எதற்காக எழுதுகிறேன் – டி. கே. அகிலன்

டி. கே. அகிலன்

எழுதத் தோன்றுகிறது, எழுதுகிறேன். பசிக்கும்போது உண்பது போல, உறக்கம் வரும்போது உறங்குவது போல. எதற்காக எழுதுகிறேனோ அதே காரணத்துக்காக, எதற்காக எழுதுகிறேன் என்பதையும் எழுதி விடுகிறேன்!

எதற்காக எழுதுகிறேன் என்பதைக் கூற, எவ்வாறு எழுதத் தொடங்கினேன் என்பதைக் கூறியாக வேண்டும். அதற்கும் முன் ஒன்று; நான் இதுவரை எழுதியது மிகவும் கொஞ்சம்தான். இதுவரை எழுதியவை இதை எழுதுவதற்கான தகுதியைக் கொடுக்கிறதா என்பதும் தெரியாது. இருந்தாலும் இதுவரை எழுதியவற்றைப் போலவே இதையும் எழுதிவிடுகிறேன்.

என்னுடன் கல்லூரியில் ஒரே வகுப்பில் படித்தவர்களில் சிலர், தங்களுக்குள் தொடர்புகளை வைத்திருக்க, ஒருவருக்கொருவர் தொலைந்துப் போயிருந்த தங்களைக் கண்டுப்பிடித்து 2001-ம் வருடம் யாஹூ குழுமம் ஒன்றைத் தொடங்கினார்கள். என்னையும் கண்டுப்பிடித்து அதில் சேர்த்துக் கொண்டார்கள். குழுமம் தொடங்கிய புதிதில், புதிய அனைத்தையும் போலவே அதுவும் அனைவருக்கும் ஆர்வமூட்டுவதாக இருந்தது. எனவே சில காலம் தொடர்ந்து உயிர்ப்புடன் அது செயல்பட்டுக் கொண்டிருந்தது. பழையதானவுடன் நண்பர்களின் ஆர்வமும் குறையத் தொடங்கியது. ஒன்றிரண்டுபேர் அவ்வப்போது தங்களுக்கு வரும் சில தகவல்கள் இருக்கும் மின்னஞ்சல்களை குழுமத்திற்கு திருப்பி விடுவார்கள். அதுவும் இல்லாமல் போகும்போது நண்பர்களில் யாராவது மனக்கிலேசம் அடைந்தால், ”ஏன் நம் குழுமம் இவ்வாறு செயலற்று விட்டது? தற்போதைய நம் நிலையில் பழையவற்றை மறந்து விட்டோமா? நட்பை மறந்து விட்டோமா? அவ்வாறு ஆகிவிடக் கூடாது. மீண்டும் குழுமம் செயல்பட வேண்டும்” என்பது போன்ற கருத்துக்களை முன்வைப்பார்கள். சில நாட்கள் மீண்டும் சில மின்னஞ்சல்கள். அதன்பின் மீண்டும் உறைந்திருத்தல்.

இப்படி ஒரு உயிர்த்தெழுப்புவிக்கும் மின்னஞ்சல் 2008-ம் ஆண்டு தொடக்கத்தில் அந்தக் குழுமத்தில் வந்தது. அப்போது நானும் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு விட்டேன். எனவே ”குழுமத்தில் நாம் ஆன்மிகம் பற்றி விவாதிப்போம். தொடக்கமாக, என் எண்ணங்களை வாரம் ஒரு முறை குழுமத்திற்கு அனுப்புகிறேன். அதன் அடிப்படையில் விவாதிக்கலாம்” என்று வீராவேசமாக நானும் மின்னஞ்சலிட்டு, அதன் பின் தொடர்ந்து பதினைந்து வாரங்கள் குழுமத்திற்கு வாரம் ஒரு மின்னஞ்சல் அனுப்பி ஏற்றுக் கொண்ட பொறுப்பை முடித்து விட்டேன். முதல் சில மின்னஞ்சல்களுக்கு சிறிய விவாதங்கள் நடந்தது. அதன்பின் மீண்டும் குழுமம் அதன் இயல்புக்குச் சென்று விட்டது.

ஆனால் அந்தப் பதினைந்து வாரங்களின் இறுதியில், என்னளவில் முற்றிலும் புதியவனாக மாறியிருந்தேன். அதுவரை நான் எண்ணுபவற்றையே செய்கிறேன் என்னும் ஒரு மயக்கத்தில் இருந்து வந்தேன். பதினைந்து வார எண்ணங்களை எழுதும் பயிற்சி, அந்த மயக்கத்தை தகர்த்து விட்டது. எழுதுவதற்கு முன் அவை எண்ணங்களாக இருக்கும். எழுதிய பின் எண்ணங்கள் எழுத்து வடிவத்தை அடைந்திருக்கும். எண்ணங்கள் பதிவு செய்து வைக்கப்பட்டுள்ளதால் எண்ணங்களுக்கும் செயல்களுக்குமான இடைவெளியும் இப்போது தெளிவாக தெரியத் தொடங்கும். அந்தப் பதினைந்து வாரங்களில் முதன்முறையாக எண்ணங்களுக்கும் செயல்களுக்குமான இடைவெளி அப்பட்டமாக எனக்கு தெரியத் தொடங்கியது. இந்த அறிதல் என் எண்ணங்களை ஒரு புறத்திலிருந்தும் செயல்படும் விதத்தை இன்னொரு புறத்திலிருந்தும் நுண்மையாக மாற்றத் தொடங்கியது.

இந்த அறிதல் அளித்த சுயமாற்றத்தை இழக்க நான் விரும்பவில்லை. அதே நேரத்தில் என் சுய லாபத்திற்காக நண்பர்கள் மேல் வன்முறையை கட்டவிழ்த்து விடவும் விரும்பவில்லை. எனவே தொடர்ந்து எழுதியவற்றை அந்த யாஹூ குழுமத்திற்கு அனுப்பவில்லை. அதே நேரத்தில் எழுதுவதற்கான பொறுப்புணர்வையும் ஆர்வத்தையும் தக்க வைத்துக் கொள்ள வலைப்பக்கம் (Blog) ஒன்றைத் தொடங்கி எழுதியவற்றை அவ்வப்போது அதில் பதித்து வந்தேன். எதற்காக எழுதுகிறேன் என்பதில் தெளிவாக இருந்ததால் நெடுங்காலம் நான் மட்டுமே பார்த்து வந்த ஒரு வலைப்பக்கத்தில் தொடர்ந்து எழுதுவதில் ஏமாற்றமும் தயக்கமும் அவ்வப்போது ஏற்பட்டாலும், அவற்றைக் கடந்து தொடர்ந்து எழுதவும் முடிந்தது.

ஒவ்வொரு கட்டுரையையும் எழுதி முடிக்கும்போது, ஏதோ ஒன்றை இன்னும் நெருக்கமாக அறிய முடிந்தது. அதே நேரத்தில் அறியாதவற்றின் எல்லை இன்னும் விரிவதையும் உணர முடிந்தது. அறிந்தது அளிக்கும் மன எழுச்சியும் அறியாதவை அளிக்கும் பணிவுணர்வும் சேர்ந்து நிகழ்ந்த ரசவாதம், எனக்குள் நான் மட்டுமே அறியும் ஒரு சமநிலையை உருவாக்கி அளித்தது. இதைத் தவிர நான் எழுத வேறு என்ன காரணம் வேண்டும்?

சுமார் இரண்டு வருடங்களுக்கு முன் சில இணையப் பத்திரிகைகளுக்கு எழுதியவற்றை பரீட்சார்த்தமாக அனுப்பி வைத்தேன். ‘சிறகு‘ இல் நான் எழுதியனுப்பியது பதிப்பிக்கப்பட்டு, அது பிறர் வாசிக்கும் அளவுக்கு உள்ளது என்னும் நம்பிக்கையைக் கொடுத்தது. அதன் பின் ‘சொல்வனம்‘ சில கட்டுரைகளை பதிப்பித்தது. இந்தக் கட்டத்தில் நான் எழுதும் முறையை சற்றே மாற்றியமைக்க வேண்டியிருந்தது. அதுவரை மற்றவர்களும் படிக்க வேண்டும் என்னும் பிரக்ஞை இல்லாமல் எழுதி வந்த நான், எழுதுவது எனக்காக இருந்தாலும் பொதுவெளியில் வரும்போது படிப்பவர்களுக்கும் ஆர்வமூட்டுவதாக இருக்க வேண்டும் என உணர்த்தப்பட்டேன். அதன் பின் அந்த உணர்வுடன்தான் எழுதி வருகிறேன். ஆனாலும் எழுதுவதில் அவ்வுணர்வு பிரதிபலிக்கிறதா என்பதை என்னால் உறுதி செய்ய முடியவில்லை. அவ்வாறு இல்லையென்றாலும் அது என் நோக்கத்தை பாதிப்பதில்லை.

 

oOo

(டி. கே. அகிலன் எழுதத் தொடங்கியது 2008 இறுதியில். அவ்வப்போது எழுதியவற்றை, அது மிக அதிகம் இல்லையென்றாலும், wwww.change-within.blogspot.com என்னும் வலை முகவரியில், ”அகமாற்றம்” எனப் பெயரிடப்பட்ட பக்கத்தில் எழுதி வருகிறார். 2014-ம் வருடத்திலிருந்து ”சிறகு”, ‘சொல்வனம்” ஆகிய இணையப் பத்திரிகைகளில் சில கட்டுரைகள் பதிப்பிக்கப்பட்டிருக்கின்றன)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.