நான் ஜிம்மி ஜிக்கி

பெருந்தேவி

கோரைப்புல் வெட்டப்படாத
குழப்பமான மைதானத்தை
மூன்று முறை சுற்றிவிட்டு
மூச்சிரைக்க வீட்டுக்கு வந்தால்
ஜிக்கி சமையலறைக்குள்
வாய் எந்திரம் அரைபடுகிறது
வரவேற்பறை சோஃபா மூலையில்
ஜிம்மி புரண்டுகொண்டு
சோம்பேறிக் கழிசடைகள்
ஜிக்கியருகே ஹலோ சொல்லப்போனால்
எனக்கு சாடை போ போ-வென்று
ஜிம்மிக்கும் நன்றி உணர்ச்சி
கொஞ்சமுமில்லை
எத்தனை முறை நடத்திச் சென்றிருக்கிறேன்
இப்போதோ பார்த்தும் பார்க்காதமாதிரி
போகட்டும்
பார்த்து நாளான என் காதலியை
இன்றைக்காவது பார்க்கவேண்டும்
பக்கத்துத் தெரு அவள்
இப்போதைக்குப் பசிக்குப் போதும்
இறைச்சி ஒரு துண்டு
நானென்ன ஜிக்கியா
ஜிக்கிக்கு தின்பது மட்டும்தான் வேலை
போட்டால் தின்னும் ஜிம்மிக்கு ஒரு தட்டு
ஜிம்மி கிழிப்பதற்கு
அதுவே அதிகம்
ஜிக்கி சிடுமூஞ்சி அசிங்கமான பற்கள்
நான் என்றால் ஆகாது
ஜிக்கி எனக்காகக் காத்திருப்பதுகூட இல்லை
கொஞ்சம் வெளிக்காற்று வாங்கிவிட்டு வந்தால்
பூட்டிய கதவில்தான் முழிக்கவேண்டும்
என்னைக் கொஞ்சுகிறேன் என்று
செல்ல அடிகள் தருவதுண்டு
தழும்புகள் ஏற்படும் அளவுக்கு
ஒரு காட்டு காட்டுவேன் நானும்
இப்போது அவசரக்குரலில் அழைப்புகள் எனக்கு
ஜிக்கியின் கட்டைக்குரலில் ஆண்
கடுகடுப்பு சுருதியை ஏற்றுகிறது
“சனியனக் கட்டிவச்சாலும்
அத்துக்கிட்டுப் போகுது”
நான் ஆட்டுகிற வாலைக் கூட
கவனிக்கவில்லை ஜிம்மி
கைப்பேசியைக்
கொஞ்சிக்கொண்டே
வீட்டுக்குள் நுழைகிறாள்
அவள் ஸ்டைல்

 

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.