o0O0o
935
‘இப்படி மலைச்சுப் போய் உக்கார்றதுக்கு என்னாச்சு இப்ப, வர வேண்டிய இடத்துக்குதான வந்திருக்கம்’ என் முகக்குறிப்பைப் பார்த்த பவுடர் கைக்குட்டைக்காரர் முறுவலித்தார். சிரித்து முடித்ததும், அந்த தருணத்தின் அவநம்பிக்கையினை உணர்ந்தது போல அவர் முகம் வெறுமையாகியது. அந்த பிரும்மாண்ட வெண்மதிலின் இருப்பை மறுப்பது போல முகத்தை திருப்பி வந்த வழியை சற்றுப் பார்வையிட்டார். கழுத்தில் இருந்த கைக்குட்டையை எடுத்து நெற்றியை ஒற்றிக் கொண்டவர், சட்டென தளர்ந்து போய் கீழே அமர்ந்தார்.
சுருட்டுக்காரன் நீண்ட புகை விடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
“அவன் கெடக்கான் விடு. சுருட்டு கண்ட இடமே சொர்க்கம்னு உக்காந்திருப்பான். இப்ப என்ன விஷயம்னா” எனக்குப் பின்னால் வந்த புதியவர் ஆரம்பித்தார். “நாம இப்ப என்ன செய்யப் போறம்” என்றார்.
கைகள் இரண்டையும் ஒன்று சேர்த்து பரபரவென தேய்த்துக் கொண்டார். குந்தி அமர்ந்திருந்தவர்கள் சற்று கால்களை மாற்றி அவரைத் திரும்பிப்பார்த்தனர். அந்த கவனயீப்பு அவருக்கு சற்று உற்சாகம் அளித்தது. முதுகை நிமிர்த்திக் கொண்டபடி பேசத் தொடங்கினார்.
“இந்த நெடிய பயணம், நாம் எதிர்கொண்ட தேர்வுகள், நம்முடைய தீர்மானங்கள், மனஉளைச்சல்கள் எல்லாவற்றுக்கும் இந்த மதில்தான் இறுதித் தீர்வு என்றால், இங்கே நாம் இருக்கவே கூடாது. புரிந்து கொள்ளுங்கள். நம்முடைய பயணத்தின் நோக்கம் என்ன? கிறக்கத்திலிருந்து நிமிருங்கள். கண்களைத் திறவுங்கள்” அவருடைய குரலில் சுதி கூடிக் கொண்டே போனது.
“நமக்கான வழி இங்கே எழுதி வைக்கப்படவில்லை என்பதால் அது இல்லை என்றாகி விடுமா” என்று உரக்கக் கேட்டார். சுற்றியிருந்தவர்களிடையே சற்று சலனம் உண்டானது. அச்சமும் மதிப்பும் அளிக்கும் அவருடையப் பேச்சிற்கு யார் முதல் எதிர்வினையாற்றுவது என்கிற தயக்கம், எல்லோரிடமும் அலை போல் பரவியது.
“நீங்கள்” கையை நீட்டி “உங்களைத்தான் 934′ என்று என் தோளைத் தொட்டதும் நிமிர்ந்து அவர் முகத்தைப் பார்த்தேன்.
“நீங்கள் எதற்காக காத்திருக்கிறீர்கள்?” என்றார். அவருடைய முகம் முழுவதும் நம்பிக்கை விரவியிருந்தது. திரும்பி சுருட்டுக்காரனைப் பார்த்தேன். கண்களை இடுக்கியபடி, மிதக்கும் புகைவளையங்களை சுவாரசியமாக பார்வையால் பின்தொடர்ந்து கொண்டிருந்தான்.
“எழும்புங்கள். தயங்காதீர்கள். நமக்கான வாசலை நாமே கண்டெடுப்போம். மதிலை ஏறிச்சாடுவோம். நம் முயற்சிக்கான பலன் கிடைக்கும் வரை ஓயமாட்டோம்”
இப்பொழுது முழக்கமாகவே அவருடைய குரல் ஒலித்தது. சிறு நெருப்புப் பொறியென சுற்றியிருந்தவர்களை பற்றிக் கொண்டது. கைக்குட்டைக்கார் மீண்டும் எழுந்துவிட்டார். தோளில் போட்டிருந்த கைக்குட்டையை எடுத்து நெற்றியை சுற்றிக் கட்டிக் கொண்டு கைகைளை உயர்த்தி கூக்குரலிட்டார்.
“நமக்கான வாசல். நமக்கான வாசல்”. பற்றிக் கொண்ட நெருப்பென எல்லோரையும் அது சுற்றிக் கொண்டது. சிலர் மதிலைச் சுற்றிக் கொண்டு வழி இருக்குமென ஓட ஆரம்பித்தார்கள். சிலர் மதிலுக்கு கீழே ஏதேனும் பொந்துகள் இருக்கிறதா எனத் தேட ஆரம்பித்தார்கள். புதியவரின் முழக்கத்தால் உந்தப்பட்ட சிலர்ம திலின் மேல் ஏறிச்சாட முயற்சி செய்தனர். கைக்குட்டைக்காரரும் ஏதாவது வழி இருக்கிறதா என்று மதிலை உன்னிப்பாக பார்க்க ஆரம்பித்தார்.
சுருட்டுக்காரன் சுருட்டின் இறுதிப் பகுதியை ஆழமாக உறிஞ்சிக் கொண்டிருந்தான். அவனுடைய அசட்டையே எங்களை எல்லோரையும் இருப்புக் கொள்ளாமல் ஆக்கிவிட்டது. இந்த மதிலைத்தாண்டி ஏதாவது வழி இருக்கும் என நிச்சயம் நம்பினேன். இருந்தேயாக வேண்டும்.
அப்போதுதான் கைக்குட்டைக்காரர் அதைச் செய்தார்.
“இதோ இங்கே இருக்குப் பாருங்க வழி” என்றார் உரக்க. தன் தலையை முன்னால் சாய்த்துக் கொண்டு, ஓடிப்போய் பெரும் பாய்ச்சலென மதிலை நோக்கிப் பாய்ந்தார். ‘வழி’யென அவருடைய குரலைக் கேட்டதும்தான் தாமதம் , மடமடவென கூட்டத்தினர் பலரும் பாய ஆரம்பித்தனர் என்று சொல்லி முடிக்கும் முன்னர் நானும் பாய்ந்திருந்தேன்.
என் குனிந்த தலை மதிலை நெருங்கிய நொடியில் கண்ணோரத்தில் சுருட்டுக்காரன் புதியதொரு சுருட்டை எடுத்துப் பற்ற வைப்பது தெரிந்தது. பற்களால் சுருட்டைக் கடித்தபடி ‘935’ என்றான்.
o0O0o
936
கதவு பக்கம் வந்ததும் வரிசையில் பதட்டம் கூடியது. “இது இல்லை” என்று சிலர் விலகினர். “இது என்ன” என்று சிலர் எட்டிப் பாய்ந்து தேடினர்.
“ஒரு ரகசியம்” முன்னே சென்று கொண்டிருந்தவர், தன்னுடைய நடையை மெதுவாக்கி, இடைவெளியை குறைத்து, அருகில் வந்ததும், என் காதுக்கு மட்டும் கேட்கக்கூடிய ஒலியில் முணுமுணுத்தார். எதிரே இருண்டிருந்த பாதை இன்னமும் குறுகிக் கொண்டு வருவது அடர்ந்த குளிரால் தெரிந்தது. நாசியில் பவுடர் நெடி படர்வதை உணர்ந்து தலையைத் திருப்பி அவரை நோக்கினேன்.
“இந்த பாதை முடியவே முடியாது. எழுதி வச்சுக்கிடுங்க இந்த வழியெல்லாம் ரெம்ப பழக்கப்பட்டதாகத்தான் தெரியுது எனக்கு” கிசுகிசுப்பாக சொன்னார். “சுத்தி வளச்சு சுத்தி வளச்சு போயிட்டேத்தான் இருக்கும்”.
நீண்டு கிடந்திருந்த பாதையை மென் நடை மூலம் கடந்து சென்று கொண்டிருந்தோம்.
பனிபோர்த்திய வெளி போல் தோற்றமளிக்கும் இடத்தில் பல கிளைகளாக பாதை பிரிவது தெரிந்தது. தொலைவில் திரும்பும் பாதை ஒன்று. பசுமையாகவும் தடங்கள் ஏதும் இல்லாததொரு சாலை மற்றொன்று. பின்னிப் பிரிந்து செல்லும் பாதைகள் சில.
விரிந்து இறங்கும் சாலை முடிவில், கழுத்தைச் சுற்றி கைக்குட்டை கட்டிக் கொண்டிருந்தவர் தன் நடையை நிறுத்திவிட்டுச் சொன்னார். “இலக்கை தேடிச் செல்வதல்ல பயணம். இலக்கை உருவாக்கிக் கொள்வதுதான் பயணம்”.
உடன் வந்தவர் பலர் நின்றனர். கைக்குட்டைக்காரர் சுட்டிக் காட்டிய பெரும்பாறையில் இலக்கம் ஒன்று எழுதப்பட்டிருந்தது. “இதுதான் நம்முடைய இலக்கு. இதுவே நம்முடைய குறிக்கோள்” என்றார். அத்தனைக் கால அலுப்பிலும் அவர் முகம் புது பவுடர் மெருகோடு பளபளத்துக் கொண்டிருந்தது.
தன் கொடியை அங்கே நட்டவர், விரித்த கைகளுடன் விவரிக்கத் தொடங்கினார். “இந்த கொடியின் கீழ் நமது புதிய உலகம் சிறக்கும். நம்முடைய கனவுகள் எல்லாம் இங்கே ஈடேறப் போகிறது. இதுதான் நம் குறிக்கோள்” அவருடன் நின்றவர்கள் எல்லோரும் ஆர்ப்பரித்தனர்.
இப்படி ஓர் இலக்கை எதிர்பார்க்காததால் நம்பிக்கையில்லாமல் விலகிச்சென்றவர் கூட்டத்தோடு சென்றேன். சாதனை என்றால் அவ்வளவு சுலபத்தில் சித்தித்து விடுமா.
சுற்றி சுழன்று போய்க்கொண்டிருந்து முடிவேயில்லாமல் போய்க்கொண்டிருந்த பாதையின் நடுவே பலரும் தங்கள் இலக்கை கண்டடைந்து விட்டோமென பிரிந்து சென்றனர். அவரவர் கொடிக்கு என ஆங்காங்கே கூட்டமும் சேர்ந்து நின்றது. எதுவும் என்னுடைய தேடலை நிறுத்தவில்லை. நான் எதிர்பார்ப்பது இவற்றை எல்லாம் விட வேறான, தனித்துவமானதொன்று. அதை அடைய இன்னும் எவ்வளவு கடின பயணம் என்றாலும் மேற்கொள்ளத்தான் வேண்டும்.
தன்னந்தனியே அந்தப் பாதையில் சுற்றிக் கொண்டிருந்த நிலையில் மொட்டைப் பாறை என அந்த இலக்கு முன்னே வந்து நின்றது. பாறையின் மேலே, சுருட்டுப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தவன் திரும்பிப் பார்த்து
“நடக்க சக்தியில்லன்னா அப்படி ஓரமாப் போய் ஒக்காரு. இந்த இடத்துக்கு நம்பர் போடறேன்னு எதையாச்சு நட்டு வைக்காத போ’ என்றான் சிரித்தபடி. கையிலிருந்த கொடியை உடைத்துப் போட்டுவிட்டு ஓரமாகப் போய் அமர்ந்து கொண்டேன்.
o0O0o
.
.
.
1000
பிறிதொரு நாளில் எங்கோ ஒருவரிடம் என் தேடலைப் பற்றி விவரிக்க நேர்ந்தால், அப்பொழுது என்னுடைய தெரிவுகளின் தனித்துவத்தைப் பற்றி விரிவாகச் சொல்வேன். அதன் வெற்றிகளையும், மேன்மைகளையும் நீள உரைப்பேன்.
நான் விட்டு விலகிய பாதைகளின் குளிர் மரநிழல்களையும், காற்றின் சரசரப்பையும் நினைவில் சேமித்து வைத்திருக்கிறேன். அவைகளை எதிர்கொண்ட வேளைகளில், நிராகரிக்கும் எண்ணம் துளியும் இருந்தததில்லை எனக்கு. முடிந்த அளவு என் முடிவுகளை தாமதப்படுத்திக் கொண்டுதான் வந்திருக்கிறேன். நான் பயணிக்காத பாதைகளும், பயணித்தவை அளவுக்கு தனித்துவமானவையே.
இதைத்தான், இந்த பயணத்தைத்தான், இப்படித்தான், இதன் ஊடுபாவுகளுடன், இத்தனை உச்சங்களுடன், வழுக்களுடன் உருவாக்கி வந்திருக்கிறேன்.
இனி என்னால் திரும்பிப் போகவே முடியாது என்ற நிலையில் பல திருப்பங்களை கடந்து, அந்தப் பெருவெளியில் வந்து நின்றேன்.
சுற்றி அத்தனையும் புதிய பாதைகளாக தெரிந்தன. யாரும் பயணிக்காத, புதிய, மெருகேற்றப்பட்ட, நிச்சலனமான பாதைகள்.
எல்லாத் தெரிவுகளும் அங்குதான் வந்து முட்டி நின்றன. அங்கிருந்துதான் எல்லா தெரிவுகளும் தொடங்கிச் சென்றன.
பாதையில் மையத்தில் அமர்ந்து சுருட்டுப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்த அவன், திரும்பிப் பார்த்து, உரக்க சிரித்தபடி சொன்னான்.
“ஆயிரம் இருக்கு வழி இங்க. அத்தனையிலும் பயணிச்சிட்டு வந்திடனும் உனக்கு…. இல்ல?’
நானும் அவன் பக்கத்தில் போய் அமர்ந்து கொண்டேன். புதிய சுருட்டு ஒன்றை எடுத்து நீட்டினான் என்னிடம்.
o0O0o