ஏன் எழுதுகிறேன் – அருண் நரசிம்மன்

அருண் நரசிம்மன்

american desi

 

ஏன் எழுதுகிறேன்? வருகிறது, செய்கிறேன். சுவாசம் போல. மறக்கையில் நிற்கும். எழுத்தும்.

எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்லருந்தே… எனத் தொடங்குகிறது ஆற்றல் பானத்திற்கான ஓர் விளம்பரப் பேச்சு. எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்லருந்தே… நான் எழுதி வருகிறேன். வீட்டு முற்றத்தின் செம்மண் படிக்கோலத்தின் மீது நெல் கொட்டி, அதில் கிழக்கு பார்த்து தாத்தாவின் மடியில் இருந்தவாறு சூரியன் சாட்சியாக முதல் எழுத்தை ‘அ’ என விரலினால் எழுதினேன். அறியாது எழுத்தறிவிக்கப்பட்ட இதற்குப் பல வருடங்களுக்குப் பின்னரே எழுத்து ஆ என்றானது எனக்கு. இடையில் தலையெழுத்தில் கையெழுத்து மறைந்து மின் திரையெழுத்து மிளிர்ந்துவிட்டது, மலிந்து விட்டது.

பிடித்தவை இரண்டு வகை. நமக்குப் பிடித்தவை. நம்மைப் பிடித்தவை.

குஞ்சாலாடு, கோணேஸ்வரர் ஆலயம், குடமுருட்டி ஆறு, கோட்-சூட் பிழைப்பு இன்னபிற பழகப் பழக நமக்குப் பிடித்தவை என்றாகியிருப்பவை. முகநூல் மொக்கைகள் பலதும் இன்று லைக் பெற்று நமக்குப் பிடித்தவை என்றாகிறது.

வளர்கையில் பிறரது பாராட்டும் அங்கீகாரமும் அவற்றினால் கிடைக்கப்பெற்ற பிரபலத்துவமும் (எவ்வளவு சிறிய கால இட அளவுகளில் என்றாலும்) நமக்குப் பிடித்தவை என்பதில் சேர்ந்துகொள்ளும். பெற்றோர் பரிந்துரையில் அல்லது கெடுபிடியில் பரிச்சயமற்ற விருந்தாளிகள் முன்னிலையில் ட்விங்கிள் ட்விங்கிள் என்று அவ்வையை யார் என மழலையில் நாம் வண்டர் செய்வது, கிடைக்கும் பாராட்டை நமக்குப் பிடித்தவற்றினுள் வரிக்கத் தொடங்குவதால். பிறிதொரு நாள் மேலாளர் கட்டளைகளைக் கெடுவிற்குள் சிறப்பாய் முடித்துவிட்டதாய்க் காட்டிக்கொள்ளப் பழகுவது பிழைப்பிற்கு என்றாலும், மழலையில் மனத்துள் வரித்த பிறரிடமான அங்கீகாரப் பாராட்டு பெறுதல் இன்று நம்மை இறுகப் பிடித்துவிட்டது என்பதாலுமே. பிழைப்பதற்கும், சார்ந்த துறையில் வளர்வதற்கும் இவ்வகை அங்கீகாரப் பாராட்டுக்கள் மூலதனம்.

பாராட்டைப் பெறுவது பழக்கமாகிவிட, அதைத் தொடர்ந்து பெற்றிடும் வழிகளில் ஒன்றாய்ப் பிறருக்குப் பிடித்தமானதை எழுதவும் தொடங்குவோம். படித்துவிட்டுப் பாராட்டுவார்களே என்று. சில காலமாவது இச்செயல்பாட்டின் குடுக்கல் வாங்கல்கள் நம்மில் சிலருக்குத் திருப்திகரமாக அமைந்து விடலாம். ஆனால் இவ்வகை எழுத்தில் படிப்பவர்களுக்குப் பிடித்தமானது எதுவென்று எழுதும் நமக்குத் தெரியாது போனாலோ, படித்தவருக்குத் தான் படித்தது தனக்குப் பிடித்துள்ளதா என்பதே தெரியாதுபோனாலும், நாம் எதிர்பார்த்த பாராட்டு நமக்குக் கிடைக்காது. அல்லது கிடைக்கும் பாராட்டு நாம் எழுதியதற்கா என்பது புரியாது. இவ்வாறு ஆகுகையில்… எழுதுவதை நிறுத்திவிடுவோம். நமக்குப் பிடித்த பிறரது அங்கீகாரப் பாராட்டைப் பெறுவதற்காகவே நமக்குப் பிடித்துப்போனதாய் ஆக்கிக்கொண்ட எழுத்துதானே.

நமக்குப் பிடித்தவை பலதும் இவ்வகையே. சந்திக்கும் முதல் இடர், குழப்பம், நிர்பந்தம், நமக்குப் பிடித்தவற்றை விடச் செய்துவிடும். குஞ்சாலாடு, கோணேஸ்வரர் ஆலயம், குடமுருட்டி ஆறு… காலத்தில் விட்டுவிட முடிந்தவைதானே.

நம்மைப் பிடித்தவை வேறு வகை. பேய், பெருமாள், பெண்மை, பேதமை, போதாமை, பையித்தியம், பொருண்மை ஈர்ப்பு… சிறு வயது பழக்கங்கள் பல இவ்வகை. அவற்றுள் ஓரிரண்டு நல்லவை என்றாவதும் உண்டு. எழுத்து எனக்கு அதில் ஒன்று.

எப்படித் தெரியும் என்றால், அது எனக்கு நன்றாய் வருகிறது என்பதை மற்றவர் உணரும் முன்னரே அது எனக்கு இயல்பாய் வருகிறது என்பதை உணரமுடிந்ததால்.

பிடித்த வேலை இல்லை எழுத்து, பிடிக்கவில்லை என்றதும் விட்டு விட. பிழைப்பு இல்லை, இது அழைப்பு. அரிப்பு. நமைத்தல். அழைப்பின் தனித்தன்மை அதைச் செயலாக்குவதற்குப் பலனாய் பெரும்பாலும் எதையும் எதிர்பார்க்க மாட்டோம். வேலை என்பதற்கான வருமானம் போல. துறை என்பதற்கான வளர்ச்சிநிலைகள் சாதனைகள் போல. பிறரது அங்கீகாரப் பாராட்டு போல. நமக்கான அழைப்பிற்கு இணங்காமல் நம்மால் உயிர்வாழ முடியாது. அவ்வளவே. அழைத்தது எழுத்து. ஏற்றது மட்டுமே என் முடிவு. ஏற்றுக்கொண்டுவிட்டேன் என்கிற உணர்தலே ஏற்றது எனக்கான அழைப்பை என்பதையும் உணர்த்தியது.

நான் தனிமை விரும்பி. சிறுவயது முதல் எண்ணங்களை எழுத்திலேயே வெளிப்படுத்தினேன். வாசிக்கப்போகும், வாசித்து என்னை அப்படியே புரிந்துகொள்ளப்போகும், புரிந்துகொண்டு அப்படியே என்னை ஏற்றுக்கொள்ளப்போகும் அந்த என் முகமற்ற நண்பருக்கு, மனித உருவற்ற மனத்திற்கு. பள்ளிப் பருவத்தில் தொடங்கி அம்மனத்திற்குதான் எழுதுகிறேன். இம்மனத்தையும் அம்மணத்தையுமே எழுதிவைத்துள்ளேன். அன்றென்ன இன்றென்ன என்றுமே அப்படி ஒருவர்/ஒரு மனம் இருக்கப்போவதில்லை என்று தெரிந்துபோன பிறகும் எழுதிக்கொண்டிருக்கிறேன். அதனால்தான் புரிந்ததது; எனக்குப் பிடித்தது இல்லை எழுத்து, என்னைப் பிடித்துக்கொண்டது அது என்று.

எனக்குப் பிடித்தவற்றை என்னால் விட முடியும். முகநூல் மொக்கைகளை அன்-லைக் செய்ய வழி உண்டு. முகநூலையே அப்பீட் ஆக்க வழி உண்டு (அட நிசமாலுமே உண்டுமா…). எழுத்தை விடுவதற்கு வழி என்னிடம் இல்லை. லைக்-கை அன்-லைக் செய்யலாம். (மனச்) சாய்வை நிமிர்த்த வழி இல்லை. எழுத்து இவன் பிறவிக் கூன். பணிந்தே ஏற்கிறேன். பயின்றே உயர்கிறேன்.

பிறர் வாசிக்க அளிப்பதற்கு என்று இல்லாத பலவற்றையும் எழுதுகிறேன். என் பல எண்ணங்கள் உருப்பெறுவதே அவற்றை எழுதப் போகையில் தான். உணர்வுகளின் வடிகால் என்பதால், எழுதுகையில்தான் அவற்றை அனுபவித்ததை உணர்ந்துள்ளேன். தெளிவடைய எழுதியுள்ளேன் என்பதையே எழுதித் தெளிவடைந்த மனமே உணர்த்துகிறது.

பிழைப்பு, சார்ந்த துறை இவற்றில் இன்று எழுதிக் குவிக்கிறேன். இதை உணர்ந்தே இப்பிழைப்பை தேர்வு செய்தேன். பிறர் வாசிக்க, ஏற்க, கருத, பரிசீலிக்க, புரிந்துகொள்ளவே இப்பணியில் அறிவியல், ஆய்வுகள், விளக்கங்கள் என்று எழுதுகிறேன். இங்கும் எழுதிய அனைத்தையும் வெளியிடுவதில்லை. படித்ததை புரிந்துகொள்ள, செய்த ஆய்வைப் புரிந்துகொள்ள, எடுக்க வேண்டிய வகுப்பிற்கான விளக்கங்களைத் தொகுத்துக்கொள்ள… பலவற்றையும் எழுதித்தான் தெளிந்துகொள்கிறேன். மற்றவருக்கான எழுத்தல்ல இவை. எனக்கானது. என் சிந்தனையை உருவாக்கித் தொகுப்பது எழுத்து. என்னைப் பிடித்த எழுத்து.

கோபம் வருகையில் எழுதுகிறேன். மகிழ்ச்சியில் வருத்தத்தில் ஆங்காரத்தில் அவலத்தில்… நாட்டின் பெருந்தலைவர் கொலையுண்ட போதும் எழுதியுள்ளேன்; என் தாத்தா இறந்த போதும் எழுதியுள்ளேன். மகன் என்று நினைத்த என் மகள் பிறந்தபோதும் எழுதியுள்ளேன். அம்மகளை ஈன்றவளை என் மனைவி என்று (அதற்கு ஒரு வருடம் முன்னால்) அறிந்துகொள்வதற்கும் எழுதினேன். மற்றவருக்கான எழுத்தல்ல இவை என்பேன். எனக்கானதும் இல்லை. என் ஆளுமையை உரித்துப் புதிதாய் உருவாக்கும் எழுத்து. என்னைப் பிடித்த எழுத்து.

பிறருக்கும் எழுதுகிறேன். அதாவது, மேலே கூறிய வகைகளில் எழுதியதில் சிலவற்றை மற்றவருக்கும் காட்டுகிறேன். வாசிக்க அனுமதிக்கிறேன். பொய்யை முடிந்தவரை உண்மை போலவே புனைவென்று அளிக்கிறேன். உண்மையா என்று பலவற்றைப் பரிசீலித்துப் புனைவற்றதாய் அளிக்கிறேன். சிலவற்றை புத்தக வடிவில். பலவற்றை — இன்று அவ்வாறு முடிவதால் — இணையத்தில். முடிந்தவரை விலையற்றதாய். ஏனெனில், நம்மைப் பிறரிடம் வெளிப்படுத்துவதற்கானதே கலை; இப்புரிதலின் தேய்நிலை, நாம் வெளிப்படுத்துவதெல்லாம் கலை எனும் புரிதல்.

பிறர் வாசிப்பதற்கு எழுதுவதால் அவர்களது அங்கீகாரம் கிடைக்கப் பெறலாம். இது பக்க விளைவு. எழுத்தே செயல். அதைச் செய்வதே அதற்கான விளைவும். அங்கீகாரத்திற்கு, பாராட்டிற்கு என்று எழுதுவது பிழை. நம்மைப் பிடித்ததை நமக்குப் பிடித்ததாய் மாற்றிவிடும் செயல். உலகில் எஞ்சும் ஒரே மனிதனுக்கு அவசியமற்றது எழுத்து, கலை எனலாமா?

உணர்வுகளை நம்மில் இருந்து, நம்மை விட்டுக் கடத்தும் கருவிகள் பல. எழுத்தைப் போல. எழுத்துக் கலை சார்ந்த பல்வகைக் கலைகள் உள்ளனவே. பொதுவாக்கினால், வெளிப்படுத்தல். சிந்தையை உணர்வை எழுத்து, ஓவியம், இசை, நாட்டியம் என்று ஏதோ கருவி வழியே மற்றவரிடம் வெளிப்படுத்தல். அக்கருவியே கலை என்பார் தொல்ஸ்தோய். வெளிப்படுத்தலே வாழ்வு என்று ஒரு கூற்று உண்டு. வெளிப்படுத்தல் ஒரு போர். மனப் போர். அதைச் செய்திருப்பதே வாழ்வு. போரும் வாழ்வும் கலையாவது மனத்தின் அழைப்பில்.

வருமானத்திற்கு எனச் செய்யப்படாமல் இருக்கையிலேயே கலை நேர்மையாய் வெளிப்படுகிறது என்பார் தொல்ஸ்தோய். அப்போதுதான் கலை பிரதிபலன் வேண்டா மனத்தின் அழைப்பாய் உயர்கின்றது எனலாம். என் கடன் பணி செய்து கிடப்பதே என்பது தாயுமானவரின் அழைப்பு. என் பணி கலை செய்து கிடப்பதே என்பது தொல்ஸ்தோய் போன்றோரின் அழைப்பு.

ஆனால் தொல்ஸ்தோய் கௌண்ட். பிரபு. வசதியான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். இளமையில் (போரில் பங்குபெற்று) வருமான வேலை செய்தாலும் நாளடைவில் மாளிகையில் அமர்ந்து தனக்கான அழைப்பைச் செயல்படுத்தினார். அனைவருக்கும் அவ்வாறு அமையாது. அமைந்தாலும் அத்தனை அன்னா கரனீனாக்களை உலகம் தாங்குமோ தெரியாது.

நல்லவேளையாக எழுத்தையே பொருளீட்டும் தொழிலாகக் கொள்ளவேண்டிய கட்டாயத்தில் வாழ்க்கை என்னை வைக்கவில்லை. எனக்குப் பிடித்த வேலை தரும் வருமானம், எனக்கான அழைப்பில் அதைத் தேட வைக்கவில்லை. நான் எழுதுவது அது என் அழைப்பு என்பதால். இதன் மறுபக்கம், அவ்வெழுத்திற்கு உகந்த வாசகனுக்கு மட்டுமே அதனை வாசிப்பது அழைப்பாகும். நான் வெளிப்படுத்தும் எழுத்து அனைவருக்கும் அன்று. உங்களின் அழைப்பிற்கு மட்டுமேயானது. உங்கள் அழைப்பை நீங்கள் ஏற்கையில் என் அழைப்பின் பலனைக் கண்டடைவீர்கள்…

…என்று என் அழைப்பைப் பற்றி எழுதிவைக்கும் இதுவும் உங்கள் வாசிப்பு அழைப்பிற்கே.

oOo

(அருண் நரசிம்மன் ஒரு பேராசிரியர். சென்னைவாசி. ஶ்ரீரங்க விசுவாசி. ஆங்கிலத்திலும் தமிழிலும் இசைக் கட்டுரைகளும், சில அறிவியல் புத்தகங்களும் எழுதியுள்ளார். ‘அமெரிக்க தேசி’ இவரது முதல் தமிழ் நாவல். இணைய தளம் http://arunn.me/)

One comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.