அமரநாதன்
இலக்கிய ஆர்வமுள்ள நண்பர்கள் சிலர் ஒவ்வொரு வாரமும் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். அது போல் இம்முறை சந்தித்தபோது பன்னிரு படைக்களத்தின் இறுதி அத்தியாயங்கள் பற்றிய பேச்சு வந்தது. அதை வாசித்தபொழுது தவிர்க்க இயலாமல் அண்ணா இறந்ததும் கருணாநிதி எழுதிய இரங்கற்பாவும் நினைவுக்கு வந்தது. அது கவிதை என்று ஒரு காலத்தில் கருதப்பட்டது. பன்னிரு படைக்களத்தில் பீமன், “நீங்கள் வென்று தருக்கியது உங்களுக்கு ஊட்டப்பட்ட முலைப்பாலை. கொன்று உண்டது (தின்றது!) கொல்லையில் நின்றிருந்த காமதேனுவை,” என்று கூறுவதை மொழிவளம் என்று என்று ஒரு நண்பர் பாராட்டியபோது “அடுக்குமொழி” இலக்கியத்தின் பொற்காலத்தை நினைக்காமல் இருக்க முடியவில்லை.
நண்பர்கள் சிலரின் பார்வையில் இந்த “மொழிவளமே” ஒட்டுமொத்தமான அளவுகோலாகி நாவல் தேர்ச்சி பெற்று விடுகிறது. இது போலொன்று வெவ்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் எல்லா எழுத்தாளர்கள் விஷயத்திலும் நடந்தேறி வருகிறது. மிகச் சாதாரணமான நாவல்கள்கூட இலக்கியமல்லாத காரணங்களுக்காக – 31 வயதாகியும் பூப்படையாத பெண்ணைப் பற்றிய முதல் நாவல், தேனி மாவட்டத்தில் இரண்டு மலைகளுக்கிடையே உள்ள பள்ளத்தாக்கில் வாழும் ஏதோ ஒரு பழங்குடியினப் பெண்களைப் பற்றிய முதல் நாவல் – இலக்கியம் என்று போற்றப்படுகிறது. மொழிவளம் வேறு இலக்கியம் வேறு. உண்மையில் மொழிவளமோ, அல்லது யாரும் எழுதாத ஒன்றை எழுதுவது என்பதோ மட்டும் ஒரு படைப்புக்கு இலக்கிய அந்தஸ்து பெற்றுத் தந்து விடுவதில்லை.
எதார்த்த எழுத்தை, அது யதார்த்தமாய் இருக்கிறது என்பதாலேயே உயர்ந்த இலக்கியம் என்று ஏற்றுக் கொள்பவர்களும் இருக்கிறார்கள். இலக்கியம் வாழ்க்கையைப் பிரதிபலிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் இலக்கியமல்லாத காரணங்களைக் கொண்டு இலக்கியத்தைக் கண்டடையும் முயற்சிதான். வாழ்க்கை அனுபவம், வாசிப்பனுபவம் இரண்டிற்கும் தவிர்க்க இயலாததொரு தொடர்பு உண்டு என்ற சிந்தனை எழுத்தாளனுக்கு இருக்குமா என்று தெரியவில்லை. அசோகமித்திரன் ஒரு நேர்காணலில், “அது கதை அய்யா,” என்றார்.
வாழ்வனுபவத்தையும் வாசிப்பனுபவத்தையும் எதிரெதிர் தட்டுகளில் வைப்பதானால் எங்கே அனுபவம் முடிகிறது, எங்கே கற்பனை துவங்குகிறது என்ற கேள்வி எழுகிறது. இப்படிப்பட்ட சிந்தனை ஒரு படைப்பாளியைக் குழப்பவே செய்யும். வாழ்க்கை என்று கருதியதால்தான் ஜெயமோகன் ‘அறம்’ தொகுதியில் உள்ள கதைகளை எழுத முடிந்தது. இதே காரணத்தினாலேயே ‘தோல்’ போன்ற நாவல்களும் எழுதப்படுகின்றன. அனுபவ வாழ்க்கை ஒரு புனைவினுள் எவ்வளவு இருக்கலாம்? புனைபடைப்பு என்றாலும் சிக்கல்தான். அது வாசிப்பனுபவத்தினுள் வருவது கடினம்.
இப்படிக் கூறலாம்: புனைவின் களத்தில், அதன் தருணத்தில் நடக்கச் சாத்தியமுள்ளவற்றைப் பற்றி படிப்பது நமக்கு நல்ல வாசிப்பனுபவமாகிறது. நாம் படிப்பது மகிழ்ச்சிக்காகவே என்று கூறுவது ஒரு ஹெடானிச சித்தாந்தம் என்றாகிவிடலாம். ஆனால் இப்படி ஒரு கருத்து இலக்கிய கோட்பாடுகளில் விவாதிக்கப்படுகிறது. Pleasure என்பது வெறும் புலனின்பம் மட்டுமல்ல- அறிவு, ஆன்மா சார்ந்த விஷயம் என்று கொள்வோமானால் அதன் பொருள் வேறாகிவிடலாம். இந்நிலையில் இன்பம் X துன்பம் என்ற இருமை இல்லாமலாகி விடலாம்; உதாரணமாக திருமணம் – பிரிவு, குழந்தையின் பிறப்பு – தாயின் பிரசவ வலி. இது பற்றி நிறைய விவாதங்கள் உண்டு.
கனிவு, புரிந்துணர்வு, போன்ற விஷயங்களைக் கொண்ட கதைகளுக்கு நாம் அளிக்காத சலுகையை வன்முறை, குரூரம், துரோகம், காழ்ப்புணர்வு போன்ற எதிர்மறை உணர்வுகளை இரக்கமின்றிச் சித்தரிக்கும் கதைகளுக்கு அளித்து நாம் அவற்றிற்கு இலக்கிய மதிப்பு தருகிறோம் என்றொரு கருத்தும் இருக்கிறது. ஆனால், எந்த ஒரு இலக்கியப் படைப்பையும் அதனுள் உள்ள தர்க்கத்தினடிப்படியில்தான் பார்க்க வேண்டும் என்று கருதுகிறேன். அப்படிச் செய்யும்போது இப்படியொரு எண்ணம் எழ வாய்ப்பில்லை. வாழ்க்கை X இலக்கியம் விவாதம் நிறைய பேசப்பட்டுவிட்ட ஒன்று. அந்த இருமை அவசியமில்லை.
வாழ்க்கை என்றால் யாருடைய வாழ்க்கை? விஜய் மல்லையா நன்றாகவே வாழ்கிறார். தினந்தோறும் நூறு இருநூறு சம்பாதிக்கும் ஆட்டோ டிரைவர் யாரோ தவறுதலாக விட்டுச் சென்ற லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நகைகளை திரும்பக் கொடுக்கிறார். இதில் எது வாழ்க்கை? நேரடி அனுபவம் எப்போதும் இலக்கியமாவதில்லை.
‘அப்பாவின் நண்பர்’ கதையில் தேவை நிர்பந்தத்தால் அப்பாவின் நண்பரைத் திட்டித் தீர்க்க வேண்டுமென்று எண்ணுகிறான் மகன். அவனது அம்மாவுமே அப்பாவின் சிநேகிதரைத் திட்டிக் கொண்டுதான் இருப்பாள், ஆபத்து காலத்தில் உதவவில்லை என்ற ஆதங்கத்தில். உண்மையில் மகன் அவர்களின் சந்திப்பை அஞ்சுவான். ஆனால் அவன் அச்சத்துக்கு மாறாக அம்மாவுக்கோ அப்பாவின் சிநேகிதரைப் பார்த்தவுடன், “இவ்வளவு நல்லவங்களையெல்லாம் விட்டுவிட்டுப் பிரிந்து செல்ல உங்கள் நண்பருக்கு எப்படி மனது வந்தது,” என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. இதைப் பல்வேறு வகைகளில் புரிந்து கொள்ள முடியும் என்பதில்தான் இலக்கிய அனுபவம் இருக்கிறது. அது வாழ்க்கை தரும் நேர்க்கோட்டிலான அனுபவமல்ல.
ஒளிப்பட உதவி – The Nonist