
பர்ப்பிள் வண்ண களிமண்ணில்
ஒரு கோப்பை செய்கிறாள்.
நாவால் நக்கி சுத்தமாக்கப்பட்ட
ஐஸ்க்ரீம் டப்பாவிலிருந்து
பால் விட்டதும்,
கோப்பையில்
அப்பாவிற்கான காப்பி நிறைகிறது.
சற்றே கோணலென
நீண்டிருக்கும் விளிம்பின் ஓரத்தை
பிடித்துக் கொண்டு வந்து கொடுக்கிறாள்.
அகமலர்ச்சியோடு கோப்பையை வாங்கி
உறிஞ்சுகிறான்.
உடன் புரைக்கேறி விடுகிறதாம்.
அப்பாவின் செருமலும் இருமலும்
அவளை சிரிக்க வைக்கின்றன
கைப்பிடியை சரியாகப்
பிடித்துக் கொண்டு
கோப்பையை கவிழ்க்காமல்
செருமும் வித்தையை
அவனுக்கு செய்துக் காட்டுகிறாள்.
பாவனைகளற்ற உலகம் ஒன்று
அவர்களைச் சுற்றி பரவுகிறது.
pic courtesy: Mommypotamus