தூயனுடன் ஒரு நேர்முகம் – நரோபா

நரோபா

உங்கள் ஊர், படிப்பு மற்றும் பணி பற்றி?

தூயன்: நான் பிறந்தது அம்மாவின் ஊரான கோயம்புத்துாரில். பிறகு சிறுவயதிலேயே அப்பா வேலை காரணமாக தன் சொந்த ஊரான புதுக்கோட்டைக்கு வந்துவிட்டதால் இங்கேயே நிரந்தரமாகிவிட்டோம். அக்கா திருமணமாகி கோவையில் பணிபுரிகிறார். சென்னையில் ஆய்வுக்கூட பட்டயப் படிப்பும் இளங்கலை நுண்ணுயிரியியலும் முடித்துவிட்டு தற்போது புதுகை அரசு ஈஎஸ்ஐ மருந்தகத்தில் பணிபுரிந்து வருகிறேன்..

இலக்கிய அறிமுகம் எப்போது எப்படி நேர்ந்தது?

தூயன்: என்னுடைய அப்பா ஒரு நல்ல வாசகா். அவா் மூலமாகத்தான் எனக்கு இலக்கியம் அறிமுகமானது. சிறுவயதிலேயே என்னையும் சகோதரியையும் நிறைய வாசிக்கப் பழக்கிவிட்டார். பிறகு நுாலக வாசிப்பு அமைந்ததும் எனக்கான புத்தகங்களைத் தேடிப் படிக்கத் துவங்கினேன். சென்னையிலிருக்கும்போது நண்பன் பரசுராம் என்னைத் தீவிர இலக்கியத்திற்குக் கொண்டுவந்தான்.

பாதித்த, பிடித்த தமிழ் மற்றும் வேற்று மொழி எழுத்தாளர்கள் யார் யார்?

தூயன்: பொதுவாக பிடித்த எழுத்தாளா் என்பது படைப்பாளியின் தேடலைப் பொருத்து நகா்ந்துகொண்டே செல்லும் என்பது எனது கருத்து. ஆனாலும் தனிப்பட்ட வகையில் சிலா் இருக்கவே செய்கிறார்கள். அது என்னுள் இருக்கும் வாசகனுக்கானவா்கள். ஒவ்வொருவரையுமே தங்களுடைய படைப்புலகில் உச்சத்தைத் தொடுபவா்களாகத்தான் நான் பார்க்கிறேன். அவ்வகையில் தமிழில் புதுமைப்பித்தன், சுந்தர ராமசாமி, அசோகமித்ரன், சோ. தா்மன், எஸ்.ரா போன்றவா்களைக் குறிப்பிடலாம். தமிழில் அதிகமாக என்னுள் பாதிப்பை ஏற்படுத்தியவா்கள் பிரேம் ரமேஷ், ஜெயமோகன், பா. வெங்கடேசன்… வேற்று மொழியில் தற்போது என்னை அதிகம் கவா்ந்திருப்பவா்கள் மிலன் குந்தேராவும் மரியோ வா்கஸ் லோசாவும். குந்தேராவின் கதைசொல்லும் பாணி என்னை வியக்க வைக்கிறது. அதே சமயம் லோசாவின் படைப்பில் நிகழும் அரசியல் எனக்கானப் பார்வையை அளிக்கிறது. இது போல நிறைய உள்ளது. தஸ்தயேவ்ஸகியின் ‘இடியட்’, சரமாகோவின் ‘பிலைன்ட்னஸ்’, நிகோஸ் கசஸ்ன்சாகிஸ், ‘நேம் ஆப் தி ரோஸ்’

முதல் சிறுகதை எப்போது பிரசுரமானது?

தூயன்: தினமணி கதிரில் 2012 என நினைக்கிறேன். ஆரம்பத்தில் எழுதிப் பார்த்தவைகள். தீவிர இலக்கிய வாசிப்புக்குப் பிறகு எழுதியவை கணையாழியில் பிரசுரமாகின. அதன் பின் உயிர் எழுத்து, மணல்வீடு.

சிறுகதையை எதனால் உங்கள் வெளிப்பாட்டு வடிவமாக தேர்ந்தீர்கள்? கவிதை எழுதியது உண்டா?

தூயன்: சிறுகதைக்கென்று இதுதான் வடிவம் என ஒன்றை வகைப்படுத்த முடியாதென்றே நம்புகிறேன். பல்வேறு மொழிகளில் எழுதப்படும் சிறுகதைகள் எல்லாமுமே முந்தைய வடிவங்களை உடைத்து புதியதொரு வடிவத்தை உருவாக்குகின்றன. இறுதியில் எல்லா வகைகளும் படைப்பாளிக்கும் வாசகனுக்குமான நுண்ணிய சீண்டலில்தான் முடிகிறது. இப்படிச் சொல்லலாம். “வாசகனும் படைப்பாளியும் ஒருவரையொருவா் நிரப்பிக் கொள்வதே“ சிறுகதை. இந்த நிரப்புதலில் ஏற்படும் இழப்பையும் தரிசனத்தையும் அடைவதில்தான் படைப்பாளிக்கு ஆா்வமும் சிரத்தையும் ஏற்படுகிறது.

கதை எழுத திட்டமிடுவது உண்டா? உங்கள் கதைகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு களங்களை கொண்டதாக உள்ளன.

தூயன்: ஆம், உண்டு. ஏற்கனவே எழுதிய சாயல் எதிலும் இருக்கக்கூடாது என்றும் எழுதப்பட்டதில் என்னுடைய பார்வை எதுவாக இருக்கிறதென்றும் திட்டமிடுவேன். கதைகளோ களங்களோ ஏற்கனவே எழுதப்பட்டுவிட்டன என்று சொல்வதை முற்றிலும் மறுக்கிறேன். ஒரு கதையை படைப்பாளியினுடையப் பார்வையும் சிந்தனையும்தான் புதியதாகக் காட்டப் போகிறது. ஒரு சம்பவத்தை அப்படியே பதிவு செய்வது அல்ல சிறுகதை. மாறாக அச்சம்பவத்துடன் படைப்பாளியின் அகம் கொள்ளும் குறுக்கீடுதான் அதை கதையாக மாற்றுகிறது. இது பயிற்சியால் வருவதல்ல. ஒவ்வொருவரின் பார்வையின் நீட்சி, ஐடியாலஜி அது. படைப்பாளி தன்னுடைய சிந்தனையையோ அல்லது அனுபவத்தையோ சம்பவத்துடன் குறுக்கீடு செய்கிறான். கிட்டத்தட்ட நிகழ்தகவு போல என்று சொல்லலாம். அப்படி பார்த்தால் இன்னும் கதைகள் எழுதப்பட இருக்கின்றனதானே? அதாவது கலையில் அடங்கும் அத்துனையும் அப்படி புதிதாக உருவாகிக் கொண்டுதானிருக்கும்.

தொகுப்புக்கு முந்தைய கதைகளில் இருந்து தொகுப்புக்கு உரிய கதைகளை அடைவதில் மொழியிலும் வெளிப்பாட்டிலும் என்ன மாதிரியான மாற்றங்கள் நேர்ந்திருப்பதாக எண்ணுகிறீர்கள்?

தூயன்: நிறையவே மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. கவிதைகள் நிறைய வாசிப்பேன். எனக்கான மொழி கவிதைகளிலிருந்து கண்டடைந்ததுதான். கதைசொல்லும் பாணி என ஒவ்வொன்றும் நம்முடைய வாசிப்பின் வழியிலும் எடுத்துக் கொள்ளும் கருவின் மூலமாகவும் அம்மாற்றம் ஏற்படுவதாகச் சொல்லலாம்.

முதல் தொகுப்பிற்கு என்னவிதமான விமர்சனங்கள், கவனங்கள் கிடைத்தன?

தூயன்: தொகுப்பு வெளியாகி ஒரு வருடத்திற்குள் இலக்கியக் கூட்டத்திலும் தனிப்பட்ட வகையிலும் நிறைய விமா்சனங்கள் கிடைத்திருக்கின்றன. தமிழில் அறிமுக படைப்பாளி இப்படி வாசிக்கப்படுவதே மகிழ்ச்சிதான். பாவண்ணன் தீராநதியில் விமா்சனம் எழுதியிருந்தார். மேலும் கோணங்கி, பா.வெ, தேவிபாரதி, போன்றவா்கள் வாசித்துவிட்டு பேசியது மிக்க நம்பிக்கையை அளிக்கிறது.

ஆனால் விமா்சனம் என நான் நினைப்பது வேறு. பொதுவாக தமிழில் விமா்சன மரபு வெ.சா, சு.ரா, பிரமிள், போன்றவா்கள் ஏற்படுத்திய வீச்சில் இப்போது இல்லைதான். காரணம் இன்று கறாரான விமா்சனத்தை எழுத வருபவா்கள் ஏற்றுக் கொள்வதில்லை. நெருங்கிய நண்பனொருவனின் கவிதை தொகுப்பை முன்வைத்து விமா்சனம் எழுதினால்கூட அவருக்கு அது சங்கடத்தைத் தருவதாகத்தான் உணா்கிறார். இதனால் பெரும்பாலான தீவிர வாசிப்பாளா்கள்கூட விமா்சனத்தைக் கூற தயங்குகிறார்கள். உண்மையில் ஒரு கறாரான விமா்சனம்தான் அப்படைப்பாளிக்குத் தேவை. தனிப்பட்ட வகையில் ரியாஸ், கிருஷ்ணமூர்த்தி, மதி, ராஜன், போன்றவா்களிடமிருந்து கறாரான விமா்சனத்தைப் பெற்றிருக்கிறேன். இதொரு மரபாக உருவாக வேண்டும் என்பதுதான் என் கருத்து.

நாவல் எழுதும் எண்ணம் உண்டா? களம் என்ன?அடுத்த திட்டமென்ன?

தூயன்: ஒரு வருடமாக ஒரு நாவல் எழுதிக்கொண்டிருக்கிறேன். வெவ்வேறு களங்களில் பயணிப்பதால் அதற்கான தேவை அதிகமாக உள்ளது. பொதுவாக ஒரு படைப்பை உடனடியாக முடித்து வெளியிட வேண்டுமென்கிற அவசரத்தை நான் வைத்துக் கொள்வதில்லை. முழு திருப்தி தரும் வரை அதனோடுதான் இருப்பேன். எழுதுவதே ஒரு தீராத மயக்கம்தான் இல்லையா?

புதுக்கோட்டையின் இலக்கியச் சூழல் உங்களுடைய படைப்புலகின் மீது என்னவிதமான தாக்கத்தை ஏற்படுத்தியது? சித்தன்னவாசல் இலக்கிய அமைப்பைப் பற்றி குறிப்பாக, என்னவிதமான முன்னெடுப்புகளை செய்கிறீர்கள்.

தூயன்: சிற்பம் ஓவியம், தொன்மங்கள் என் படைப்பை அதிகமாகவே பாதிக்கக்கூடியவைகள்தான். அந்த வகையில் புதுக்கோட்டை தற்போதைக்கு சற்று அதிகமாக அதை எடுததுக்கொள்வதாக நினைக்கிறேன். நான் மேலே சொன்ன கறாரான விமா்சனம் வேண்டுமென்பதற்காகத்தான் சித்தன்னவாசல் விமா்சன அமைப்பை நண்பா்கள் சோ்ந்து தொடங்கினோம். முதலில் ஜீவ கரிகாலனின் சிறுகதைத் தொகுப்பு, சபரியின் வால் மற்றும் மனுஷ்யபுத்திரனின் படைப்புலகம் என துவங்கி மெதுவாகப் பயணிக்கிறது. தொடா்ந்து புதிய படைப்புகளை வாசித்தும் அதுகுறித்தும் பேசிக்கொண்டுமிருக்கிறோம்.

மரபிலக்கிய பயிற்சி உண்டா? பயணங்கள், சினிமா பரிச்சயம் உண்டா?

தூயன்: மரபிலக்கியம் முழுமையாக நான் வாசித்தவனல்ல. ஆனால் என் அப்பா அதை முழுமையாக வாசித்திருப்பதால் அவருடனான உரையாடல்களில் அவ்வழியில் திரும்புவதுண்டு. பயணம் எனக்கு மிக விருப்பமானது. யாருக்கும் சொல்லாமல் (ஒவ்வொருவரிடமும் வேறுவேறாக) எங்காவது கிளம்பிச் சென்று படுத்துறங்கி வருவது என்னுடையப் பழக்கம். எனக்கான அடையாளத்தை தொலைத்துக் கொள்வது எனக்கு பிடிக்கிறது. கா்நாடகம் முழுவதும் பயணித்திருக்கிறேன். சிலசமயம் கோயமுத்துாரிலிருந்து கிளம்பி பாலாக்காடு , கோழிக்கோடு, காசா்கோட் என மங்களுா் சென்று பின் மீண்டும் ஹாசன் வரை தொட்டு திரும்புவதுண்டு. அதாவது ஒரு சுழற்சி போல இதைத் திட்டமிடுவேன். வெவ்வேறு நிலங்கள் என் கற்பனையுலகிற்கு புதியத் தளத்தை அமைத்துக்கொடுக்கின்றன.

பொதுவாக நான் டிவி அதிகம் பார்ப்பவனல்ல. ஆனால் உலக சினிமாக்கள் விரும்பிப் பார்ப்பேன். உலகத்தின் மிகச் சிறந்து ஐநுாறு படங்களின் கலெக்சன் என்னிடம் உள்ளது. அதிலிருந்து சிலவற்றை பார்த்துக்கொண்டிருப்பேன். நோலன், இனாரிட்டோ மிகவும் பிடித்தமானவா்கள். தற்போது ‘breaking bad’, ‘narcos’, ‘house of cards’, போன்ற சீரியஸ் பார்த்துக்கொண்டிருக்கிறேன். ‘breaking bad’ ஒரு பெரும் நாவலை வாசித்த அனுபவத்தைத் தருகிறது.

காமம் உங்கள் பெரும்பாலான கதைகளில் மறைபொருளாகவும் பேசுபொருளாகவும் வருகிறது. காமத்தை எழுதுவதின் சவால் அல்லது சிக்கல் என்ன?

தூயன்: மனிதனின் பிரக்ஞைக்கு அதன் அகவுலகை அறிவதுவரை எந்த சிக்கலுமில்லை. ஒருதடவை அது தன் ஆழ்பிரக்ஞையை தொடும்போதுதான் அங்கு அகம் சலனமடைகிறது. அதாவது அகத்தை, புறமானது மோதிக்கொண்டேயிருக்கும்போது சமன்குழைவு நிகழ்கிறது. மனிதனின் இருப்பு குறித்த கேள்வியை அவனுடைய அகச்சலனத்திலிருந்துதான் முதலில் தொடங்க வேண்டும் (பௌதிக இருப்பு என்பது இங்கு கேள்விக்கே இல்லை.) இச்சலனத்திலிருந்துதான் கருத்து முதல் வாதம், பொருள் முதல் வாதம், என தத்துவங்கள் உருவாகுகின்றன. இச்சலனம்தான் பிரபஞ்சத்தை வடிவமைக்கிறது. இந்தச் சமன்குழைவில்தான் தா்க்கம் பிறக்கிறது. தா்க்கம், உள்முரண்கள் இவற்றைத்தாம் நாம் அகச்சிக்கல் என்கிறோம். நான் எழுதுவது காமத்தை அல்ல, மனிதனின் அகம் சார்ந்த முரண்களை மட்டுமே. காமம் அகமுரண்களில் ஒரு கூறு, அவ்வளவுதான்.

இணையமும் சமூக ஊடகமும் படைப்பாற்றலை பாதிப்பதாக எண்ணுகிறீர்களா?

தூயன்: இன்றைய வாசிப்புலகில் இணையம் இரு வகையான பணியைச் செய்கிறது. இதை முழுவதுமாக ஏற்றுக்கொள்வதோ கைவிடுவதோ நடக்காதாவொன்று. நிறைய புத்தகங்களும் கட்டுரைகளும் உரையாடல்களும் இணையம் வந்தபின்புதான் சாத்தியமாகியிருக்கிறது. கிண்டில், இ-ரீடா் மூலம் நிறைய ஆங்கில நுால்கள் கிடைக்கின்றன. அடுத்த ஐந்தாண்டுக்குள் கிண்டிலில் மட்டுமே படைப்புகள் வெளியிடப்படலாம். ஏன், இன்றைக்கு ஜெயமோகன் இணைய தளத்தில்தானே கட்டுரைகளும் விவாதங்களும் வாசிப்பதற்கு குவிந்திருக்கிறது. அதே வேளையில் இணையமும் சமூக ஊடகமும் அளவுக்கதிகமாக படைப்பாற்றலை செயழிலக்கச் செய்துவிடக்கூடியது என்பதில் மாற்று கருத்து இல்லை. எல்லாவற்றுக்கும் மேல் படைப்பாளியின் பிரக்ஞை உலகம் ஒன்று இருக்கிறது, அதை அவன்தான் நிர்வகிக்கிறான்.

சமகால தமிழ் இலக்கியச் சூழலை பற்றி…

தூயன்: பொதுவாக நம் முந்தைய காலகட்டத்தை கவனித்தால் தலித்தியம், பெண்ணியம், நவீனத்துவம், யதார்த்தவாதம், பின்நவீனத்துவம் என ஒவ்வொரு இசங்களால் பிணைக்கப்பட்டிருந்ததன. அந்தந்தக் காலத்தில் அவை அதற்குரிய செயல்பாடுகளையும் விமா்சனங்களையும் உண்டாக்கிவந்தன. ஆனால் இப்போதுள்ள காலகட்டம் ஒருவித கேளிக்கை மனோபாவம் கொண்டது. எல்லாவற்றையும் பகடி செய்யக்கூடியது. இரண்டாயிரத்திலிருந்தே இந்த மனநிலை இங்கு மட்டுமல்ல எல்லா மொழி நாடுகளிலும் எல்லா கலைகள் மீதும் கவிந்திருக்கின்றன. இந்தக் கலவையான இசம் ஒரு வகையில் இலக்கியத்தில் மறைமுகமாக தாக்கத்தையும் ஏற்படுத்தவே செய்கிறது.

ஆனால் முன்பைவிட இப்போது நிறையவே வாசிப்பதும் விமா்சிப்பதும் நடந்துகொண்டிருக்கிறது. நிறைய படைப்புகள் வரத் துவங்கியுள்ளன. ஒருவகையில் இணையத்தின் வருகை இதை மாற்றியிருக்கிறது எனச் சொல்லலாம். சமகால படைப்புகள் குறித்து நிறைய உரையாடல்கள் நடக்கின்றன. ஆனால் நான் முன்பே சொன்னது போல கறாரான விமா்சனம் இன்னும் வீச்சாக எழவில்லை.

2 comments

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.