என் சிறு வயதில் எங்கள் வீட்டில் சௌடம்மா என்று ஒரு பாட்டி வேலை செய்து வந்தார். எங்கள் அம்மாவிடம் நாங்கள் பேச முடியாதபடியெல்லாம் பேச அவருக்கு உரிமை உண்டு. அவர்கள் இருவரும் பேசிக்கொண்டு இருக்கும்போது பார்த்தால், சொந்த அம்மாவும் மகளுமே பேசிக்கொண்டு இருப்பது போலத் தோன்றும். சொல்லப்போனால், ஊரிலிருந்து அவ்வப்போது வரும் எங்கள் பாட்டியிடம் பேசுவதை விட இந்தப் பாட்டியிடம் அம்மா இன்னும் மனம் திறந்து பேசுவதாகவே நாங்கள் எல்லோரும் நினைத்திருந்தோம். இது ஒரு புறம் ஆனால் அவ்வளவு நெருக்கமாக பழகி வந்தாலும், அவர் இல்லாத நேரத்தில் அவரைப் பற்றி பேச்சு வந்தால் அம்மாவிடம் அவ்வளவு நெகிழ்ச்சியைக் காண முடியாது. ஆமாமா வேணுங்கறது எல்லாத்தையும் இங்கதான் கேட்டு வாங்கிப்பா, விசுவாசத்தை மட்டும் இன்னொருத்தர் கிட்ட காட்டுவா, என்ற ரீதியில் முனகி கொள்வார். எங்களுக்குப் புரியாது. எப்போதும் அம்மாவுக்கு சௌடம்மா மீது அந்த சந்தேகம் இருந்தது. சௌடம்மாவுக்கும் ஒரு பழக்கம் இருந்தது. அம்மாவிடம் நேரடியாக எந்த பதிலும் சொல்ல மாட்டார். காபி நல்லா இருந்ததா, என்று கேட்ட்டால், அதுக்கென்ன குறைச்சல் என்கிற ரீதியில்தான் பதில் சொல்வார். கொடுக்கப்படும் உணவுப் பண்டங்களை, அவ்வளவு லட்சியம் செய்யாமலேயே வாங்கிக் கொள்வார். இருவருக்கும் உள்ள நெருக்கத்தில் கண்ணுக்குத் தெரியாத முள் ஒன்று இருப்பதும் புரியும். அவர்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் மிகுந்த அன்பு காட்டினார்களா? அல்லது அன்பு இருப்பது போல நடித்து ஒருவரை ஒருவர் வெறுத்தார்களா? எஜமானியம்மா- பணிப்பெண் அல்லது எஜமான்- பணியாள் உறவில் இது ஒரு பொதுவான விஷயம் என்பதை நண்பர்களுடன் பேசும்போது தெரிந்து கொண்டேன். ஆனால் இதன் முழுப் பரிமாணமும் தாத்பரியமும், பின்னர் ஆதவனின் “லேடி” சிறுகதையைப் படிக்கும்போது உணர்ந்து கொள்ள முடிந்தது.
பாப்பா என்கிற நடுத்தர வயதுத் தமிழ்ப்பெண் தில்லியில், பல வீடுகளில் வீட்டுப் பணியாளராக பணி புரிந்து வருபவர். அவரது ஒருநாள் வாழ்க்கையே இந்தக் கதை. இதில், அவர் ஒரு தமிழ் வீட்டில் வேலை செயது வருகிறார். இயல்பாகவே மற்ற ஹிந்தி மொழிக்காரர்கள் வீட்டுப் பெண்மணிகளை விட இந்தத் தமிழ் பெண்ணிடம் நெருக்கமும் உரையாடலும் அதிகம்.. ஆனால் தமிழ் பிராமணர்கள் குடும்பங்களில் வீட்டு வேலையாட்களுக்கு இருக்கக் கூடிய எல்லைகள் அங்கும் உண்டு. வீட்டில் சில இடங்களுக்கு போகக் கூடாது, சில பாத்திரங்களைத் தொடக் கூடாது என்றெல்லாம். இந்த மாதிரி குறைகளெல்லாமே பாப்பா பொறுத்துக் கொள்கிறார். வளர்ந்து வரும், படித்துக் கொண்டிருக்கும் தன் மகனுக்காக. வரும் வாரத்தில், அவளது மகனுக்கு பிறந்த நாள் வரப்போகிறது. அதற்கு, பரிசாக ஒரு சட்டை வாங்கித் தருவதாக வாக்களித்த அந்த வீட்டுப் பெண்ணிடம், அது வேண்டாம், மகன் சாப்பிட ஒரு நல்ல தட்டு ஒன்று வாங்கிக் கொடுங்கள், என்று கேட்டிருக்கிறார் பாப்பா. அவர்கள் அந்தப் பரிசு வாங்கித் தரும் நாள்தான் கதை நடக்கும் நாள்.
அன்று பரிசும் வருகிறது. மிகுந்த ஆவலுடன் அந்தத் தட்டினைப் பார்க்கும் பாப்பா கடுமையான ஏமாற்றத்துக்கு ஆளாகிறார். அவர் எதிர்பார்த்திருந்த தட்டு அல்ல அது. வந்தது, பீங்கான் தட்டு..முகம் சுருங்க பாப்பா சொல்கிறார், “அய்ய இந்தத் தட்டு இல்லம்மா, இது வேணாம்.” “பின்ன எந்தத் தட்டுடி வேணும்?” என்று கேட்கிறார் வீட்டம்மா. “அத மாதிரி,” என்கிறார் பாப்பா. கைகள் அந்த வீட்டு அய்யமார்கள் சாப்பிடும் எவர்சில்வர் தட்டினைச் சுட்டிக்காட்ட, உடனே கோபமாக அந்த வீட்டம்மாள், “ஓஹோ, உனக்கு எவர்சில்வர் தட்டுதான் வேணுமாக்கும் இது வேணாமா?” என்று கேட்க, கண்டிப்பாக மறுத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறுகிறார் பாப்பா. மறுக்கப்பட்ட அன்பினை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று திகைத்து நிற்கிறார் அந்த வீட்டம்மா.
பொதுவாக மத்தியதர வர்க்க மனிதர்களின் வாழ்க்கையயும், மனக்குழப்பங்களையுமே அதிகம் எழுதியுள்ளவர் என்று அறியப்படும் ஆதவன், அதற்கு கீழே உள்ள வர்க்கத்தாரின் மனநிலையில் நின்று எழுதிய அரிதான சிறுகதை இது. எஜமானி- பணிப்பெண் உறவின் love – hate தன்மையை அற்புதமான உரையாடல்கள் மூலம் கொண்டு வந்திருக்கிறார். பாப்பாவுக்கு அந்த வீட்டம்மாவால் காபி, சிற்றுண்டிகள், கொடுக்கப்படும் விதம், அந்த வீட்டில் பாப்பா திறந்து விடக்கூடாத கதவுகள், உள் நுழைந்து சுத்தம் செய்யக்கூடாத அறைகள் ஆகியவற்றின் மூலம் நுட்பமாக அந்த உறவின் சாதிய இடைவெளிகளையும், அது செயல்படும் விதத்தையும் வெகு இயல்பாக சித்தரித்திருக்கிறார். ஒரே சமயத்தில் அந்த வீட்டம்மா மீது பாப்பா கொண்டிருக்கும் ஒட்டுதலையும் விலகலையும், அவர்கள் வீட்டு வாழ்க்கை முறையின் மீதான ஆசையையும் விலக்கத்தையும், பாப்பாவின் மனவோட்டத்தின் மூலம் சித்தரிப்பது அருமை. திறக்கக்கூடாத அறையின் கதவிடுக்கு வழியாக தெரியும் ஒரு வெளுப்பு முதுகையும், எதிர்பாராமல் தன் மேல் மோதிவிடும் அந்த வீட்டுப் பிள்ளையின் உடல் தன் கணவனை நினைவூட்டுவதன் மூலமும் பாப்பாவின் மனதின் ஆழங்களை சித்தரித்திருக்கிறார்.
‘லேடி’, ஏழைகளின் தன்மானத்தையும், நடுத்தர வர்க்கத்தினரின் ஏழைகள் மீதான கரிசனத்தில் செயல்படும் ஒரு patronizing மற்றும் அதிலும் தென்படும் மேட்டிமை மனோபாவத்தையும் ஒருசேரக் காட்டும் அபூர்வமான கதை. தலைப்பு சொல்லும் சேதியே அபாரம். தான் வேலைக்காரியாக இருக்கலாம், ஆனால் தன மகன் நன்றாக படித்து பிற்காலத்தில் பெரிய ஆளாக வரப்போகிறவன், அவனுக்கு தமக்கு சமதையாக ஒரு எவர்சில்வர் தட்டு வாங்கிக் கொடுக்க மனமில்லாத அந்த வீட்டாரின் பரிசை, அன்பை, தூக்கி எறியும் பாப்பாவின் ரோஷம் அந்தத் தலைப்பு வைத்திருக்கத் தூண்டியிருக்கலாம். கதையின் இன்னொரு இழையாக, பாப்பாவின் மகன் மாரியின் சிநேகிதர்கள் குறித்த பாப்பாவின் கவலை, இறுதியில் மாரியின் பாண்ட் பாக்கெட்டில் அவர் கண்டுபிடிக்கும் சிகரெட் பாக்கெட் ஆகியவை, கதைக்கு இன்னொரு பரிமாணத்தை சேர்க்கின்றன.
2 comments