இரவுணவை தயார் செய்து கொண்டிருக்கும்போது, என்ன நேரம் என்று கவனித்தவளுக்கு வழக்கமான சஞ்சலம் உண்டாக, சமையலைத் தொடர முடியாமல் சமையலறை மேடை மீது கைகளை வைத்து கொண்டு நின்றிருந்தாள். “என்னமா ஆச்சு?” என்று தண்ணீர் எடுக்க வந்த ரோஹித் கேட்க, அப்போதைக்கு ஏதோ சொல்லி சமாளித்தாலும் அவன் வீட்டின் சூழலை கவனித்து வருகிறான் என்ற சந்தேகம் அவளுக்கு இல்லாமல் இல்லை. அலைபேசியில் ஆனந்தியின் அழைப்பு வரவும், விடுபட்ட உணர்வோடு அவளுடன் பேசுவதற்காக படுக்கையறைக்குச் சென்றாள்.
தன் தெருவிற்குள் நுழைந்தவனின் கண்பார்வையில் அவன் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பு தென்பட்டதும் நடையின் வேகம் அனிச்சையாக குறைய, எந்த அவசரமும் இன்றி அபார்ட்மெண்ட்டை அடைந்தான். தரைதளத்தில் நின்றிருந்த ராகவன், “ஸார், இந்த வீக்எண்டு வாட்டர் டாங்க் க்ளீன் பண்ணப் போறோம், ஆளுக்கு ஐநூறு ரூபாய் ஆகும், உங்க மிசஸ் கிட்ட சொல்லி இருக்கேன்” என்றார். “பண்ணிட்லாம் சார்,” என்றவன், சுத்தம் செய்யப்போகிறவர்கள் பற்றி, அங்கு நடப்பட்டிருந்த செடிகள் பற்றி, தெருவில் புதிதாக வைக்கப்பட்டிருந்த அரசாங்க குப்பைத் தொட்டியைப் பற்றி ராகவனிடம்- அவர் சொல்லும் பதில்களில் அதிக கவனம் செலுத்தாமல்- விசாரித்தபடி கொஞ்சம் நேரம் செலவிட்டான். பின்னர் லிப்டைத் தவிர்த்து, மெதுவாக நடந்தே மூன்றாவது தளத்தில் உள்ள தன் வீட்டிற்கு வந்து படுக்கையறைக்குள் நுழைந்தவன் அங்கே அவள் ஜன்னலருகே அலைபேசியில் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்து வெளியே செல்லலாமா என ஒரு கணம் யோசித்து, தன் அலைபேசியில் ஏதோ நோண்டுவது போல் படுக்கையில் அமர்ந்தான். ஓரிரு நிமிடங்களுக்குப்பின் அவன் இருப்பை உணர்ந்தவள் அறையை விட்டு வெளியேறவும், உடைகளைக் களைந்து குளித்து முடித்தவன் ஜன்னலருகே அமர்ந்திருக்கும்போது அவள் மீண்டும் உள்ளே வந்தாள்.
‘கிச்சன்ல குழா லீக்….’
‘ப்ளம்பர் நம்பர் இருக்…’
‘அவன்ட்ட பேசி, வந்து பாத்துட்டான். நாளைக்கு மாத்தரானாம், ஆயிரம் ருபாய் ஆகும்’
”ம்ம்ஹம்…’
‘வாட்டர் டாங்க்..’
‘வரும்போது ராகவன் சார் சொன்னார்’
அவள் அறையை விட்டு வெளியேறத் திரும்பியவுடன், ‘நாளைக்கு லேட்டா வருவேன்’
‘… நைட் சாப்பாடு?’
‘கலீக் ரிஷப்ஷன், நேத்து சொன்னேனே’
‘… ‘
எதுவும் சொல்லாமல் வெளியேறினாள்.
‘சாப்ட வாப்பா’ என ரோஹித் கூப்பிடும்போதுதான் வெளியே வந்தான். பாத்திரங்கள் அவ்வப்போது நகர்த்தப்படுவதைத் தவிர வேறெந்த ஓசையும் இல்லாத இரவுணவின் அமைதியை தாள முடியாமல் தலையை தூக்க, அவள் தன்னை பார்த்தபடியே சாப்பிடுகிறாள் என முதலில் நினைத்தவன், அவள் தன்னை கவனிக்காமல் எதையோ யோசித்தபடி உண்கிறாள் என்பதைப் பிறகுதான் உணர்ந்தான்.
“ஸ்கூல்ல பி.டி.ஏ மீட்டிங் இந்த வாரம் இருக்கு”
பதில் சொல்லாமல் இருந்தவன், அவள் எதுவும் பேசாமல் இருக்கவே அவளை கவனித்தான். மீண்டும் தலையை குனிந்தபடி சாப்பிட்டுக்கொண்டிருந்தாள். ரோஹித் இவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
“நானும் வரணுமா?”
“எப்பவும் ஒருத்தரே வரக்கூடாதுன்னு ஸ்கூல்ல சொன்னாங்கன்னு சொன்னேனேப்பா”
“ம்ம், என்னிக்கு மீட்டிங்”
“சனிக்கிழமை, உங்களுக்கு எஸ்.எம்.எஸ் கூட அனுப்பி இருந்தாங்களே”
“வரேன்”
ரோஹித் ஏதோ பேசியபடி இருக்க, இருவரும் எதையோ யோசித்தபடி அவனுக்கு பதிலளித்தபடியும், கண்கள் சந்திக்கும் அசந்தர்ப்பமான கணங்களில் உடனே பார்வையை விலக்கியபடியும் சாப்பிட்டு முடித்தனர். இரவுணவு ஏற்படுத்திய கட்டாய அண்மையின் முடிவு இருவருக்குமே ஆசுவாசமாக இருந்தது.
படுக்கையறைக்குச் சென்று விளக்கை அணைத்தவன், மின்னொளியின் வெப்பம் இல்லாமலாகும் முதற்கணம் தரும் மெல்லிய குளிர்ச்சியை உணர்ந்தான். அறையின் இருளில் அலைபேசியில் நீல நிற ஒளிப்புள்ளி சுடர் போல் மினுங்கியது. திருவிழாக் காலம் ஆரம்பித்து விட்டதால், வாடிக்கையாளர்களுக்கு அனுப்ப வேண்டிய ஆடைகளுக்கான விற்பாணைகள் பல மடங்கு அதிகரித்திருந்தன, அதற்கேற்றார் போல் சரக்கு அனுப்புவதில் குழப்பங்களும் தவிர்க்க முடியாத தாமதங்களும். அது குறித்ததாக இருக்கலாம் என்று எண்ணியவன் எதுவாக இருந்தாலும் நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து, வந்திருந்தது அழைப்பா அல்லது குறுஞ்செய்தியா என்று எதுவும் பார்க்காமல் அணைத்தான். சில கணங்களின் முழு இருட்டிற்குப் பின் தெரு விளக்குக்களின் ஒளியினால் அறை சற்றே துலங்கத் தொடங்கியது.
தொலை தூரத்தில் கலங்கரை விளக்கம் வழக்கம் போல் அதே சீரான இடைவெளியில் சுற்றி அவன் வீடிருக்கும் திசை பக்கம் திரும்பும்போது அறையின் சுவர்களில் அலை போல் வெளிச்சம் நெளிந்து மறைந்தது. இன்னொரு புறமுள்ள ஜன்னலில் வழியே தெருவில் செல்லும் வாகனங்களின் ஒளிக்கற்றைகள் அவ்வப்போது ஊடுருவின. அறையில் இருந்த மங்கலான ஒளியில் கைகளினால் சுவற்றில் நரி, மான், பாம்பு என வழக்கமான நிழலுரு வடிவங்களை- அவை ஒரே போல் தோற்றமளிக்கின்றன என்ற சந்தேகத்தோடு- உருவாக்கிக் கொண்டிருந்தான்.
மாடிக்குச் சென்று ஒரு சுற்று சுற்றி வந்தாள். அருகில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் அடுக்ககத்தின் காப்பாளர் பண்பலை கேட்டுக் கொண்டிருப்பது சன்னமாக ஒலித்தது. பிரதான சாலையில் இருந்த ஆடை, வீட்டுப் பொருள் விற்பனை கடைகள் ஒளிர்ந்து கொண்டிருப்பது இங்கிருந்தே தெரிந்தது. மேற்கு திசையில் தான் வழக்கமாக அமரும் மேடையில் அமர்ந்து தெருவை கவனிக்க ஆரம்பித்தாள். சதுர, செவ்வக வடிவிலான ஜன்னல்களின் வழியே தெரிந்த அறைகளுக்குள் ததும்பி இருந்த வெளிச்சத்தில் உருவங்கள் மிதப்பது போல் தோன்றின. இரண்டு வீடுகள் தள்ளி மாடியில் சிறிய போர்ஷனொன்றில் குடியிருப்பவர் வராண்டாவில் அமர்ந்தபடி அன்றைய தினசரியை எப்பவும் போல் படித்துக் கொண்டிருந்தார். இன்னும் சிறிது நேரத்தில் அவர் மனைவியும் வந்தமர, இருவரும் பேச ஆரம்பிப்பார்கள். சில நேரங்களில் அவர்களுடன் சேர்ந்து கொள்ளும் அவர்களின் கல்லூரி செல்லும் மகள் சில காலமாக அவள் கண்ணில் படவில்லை என்பது நினைவுக்கு வர, வேலையில் சேர்ந்திருப்பாள் என்று நினைத்தவளுக்கு தானும் மீண்டும் வேலைக்குச் சென்றால் என்ன என்று சமீப காலமாக தோன்றும் எண்ணம் மீண்டும் ஏற்பட்டது. அது குறித்து யோசித்தவாறே, பள்ளியில் இருந்து மகளை- பொதுத் தேர்வுக்கான சிறப்பு வகுப்புக்கள் முடிந்து நேரங்கழித்து வருகிறாள் போல என இவள் யூகித்திருந்தாள்- அழைத்து வரும் பெண் எப்பவும் போல் தெருவைக் கடந்து செல்வதை கவனித்தாள்.
தெரு வழக்கம் போல் இயங்கிக்கொண்டிருப்பது ஆசுவாசமாக இருந்தது. குளிர் அதிகமாகவே, கீழே இறங்கியவள் ரோஹித்தை படுக்கப் போகச் சொன்னாள். அறைக்கு வெளியே பேச்சுச் சத்தத்தைக் கேட்டவன், ஜன்னல்களை மூடிவிட்டு சுவற்றை பார்த்தபடி பெட்டில் படுத்தான். வீடு பூட்டப்பட்டுள்ளதா என்பதை மீண்டும் ஒரு முறை சரி பார்த்துவிட்டு படுக்கையறை அருகே வந்தபின் ஒரு கணம் தயங்கியவள், உள்ளே விளக்கு எரியாததை உணர்ந்து கதவைத் திறந்து நுழைந்தாள்.