ஏதேனும் ஒரு ஞாபகம், இயந்திரகதியாகிப் போன அன்றாடங்களுக்கிடையில் மறைந்திருக்கும் பசுமையைத் துலக்கி நம் கண்கள் முன் கொண்டுவந்து பரவசப்படுத்தத்தான் செய்கிறது. பழகிப்போன தினசரி அனுபவங்களிலிருந்து நம்மை விலக்கி, சாதாரணங்களுக்குள் ஒளிந்திருக்கும் பரவசத்தைக் கண்டுகொள்ளும் வேறு கண்களை நமக்களித்துச் செல்கிறது.
அவ்வாறான ஞாபகங்கள், தானாக தோன்றாதபோதும், வலிந்து நானே அத்தருணங்களை உருவாக்கிக் கொண்டு அது தரும் பரவசங்களை அனுபவிப்பதுண்டு. பாலகுமாரனின் “தாயுமானவன்”-ல் பரமுவின் பகல் பொழுதுகள்; சமீபத்தில் ஜெயமோகனின் ‘இல்லக் கணவன்’ கட்டுரையில் வரும் பகல் பொழுது.
கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலையில் படிக்கும்போது, ஒவ்வொரு விடுமுறை முடிந்து மதுரையிலிருந்து விடுதி திரும்ப விடிகாலை நான்கு அல்லது ஐந்து மணி அளவில் காந்திபுரம் பேருந்து நிலையம் இறங்கும்போதெல்லாம், அவ்வைகறையில் பேருந்து நிலையத்தின் சூழல் பரவசம் தரும். இதற்காகவே விடுமுறை இல்லாத கல்லூரி நாட்களிலும், விடிகாலை நான்கு மணிக்கு எழுந்து குளித்து கிளம்பி சைக்கிளில் பின்கேட்டில் வெளியில் வந்து பால் கம்பெனி, ஆர்.எஸ்.புரம், அர்ச்சனா தியேட்டர் வழியாக காந்திபுரம் வந்துவிடுவது. பேருந்து நிலையத்தில் பெட்டிக்கடையில் டீ குடித்துக்கொண்டே, வந்து சேரும் தொலைதூரப் பேருந்துகளிலிருந்து வந்திறங்கும் பயணிகளையும், பேருந்து வரிசைகளையும், விளக்கொளியில் கடைகளையும், அச்சூழலையும் பார்த்துக்கொண்டிருப்பது ஓர் இனிய அனுபவம்; பகலில் பார்ப்பதற்கும், வைகறையில் பார்ப்பதற்கும்தான் எத்தனை வித்தியாசம்! ஒருமுறை நண்பர் பாலா, சென்னை வந்த ஜெயமோகனை அழைத்துச் செல்ல விடிகாலை நாலு மணிக்கு எக்மோர் ஸ்டேஷன் வந்தபோது கண்ட, வைகறையின் எக்மோர் ஸ்டேஷன் அழகை பின்னர் பேசும்போது சொல்லியிருக்கிறார்.
இதேபோல் நள்ளிரவில் கேஜியில் இரண்டாம் காட்சி பார்த்துவிட்டு சைக்கிளில் விடுதி திரும்பும்போது, மரக்கடை மேம்பாலத்தில் சோடியம் விளக்கொளியில் ஆளரவமற்ற, வெற்றுத் தார்ச்சாலையில் கொஞ்சநேரம் அமர்ந்துவிட்டு, லாலி ரோட்டில் வந்து தர்சனா பேக்கரியில் டீ சாப்பிட்டு வந்த நாட்கள் அநேகம். பகல் பொழுதுகளின் பரபரப்புகள், விரைவுகள், ஒலிகளில்லாத தார்ச்சாலைகளின் அமைதிதான் எத்தனை வசீகரிக்கிறது.
வேலை செய்யும் நிறுவனங்களிலும், பண்ணை வேலை என்பதால், ஞாயிறும் வேலை இருக்கும். கூடிய மட்டில் ஞாயிறு வேலை செய்துவிட்டு, ஏதேனும் ஒரு வார நாளில் விடுமுறை எடுத்துக்கொள்வது. ஞாயிறு வேலை செய்யுமிடம் வேறு முகம் காட்டும். அது அற்புதமான முகம். அதேபோல்தான் வாரநாட்களில் ஒரு விடுமுறை தினம் வீட்டில்.
***
வண்ணதாசனின் “ஞாபகம்” சிறுகதை பல வருடங்களுக்கு முன்பு எப்போதோ, எங்கேயோ படித்தது; சரியாய் ஞாபகமில்லை; ஆனால் அந்தக் கதையும், வண்ணதாசனும் மனதில் பதிந்து போனார்கள். வண்ணதாசனுக்கு 2016-ல் விஷ்ணுபுரம் விருது கிடைத்தபோது “ஞாபகம்” பல வருடங்களுக்குப் பின் நினைவடுக்கிலிருந்து மேலெழுந்து வந்தது. சாகித்ய அகாடமி விருதும் தொடர, மிகுந்த மகிழ்ச்சியாயிருந்தது. விஷ்ணுபுரம் விருது கிடைத்ததிலிருந்தே, வண்ணதாசனின் மொத்த சிறுகதைத் தொகுப்பை தேடிக்கொண்டிருந்தேன். நண்பர் சக்தி இம்முறை இந்தியாவிலிருந்து வரும்போது, முழுத் தொகுப்பு கிடைக்கவில்லையென்றும், கிடைத்த இரண்டு சிறு தொகுப்புகள் கொண்டுவந்த்தாகவும் சொன்னார். அதிலொன்று “தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள்”. ஆம், “ஞாபகம்” அதிலிருந்த சிறுகதைகள் பதினொன்றுக்குள் ஒன்று.
அலுவலகத்திலிருந்து கிளம்பி வீடு செல்லும்போது டிபன்பாக்ஸை எடுக்க மறந்து, அதை எடுத்துச் செல்ல மறுபடி பஸ் பிடித்து அலுவலகம் வருகிறாள். அந்த முன்னிரவு நேரம் காட்டும் அலுவலகம், ஆட்களில்லாத, பரபரப்பில்லாத, இரைச்சல்களில்லாத, வெறும் மேசை, நாற்காலிகளுடன் கூடிய அந்த அறை அவள் மனதை நெகிழ்த்துகிறது. வேலை நேரம் தாண்டி, வீட்டிற்குச் செல்லாமல் அலுவலகத்தில் தனது அறையில் வேலை செய்துகொண்டிருக்கும் கிளார்க்கைப் பார்த்து அவளுக்குப் பாவமாய் இருக்கிறது (“இவளுக்கு அந்த விரல்களின்மீது இரக்கமாக இருந்தது”). ”அவர் அப்படித்தாம்மா; வழக்கம்போல ஓவர் டைம் பாக்குறார். நேரங்காலம் தெரியாம வீட்ட மறந்து இங்கேயே உட்கார்ந்துருவார்,” சொல்லிவிட்டு வாட்ச்மேன் சிரிக்கிறான். அவளுக்கு சிரிப்பு வரவில்லை; ’தனக்கு டிபன்பாக்ஸ் ஞாபகம் வந்ததுபோல், அவருக்கு வீட்டின் ஞாபகம் வரவேண்டும்’ என்றுமட்டும் உடனடியாகத் தோன்றுகிறது.
***
ஒருமுறை வார இதழ் ஒன்றில் வெளியான டைரக்டர் மகேந்திரன் பேட்டியில், “உங்கள் சினிமாக்களின்/ படைப்புகளின் வழியாக நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?” என்ற கேள்விக்கு, “அன்புதான்… அன்பைத் தவிர என்னிடம் சொல்வதற்கு வேறொன்றுமில்லை…” என்று பதில் சொல்லியிருந்தார். வண்ணதாசன் கதைகளும், மனதின் அப்பாகத்தை தூண்டி நெகிழ்த்திவிட்டுத்தான் செல்கின்றன. அன்றாடங்களைக்கூட நின்று நிதானித்து இதுவரை கவனிக்காத ஒன்றை கவனிக்கச் செய்து மனதின் உட்பயணத்திற்கு உதவி செய்கின்றன. எல்லோரையும், எல்லாவற்றையும் அன்பெனும் போர்வையால் போர்த்துகின்றன.
2007-ம் வருடம், நான் புனே அருகில் “சம்பாலி” எனும் மலர்ப்பண்ணையில் வேலை செய்துகொண்டிருந்தேன். மார்ச் மாதத்தின் அமைதியான ஒரு ஞாயிற்றுக் கிழமை. மலர்ப் பண்ணையில் ஞாயிற்றுக்கிழமையும் வேலையாட்கள் பணிக்கு வருவார்கள். அலுவலர்களில் நான் ஒருவன் மட்டும்தான் ட்யூட்டி. உச்சி நண்பகல் 12 மணி தாண்டியிருந்தது. அலுவலகத்தின் இரண்டு மாடிகள் முழுதும் மிகுந்த அமைதியாயிருந்தது. கீழ்த்தளத்தின் இடதுகோடியில் இருந்த கேண்டீனில் மட்டும் மதிய உணவு சமைக்கும் இரு பெண்களின் சிறு பேச்சுக் குரல்கள். முதல் மாடியின் வெளிக்கதவு தாண்டி, நான் திறந்தவெளி பால்கனிக்கு வந்தேன். முன்கோடையின் சுட்டெரிக்கும் வெயில். பண்ணையின் வேலிக்கு அப்பால் பக்கத்து கிராம பெரியவர் மாடு மேயவிட்டிருந்தார். அலுவலகத்திலிருந்து ஸ்டோருக்கு செல்லும் பாதையின் இருபக்கமும் இருந்த நெட்டிலிங்க மரங்கள் இலைகள் அசையாமல் உயர்ந்து நின்றிருந்தன. ஸ்டோருக்கருகிலிருந்த ஜெனரேட்டர் ரூமிலிருந்து ஜெனரேட்டர் ஓடும் சத்தம் தாளம் மாறாமல் கேட்டுக் கொண்டிருந்தது. எதிர்சாரியில் தூரத்தில் குன்றின்மேல் பச்சைப் போர்வைக்கு நடுவில் வினோபா கிராமத்தின் வீடுகள் சிறியதாய் தெரிந்தன. அப்போதுதான் என் மனம் கொஞ்சம் கொஞ்சமாய் நழுவ ஆரம்பித்தது. கண்களில் நீர் நிரம்பி காட்சிகள் மசமசப்பாயின. சுற்றிலும் எல்லாமே, ஏதோ ஊமைப்படத்தின் காட்சிகள் போல துல்லிய அமைதியில் நிகழ்ந்தன. பின்னால், கேண்டீனில் வேலை செய்யும் மீனாள் கெய்க்வாட்டின் “சார், லன்ச் ரெடியாயிருச்சு” என்ற குரல்தான் தரையிறக்கியது. உடலில் மெல்லிய நடுக்கமிருந்தது.
“எங்கெங்கு காணிணும் சக்தியடா…” என்ற வரி மட்டும் உள்ளுக்குள் அன்று முழுதும் திரும்பத்திரும்ப ஓடிக்கொண்டிருந்தது.