காலத்துகள்
காலை
மாட்டின் கால்களுக்கிடையில்
கன்றைப் போல் எம்பி எம்பி
அக்கிகளைத் தேடும் காகம்
களியாடலில் இரு அணில்கள்,
மலர்களில் இளைப்பாறும் வண்ணத்துப்பூச்சிகள்,
தன்னைச் சுத்தம் செய்து கொள்ளும் பூனை,
சோம்பல் முறிக்கும் நாய்
பின் பனிக்காலத்தின் எச்சமென வீசும் மென் தென்றலில்
பறவைகளின் இனிய அழைப்புக்கள்
இன்னும் துயில் நீங்கா வீடுகளுக்கு வெளியே
மனிதர் யாருமற்ற ஞாயிறு காலை
தெருவில் உலகம்
நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது
மாலை
முதல் பேருந்தைப் பிடிக்க தயாராகிறார்கள்
வெளியூரில் வேலை பார்ப்பவர்கள்
கடற்கரையில், திரையரங்குகளில், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில்
மகிழ்ந்திருப்பவர்கள்
அடுத்த நாள் காத்திருக்கும் அலுவல் குறித்த நினைவு இடையிட
திடுக்கிடுகிறார்கள்
காலையிலிருந்து விளையாடிக் கொண்டிருந்த
குழந்தைகள் அமைதியாகின்றன
சனி மாலை தந்த உற்சாகம் மறைய,
யாரும் கவனிப்பாரற்று கடந்து செல்லப்படுகிறது
மற்றுமொரு அழகிய ஞாயிறு மாலைப் பொழுது