ஜெயஸ்ரீ ரகுராமன்
நானும், ரகுவும் வாசிக்கும் பழக்கம் உள்ளவர்கள். ரகு தான் வாசிப்பதை ரசனையுடன் பகிர்ந்துகொள்வதில் சமர்த்தர். கணையாழியில் பாவண்ணன் எழுதிய கதை ஒன்றை (சிலம்பம் சொல்லித்தரும் ஆசிரியர் பற்றியது) மிகவும் ரசனையோடு வாசித்துக் காண்பித்தார். “இவர் இந்தப் பக்கம் வளவனூர்க்காரராகத்தான் இருப்பார்போல” என்று சொல்லி ரசித்து ரசித்து வாசித்தோம். அதன் பிறகு பாவண்ணனின் சிறுகதைத் தொகுதிகளை வாங்க ஆரம்பித்தோம். ‘அடுக்கு மாளிகை’ என்ற கதையைப் படித்துவிட்டு நெகிழ்ந்துபோய் நானும், ரகுவும் கண்ணீர் கசிய சிறிது நேரம் அமர்ந்திருந்தோம். அக்கதையை எங்கள் குழந்தைகளுக்கும் (சிறுவர்களாய் இருந்தார்கள் இருவரும்) வாசித்துக் காண்பித்தோம்; அவர்களுக்கும் அழுகையே வந்துவிட்ட்து. வாசிப்பின் மூலமே நாங்கள் அறிந்த பாவண்ணனை நேரில் சந்திப்போம்; நண்பர்களாவோம் என்று அப்போதெல்லாம் நினைத்துப் பார்த்ததேயில்லை.
கடலூரில் ‘இலக்கியச் சோலை’ என்ற அமைப்பை நடத்திவரும் எழுத்தாளர் வளவ. துரையன், ‘பாவண்ணனின் படைப்புலகம்’ பற்றி 28/10/2000 அன்று ஒரு முழுநாள் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தார். அந்நிகழ்ச்சியின்போதுதான் பாவண்ணனைப் பார்த்தோம். அவர் தன் ஏற்புரையை வழங்கும் நேரத்திற்குத்தான் என்னால் போக முடிந்தது. ’எழுத்தாளர்கள் என்றால் நெருங்கவே முடியாதவர்களாக இருப்பார்கள்; நாம் பேச முடியுமா?’ என்றெல்லாம் மனத்தில் அச்சமும், தாழ்வுணர்ச்சியும் தோன்றின. ஆனால், அவர் ஏற்புரையைத் தொடங்கிய விதமே அவருடைய எளிமையான, நெகிழ்ச்சியான மனதைக் காட்டிவிட்ட்து. அப்போதே கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஆகியிருந்தன; பல சிறுகதைத் தொகுப்புகள், கட்டுரைத் தொகுதிகள், மொழிபெயர்ப்புகள் என அவருடைய புத்தகங்கள் எத்தனையோ வெளிவந்திருந்தன. அதனால்தானே அவர் படைப்புலகத்திற்கான விழாவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது? ஆனால் மனதில் அப்படியெல்லாம் பெரிய பயத்தை ஏற்படுத்தாமல், ‘இப்படியும் ஒரு மனிதரா?’ என்ற ஆச்சரியமே மனதில் நின்றது. அவருக்கான அந்நிகழ்ச்சியும், ஏற்புரையின்போது அவர் குரல் நெகிழ்ந்து, கண்கள் பனித்த காட்சியுமே மனதில் உறைந்துவிட்டன. அந்த அசைபோடலின் விளைவாக நாங்கள் ஒரு கடிதம் எழுதினோம். நம்பவே முடியாதபடி, அடுத்த ஐந்தாம் நாள் பதில் கடிதம் வந்துவிட்டது. அதன் பிறகு எத்தனையோ கடிதங்கள், சந்திப்புகள். எல்லாவற்றிலும் இலக்கியம் மட்டுமல்லாது, ஒரு தாயின் பரிவுடனான அன்பு, கரிசனம், வாழ்க்கை பற்றிய வழிகாட்டுதல்கள் (எவ்வித அறிவுரைத் தொனியும் இன்றி) என எல்லாமே இருக்கும்.
எப்போதெல்லாம் கடிதம் எழுதுகிறோமோ, அப்போதெல்லாம் உடனே பதில் வரும்; ஆச்சரியமாக இருக்கும். ஒரு பக்கம் அலுவலகப் பணி; மறுபக்கம் எழுத்து, வாசிப்பு; இன்னொரு பக்கம் சொந்த பந்தங்கள் என்று குடும்ப வாழ்க்கை. இவை எதையுமே அவர் ஒன்றுக்காக மற்றொன்றை விட்டுக்கொடுத்ததே இல்லை. ’எல்லாவற்றிற்கும் எப்படி இவருக்கு நேரம் கிடைக்கிறது?’ என ஆச்சரியப்பட வைக்கும் அவரது பணிகள்.
புத்தகங்களைப் படித்தால் விமர்சனம் எழுத வேண்டும் என்ற ஆர்வம் அவரிடமிருந்தே எனக்கு வந்தது எனச் சொல்லலாம். 2003ல் அவருடைய ‘எனக்குப் பிடித்த கதைகள்’ என்ற தொகுப்பு வெளிவந்தது. தனக்குப் பிடித்த கதைகளாக நல்ல சிறுகதைகளை அடையாளப்படுத்தியவர், கதைகளின் நுட்பமான விஷயங்களை எடுத்துக் கூறியிருப்பது சிறுகதைகளை நாம் எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற புரிதலைத் தந்தது. 2004ல் வெளிவந்த ‘ஆழத்தை அறியும் பயணம்’ தொகுப்பின் மூலம் என் போன்ற வாசக நண்பர்களுக்குப் பரிச்சயமே இல்லாத பழம்பெரும் தமிழ்ப் படைப்பாளிகளையும், புலம் பெயர்ந்த தமிழ்ப் படைப்பாளிகளையும், அயல்மொழி எழுத்தாளர்களின் கதைகளையும் அறிமுகப்படுத்தியவர் பாவண்ணனே. இப்புத்தகத்தின் வெளியீட்டு விழா வளவனூரில் நடைபெற்றபோது, அப்புத்தகம் பற்றிப் பேச வாய்ப்பளித்து, எனக்கும் புத்தகங்கள் குறித்துப் பேச வரும் என்னும் தன்னம்பிக்கையை ஊட்டியவர் இவரே. பல வருடங்கள் கழித்து அந்நிகழ்ச்சியின் வீடியோ பதிவைப் பார்க்கும்போது, நான் பேசும்போது எவ்வளவு பதற்றமாக இருந்தேன், என் தொண்டைக்குழி எவ்வளவு உருண்டது என்று தோன்றும். ’இப்படியிருந்த என்னைத் தன்னம்பிக்கையூட்டி வளர்த்தவர் பாவண்ணன் அல்லவா?’ எனும் நினைப்பு, கண்ணோரம் நீர் துளிர்க்க வைக்கிறது.
”’ஒரு படைப்பை எவ்வாறு அணுகுவது?’ என்கிற கேள்விக்கான விடையில் இளம் வாசகர்கள் ஓரளவாவது தெளிவுள்ளவர்களாக இருப்பது நல்லது; இப்பயிற்சி, பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் கிட்டுகிற வாய்ப்புகள் மிகக் குறைவாகவே உள்ள நிலையில் மூத்த வாசகர்களின் அனுபவப் பகிர்வுகளையே இளம் வாசகர்கள் நம்பி, நாடி வர வேண்டியிருக்கிறது. கேட்டுத் தெரிந்து கொள்வதில் எவ்விதப் பிழையுமில்லை; சொல்லிச் செல்வதில் மூத்தவர்களுக்கு எவ்வித இழப்புமில்லை. உண்மையில் இதை ஒரு கடமையாகவே மூத்த வாசகர்கள் செய்வது நல்லது” என்பவை தன்னுடைய ‘வழிப்போக்கன் கண்ட வானம்’ என்ற கட்டுரைத் தொகுதியில் பாவண்ணன் குறிப்பிட்டுள்ள வரிகள். இவ்வரிகளை அவர் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறார் என்றே சொல்ல வேண்டும்.
2004ல் வெளிவந்த ‘எழுத்தெனும் நிழலடியில்’ என்ற கட்டுரைத் தொகுப்பு, முதுபெரும் எழுத்தாளர்களை அவர்களின் படைப்புகளின் வழியே இளம் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் ஒன்று. ‘ஆயிரம் மரங்கள்; ஆயிரம் பாடல்கள்’ என்ற புத்தகம் (2004) கன்னட இலக்கிய உலகை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கோடு அமைந்ததே.
நூலகத்திற்கோ, புத்தகக் கண்காட்சிக்கோ செல்லும் முன், வாசிக்க வேண்டிய புத்தகங்கள் பற்றிக் கேட்டால் எப்போதுமே தயாராக ஒரு முழுநீளப் பட்டியலே தருவார். மடை திறந்த வெள்ளமென தன் ஞாபகத்திலிருந்தே சொல்லும் அவரது திறனைக் கண்டு நான் வியக்காத நாளேயில்லை.
நல்ல கதை, நல்ல கவிதை, நல்ல நாவல், நல்ல சினிமா என எல்லாவற்றிலும் நல்ல கூறுகளை எடுத்துச் சொல்வதில் அவருக்கு நிகர் அவரேதான். கடிதங்களுக்கு உடனடியாகப் பதில் எழுதுவதைப் போலவே, தான் படிக்கின்ற நல்ல புத்தகங்களுக்கு உடனடியாக விமர்சனம் எழுதி, அடுத்தவர்களும் அப்புத்தகங்களைத் தேடிப் படிக்கத் தூண்டுபவராய் இருக்கிறார். ஏதாவது ஒரு புத்தகத்தை வாசித்து முடித்தபின் அவரிடம் அது குறித்துப் பேசினால், “உடனே ஒரு கட்டுரையாக்குங்களேன்” என்று சொல்லிக்கொண்டே இருப்பார். அவருடைய மேடைப் பேச்சுக்கள் கூட எப்போதும் கட்டுரை வடிவிலேயே எழுதப்பட்டிருக்கும். ”நான் இது பற்றிப் பேசப் போகிறேன்” என்று அவரிடம் பொதுவாக எதையேனும் பற்றிக் கூறினால், “அப்படியே ஒரு கட்டுரை ஆக்கிடுங்க” என்று அவர் சொல்லத் தவறியதேயில்லை; தவறுவதேயில்லை.
சங்க இலக்கியங்கள், புராண இதிகாசங்கள் என எதைப் பற்றிச் சந்தேகங்கள் கேட்டாலும் அவரிடமிருந்து உடனடியாகப் பதில் வரும். அவருடைய ஞாபக சக்தி கண்டு நான் பலமுறை ஆச்சரியத்தில் மூழ்கிப் போயிருக்கிறேன். சில சமயம் ஏதாவது ஒரு விஷயம் பற்றிக் கேட்டவுடன் பதில் சொல்ல முடியாவிட்டால்கூட அதைத் தேடிப்பிடித்து, அது சம்பந்தமாக நாமே மறந்திருந்தாலும், “அன்னைக்குக் கேட்டீங்க இல்லையா?” என்று ஆரம்பித்துப் பேசும் அவருடைய நேர்மையும், ஈடுபாடும் வியக்க வைத்திருக்கிறது. அவருக்குத் தெரியாத ஒரு விஷயமாயிருந்தால், “எனக்கு அது கவனமில்லம்மா” என்று சொல்லக்கூடிய நேர்மையும் அவரிடம் மிகவும் பிடித்த குணம்.
பாவண்ணன் கொடுத்து, ’சிவராம காரந்த்’தின் சில நாவல்களைப் படித்தோம். எங்கள் வீட்டில் இருந்த பாட்டி ‘மண்ணும் மனிதரும்’ எனும் நாவலைப் படித்துவிட்டுப் பாவண்ணனிடம் அதுபற்றிப் பேசும்போதெல்லாம் அதை மிகுந்த மகிழ்ச்சியோடு கேட்டுக்கொண்டிருப்பார். நானும், ரகுவும் கதைகள், நாவல்கள், சினிமா என்று எதையாவது பேசும்போதெல்லாம் எங்களால் எவ்விதத் தயக்கமுமின்றி பாவண்ணனுடன் பேச முடியும். ஏனெனில், ‘நம்மைக் குறைத்து மதிப்பிட்டு விடுவாரோ’ என்ற தயக்கம் அவருடன் பேசும்போது இருப்பதே இல்லை. ‘சே… இதுகூட உங்களுக்குச் சரியாப் புரியலை’ என்ற தொனியில் அவர் எப்போதும் பேசவே மாட்டார். தன்னுடைய கருத்துக்களையும் சொல்லி, “இது ஒரு கோணம்; அது ஒரு கோணம்” என்பார் அழகாக. அவர் சொன்ன பிறகு நமக்குச் சரியான புரிதல் வரும். பாவண்ணனுடன் நட்பான பிறகு, நாங்கள் படைப்புகளை அணுகுவதற்கு நிறைய கற்றுக் கொண்டிருக்கிறோம் என்றே சொல்ல வேண்டும்.
எங்களுக்கு அடுத்தது எங்களுடைய 20 வயது மகன் தன்னுடைய வலைப்பதிவுகளை அவரிடம் பகிர்ந்து கொள்கிறான். அவனுக்கும் தன் விமர்சனங்களையும், உற்சாகத்தையும் கொடுத்துக் கொண்டேயிருக்கிறார். சங்க இலக்கியமும் அவரால் பேச முடிகிறது; கிரிக்கெட்டும் பேச முடிகிறது.
எங்கள் நண்பர் ஒருவர், தன் மகன் பாவண்ணனின் கதை ஒன்றைப் படித்து ரசித்தான் என்று அவரிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார்; உடனே அந்தப் பையனைத் தொடர்பு கொண்டு அவனோடு பேசியிருக்கிறார் பாவண்ணன். இங்கு இதைச் சொல்வதற்கான காரணம், தலைமுறை வித்தியாசமில்லாமல் பாவண்ணனால் அனைவரிடமும் எளிமையாகப் பழகவும், பேசவும் முடியும். அவருடைய குரலிலேயே அன்பு வழிந்தோடும்.
சொல்லப்போனால், இலக்கியத்தில் மனித வாழ்க்கையைத் தேடுபவர் அவர். இலக்கியம் நம்மைப் பண்படுத்தும் என்ற அசையாத நம்பிக்கை கொண்டிருப்பவர்; அதையே எல்லோருக்கும் சொல்பவர். அன்பும், அதனைப் பகிர்தலும், விட்டுக் கொடுத்தலுமே வாழ்க்கை என்பதைக் கடைபிடிப்பவர்; அதையே தன் படைப்புகளின் மூலமும், வாழ்க்கையின் வழியாகவும் சொல்லி வருபவர். எழுத்துக்கும், நடைமுறை வாழ்க்கைக்கும் வித்தியாசமின்றி வாழும், அன்பும் எளிமையும் இணைந்தேயிருக்கும் ஒரு ஆளுமையை நண்பராய் நாங்கள் பெற்றிருக்கிறோம் என்பதை நினைந்து, நினைந்து பெருமிதம் கொள்கிறோம்.