18 வயதில், தன்னை விட ஒரு வயது அதிகம் இருக்கக்கூடிய சக மாணவி ரஞ்சனியைப் பெண் கேட்டு அவள் வீட்டிற்கு நீலகண்டன் செல்வதுடன் ‘துரோகங்கள்’ கதை ஆரம்பிக்கிறது. அசோகமித்திரனின் தொடர்வாசகனுக்கு மிகவும் பரிச்சயமான, சுதந்திரம் நெருங்கும் காலகட்டம். பதின் வயதிற்கு உரிய குறுகுறுப்பும் அயல் பெண்களுடன் பழகுவதில் தயக்கமும் கொண்ட அ.மியின் பாத்திரங்களில் (நாகரத்தினத்தின் மீது ஈர்ப்பும் அவளை அணுகத் தயக்கமும் கொண்ட சந்திரசேகரன் ஒரு முன்னுதாரணம்) நீலகண்டன் மாறுபட்டிருக்கிறார்.
பெண் கேட்டு வந்ததைப் பார்த்து ரஞ்சனியின் வீட்டில் முதலில் அதிர்ச்சி அடைந்தாலும், ரஞ்சனி ஒப்புக்கொண்டபின் அவர்களும் சம்மதிப்பதாக சொல்வதோடு, ஒரு மாதத்திற்கு வீட்டிற்கு வரக்கூடாது என்றும் நிபந்தனை விதிப்பவர்கள், கெடு முடிவதற்குள் மெட்ராஸிற்கு குடி பெயர்ந்து விடுகிறார்கள். 18 வயதில் நீலகண்டனுக்கு இந்த தைரியம் எப்படி வந்தது என்பதற்கு எந்த முகாந்திரமோ அதை விவரிப்பதற்கான சூழலோ கதையின் போக்கில் இல்லை என்பது ஒருபுறமிருக்க ரஞ்சனியின் தந்தை சொல்வதை அப்படியே ஏற்றுக்கொண்டு முப்பது நாட்கள் அந்தப் பக்கம் வராமல் இருப்பதில் உள்ள பேதமைக்கும் பெண் கேட்டுச் செல்வதற்கும் அதிக வித்தியாசம் இல்லை என்றும் தோன்றுகிறது.
ரஞ்சனி சென்னை போனபிறகு நடக்கும் சம்பவங்கள் வாசகனுக்கு ஆசுவாசமளிக்க வேண்டும் என்று திணிக்கப்படவில்லை. உடம்பிற்கு முடியவில்லை என்று சாதாரணமாக மருத்துவமனைக்குச் செல்லும் தந்தை திரும்பி வரவில்லை என்று ஒற்றை வரியில் நீலகண்டன் சொல்லிச் செல்வதன் பின்னால் அந்தப் குடும்பத்தின் அன்றாட வாழ்க்கை தலை கீழாகிப்போன வரலாறு உள்ளது.
சிறிது காலம் கழித்து நீலகண்டன் குடும்பம் மெட்ராஸ் வருகிறது. அக்காவை அவன் கணவனிடம் அழைத்துச் செல்ல, அவன் அவர்களைத் துரத்தி விடுவது, குடும்பத்தைத் தாங்க வேண்டிய பல சூழ்நிலைகள் என அ.மி.யின் புனைவுகளில் ஏற்கனவே பார்த்ததுதான்; சிறிது காலம் ரஞ்சனியை தேடினாலும் வாழ்க்கை நீலகண்டனைத் தன் போக்கில் இழுத்துச் செல்வதை -திருமணம், குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆவது – வழக்கமான நேர்த்தியோடு பதிவு செய்கிறார். ‘அவனுடைய பெற்றோர் முகம் கூட மறந்துவிட்டது’ என்று ஒரு இடத்தில் முதுமை தரும் குரூரமான யதார்த்தத்தின் சுட்டுவது போல் காலச் சுழற்சி சிக்கனமாக பதிவு செய்யப்படுகிறது. ஒரு கட்டத்தில் கண்ணாடியில் பார்க்குமபோது அவர் முகமே வேறு யாருடையது போல் தெரிகிறது.
நீலகண்டனின் அக்கா பெயர் கொண்டுள்ள பெண்ணை தனக்குத் தெரிந்த வயதான பெண்ணொருவர் அடிக்கடி கேட்டுக்கொண்டிருப்பார் என்று அவருக்கு ஒருவர் சொல்ல அப்பெண்ணின் வீட்டிற்கு செல்கிறார் நீலகண்டன். வாசகன் யூகிப்பது போல் அது ரஞ்சனிதான். ஆனால் பல பத்தாண்டுகளுக்கு பின்னான சந்திப்பை உணர்ச்சிகரமாக ஆக்க அ.மி முயலவில்லை. தன் அக்காவின் பெயரை சொல்லித் தேடியவர் யார் என்று நீலகண்டனுக்கு ரஞ்சனியை நேரில் கண்ட பிறகும் அடையாளம் காண முடியவில்லை. இருவர் மனதிலும் இத்தனை ஆண்டுகளாக பொத்தி வைக்கப்பட்டிருந்த ஏக்கம் அர்த்தமற்றதோ என்ற சந்தேகத்தை எழுப்பும் அதே நேரம் யாருக்கும், எந்த மெல்லுணர்வுக்கும் கருணை காட்டாத காலத்தின் பிணைப்பில் இருந்து நீலகண்டனும் தப்பவில்லை என்று மீண்டும் புரிகிறது. அவர் பெற்றோரின்/தன் முகத்தையே நினைவு கூற தடுமாறும் ஆசாமியாகி விட்டாரே.
நடைமுறை வாழ்வில் தர்க்கத்திற்கான மதிப்பு அதிகப்படியாகத்தான் தரப்படுகிறது என்றாலும், நீலகண்டனின் பெயரைச் சொல்லி தேடாமல் அவர் அக்காவின் பெயர் சொல்லி தேடுவதற்கான காரணத்தை ரஞ்சனி கூறுவது வாசகனின் மனதில் கண்டிப்பாக அது குறித்து எழும் கேள்வியை முன்கூட்டியே யூகித்து கதையில் அதற்கான பதில் இருக்க வேண்டும் என்ற அளவில் மட்டுமே பொருந்துகிறது.
ரஞ்சனி திருமணம் செய்துகொள்ளவில்லை. ‘எனக்கு உன்னோட ஆன கல்யாணம்தான்டா’ என்று ஒற்றை வரியில் அதை ரஞ்சனி முடித்து விடுவது அவர் எடுத்த இந்த முடிவைப் பற்றி பல வரிகளில் எழுதப்பட்டிருக்கக் கூடியதை விட அதிக தாக்கத்ததை ஏற்படுத்தும், அவர் அன்பின் முழு வீச்சை உணரச் செய்யும் நெகிழ்வான இடம். வாசகன் எளிதில் கடந்து செல்லக்கூடிய அ.மியின் சொற்சிக்கனத்தின் இன்னொரு எடுத்துக்காட்டு. அதே போல் நீலகண்டனும் ரஞ்சனியும் மற்றவரின் குடும்பத்தை பற்றி பொதுவான ஒரு சில விவரங்கள் தவிர எதுவும் தெரிந்து கொள்ளாததால் – அதற்கான தேவையோ, சாத்தியங்களோ பொதுவாக எந்த உறவின் ஆரம்பத்திலும் தேவைப்படுவதும் இல்லை என்பதால் – ஒருவரை மற்றொருவர் கண்டுபிடிக்க முடியாமல் போனது எந்த மிகைப்படுத்தலும் இல்லாமல், நடந்த உண்மைகளாக மட்டுமே இருவராலும் பகிரப்படுகிறது. ஒரு சில மேலதிக தகவல்கள் மட்டும் பரிமாற்றம் செய்யப்பட்டிருந்தால் இருவரின் வாழ்வும் முற்றிலும் வேறு மாதிரியாக இருந்திருக்கக்கூடும் என்ற பகற்கனவை அவர்களிருவருள் மட்டுமல்ல, வாசகனிடமும்கூட உருவாகக் கூடும்.
நீலகண்டன் திருமணம் செய்து கொண்டிருக்க, ரஞ்சனி தனித்தே தன் வாழ்கையை கடத்தியது பெண்களை குறித்தான சமூகத்தின் வழமையான எதிர்பார்ப்பின் வெளிப்பாடு என்ற விமர்சனம் எழலாம் ஆனால் , ‘இனி வேண்டியதில்லை’ கதையின் சுஜாதா, ‘ இந்தியா 1948’ன் லட்சமி போன்ற அ.மியின் பெண் பாத்திரங்களின் நீட்சியாகவும் ரஞ்சனியையும் பார்க்க முடியும். சுஜாதா பாத்திரம் குறித்து ‘பெண்களுக்குத் தான் எத்தனை பொறுமை? தன்னுடையவன் என்று அவர்கள் ஏற்றுக்கொள்பவனுக்காகத்தான் எவ்வளவு சிறுமைகளையும் அவதிகளையும் அனுபவிக்கிறார்கள்! எவ்வளவு விடாமுயற்சி! எவ்வளவு நம்பிக்கை!’ என்று அ.மி ஒரு கட்டுரையில் சொல்வதை இங்கு பொருத்திப் பார்க்கலாம். ஆனால் இப்பெண்கள் அனைவரும் ஆண்களின் கைப்பாவைகள் மட்டுமே அல்ல. ‘இனி வேண்டியதில்லை’ கதையும் சுஜாதாவும்கூட இனி சந்தரை தேடி வரமாட்டாள் என்ற சூசகத்துடன், அவள் தன் சுயத்தை முற்றிலும் இழக்காதவாறு தான் முடிகிறது. 1948ன் லட்சமி வெளிநாட்டில் தனியே படித்து முடிக்கும், நிர்வாகத் திறன் மிக்க பெண்தான்.
ரஞ்சனியின் வீடு, அவரின் உறவினர்கள் குறித்த சுருக்கமான சித்தரிப்பு, அவர்கள் ரஞ்சனியை அழைக்கும் விதம் இவற்றை வைத்து அவர் கம்பீரமான, மதிப்பிற்குரிய பெண்மணியாகத்தான் அவ்வீட்டில் இருக்கிறார் என்று வாசகன் யூகிக்க முடியும். இவர்களிடமிருந்து ‘தண்ணீரின்’ ஜமுனாவை சென்றடைவதும் சாத்தியமே. நீலகண்டன் திருமணம் செய்து கொண்டதை அறிந்து அவரை துரோகி என்று ரஞ்சனி சொல்வதை அவரும் ஏற்றுக்கொள்கிறார்.”நீ நிஜமாகவே உங்க அம்மாவுக்காகவா கல்யாணம் பண்ணிண்டே? உங்க அம்மா உயிரைக் காப்பாத்திட்டியா..’ என்று ரஞ்சனி கேட்பதற்கு நீலகண்டன் எதுவும் சொல்வதில்லை, ரஞ்சனி அதை எதிர்பார்க்கவும் இல்லை, பதில் இருவரும் உள்ளூர அறிந்ததுதான். அதனால் தான் இந்த கேள்வியுடனேயே ‘சரி முதல்ல சாப்பிடு ..’ என்று சொல்லி அந்த உரையாடலை ரஞ்சனியே முடித்து விடுகிறார். 1948ன் லட்சமி கதைசொல்லியின் -முதல் மனைவியோடு கூடிய – குடும்பத்தை தன்னுடன் வசிக்க அழைப்பது போல் இங்கும் ரஞ்சனி நீலகண்டனையும் அவர் மனைவியையும் தன்னுடன் வந்து இருக்குமாறு சொல்கிறார். (இத்தகைய நுட்பமான உணர்வுகள் பெண்களுக்கு மட்டுமே புனைவில் ஏன் அதிகளவில் ஏற்படுகின்றன என்ற கேள்வியும் எழுப்பப்படக்கூடியதே ).
சுருக்கமாக இரண்டு மூன்று வரிகளில் ஒரு அதிர்வை அளித்து – தான் யூகிப்பது உண்மையாக இருக்கக்கூடாது என்ற பதபதைப்பையும், ஆனால் அதற்கான சாத்தியக்கூறே அதிகம் உள்ளது என்ற கசப்பான புரிதலையும் – வாசகனுள் உருவாக்கி விடுகிறது ரஞ்சனியிடம் விடை பெறும் நீலகண்டன் எடுக்கும் முடிவு. வாசகனை திடுக்கிடச் செய்வது மட்டுமே இதன் நோக்கம் என்று முதற்பார்வைக்கு தோற்றமளித்தாலும் அவர் பெண் கேட்டுச் சென்றதையும், பேதமையுடன் முப்பது நாட்கள் கழித்ததையும், அவர் இப்போது எடுக்கும் முடிவையும் ஒருசேரப் பார்க்கும்போது அவரது ஆளுமையோடு இந்த முடிவும் பொருந்துவது தெரிகிறது. இச்சிறுகதை தனித்தன்மையுடன் ஒளிர்கிறது என்று சொல்வதை விட, மனித இருப்பின் பல வண்ணங்களைக் காட்டும் அ.மியின் புனைவுலகின் ஒளி மண்டலத்தில் சிறு இழையாக இணைந்து கொள்வதாலேயே அதிகம் மிளிர்கிறது என்றே குறிப்பிட முடியும்.
மிக அருமையான விமரிசனம். இந்தப் புத்தகம் குறித்து அறியவில்லை. சித்தப்பாவிடம் கேட்க வேண்டும். கிடைத்தால் படித்து விட வேண்டும் என்னும் ஆவல். பார்ப்போம்.
அ.மி போல் ஒரு வரியில் சொல்வது என்றால் திரு.அஐயின் விமர்சனம் அருமை
இந்த கதை கடந்த 23.11.16 ஆ.வி இதழில்
வெளிவந்துள்ளது