
Image Credit: americanliterature.com
மாப்பஸானைக் கண்டுகொள்வதற்கு முன், நான் முதலில் ஜேம்ஸ் ஜாய்ஸ் படிக்க வேண்டியிருந்தது. பிரான்சுக்குப் போவதானால் அயர்லாந்தைக் கடந்து செல்ல வேண்டும் என்ற அளவில்தான் இதற்கு அர்த்தம் இருக்க முடியும். ஏனெனில், நானறிந்து ஜேம்ஸ் ஜாய்ஸுக்கும் மாப்பஸானுக்கும் கொஞ்சம்கூட சம்பந்தமில்லை. ‘க்ளே‘ என்ற கதைக்கும் ‘தி நெக்லஸ்‘ என்ற கதைக்கும் இடையே சில மெல்லிய இணைகோடுகள் இருக்கலாம் (சலிப்பில் ஆழ்ந்திருக்கும் அழகிய பெண்ணின் தாளவொண்ணா குமுறல்). மாப்பஸான், ஜாய்ஸ் இருவரும் காத்திரமான மீசை வைத்திருந்தார்கள், இருவருக்கும் மேக நோய் இருந்தது. ஆனால் இதில் கடைசியாகச் சொன்ன நிலை இருவரையும் பிணைக்கக்கூடிய உரமாக முடியாது; மேக நோய் என்பது மறைந்த ஆண் எழுத்தாளர்கள் விஷயத்தில், சாட் பரிட்சைகளில் உன் பெயரைப் பிழையின்றி எழுதுவதற்கு இணையான ஒன்று. ஆனால்கூட, எட்டாம் வகுப்பு ஆசிரியராய் இருப்பதற்கு அநியாயத்துக்கு தகுதியற்றிருந்த என் ஆங்கில ஆசிரியைக்குதான் நான் நன்றி சொல்ல வேண்டும் – இந்த இரு படைப்பாளிகளும் என் நினைவில் பிரிக்க முடியாதபடி பிணைந்திருக்கிறார்கள்.
முதலில், அவள் ‘டப்ளினர்ஸ்‘ கதையை நாசம் செய்தாள். ‘தி டெட்‘ கதைக்கு அவள் தந்த விளக்கம்? சோகம். பனிப்பொழிவு. அடுத்தது. ‘எவலைன்‘? ரயில் பயணம். பெண்கள். அடுத்தது. ஒரு கதையின் சாரத்தை அளிப்பதற்கும் சோம்பேறித்தனத்திற்கும் வேறுபாடு இருக்கும் என்றால், அவளது வகுப்புகள்தான் அதன் அளவை. ஒருவேளை, இந்த அம்மணி வேறெங்காகிலும் இருக்க வேண்டியவளாய் இருக்கலாம். இங்கு இருப்பதற்கு பதில், இந்நேரம் “ஹேங் இன் தேர்” என்று எழுதப்பட்ட பூனை போஸ்டர்களைத் தன் விரல் நகங்களால் கிழித்துக் கொண்டு ஆசிரியர்களுக்கான அறையில் அவள் ஒரு சந்திப்பிற்காகக் காத்திருப்பாளாக இருக்கும். நான் சொல்ல வருவது இதுதான் – எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான ஆங்கில வகுப்புகள், அதன் ஆசிரியர்களுக்கு நிறைவளிக்க வாய்ப்பில்லை. எனக்குத் தெரிந்ததெல்லாம் அவள் கதை குறித்த விவாதங்களை வெகு வேகமாகக் கடந்து சென்றாள் என்பதுதான் – எங்களில் மோசமானவர்களைக்கூட அவளது வேகம் ஆச்சரியப்படுத்தியது. ‘அரபி’‘ கதைக்கு அவள் அளித்த விளக்கம்தான் என்னைத் தீர்த்துக் கட்டியது. தன்னைவிட வயதில் மூத்த பெண் மீது மோகம் கொண்ட ஒரு சிறுவனின் கதை ‘அரபி‘. கிராமத்தில் நடக்கும் சந்தைக்கு தான் போகப் போவதாக அவளிடம் சொல்கிறான், பதிலுக்கு நினைவுப் பொருள் ஏதேனும் வாங்கிவரச் சொல்கிறாள் அவள். அவள் பணித்த செயலால் குதூகலிக்கும் அவன், மிகப் பொருத்தமான ஒரு பரிசைத் தேடி இறுதியில் கண்டெடுக்கிறான். ஆனால், அந்தக் கடையை நடத்தும் பெண்மணி அவனைப் பார்த்துச் சிரித்தபடி உதவி வேண்டுமா என்று கேட்கும்போது அவன், இல்லை, வேண்டாம், நன்றி என்று சொல்லிவிட்டு வெளியேறுகிறான்.
“பார்த்தீர்களா,” என்று என் ஆசிரியை கதையை முடித்தாள், “சில சமயம் ஜாய்ஸ் கதைகளில் அர்த்தமே இருப்பதில்லை, அதுதான் விஷயம்”
நிச்சயம் அதுவல்ல விஷயம். தனியார் பள்ளி அமைப்பில் பணியமர்த்தப்பட்டிருக்கும் அமெச்சூர் நிஹிலிஸ்ட் நீயென்றால், அப்போது வேண்டுமானால் அதுதான் உனக்கு விஷயமாக தெரியலாம். ஆனால் உலகில் ஒருவர் மீதொருவர் ஒருதலைக்காதல் கொண்ட எந்த ஒரு பதின்பருவ கும்பலாக இருந்தாலும் அவர்களுக்கு இந்தக் கதை புரிந்திருக்கும்: கடையை கவனித்துக் கொண்டிருக்கும் பெண்மணி அவன் திசையில் தன் வசீகரப் புன்னகையை வீசும்போது, நம் நாயகன் தன் காதலி நாகரீகமாகப் பேசியிருக்கிறாள் என்பதைப் புரிந்து கொள்கிறாள், அவள் அவனிடம் சல்லாபிக்கவில்லை. அப்போதே அவனது காதல் ஜோதி அணைந்து போகிறது, அதனிடத்தில் சங்கடப் புகைதான் மிஞ்சி நிற்கிறது. நான் அப்போது ‘ஆனி ஹால்‘ பார்த்திருக்கவில்லை, ஆனால் பார்த்திருந்தால், ஜேம்ஸ் ஜாய்ஸ் என் வகுப்பறைக்குள் நுழைந்து அந்த மார்ஷல் மக்லூஹன் காட்சியை அரங்கேற்றியிருக்க வேண்டும் என்று விரும்பியிருப்பேன். ‘அரபி‘ அப்போதே எனக்கு மிக முக்கியமான கதையாகிப் போனது, பாதுகாப்பாய் வைத்திருக்க வேண்டிய ஒரு சிறு இலக்கியப் பொருள் அது. (பதின்பருவ உள்ளத்தின் வினையை என்னவென்று சொல்ல- அஞ்சாதே, ஜேம்ஸ், நான் உன்னைக் காப்பாற்றுகிறேன்!). எனவே, அடுத்து கிழிபடப் போவது கை டி மாப்பஸான் என்ற ஒரு பிரெஞ்சுக்காரன் என்பதை பாடத்திட்டத்தில் பார்த்ததும் எனக்குக் கவலை வந்துவிட்டது.
என் வாழ்க்கையில் முதல் முறையாக நான் பாடம் நடத்தப்படும் பக்கங்களைக் கடந்து வாசித்துப் பார்க்கிறேன். முதலில் ‘தி நெக்லஸ்‘ கதையில் துவங்குகிறேன் (அதுதான் சிறிதாக இருக்கிறது). அதன்பின் ரத்தத்தை உறைய வைக்கும் ‘பூல் டி ஸ்வூஃப்‘ (Boule de Suif). இரு கதைகளின் முடிவுகளும், அவற்றின் தாங்கிக்கொள்ள முடியாத அளவு கச்சிதமான திருப்பங்களும், எனக்கு அதிர்ச்சியளித்தது நினைவிருக்கிறது. நான் அந்தப் புத்தகத்தின் பக்கங்களையும் நினைவில் வைத்திருக்கிறேன், அவற்றின் அளவையும்கூட. அதன் எழுத்துரு எனக்கு நினைவிருக்கிறது என்று எண்ண விரும்புகிறேன், ஆனால் அதை மறந்துவிட்டேன் என்பதுதான் உண்மையாக இருக்கும். ஆனால் இப்போதும் பார்க்க முடிகிறது, நான் என் படுக்கையில் உட்கார்ந்திருக்கிறேன், திறந்த வாய் மூட மறந்து அமர்ந்திருக்கிறேன், ஒரு தந்திரக் காட்சியை இப்போதுதான் கண்டதுபோல். மீண்டும் ‘தி நெக்லஸ்‘ கதையைப் படிக்கிறேன். மாப்பஸான் கதைகளை எனக்கு மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற உந்துதலை உணர்கிறேன், அவற்றை நானாகவே புரிந்து கொள்ள வேண்டும், அவற்றின் ஆசிரியர் என்னிடம் நேரடியாகப் பேச வேண்டும். ஏன், அந்த போஸ்டர்- கிழிக்கும் கள்ளக் காட்டுப்பூனை. கடைசியில் அவள்தான் என் ஆசிரியர்களில் மிகச் சிறந்தவராக இருந்தார். கொஞ்சமும் ஒளிவுமறைவற்ற அவளது ஆர்வமின்மைக்கு அப்பால் அவள் என்னைக் கதைகளை நேசிக்கச் செய்துவிட்டாள்.
‘பூல் டி ஸ்வூஃப்‘ கதைக்கு அவளது விளக்கம்? விபசாரம். யுத்தம்.
நன்றி, இப்போது என் முறை.
நான் வளர்ந்து விட்ட நிலையில் என் இப்போதைய பிரச்சனை, இந்தக் கதைகளின் ஆற்றல் குறைந்து வருகிறது என்பதுதான் – அதிலும் குறிப்பாக, ‘தி நெக்லஸ்‘ கதை. காலம் போகிறது, முதல் காதல்களின் நினைவழிகிறது என்பதும் இதற்கொரு காரணம். ஆனால் என் தேர்வுகளும் இதற்கான காரணம்தான். கடந்த சில ஆண்டுகளாக நான் வேறெதையும் நினைத்துப் பார்க்கவில்லை என்பதைச் சொல்ல வேண்டும். ‘தி நெக்லஸ்‘ கதையை என் நாவலுக்கான இன்ஸ்பிரேஷனாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன். அந்தக் கதையைத் தனித்தனியாய்ப் பிரித்து ஒவ்வொரு பகுதியையும் திருப்பிப் பார்த்து மீண்டும் இணைத்திருக்கிறேன். ‘தி க்ளாஸ்ப்‘ கதையின் பிரதான பாத்திரங்கள் பொய்யான லட்சியங்களை ஒரு சங்கிலித் தொடராய்த் விரட்டிச் செல்கின்றனர்- ‘தி நெக்லஸ்‘ கதையின் அரைகுறை இரக்கம் கொண்ட நாயகியைப் போலவே. கதை பற்றிய என் முதல் உணர்வுகளைப் பொடிப்பொடியாய்த் துகளாக்க, நான் அந்தக் கதையைப் பற்றி சிலரிடம் நேர்முகம் காண்கிறேன்- நினைத்துப் பார்க்குமிடத்தில் திரும்பச் சொல்லச் செய்கிறேன். அவ்வளவு முக்கியமாய் இருந்த இந்தக் கதை எனக்கு ஒன்றுமில்லாமல் போகும்வரை நான் மீண்டும் மீண்டும் பேசிக் கொண்டேயிருக்கிறேன். இயல்பாகவே, எனக்கு இந்தப் பரிமாற்றம் பிடித்திருக்கிறது. இதிலிருந்து எனக்கு ஒரு முழு புத்தகமே கிடைத்திருக்கிறது. காமத்துக்குரிய பதார்த்தங்கள் இன்னும் எத்தனையோ இருக்கின்றன.
வேறொரு கதையைத் தன்னிகழ்வாய் வாசிக்கும்போதுதான் இந்தக் கதையை மீட்க நேர்ந்தது. ஒரு ஜனவரி மாதப் பனிப்புயலில், ஐசாக் பாபெலின் “கை டி மாப்பஸான்” என்ற கதை எதிர்ப்பட்டது. மாப்பஸான் வெறியள் என்று சொல்லிக்கொண்டு திரியும் என்னைப் போன்ற ஒருத்திக்கு இந்தக் கதையைப் படித்ததேயில்லை என்பது கேலிக்குரிய விஷயம்தான். மாப்பஸான் கதைகளை மொழிபெயர்த்து ஒரு பணக்கார போஷகருக்கு காதல் வலை விரிக்கும் ரஷ்ய இளைஞன் ஒருவனைப் பற்றிய இந்தக் கதையில் அவன் வீடு திரும்பி, மாப்பஸானின் கொடூர மரணம் பற்றிய தகவலை வாசிக்கிறான் (மாப்பஸானின் மரணத்தின் மிகக் குரூரமான விஷயம் அவரது பால்வினை நோயல்ல). காமம். உயர்குடிகள். பிரெஞ்சு விஷயங்கள். ஆம், அந்தத் தளங்கள் அத்தனையையும் அந்தக் கதை கையைப் பிடித்து இழுத்தது. ஆனால், பாபெலின் கதை உண்மையில் வாழ்வுக்கும் மரணத்துக்கும் இடையிலுள்ள அந்த மெல்லிய இழை பற்றியது, உயர் கலையையும் அடிமட்டக் குப்பையையும் பிரிக்கும் மெல்லிய இழை. “சொற்றொடர் ஒன்று இவ்வுலகில் பிறக்கிறது, அது நன்றும் தீதுமாய் ஒரே சமயத்தில் இருக்கிறது. ரகசியம் ஒரு சிறிய, ஏறத்தாழ கண்ணுக்கே தெரியாத திருகலில் இருக்கிறது. அதைத் திருப்பும் கோலை நீ உன் கரங்களில் ஏந்தியிருக்க வேண்டும், மெல்ல மெல்ல வெம்மை அடையும் அதை நீ ஒரு முறைதான் திருப்ப முடியும், இரண்டாம் முறை திரும்பாது”. நான் என் பதின்பருவத்தில் சிறுகதைகள் வாசிக்கும்போது அடைந்த தூய நேசத்துக்கு “கை டி மாப்பஸான்” கதை என்னை மீண்டும் அழைத்துச் சென்றது. மாப்பஸான் கதைகளில் ஒன்றை நான் என் புனைவுக்குள் சேர்த்துக் கொள்ள நினைப்பதற்கு முன்பான காலம் அது.
பாபெல் கதையைப் படித்து முடித்தபின், நான் என் அறையின் குறுக்கே நடந்து, அலமாரியில் இருந்த ஒரு தொகுப்பை எடுத்து, ‘தி நெக்லஸ்‘ கதை இருக்கும் பக்கத்தைப் புரட்டிப் பிரித்தேன். அதை வாசித்தேன் – உண்மையாகவே வாசித்தேன்- முன் எப்போதும் நான் அதை வாசித்திராதது போல். தலைக்கனம். இழப்பு. பாரிஸ். உண்மையைச் சொன்னால், இது ஒன்றும் அவ்வளவு மோசமான விளக்கம் அல்ல.
(ஸ்லோன் கிராஸ்லியின் நாவல், ‘தி க்லாஸ்ப்’ இம்மாதம் பேப்பர்பாக் வடிவில் பதிப்பிக்கப்படுகிறது)
nice piece.in India (Tamil naaadu) teachers in 8th standard, never give an assessment or appreciation, of stories.They stress on style, grammar and questions are on comprehension and understanding the language.Blaming the teacher for not guiding is unjust.
எட்டாம் கிரேடு என்பதுதான் எட்டாம் வகுப்பு என்று வாசிப்பு வசதியை முன்னிட்டு மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.
I am intrigued by the name ‘Pongal” Does it refer to our Tamil festival? bala
அது ஒரு சுய-எள்ளல் 🙂
ஆங்கிலத்தில் பேசுவது பேச்சு வழக்கில், ‘பீட்டர் விடுவது’ என்று சொல்லப்படுகிறது, இல்லியா? அதே போல், அறச்சீற்றமும் பேச்சு வழக்கில், ‘பொங்குவதாக’ பேசப்படுகிறது.
வேறொரு நண்பர் தனக்குத் தேர்ந்தெடுத்துக்கொண்ட பெயர் இது, மிகவும் பிடித்துப் போனதால் சுவீகரித்துக் கொண்டேன்.
எந்தக் கதையையும் ஆசிரியர் என்னிடம் நேராக பேசவேண்டும்” அது உண்மைதான்.நிறைய Language வகுப்பறைகள் இப்படித்தான் ஆகிவிடுகின்றன.நேரடியான விளக்கங்கள்.பெரும்பாலும் கேள்விகளுக்கான பதில் தயாரிப்புகள் போன்று.உண்மையில் எல்லா கதைகளையும் நிறைய மாணவர்கள் உணர்வதேயில்லை.ஆர்வம் கொண்டவர்களுக்கு வகுப்பறை விளக்கங்கள் சலிப்பூட்டுவன.நிறைய விமர்சனங்களை நான் இப்படி உணர்ந்ததுண்டு.எந்த படைப்பும் அளிக்கும் தனிப்பட்ட புரிதல்கள் முக்கியமானவை.சுவாரசியமான மொழிபெயர்ப்பு.நன்று.
pl translate it in Tamil!
இந்த மாதிரி சைட்ல எல்லாம் லைக் பட்டன் வச்சா எவ்வளவு வசதியா இருக்கும்!
I got this in perhaps unicode or some other coding and not in Tamil script.hence the request.no sarcasm please.
Sorry, nothing sarcastic was intended. When you are expected to reply, and you have nothing to say, the like button comes handy- you click a like to let know that you read the comment. Since I had no idea why or what i had to translate, i made that comment. Now I see that it is insensitive, sorry again.