அமில ஆவி பறக்கிறது
கடையைச் சுற்றிலும்
ரசாயனப் பொடியின் வெண்மை நெடி
கடை முழுவதும்
கருத்துக் கொண்டிருக்கின்றன
பித்தளை வெண்கலப்
பாத்திரங்கள்
அரித்துச் செல்கிறது அனைத்தையும்
திருகல் காமம்
—ந.ஜயபாஸ்கரன்
(சிறுவெளி வியாபாரியின் ஒருவழிப் பயணம் தொகுப்பு)
நாம் எதையும் எப்படி வேண்டுமானாலும் வாசிக்கலாம். ஆனால், வாசிப்பின் பயன் என்ன என்ற கேள்வி ஒரு சில வாசிப்புகளுக்கு இடமில்லாமல் செய்கிறது: மாறாய், குறிப்பிட்ட ஒரு வாசிப்பின் விளைவு என்ன என்ற கேள்வி நம் கற்பனையை இது போல் குறுக்குவதில்லை. அங்கிருந்து வேண்டுமானால், எந்த வாசிப்பில் என்ன பயன், எந்த வாசிப்பு பொருத்தமாக இருக்கும் என்ற இடத்துக்குப் போவது சரியாக இருக்கலாம்.
இதை ஏன் சொல்கிறேன் என்றால் சரியா, தப்பா, தேவையா, இல்லையா என்றெல்லாம் கவலைப்படாமல் பக்க அணிமை (Juxtaposition) என்ற இலக்கிய கருதுகோள் இந்த வாசிப்புக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. “The arrangement of two or more ideas, characters, actions, settings, phrases, or words side-by-side or in similar narrative moments for the purpose of comparison, contrast, rhetorical effect, suspense, or character development,” என்று ஒரு தளத்தில் இந்தப் பதம் வரையறை செய்யப்படுகிறது. தமிழில் இதற்கு இணையான யாப்பிலக்கணச் சொல் நிச்சயம் இருக்கும், எனக்குத் தெரியவில்லை.
“தூஷன் மகவேவ் எனும் மனோவசியக்காரன்”” என்ற தலைப்பில் பதிப்பிக்கப்பட்ட கட்டுரையொன்றில் “Man is not a Bird” என்ற கிழக்கு ஐரோப்பிய திரைப்படம் ஒன்றைப் பேச இந்தப் பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதை முதலில் படித்துப் பார்க்கலாம்.
ந. ஜயபாஸ்கரன் கவிதை, “அரித்துச் செல்கிறது அனைத்தையும்/ திருகல் காமம்“ என்று ஆச்சரியமாய் முடிகிறது. பொதுவாக, காமம் வெம்மையுடன் தொடர்புபடுத்தப்படுவது, கொந்தளிப்பு, தகிப்பு, தழல், உருக்குதல் போன்றவை காமத்துக்கு உரியவை. அரித்தல் நீரின் இயல்பு. எரிமலைக் குழம்பு, கொதிநீர் போன்றவற்றைத் தவிர நீர் குளிர்விப்பது அல்லது ஆற்றுவது- காமம் எதையும் அரித்துச் செல்லும் என்று நாம் எதிர்பார்க்க மாட்டோம்.
போதாக்குறைக்கு திருகல் காமம் என்று வேறு எழுதுகிறார் ஜயபாஸ்கரன். இதை எப்படி புரிந்து கொள்வது என்பதற்கு கவிதையில் குறிப்புகள் இல்லை. இதற்கு முன் உள்ள எதுவும் காமத்தைப் பேசுவதில்லை. இந்த இரு வரிகள் தனித்து நிற்கின்றன, எப்படி வேண்டுமானால் புரிந்து கொள்ளலாம் என்பது போல். அரித்துச் செல்கிறது என்பதால் இந்தக் காமத்தை, அதன் அழகற்ற பொருளில்தான் புரிந்து கொள்ள முற்படுவோம், உதாரணத்துக்கு, வக்கிரம் என்ற அர்த்தத்தில் perverted என்று. ஆனால் அப்படி எதுவும் இருந்தால் வக்கிரம் என்றே அவர் எழுதியிருக்கலாம், நிற்க.
கவிதை, ‘அமில ஆவி பறக்கிறது’, என்று துவங்குகிறது. அமிலம் ஒரு கரைப்பான், வெம்மை கூடிய, ஆவி பறக்கும் கரைப்பான். இப்போது மிக எளிதாக நாம் காமத்தையும் அமிலத்தையும் இணைத்துப் பார்க்க முடிகிறது. ஜெயபாஸ்கரன் அமிலத்தை துவக்கத்திலும் காமத்தை முடிவிலும் வைத்திருப்பதால் இந்த இரண்டுக்கும் இடையில் தொலைவு அதிகம் என்று பொருள் கொள்ள வேண்டியதில்லை. துவக்கம்- முடிவு என்ற உறவில் அமிலமும் காமமும் மிகவும் நெருங்கி நிற்கின்றன.
கடையைச் சுற்றிலும் அமில ஆவி பறப்பது அவ்வளவு சந்தோஷமான விஷயமல்ல. அமிலம் ஆக்கப்பூர்வமான விஷயங்களுக்குப் பயன்பட்டாலும், கரைப்பது அதன் குணம், காரம் அதன் மணம் என்று நினைக்கிறேன். இது கடைக்கு வெளியே- நாம் அடுத்து கடைக்குள் நுழைகிறோம்.
‘ரசாயனப் பொடியின் வெண்மை நெடி/ கடை முழுவதும்’ என்று அடுத்த வரிகள் வந்து விழுகின்றன. இப்போது நம் சித்திரம் இன்னும் தெளிவடைகிறது- அமில ஆவி வெளி வஸ்து அல்ல, உள்ளே கடையை நிறைத்திருக்கிறது. வெளியே நாம் காண்பது கசிவு, உள்ளேதான் ரசாயனப்பொடியின் காட்டமான வெண்மை நெடி.
வெண்மை நெடி என்பது ஒரு சுவாரசியமான பயன்பாடு. நீல நெடி, சிவப்பு நெடி, வெண்மை நெடி என்றெல்லாம் ஒவ்வொரு வண்ணத்துக்கும் ஒவ்வொரு நெடி உண்டா? இருக்காது என்றுதான் நினைப்போம். ஆனால் சூடுபடுத்துபவர்கள் இடுபொருள் வெவ்வேறு வண்ணங்களில் எரியும்போது அது வெவ்வேறு மணம் கொள்வதை அறிவார்கள் என்று நினைக்கிறேன். அதாவது ரசாயனப் பொடி நெருப்பில் இடப்பட்டு எரியும்போது அந்த நெருப்பு செந்தழல் என்ற நிலையில் ஒரு மணம் வீசும், வெண்ணிறச் சுவாலையாய் வேறு மணம் வீசும் என்று நினைக்கிறேன் – இந்த வெண்சுவாலையின் ரசாயன நெடியை கவிஞர் வெண்மை நெடி என்று சொல்வதாக ஊகிக்கிறேன். இந்த உஷ்ணத்தைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லும் சுவாரசியமானது – white heat:
இதற்கு அகராதியில்,
1. (General Physics) intense heat or a very high temperature, characterized by emission of white light
2. (informal) a state of intense excitement or activity
என்று அர்த்தம் போட்டிருக்கிறது.
ரசாயனப்பொடியை உயர் வெப்பத்தில் சூடுபடுத்தும்போது எழும் அமில நெடி கடைக்குள் நிறைந்திருக்கிறது. கடைக்கு வெளியே அதன் ஆவி கசிகிறது, ஒரு வெண் புகை வருகிறது என்று நினைக்கிறேன், இப்படி எல்லாம் நடக்குமா என்று தெரியவில்லை. ஆனால் இப்படிப்பட்ட காட்சிதான் மனதில் தோன்றுகிறது.
இதற்கு அடுத்து, “கருத்துக் கொண்டிருக்கின்றன/ பித்தளை வெண்கலப்/ பாத்திரங்கள்” என்று வந்து விடுகிறது, நாம் ஏதோ ஒரு பாத்திரக்கடையில் இருக்கிறோம் என்பதை இப்போது புரிந்து கொள்கிறோம். ஆனால் உடனே ஒரு சந்தேகம், இந்த ரசாயனப் புகையால்தான் பாத்திரங்கள் கருக்கின்றனவா, ஆக்சிடேஷன் ஆவது மாதிரி? இருக்காது என்று நினைக்கிறேன், கடை மாதிரியான இடத்தில் அந்த மாதிரி வேலையைச் செய்ய மாட்டார்கள். பாத்திரங்களுக்கு முலாம் போடத்தான் இதைச் செய்கிறார்கள் என்றே வைத்துக் கொண்டாலும், ஒரு பாத்திரம் பிரகாசிக்கும்போதே கடையிலுள்ள மற்ற பாத்திரங்கள் சோபையிழந்து கருத்துப் போகுமே, எந்தக் கடைக்காரன் இப்படி ஒரு வேலையைச் செய்வான், இதில் லாபத்தைவிட நஷ்டம்தானே அதிகம்?
இரண்டு சாத்தியங்கள் – இது போல் எத்தனைதான் மறுபடியும் மறுபடியும் முலாம் பூசிக் கொண்டிருந்தாலும் பாத்திரங்கள் கருத்துக் கொண்டுதான் இருக்கின்றன என்பது ஒன்று. இரண்டாவது சாத்தியம், முலாம் பூசும்போது பாத்திரம் பளபளப்பது கண்கூடாகத் தெரிகிறது, ஆனால் இன்னது நடக்கிறது என்பது வெளியே தெரியாமல்தானே மெல்ல மெல்ல மற்ற பாத்திரங்கள் கருக்கின்றன? அதாவது, இதன் சாதக விளைவுகள் உடனே கிடைக்கின்றன, பாதக விளைவுகள் தாமதமாக ஏற்படுகின்றன (அதற்குள் பாத்திரங்கள் விற்றுப் போகலாம் என்பதால் இது கடைக்காரர் கையைக் கடிக்கும் வேலையல்ல).
இந்த இரண்டில் எதை எடுத்துக் கொள்வது? முதலில் முன்னதை எடுத்துக் கொள்வது சரியாக இருக்கும் என்று தோன்றியது. ஆனால் அரித்துச் செல்கிறது என்றும் இந்தக் கவிதையில் வருவதால், அமிலத்தின் corrosive தன்மையைக் கணக்கில் கொண்டு, இரண்டாம் பொருள் கொள்ளலாம் என்று தோன்றுகிறது.
சரி, இங்கு என்னதான் நடக்கிறது? ஒரு சாதாரண, அன்றாட கடைத்தெரு காட்சி, “அரித்துச் செல்கிறது அனைத்தையும்/ திருகல் காமம்” என்று முடிக்கும்போது கவிதை வேறொரு இடத்துக்குப் போய்விடுகிறது. திருகல் காமம் என்று வேறு சொல்கிறார்- திருகல் காலம் என்று சொன்னாலாவது புரிந்து கொள்ளலாம், entropy பற்றி ஏதோ சொல்கிறார் என்று.
இத்தனை நேரம் அமில ஆவி, வெண்மை நெடி என்று எல்லாவற்றையும் ஒரு ரசாயன வினையாக வாசித்துக் கொண்டிருந்தோம், இப்போது white heat என்பதன் இரண்டாம் பொருளையும் பார்க்கலாம் – (informal) a state of intense excitement or activity.
Merriam Webster அகராதியில் passion என்ற சொல், 5. depth of feeling என்ற பொருளுக்கு, white heat என்பதை ஒரு synonymஆகக் கொடுத்திருக்கிறார்கள்.
பொதுவாக வெப்பம் உருக வைப்பது, அரிக்கும் செயல் நீருக்கு உரியது (அமிலத்துக்கும் உரியது). காமம் அரித்துச் செல்கிறது என்பதால்தான் அதை திருகல் காமம் என்று சொல்கிறார் போலிருக்கிறது என்று இதை எல்லாம் ஆரம்பத்திலேயே சொல்லியாகி விட்டது.
இப்போது பக்க அணிமை என்ற விஷயத்துக்கு வரலாம் – காமத்தை அமிலத்துடன் இணைத்துப் பேச வைப்பதுதான் இந்தக் கவிதையில் ஜயபாஸ்கரனின் ஸ்ட்ரோக் ஆப் ஜீனியஸ். எந்த ரசாயனம் வெண்மை நெடியாகவும் அமில ஆவியாகவும் இருக்கிறதோ அதேதான் கருத்துப் போவதற்கும், அரித்து அழிப்பதற்கும் காரணமாகிறது (இதை அவர் நேரடியாகச் சொல்லவில்லை, மறைமுகமாகவும்கூட உணர்த்தவில்லை, அவர் அமிலத்தையும் காமத்தையும் பக்கத்தில் வைத்து வாசிக்கச் செய்வதால், நாம் அந்த மாதிரி நினைக்க முற்படுகிறோம்). காமம்தான் அந்த ரசாயனம் என்ற சுட்டலும் கவிதையில் சொல்லாத, ஆனால் நாமே மேற்கொள்ளும் ஒரு எளிய தாவல்.
கடைசி இரு வரிகள் இதற்கு முன் வந்த, அதுவரை ஒரு காட்சியாய் இருந்த, அத்தனையையும் ஒரு படிமம் ஆக்கி விடுகின்றன.
இனி ஒன்றுதான் மிச்சம் இருக்கிறது- திருகல் காமம் என்பதில் திருகலை என்னவென்று புரிந்து கொள்வது? இந்தக் கேள்வி மொழிபெயர்ப்பாளனின் கவலை. நம்மைப் பொறுத்தவரை. எது சோபை சேர்க்கிறதோ அதுவே மாசும் சேர்க்கிறது என்பதே திருகல் காமம் என்பதைப் புரிந்து கொள்ளப் போதுமானதாக இருக்கிறது. அந்தக் காமம், passion, நேரானதாக இருக்கலாம், வக்கிரப்பட்டதாக இருக்கலாம், மொழிபெயர்ப்பவனைத் தவிர நமக்கு எதுவானால் என்ன, எல்லாம் ஒன்றுதான்.
இங்கு ஷேக்ஸ்பியரின் 129ஆம் சானட், “The expense of spirit in a waste of shame” என்று துவங்கும் கவிதையை ஒப்பிடலாம். அவர் காமத்தைப் பேசுகிறார் , அவ்வளவுதான். எந்த வகை காமமாய் இருந்தாலும் அத்தனைக்கும் அது பொருந்தும். இந்தக் கவிதையும் அப்படிப்பட்ட ஒன்றுதான். இது என்ன சொல்கிறது, எதைச் சொல்கிறது என்று பேசுவதைவிட, எப்படிச் சொல்கிறது என்று பேசுவதுதான் அர்த்தமுள்ளதாக இருக்கும்.
பின்குறிப்பு:
1. அரிக்கும் காமம் குறித்து நண்பர் ஒருவர் எழுதியது:
“‘அனைத்தையும் அரிக்கும்’ என்பது எதையெல்லாம் குறிக்கக்கூடும் என்று யோசித்தேன். தன்மதிப்பு, வெட்கம், சமூகத்திற்காக ஏற்றிருக்கும் பாத்திரம் அனைத்தையும் காமம் அரிக்ககூடும். எந்த கீழ்மைக்கும் காமம் நம்மைத் துணியச் செய்யும். ஒரு பக்கம் காமத்தால் உள்ளம் பொலிவுறும்போது, இன்னொரு பக்கம் மனம் கருத்துக் கொண்டிருக்கிறது, காமம் அரித்துக் கொண்டிருக்கிறது என்பதை இவ்வாறாக புரிந்து கொண்டேன்.
2. ரசவாதம்
Part One: Life, XXXIII
DARE you see a soul at the white heat?
Then crouch within the door.
Red is the fire’s common tint;
But when the vivid ore
Has sated flame’s conditions,
Its quivering substance plays
Without a color but the light
Of unanointed blaze.
Least village boasts its blacksmith,
Whose anvil’s even din
Stands symbol for the finer forge
That soundless tugs within,
Refining these impatient ores
With hammer and with blaze,
Until the designated light
Repudiate the forge.
. ஒளிப்பட உதவி – ‘Emily Dickinson’, Maira Kalman, Venetian Red
இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்
சித்திரையாள் வருகை
இத்தரையில் எல்லோரும்
எல்லாமும் பெற்று வாழ
எல்லோருக்கும் வழிகிட்டுமென
புத்தாண்டு வாழ்த்துகளைப் பகிரும்
இத்தால் உங்கள் யாழ்பாவாணன்