![]()
பொதுவாகச் சொல்வதென்றால் சொல் விளையாட்டே என் கவிதை முயற்சிகள். தினமும் நினைப்பேன் இன்று எப்படியாவது ஒரு சிறுகதை எழுதிவிட வேண்டும் என்று. ஆனால் எழுத பயமும் சோம்பலும் சேர்ந்து அத்துணிவை உடனே அழிக்கும். நல்ல வாசகனான என்னால் மோசமான சிறுகதையைத்தான் எழுத முடிகிறது என்கிற நடுக்கத்தினால் கவிதை போன்று ஏதாவது எழுதி்ப் பார்ப்போம் என்று முயற்சிப்பேன். பத்து முதல் பதினைந்து நிமிடங்களில் தடதடவென எழுதிய உடன் எதையாவது படிப்போம் என்று சோர்வு தட்டும்.
கவிதை எழுதுவதற்கான முன் தயாரிப்பென்றால் ஒரு வார்த்தை அல்லது ஒரு சொற்றொடர் கிடைத்தால் போதும். ஜெயமோகன் சொல்வதைப்போன்றுதான் என்று சொல்லத் துணிவேன். அந்த ஒரு சொற்றொடர் அளிக்கும் உத்வேகத்தில் எழுதி முடிப்பேன். வரிகளின் சந்தங்கள் மற்றும் சொற் சிக்கனம் குறித்து மட்டுமே கவனம் இருக்கும்.
பொருளின்மையின் குதுாகலமாக என் வரிகள் இருக்கவேண்டும் என்பதுதான் என் கவிதை விருப்பம். எதிர்காலத்தில் எழுதப்போகும் சிறந்த கவிதைகளுக்கான வீட்டுப்பாடம் இவை என்றும் எண்ணிக் கொள்கிறேன்.