சிறு வயதில பாட்டி தாத்தா வீட்டுக்குப் போகும்போதெல்லாம் அவர்களின் சண்டையை ரசிப்பதில் பெரும் ஆனந்தம் அடைவதுண்டு. அவை, மேசை மின்விசிறியை யார் பக்கம் திருப்பி வைப்பது, யாருக்கு வாய் குழறல், மறதி, கை நடுக்கம் அதிகம் போன்ற தீராத விவாதங்கள். இறுதியில் எப்போதும் பாட்டிதான் ஜெயிப்பார். தாத்தா சில சமயம் பெருந்தன்மையுடனும், பல சமயம் அசட்டுச் சிரிப்புடனும் தோல்வியை ஒப்புக் கொள்வார். அதில் ஒரு குறிப்பிட்ட சம்பவம் என் குடும்பத்தில் பிரபலமான, குறிப்பாக என் தம்பிக்கு மிகவும் பிடித்த ஒரு கதை. அவனை விட்டுவிட்டு நானும் என் அண்ணனும் தாத்தா பாட்டியுடன் மதுரை சென்று வந்தபோது, தாத்தா எங்களுக்கு அங்கு ஒரு ஹோட்டலின் இரண்டாவது மாடியில் ரூம் போட்டு விட்டதனால் பாட்டி அவரை, ‘திட்டிண்டு திட்டிண்டு’ படி ஏறினார் என்ற அந்தப் பகுதியை கேட்கும்போதெல்லாம், என் தம்பி பரவசம் அடைவான். அவனை விட்டுவிட்டுப் போன தாத்தா நல்ல திட்டு வாங்குகிறாரே! தாத்தா அந்தத் திட்டுகளை ரசித்து ஏற்றுக் கொண்டார் என்பதே என் நினைவு.
நான் பார்த்த இவர்கள் இப்படித்தான் இருந்தார்கள், ஆனால் தாத்தா பாட்டியைப் பற்றிய பழைய கதைகள் முற்றிலும் வேறானவை. தாத்தா ஒரு பயங்கர முன்கோபி, பாட்டி அவரைப் பார்த்தாலே நடுங்குவார். இருவரும் ஒருவருக்கொருவர் நேராகப் பேசிக்கொண்டுகூட என் அம்மா, சித்திகள், மாமாக்கள் பார்த்ததில்லை. தாத்தாவுடன் பேசுவதென்றால், மூத்தமகளான என் தாயார், அல்லது கடைக் குட்டியான எங்கள் கடைசி மாமா இவர்களால்தான் முடியும். வார்த்தைகள் அதிகமற்ற, ஹூம்,ம்ஹூம், என்பது போன்ற உருமல்கள்தான். எப்போதும் வாயில் வெற்றிலை, கையில் செல்லம், இல்லையென்றால் புத்தகம். Sslc சான்றிதழ் வாங்க பள்ளிக்கு வரும்படி என் தாயார் அழைத்தபோது, “நீ Sslc முடிச்சிட்டயா?” என்று கேட்குமளவு வீட்டின் மேல் கவனம்.அவரா இவர்? என்று நாங்கள் சிறுவர்கள் நம்பமாட்டோம்.
அவர்களின் ஏறத்தாழ, 50 வருட தாம்பத்திய வாழ்வின் இறுதி ஐந்தாறு வருடங்களே நாங்கள் பார்த்தது. நான் பார்த்த தாத்தா பாட்டியிடம் நிகழ்ந்திருந்த மாற்றங்கள் (என் பிற உறவினர்கள் மூலமாக நான் தெரிந்து கொண்டிருந்ததை வைத்துப் பார்க்கும்போது) எத்தகையவை, அவற்றுக்கு என்ன காரணங்கள் இருக்கலாம் என நான் புரிந்து கொள்ள தொடங்கியது, என் இருபதுகளில் ஆதவனின் ‘அந்தி‘ சிறுகதை படித்தபின்தான் .
‘அந்தி‘ சிறுகதையின் கதைசொல்லி, தன் மனைவியின் மிக வயதான, தங்கள் கல்யாணத்துக்கு கூட வர இயலாத, தாத்தா பாட்டியின் வீட்டுக்கு மனைவியுடன் சென்று வரும் நிகழ்விலும், பின்னர் அந்தப் பாட்டியின் மரணச் செய்தியைக் கேள்விப்பட்டு அவர்களை பற்றி நினைத்துக் கொள்வதிலும் விரிகிறது. இளம் தம்பதியினர், தாம்பத்திய வாழ்வின் துவக்கத்தில் இருப்பவர்கள், அதன் அந்திப் பொழுதில் இருப்பவர்களைச் சந்திக்கின்றனர் என்பது இந்தக் கதையின் நெகிழ்ச்சியான பின்புலம். கதையும், இளம் மாப்பிள்ளையின் பார்வையில்தான் சொல்லப்படுகிறது. அதன் முக்கிய பகுதி அவர்களின் தாத்தா பாட்டி வீட்டு விஜயம். தாத்தாவைப் பற்றி கதைசொல்லி கேள்விப்பட்டிருந்தது எல்லாம் அவர் ரயில்வேயில் ஸ்டோர்ஸ் சூப்பிரென்டெண்டாக இருந்து ஓய்வு பெற்றார் என்பதுதான் (அங்கு ஒரு பஞ்ச் வைக்கிறார் ஆதவன்,அது சூப்பிரென்டெண்டுகளுக்குக் கூட சுய மரியாதையோடு இருந்த காலம் என்று). கூடவே, அவர் அபாரமான ஆங்கில அறிவு கொண்டவர். ஆபீஸையே முதல் மனைவியாகக் கொண்டவர். கண்டிப்புக்கும், கறார்த்தன்மைக்கும்,முன்கோபத்துக்கும் பேர் போனவர்; (என் தாத்தாவைப் போலவே) பாட்டி பொறுமையின் சொரூபம், தாத்தாவின் எந்த உதவியும் இல்லாமல், பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கியவர், தாத்தா முன் ஒரு சொல்லெடுத்து அறியாதவள்என்ற புறத்தகவல்கள்தான்.
ஆனால் இங்கு அவர் காணும் காட்சியே முற்றிலும் வேறானது. பாட்டி அதிகம் பேசுவதில்லை. தாத்தா சமையல் அறை நிபுணராக இருக்கிறார். காபி போடுவது அவர்தான். ஓயாமல் சமையல் அறையிலும் மேடையிலும் வேலைகளை சுலபமாக்குவதற்கும், சமையலைறைப் பாத்திரங்களை இலகுவாக அலம்புவது குறித்தும் தான் செய்திருக்கும் மாற்றங்களையுமே பேசிக் கொண்டிருக்கிறார். அந்த ரயில்வே ஸ்டோர்ஸ் சூப்பிரென்டெண்டுஅங்கு இல்லவே இல்லை. ஆனால், அவர் ஒரு ஐந்து நிமிடம் பால் வாங்க வெளியே சென்றிருக்கும் சமயம், பாட்டி கதைசொல்லியிடம், திடீரென்று அக்ஷரம் பிசகாத அழகிய ஆங்கிலத்தில் பழங்காலத்து ரயில்வே விஷயங்களை பேசத் துவங்குகிறார். தாத்தா உள்ளே வந்தவுடன் அந்தப் பேச்சு அடங்கிவிடுகிறது. இப்படி ஒரு பகல் நேரம் அங்கே இருந்துவிட்ட, குழம்பிய மனநிலையுடன் இன்னொரு உறவினர் வீட்டுக்கு செல்கின்றனர் இவர்கள். அங்குதான் தெரிகிறது அவர்களுக்கு, பாட்டிக்கு சில காலமாகவே சித்த சுவாதினம் இல்லையென்றும் திடீர் திடீரென்று இப்படி ஆங்கிலப் பேச்சில் புகுந்து விளையாடுவதுண்டு என்பதும். அப்படியென்றால் அவர் தன்னிடம் பேசியதெல்லாம் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் தாத்தா பேசிய ஆங்கிலத்தின் எதிரொலிகளா, என்று பிரமிப்பில் ஆழ்கிறார் கதைசொல்லி. பிரமிப்பு விலகாத மனநிலையுடன் ஊர் திரும்புகின்றனர் புதுமணத் தம்பதியினர். சில மாதங்கள் கழித்து, பாட்டி இறந்த செயதி வருகிறது. வருத்தத்தில் மூழ்கும் கதைசொல்லி, தான் அவர்களது வீட்டில் கண்ட காட்சிகளுக்கு அர்த்தம் தேடுவதில் முனைகிறார்.
மிக நீண்ட காலம் மணவாழ்க்கையில் இணைந்து வாழும் தம்பதியினர், ஒருவரது பிரிவை இன்னொருவர் எப்படித் தாங்கிக் கொள்கிறார்கள்? நான் என் தாத்தா பாட்டியிடம் கண்டதும், இங்கு இந்தக் கதைசொல்லி தன் மனைவியின் தாத்தா பாட்டியின் நடவடிக்கைகளிலும் கண்டதும் ஒரு role reversal என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. ஒருவரது இழப்பை இன்னொருவர் தாங்குவதற்கு மிகச் சிறந்த உபாயமாக அவர்களது ஆழ்மனம் தங்கள் துணையின் பாத்திரங்களைத் தான் ஏற்று நடிக்கத் தொடங்குகிறது. இங்கே, பாட்டியின் பாத்திரத்தை தாத்தா ஏற்று நடிப்பது, பிரக்ஞாபூர்வமாக- ஆனால் பாட்டி நடிப்பதில்லை. அவர் சித்தம் தாத்தா அருகிலில்லாதபோது அவராகவே மாறி விடுகிறது. என்றோ எப்போதோ கேட்ட ஆங்கில வாக்கியங்கள் அவரை அறியாமல் அவரது வாயிலிருந்து வந்து கொண்டேயிருக்கின்றன. இதை அன்றாடம் நாம் நம் குடும்பங்களில் காண முடியும்- குறிப்பாக கணவன் – மனைவி இருவர் மட்டுமாய் இணைந்து வாழ்பவர்களின் பேச்சே மாறிவிடுகிறது, அவர்களது குரல்களின் ஏற்ற இறக்கங்கள்கூட ஒருவரையொருவர் பிரதிபலிப்பதாய் இருக்கிறது. என் தாத்தாவைப் போலவே சர்வாதிகாரியாக தம் வாழ்வின் பெரும்பகுதியைக் கழித்த ஆண்கள் தம் இறுதிக் காலத்தில் முழுக்க முழுக்க மனைவிகளிடம் முற்றடங்குவதும், அடங்கி போதலே சுபாவம் என்றிருந்த பெண்கள் ஒரு கட்டத்தில் தம் கணவர்களை வழிநடத்துபவர்களாகவும் மாறி இருப்பதைக் காண முடியும்.
முதுமையையும் பிரிவையும் மனித மனம் எதிர்கொள்ளும் விதத்தை இதை விட அழகாகச் சொன்ன ஒரு கதையை நான் தமிழில் படித்ததில்லை. ஆர். சூடாமணியின் ஒரு கதையே ஆதவனின் இந்தக் கதைக்குப் பின் என் நினைவில் வருகிறது. முதுமையின் துயர், எதிரில் நீண்டு நெருங்கும் பிரிவின் நிழல் இவையெல்லாம் தமிழ் சிறுகதை உலகில் அதிகம் பதிவானதில்லை. வழக்கம் போல ஆழ்மனதின் நினைவோட்டங்களை உரையாடல்களாக மாற்றுவதில் ஆதவனுக்கிருந்த நுட்பமான திறமை வியக்க வைக்கிறது. கதைசொல்லி, தனக்கு ஏன் முதியவர்களை எப்போதும் பிடிக்கிறது என்று தன்னைத்தானே ஆராய்ந்து கொள்ளும் இடங்களில் ஆதவனின் கசந்த நகைச்சுவை மிளிர்கிறது. எல்லாவற்றுக்கும் மேலே, இந்த கதையை இப்படி முடிக்கிறார்-
“பாட்டி இறந்த செய்தியைக் கேட்டவுடன், சட்டென்று தாத்தா பாத்திரங்களைத் தேய்த்துக் கவிழ்த்த்துக் கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது. முன்னை விடவும் தீவிரமாக அவர் சதா சமையலைறையில் முனைந்து கிடைக்கக் கூடுமோ என்று தோன்றுகிறது. இன்னொன்றும் தோன்றுகிறது, அவர் ஆங்கிலம் பேசுவதை நிறுத்தியிருக்கக் கூடும்.”
இக்கதையை படித்த பிறகு, நான் பார்க்கும் ஒவ்வொரு முதிய தம்பதியினரிடமும் இந்தக் கதையின் தாத்தா பாட்டியின் சாயல்களைக் கண்டு கொண்டேயிருக்கிறேன். என் தந்தை தனது முதுமையில் எப்படி இருந்திருப்பார் என்றறிய சந்தர்ப்பம் அமையவில்லை. ஆனால் இன்று மேலே சொன்ன என் தாத்தா பாட்டி என் நினைவில் எழும்போதெல்லாம் முதுமையில் இருந்திருக்கக்கூடிய என் தந்தையின் நடவடிக்கைகளை ஊகிப்பது சுலபம் என்றே தோன்றுகிறது. கூடவே எனது முதுமையும். அதுவே ஆதவனின் இந்தக் கதை நம் மீது செலுத்தும் ஆழ்ந்த பாதிப்பின் அடையாளம். அவரது கலையின் வெற்றி.
மேலும், என்னவொரு பொருத்தமான தலைப்பு.
2 comments