமய நம்பிக்கைகளும் வலுவாக இருந்திருந்தால் இது ஒரு கனவுலகாக இருந்திருக்குமா, இதன் அழகுகளும் அத்தனை இன்பங்களும் புதுமைகளும் நமக்குரியனவாய்க் கிடைத்திருக்குமா? Faith என்பதைக் குறிப்பிட்ட ஒரு சமயம் சார்ந்ததாய் நாம் குறுக்கிப் புரிந்துகொள்ள வேண்டாம் என்று நினைக்கிறேன் (மாத்யூ ஆர்னால்டு சமய நம்பிக்கையைதான் குறிப்பிடுகிறார் என்றாலும்). நமக்கு மிஞ்சிய எந்த விஷயத்திலும் நம்பிக்கை கொள்ளாதிருத்தல் – அது சமயமோ கோட்பாடோ லட்சியமோ ஆளுமையோ, எதிலும் நம்பிக்கை கொள்ள முடியாத நிலை, இங்கு நாம் என்ன செய்ய முடியும்? ஒருவருக்கு ஒருவர் உண்மையாய் இருக்கலாம். எல்லாம் பொய்க்கக்கூடும், ஆனால் எனக்கு நீயும் உனக்கு நானும் உண்மையாய், விசுவாசமாய் இருப்போம். இது எதையும் மாற்றப் போவதில்லை. நம்மை இருள் சூழ்கிறது, நம் பாதுகாப்புக்கு அரணில்லை. போர் ஒலியும் தப்பியோடும் பாதங்களின் ஓசையும் ஒரு கலவரமாய் நம்மைக் கொண்டு செல்கின்றன. இங்கு சூதறியா போர்ப்படைகள் இருளில் மோதிக் கொள்கின்றன. – “And we are here as on a darkling plain/ Swept with confused alarms of struggle and flight,/ Where ignorant armies clash by night.”

இப்போது இதை எழுத முக்கியமாக இருந்த காரணத்தைச் சொல்லி விடுகிறேன் – அண்மையில் பதிப்பிக்கப்பட்ட சொல்வனம் – வெங்கட் சாமிநாதன் சிறப்பிதழ் வாசித்திருப்பீர்கள். அதில் திலீப்குமார் கட்டுரை ஒன்றிருக்கிறது- “வெங்கட் சாமிநாதன் மறைவைத் தொடர்ந்து – திலீப்குமாருடன் ஓர் உரையாடல்” என்ற கட்டுரையில் எழுத்தாளர் திலீப்குமார், “இன்று நாம் பல்வேறு நெருக்கடிகளுக்கு ஆளாகியிருக்கிறோம். தீமை கலவாத நன்மை என்ற ஒன்றே இல்லாதது போலிருக்கிறது,” என்று சொல்லி, பின் இப்படி முடிக்கிறார்- “இன்று நாம் எதிர்கொள்ளும் சிக்கல்களைப் பார்க்கும்போது, இலக்கியத்தின் வாயிலாக எந்த ஒரு சமூக, அரசியல் நோக்கத்தையும் கை கொள்ள முடியாத ஒரு சூழலே நிலவுகிறது. இந்த அபத்தத்தை எதிர்கொள்ள, மற்ற எல்லாவற்றையும் விட, சாமிநாதன் பரிந்துரைத்த நேர்மையும் தனி மனித மதிப்பீடுகளும் நமக்கு ஒருவேளை உதவக்கூடும்” எது சரி, எது தவறு, எந்தப் பக்கம் திரும்பினால் நன்மை கிட்டும், எது அழிவுக்கு கொண்டு செல்லும் என்று தெரியாத நிலையில் நமக்கு ஒரு கலங்கரை விளக்கம் போலிருப்பது தனி மனித நேர்மை ஒன்றுதான். உனக்கு நானும் எனக்கு நீயும் நேர்மையாய் இருப்போம், என்று நம்பிக்கையே கொந்தளிப்புக்கும் மாய அமைதிக்கும் அப்பால், பாதுகாப்பான இடத்துக்கு நம்மைக் கொண்டு செல்வதாக இருக்கும்.

(இந்த வாசிப்பில் சில பிரச்சினைகள் இருக்கின்றன, அவை அடுத்த பகுதியில்)

2 comments

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.