வெ கணேஷ் –
-
ஒரு புகைப்பட உருவம்
எழுத்துரு இயக்கம்
நான் காதல் கொண்டவளின்
இரு அடையாளங்கள்
காலை முதல்
கணவன் வீடு திரும்பும்
மாலை வரை உடனிருந்தாள்
ஒவ்வோர் அமர்விலும்
எழுத்துரு நடனமாடி
என்னை மயக்கினாள்.
குளியலறையில் கைநழுவிய சோப்புத்துண்டு
வயிற்று மடிப்புகளின் எண்ணிக்கை
கணவனுடனான முந்தைய நாள் பிணக்கம்
வாழ்வின் அனைத்தையும் திறந்த ஏடாக்கினாள்
திடுதிப்பென்று ஒரு நாள்
அவமதிப்பினால் நம் காதல் முறிந்தது என்று
சொல்லிக் கொள்வோம் என அறிவித்துவிட்டு
வெற்றுத்திரையாகி மறைந்தாள்
காதலின் காரணங்கள் போன்று
பிரிவின் காரணமும் புனைவாய்த்தானே இருத்தல் வேண்டும்?
பெரிதாக்கப்பட்ட
அவளின் குறை-தெளிவு பிம்பம்
புள்ளிகளாய்ச் சிரிக்கிறது