மாயக்கூத்தன்
இப்போது நான் முன்னே சென்று, அந்த மடத்தின் தலைமை லாமாவை வணங்கினேன். அவர் என்னை ஆசீர்வதிக்க, அவருடைய இறுக்கமான முகம் புன்னகையால் மலர்ந்தது. மற்ற லாமாக்களையும் வணங்கிய பின் நானும் கோண்டும், சின்னச் சின்ன மர இருக்கைகளை வரிசையாக அடுக்கி எங்களுக்காக உருவாக்கப்பட்ட மேஜைக்கு முன் அமர்ந்தோம். தரையில் சம்மண்மிட்டு நாங்கள் உட்கார, அந்த மேஜை எங்கள் மார்பு உயரம் வரை வந்தது. வெப்பம் மிகுந்த நாளில் பயணம் செய்துவிட்டு, குளிர்ந்த தரையில் உட்கார்வது இதமாக இருந்தது. பருப்பினால் செய்யப்பட்ட கஞ்சி (soup), பொறித்த உருளைக்கிழங்கு மற்றும் கத்திரிக்காய் கறி தான் எங்கள் சாப்பாடு. நானும் கோண்டும் சைவர்கள் ஆதலால், அங்கு பரிமாறப்பட்ட முட்டைகளை நாங்கள் சாப்பிடவில்லை. எங்களுக்கான பானம் சுடச்சுட க்ரீன் டீயாக அமைந்தது.
மதிய உணவிற்குப் பின், தன்னுடன் மதியத் தூக்கத்தை எடுத்துக்கொள்ள என்னையும் கோண்டையும் அழைத்தார் தலைமை லாமா. அவருடன் மலையின் உச்சி சிகரத்திற்கு ஏறினோம். அது ஒரு கழுகின் பொந்து போல இருந்தது. அதற்கு மேலே நெருக்கமாக தேவதாரு மரங்கள் வளர்ந்திருந்தன. அங்கே, மரச்சாமான்கள் ஏதுவும் இல்லாத வசதிகளற்ற வெற்று அறை ஒன்றைப் பார்த்தோம். அதற்கு முன் அப்படி ஒன்றை நான் பார்த்திருக்கவில்லை. அங்கே நாங்கள் உட்கார்ந்த பிறகு அந்தத் துறவி, ”இந்த மடாலயத்தில் ஒவ்வொரு நாளும் இரண்டு முறை, இந்தப் பூமியின் தேசங்களைக் குணப்படுத்துவதற்காக நாங்கள் எல்லையற்ற கருணையிடம் பிரார்த்திக்கிறோம். இருந்தும் யுத்தம் தொடர்ந்துகொண்டு தான் இருக்கிறது. பறவைகளையும் விலங்குகளையும் கூட, வெறுப்பும் பயமும் தொற்றிக் கொள்கிறது. உணர்வுகளால் உண்டாகும் நோய்கள், உடல் நோய்களைவிட வேகமாகப் பரவுகின்றன. மனிதகுலம் பயத்தினாலும், வெறுப்பினாலும் சந்தேகத்தினாலும் வன்மத்தினாலும் நிரம்பப் போகிறது. இவற்றிலிருந்து மொத்தமாக மனிதர்களை விடுவிக்க வேண்டுமானால், ஒரு தலைமுறையையே நாம் கடக்க வேண்டியிருக்கும்.” என்றார்.
இதுவரை சுருக்கங்களற்று இருந்த லாமாவின் நெற்றியை எல்லையற்ற சோகம் கவலை ரேகைகளால் நிறைத்தது. பயங்கர களைப்பினால் அவருடைய இதழோரங்கள் தாழ்ந்தன. யுத்தங்களுக்கு மேலே அவற்றைத் தாண்டி, அவருடைய கழுகுக் குகையில் அவர் வாழ்ந்த போதும் கூட இந்த உலகத்தைப் போரில் ஆழ்த்தியவர்களைவிட அவர் மனிதர்களின் பாவச் சுமையை நன்கு உணர்ந்திருந்தார்.
ஆனால், அவர் மறுபடியும் புன்னகைத்தார். “நம்முடன் இருக்கும் வண்ணக்கழுத்தையும் கோண்டையும் பற்றிப் பேசுவோம். உன்னுடைய புறா மீண்டும் வானத்தின் அமைதியில் பறக்க வேண்டும் என்றால், கோண்ட் இத்தனை நாட்கள் தனக்காகச் செய்து கொள்வது போல, நீ எல்லையில்லா துணிவை தியானிக்க வேண்டும்.”
“எப்படிப் பிரபுவே?” என்று ஆர்வமாகக் கேட்டேன். அந்தத் தலைமை லாமாவின் மஞ்சள் முகம், சிவந்தது. என்னுடைய நேரடிக் கேள்வியால் அவரை சங்கடப்படுத்திவிட்டேன் என்பதில் சந்தேகமே இல்லை. அதற்காக நான் வெட்கினேன். நேரடித்தன்மை அவசரத்தைப் போலே மிகவும் இழிவானது.
என்னுடைய எண்ணங்களை உணர்ந்தவரைப் போல, என்னை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டு வரும்வகையில் லாமா சொன்னார், “ஒவ்வொரு சூரிய உதயத்தின் போதும் அஸ்தனமத்தின் போதும், வண்ணக்கழுத்தை உன் தோளில் அமர்த்திக் கொண்டு, உனக்குள்ளே இதைச் சொல் ’எல்லையில்லா துணிவு எல்லா உயிர்களிடத்திலும் இருக்கிறது. இவ்வுலகில் உயிர் பிழைத்து சுவாசிக்கும் ஒவ்வொரு உயிரும் எல்லையற்ற துணிவின் நீர்நிலை. நான் யாரைத் தொடுகிறேனோ அவர்களிடத்தில் எல்லயற்ற துணிவைக் கடத்தும் அளவிற்கு பரிசுத்தம் அடைவேனாக”. இதைத் தொடர்ந்து செய்து வந்தால், ஒருநாள், உன்னுடைய இருதயம், மனம் மற்றும் ஆன்மா மொத்தமாக பரிசுத்தமாகிவிடும். அந்த நொடியில், பயமில்லாத, வெறுப்பில்லாத, சந்தேகம் இல்லாத, உனது ஆன்மாவின் சக்தி, வண்ணக்கழுத்துக்குள் ஊடுறுவி அவனுக்கு விடுதலை அளிக்கும். எவன் ஒருவன் மிகப் பெரிய அளவில் தன்னை சுத்தப்படுத்திக் கொள்கிறானோ, அவனால் இந்த உலகத்திற்குள் மிகப்பெரிய ஆன்மசக்தியை செலுத்த முடியும். நான் சொல்வதை நாளுக்கு இரண்டு முறை செய். எங்கள் லாமாக்கள் அனைவரும் உனக்கு உதவி செய்வார்கள். என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.”
ஒரு நொடி மெளனத்திற்குப் பின் லாமா தொடர்ந்தார், “வேறு யாரையும்விட மிருகங்களைப் பற்றி நன்கு அறிந்தவரான கோண்ட் உனக்குச் சொல்லியிருப்பார், நம்முடைய பயம் மற்றவர்களை பயமுறுத்தி, நம்மை தாக்கச் செய்கிறது. உன்னுடைய புறா ரொம்பவே பயந்து போய் இருக்கிறான். மொத்த வானமும் தன்னைத் தாக்கப் போகிறது என்று நினைத்துக் கொண்டிருக்கிறான். ஒரு இலை கூட அவனைப் பயமுறுத்தாமல் கீழே விழுவதில்லை. அவன் உள்ளத்தைக் கலங்கடிக்காமல் ஒரு நிழல் கூட விழுவதில்லை. இருந்தாலும் அவனுடைய வேதனைக்கு அவனே காரணம்.
“நாம் பேசிக் கொண்டிருக்கும் இதே நேரத்தில், இங்கிருந்து கீழே வடமேற்கில் இருக்கும் கிராமம், வண்ணக்கழுத்து சந்திக்கும் அதே பிரச்சனையால் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறது. இது மிருகங்கள் வடக்கே வரும் காலம். மிரட்சியில் இருக்கும் கிராமவாசிகள், காட்டு மிருகங்களைக் கொல்வதற்காக பழைய துப்பாக்கிகளோடு சுற்றித் திரிகிறார்கள். இதோ, அந்த மிருகங்கள் இப்போது அவர்களைத் தாக்குகின்றன. ஆனால், இதற்கு முன்னர் அவை அப்படிச் செய்ததே இல்லை. காட்டெருமைகள் வந்து அவர்களின் பயிர்களை சாப்பிடும். சிறுத்தைகள் அவர்களுடைய ஆடுகளை திருடிக் கொண்டு போகும். இன்றைக்கு இங்கே வந்த செய்தி, ஒரு காட்டெருமை ஒருவனைக் கொன்றுவிட்டது என்பது. பிரார்த்தனையாலும் தியானத்தாலும் அவர்கள் மனத்திலிருந்து பயத்தை ஒழித்துவிடுங்கள் என்று நான் சொன்னாலும் அவர்கள் செய்யப்போவதில்லை.”
“ஏன்?” என்று கேட்டார் கோண்ட். “நான் அங்கே சென்று அந்த விலங்குகளை அவர்களிடமிருந்து விரட்ட எனக்கு அனுமதி தரமட்டீர்களா?”
“இப்போதைக்கு இல்லை” என்றார் லாமா. “விழித்திருக்கும் கணங்களில் நீ பயத்திலிருந்து குணமடைந்திருந்தாலும், உன்னுடைய கனவுகள் அச்சத்தின் சாபத்துக்கு இன்னும் இடம் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இன்னும் சில நாட்கள் தொடர்ந்து பிரார்த்தித்து தியானம் செய்வோம், உன்னுடைய ஆன்மாவில் இருக்கும் கசடுகள் எல்லாம் வெளியே போய்விடும். நீ குணமடைந்த பின்பும் கீழே இருக்கும் கிராமத்தார்கள் விலங்குகளால் தாக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள் என்றால், நீ போய் அவர்களுக்கு உதவி செய்யலாம்.”