வண்ணக்கழுத்து 17இ: லாமாவின் மெய்யறிவு

gay_neck_the_story_of_a_pigeon

அவர் கடைசியாகச் சொன்ன வார்த்தை எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. நான் அந்த இரண்டு மரங்களுக்கு இடையிலான இடைவெளியை ஆராய்ந்தேன். அவை உயர்ந்து பருத்திருந்தவை, இரண்டுக்கும் நடுவே நாங்கள் இருவரும் நெஞ்சோடு நெஞ்சை ஒட்டிக் கொண்டு நடக்கக் கூடிய அளவே பூமி இருந்தது.

“இப்போது என்னுடைய பயம் தோய்ந்த ஆடையை இந்த இரட்டை மரங்களுக்கு நடுவே வைக்கிறேன்” என்று சொல்லிவிட்டு தன்னுடைய உடைக்கு அடியில் இருந்து நேற்று வரை அவர் அணிந்திருந்த பழைய உடைகளின் மூட்டையை எடுக்கலானார்.  அதைத் தரையில் வைத்துவிட்டு இரண்டில் இரு மரத்தில் ஏறினார். மேலே ஏறிய பிறகு கோண்ட் ஒரு கயிற்று ஏணியை எனக்காக கீழே வீசினார். வண்ணக்கழுத்து என் தோளில் தனது சமநிலையை இருத்த தன் இறக்கைகளை அடித்துக் கொண்டிருக்க நான் அந்த ஏணியில் ஏறினேன். இரண்டுபேரும் கோண்ட் உட்கார்ந்து கொண்டிருந்த கிளையை பத்திரமாக அடைந்துவிட்டோம். மாலை விரைந்து வந்து கொண்டிருக்க நாங்கள் அங்கேயே சில நேரம் அசையாமல் உட்கார்ந்திருந்தோம்.

அந்தி சாய்கையில் நான் முதலில் கவனித்த விஷயம் பறவைகளின் வாழ்க்கை. கொக்குகள், இருவாய்க் குருவிகள், க்ரவுஸ், பெஸண்டுகள், பாட்டுக் குருவிகள், கிளிகளின் மரகதக் கூட்டங்கள் காட்டை ஆக்கிரமிப்பது போல இருந்தது. தேனீயின் ரீங்காரமும் மரங்கொத்தியின் டக் டக் டக் சத்தமும், தொலைவில் கேட்ட கழுகின் கிறீச் ஒலியும், மலை ஓடையின் கீழித்துச் செல்லும் இரைச்சலோடும் ஏற்கெனவே முழித்துவிட்டிருந்த கழுதைப்புலிகளின் விட்டுவிட்டு வரும் கனைத்தலோடும் கலந்திருந்தது.

அந்த இரவு நாங்கள் இருப்பிடத்தை அமைத்திருந்த மரம் மிகவும் உயரமானது. எங்களுக்கு மேலே சிறுத்தையோ பாம்போ இல்லாதபடி நாங்கள் உயரத்திற்கு ஏறினோம். கவனமான ஆய்வுக்குப் பிறகு இரண்டு கிளைகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றுக்கு இடையே எங்களுடைய கயிற்று ஏணியை உறுதியான தொட்டிலாகக் கட்டினோம். இருப்பிடத்தில் பத்திரமாக உட்கார்ந்த உடனே கோண்ட், வானத்தைச் சுட்டிக் காட்டினார். உடனே நான் மேலே பார்த்தேன். அங்கே மிகப் பெரிய கழுகொன்று தன்னுடைய மாணிக்க நிற இறக்கைகளோடு பறந்து கொண்டிருந்தது. வெள்ளத்தைப் போன்று வேகமாக இருட்டு தரையிலிருந்து மேலெழுந்து வந்தாலும் கூட, வானுக்கு மேல் வெளிகள் ஒரு புறாவின் கழுத்தைப் போன்று ஒளிர்ந்தது. அந்த வெளியில் அந்த தனிக் கழுகு மீண்டும் மீண்டும் வட்டமடித்துக் கொண்டிருந்த்து. கோண்டைப் பொறுத்தவரை சந்தேகமே இல்லாமல் அந்த்க் கழுகு அஸ்தமிக்கும் சூரியனை வழிபடுகிறது.

அந்தக் கழுகின் இருப்பு ஏற்கெனவே அங்கிருந்த பறவைகளையும் பூச்சிகளையும் அசைவற்று வைத்திருந்தது. அவற்றுக்கு வெகு மேலே அந்தக் கழுகு இருந்த போதும், மெளன பக்தர்களின் கூட்டம் போல, அவர்களுடைய அரசன் பின்னும் முன்னும் பறந்து, அவர்களுடைய கடவுளான ஒளியின் பிதாவுக்கு ஒரு பூஜாரியைப் போலே மெய்மறந்து வணக்கம் செலுத்துகையில், அவை அமைதி காத்தன. மெல்ல அதன் இறக்கைகளில் இருந்து மாணிக்க ஒளி கசிந்தது. இப்போது அவை தங்கப் பொறிகளால் விளிம்புகள் செய்யப்பட்ட கருநீல பாய்மரத் துணியைப் போலே இருந்தன. அதனுடைய தொழுகை முடிவுக்கு வந்துவிட்டதைப் போலே, இன்னும் மேலே உயர்ந்து, தன் தெய்வத்தின் முன் தீக்குளிப்பதைப் போலே, தீயினால் எரிவது போன்று நின்ற சிகரங்களை நோக்கிப் பறந்து சென்று, அவற்றின் ஒளி வெள்ளத்தில் ஒரு அந்துப்பூச்சியைப் போலே காணாமல் போனது.

கீழே ஒரு எருமையின் முக்காரம் பூச்சிகளின் ஒலிகளை ஒவ்வொன்றாக விடுவித்து, மாலையின் நிசப்தத்தை கந்தல் கந்தலாகக் கிழித்தது. அருகில் ஒரு ஆந்தை அலற, என் துணிக்கு அடியில் இருந்த வண்ணக்கழுத்து என் நெஞ்சோடு நெருங்கி வந்தது. திடீரென்று நைட்டிங்கேலைப் போன்ற இரவுப் பறவையான ஹிமாலய குண்டுகரிச்சான் குருவி ஒன்று தன் மாயப் பாடலைத் தொடங்கியது. கடவுள் ஊதும் வெள்ளிப் புல்லாங்குழல் போல, ட்ரில்லுக்கு மேல் ட்ரில்லாக, ஏற்றத்துக்கு மேல் ஏற்றமாக, மரக்கூட்டங்களுக்கு இடையே வேகமாகப் பொழிந்து, அவற்றின் கடுமையான கிளைகளின் மீது வடிந்து காட்டுத் தரையில் இறங்கி பின் அவற்றின் வேர்களின் வழியே பூமியின் அடிநெஞ்சுக்கு இறங்கும் மழையைப் போல, அமைதி இறங்கியது.

முன்னரே வரும் கோடைக்கால இரவு உண்டாக்கும் மகிழ்ச்சி எக்காலத்திலும் விளக்க முடியாததாகவே இருக்கும். உண்மையில் இது மிகவும் இனிமையாகவும் தனிமையாகவும் இருந்ததால் எனக்கு கண்ணைச் சுற்றிக் கொண்டு வந்தது. மரத்தின் தண்டோடு என்னை பத்திரமாகப் பிணைக்க கோண்ட் இன்னொரு கயிற்றைக் என்னைச் சுற்றிக் கட்டினார்.  பின், செளகரியமாகத் தூங்குவதற்காக என் தலையை அவருடைய தோளில் இருத்திக் கொண்டேன். ஆனால், நான் அப்படிச் செய்வதற்கு முன்பாக கோண்ட் தன்னுடைய திட்டத்தைச் சொன்னார்.

”நான் கீழே கழற்றிப் போட்ட எனது உடைகள், நான் பயத்தின் பிடியில் இருந்த போது உடுத்தியவை. அவை ஒரு விசித்திரமான வாடையைக் கொண்டவை. அந்த எருமை மச்சான் இந்த வாடையை நுகர்ந்தால், அவன் இந்தப் பக்கம் வருவான். பயத்தினால் பீடிக்கப்பட்டிருப்பவன், பயத்தின் வாசனைக்கு பதிலாற்றுவான். நான் கழற்றிப் போட்ட துணிகளை ஆராய அவன் வந்தால், நாம் அவனுக்கு என்ன செய்ய முடியுமோ அதைச் செய்வோம். அவனைக் கயிற்றால் பிணைத்து ஒரு கிடாரியைப் போலப் அடக்கி வீட்டிற்கு கொண்டு செல்ல முடியும் என்று நான் நினைக்கிறேன்…” அவர் அதற்கு மேல் சொன்னவை என் காதில் விழவில்லை. நான் தூங்கிவிட்டிருந்தேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.