அவன் கனவில் ஒரு குதிரை வந்தது. பட்டுக் கருப்புக் குதிரை.நெற்றியில் வெள்ளை ஒரு பதக்கம் போல் ஓடியது. அதன் அழகு வியப்பிற்குரியதாய் இருந்தது. அதனால்தானோ என்னவோ சற்று கர்வமாகவும், அலட்சியமாகவும் நின்றிருந்தது.
இதைப் போன்ற குதிரையை பார்த்திருக்கிறானா என்று தன்னையே கேட்டுக் கொண்டான்.
மொத்தமாகவே அவன் ஏழெட்டு குதிரைகளைத்தான் பார்த்திருப்பான். ஆனால் அவைகள் அனைத்தையுமே வண்டியில் பூட்டப்பட்ட நிலையில்தான் கண்டிருக்கிறான். ஓடி ஓடிக் களைத்த குதிரைகள். உணவைக்கூட அவை ஆவலாக உட்கொண்டதில்லை.. அவைகளின் மூச்சுச் சீறல்கள் சிறு வயதில் பயமாகவும், வளர்ந்த பின்னர் சோகமாகவும் தனக்குக் கேட்டதாக கனவிற்குள்ளும் அவனுக்கு நினைவு வந்தது.
இந்தக் கறுப்பு பட்டுக் குதிரை ஒரு சேணமும் அணியவில்லை. கடிவாளமும் இல்லை. உயரமாகவும், அசையாமலும் நின்றிருந்தது. அதை நெருங்க அவன் ஆசைப்பட்டான். அது அவனை ஒரு பொருட்டாகக் கூட பார்க்காதது அவனுக்குச் சற்று ஏமாற்றமாக இருந்தது. அதன் பயங்கர வசீகர அழகு அவனை அங்கிருந்து நகரவிடவில்லை.
அதை “நிலா” என அழைக்க ஆசைப்பட்டான். கறுப்பு நிலா! அமாவாசையை கறுப்பு நிலா எனச் சொல்லலாமோ என்று கேட்டுக் கொண்டான். கறுப்புத் துகள்களிலிருந்து உலகம் தோன்றியிருக்கலாம் என்கிறார்களே விக்ஞானிகள்— அதைப் போல் இந்த கறுப்பு நிலா ஒரு வெளியைத் தோற்றுவிக்கக்கூடும். கருநிழல் படிந்த பேரொளியாக அந்த வெளியில் பல தோற்றங்கள் உருக்கொள்ளக் கூடும்.
நிழல்… அப்பொழுதுதான் அவன் கவனித்தான். அதற்கு நிழலே இல்லை. முன்னே, பின்னே, பக்கவாட்டில், கால்களுக்கிடையில். அடர்ந்த வாலை ஒட்டி எங்குமே நிழலைக் காணோம். கண்களை கசக்கிக் கொண்டு பார்த்தான். இல்லை—நிழலில்லை.
ஒளி படாது காட்சி இல்லை. இங்கே காட்சியிருப்பதால், நிழல் இருக்க வேண்டுமே? அவன் தன்னை கிள்ளிப் பார்த்துக் கொண்டான். அதை நெருங்கும் ஆசையுடன், அதனால் ஏதேனும்மோசமான விளைவு ஏற்படுமோ என்றும் தவித்தான்.
ஏன் நெருங்காமலே அந்த அழகை இரசிக்க மனம் ஒப்பவில்லை என அவனுக்குப் புரியவில்லை. மேலும் விபரீதமாக அதன் மேல் ஏறும் ஆசையும் வந்தது. அதன் உயரம் மலைக்க வைத்தாலும், அதில் பயணிக்க மிகுந்த முனைப்பும் மனதளவில் ஏற்பட்டது. நிழல் விழாத “நிலா”அச்சத்தைத் தந்தது.
அவன் வாழ்க்கையில் பெரும் நிகழ்வுகள் இல்லை. பெரிய மாற்றங்கள் கிடையாது. கல்வி, வேலை, திருமணம், குழந்தை என்ற பாதுகாக்கப்பட்ட சராசரி வாழ்க்கை. அவன் படகில் பயணித்ததில்லை, ஓர் இரவிற்கு மேல் இரயிலில் சென்றதில்லை, மலை ஏறியதில்லை.தேர் இழுத்ததில்லை, தெப்பம் செலுத்தியதில்லை.
இதெல்லாம் சேர்ந்து கனவாக வந்ததோ என கனவிற்குள் ஒரு இழை வந்து போனது. தான் மட்டும் தனியாக அந்த வெளியில் நிலாவுடன் நிற்பதை அவன் அப்பொழுதுதான் உணர்ந்தான். இரு உயிர்கள். மனிதனும், விலங்குமாக. விந்தைகளேயற்ற தன் வாழ்வின் தனிப்பட்ட பொக்கிஷம் போல் கறுப்பு நிலாவும் தானும்..
அவன் ஆவல் இப்பொழுது கட்டுக்கடங்கவில்லை. “நிலா” என்று அழைத்துக் கொண்டே அடியெடுத்து வைத்தான். இந்த நிலையில்கூட தான் ஓடிச் சென்று அதைத் தொட முயற்சிக்கவில்லை என்பது ஆறுதலா, வருத்தமா எனவும் சிந்தித்தான்.
அவன் அடியெடுத்துவைக்கையில் “நிலா” பக்கவாட்டில் விலகி நடந்தது. அவன் வியப்பின் சிகரத்தில் நின்றான். இது என்ன என்று மீண்டும் ஒரு முறை முயன்ற போதும் “நிலா” பக்கவாட்டில் நடந்து சென்றது. ஆனால், மறையவில்லை. இந்த விளையாட்டின் கவர்ச்சி அவன் களைப்புறும் வரை தொடர்ந்தது. அவன் திடீரென்று உணர்ந்தான்- அவனின் நிழலும் விழவில்லை. அவனின் அருகில் “நிலா” நின்று கொண்டிருந்தது.
..
ஒளிப்பட உதவி – Ponthieu14