போன வருஷம் இந்நேரம் ஃப்ளோரிடாவில் இருந்தேன். கீ வெஸ்ட் என்ற இடம். இது அமெரிக்காவின் ராமேஸ்வரம். அதாவது தென் கோடி முனை. படு அழகான கடல் பிரதேசம். கேளிக்கை விடுதிகளும் உணவகங்களுமாலான நகரம். இரவு நேரம் பகல் போல உயிர் பெற்றியங்கும். அங்கே மைல் ஜீரோ என்ற இடத்திலிருந்து ஜஸ்ட் தொண்ணூறு மைல் தொலைவில் உள்ளது க்யூபா.
அந்த தீபகற்பத்தைச் சுற்றிச் சுற்றிக் கடல் நீர். எங்கே திரும்பினாலும் அலைகளும், தொடுவானமும்.
ஸ்டீம் போட் வாடகைக்குக் கிடைக்கும். சற்றே பெரிய படகுகளை ஓட்டிச் செல்ல கேப்டனோடு புக் செய்யலாம். கடலில் போட்டிங் போவதும், நடுக்கடலில் ஆழம் குறைவான பகுதிகளைக் கண்டறிந்து படகை நங்கூரமிட்டு நிறுத்தி கீழே இறங்கி நீரில் விளையாடுவதும் த்ரில்லிங் அனுபவமாயிருக்கும்.
பங்கீ ஜம்ப், ரோலர் கோஸ்டர் போல எல்லாம் சாகசம் போலத் தெரியாவிட்டாலும் எல்லா த்ரில்லிங்குமே எந்த விபரீதமும் நிகழாத வரைக்கும் மனம் குதூகலித்து மகிழும்.
நாங்கள் குழந்தைகளையும் சேர்த்து கிட்டத்தட்ட பதினைந்து பேர் இருந்தோம். ஆகவே கேப்டனோடு ஒரு பெரிய படகை புக் செய்ய விரும்பினோம். முந்தைய இரவு சில நிறுவனங்களைத் தொடர்பு கொண்ட போது – மறுநாள் வானிலை சரியில்லை என்பதால் போட் வாடகைக்கு விடப் போவதில்லை என்று மறுத்து விட்டார்கள்.
மதியத்துக்கு மேல் வானிலை நன்றாக இருப்பதாகப்பட்டதால் டைரக்டரி பார்த்து ஒவ்வொரு நிறுவனமாய் முயற்சி செய்து கொண்டே இருந்தோம். எல்லோரும் கிளிப்பிள்ளை போல ஒருவர் சொன்னதையே மற்றவரும் சொன்னார்கள். தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்யனாய் கடைசியில் ஒரு நிறுவனத்தில் விசைப் படகு புக் பண்ணி விட்டோம். எல்லோரும் சொல்வது போல நாளை வானிலை கொஞ்சம் சரியில்லைதான். ஆனால் பதினோரு மணிக்கு மேல் கடலில் செல்வதாயிருந்தால் கொஞ்சம் நிலைமை சரியாயிருக்கும் என்று சொல்லி படகை புக் செய்து தந்தார்கள்.
எங்களுக்கு அப்பாடா என்றிருந்தது. எங்கே இவ்வளவு தூரம் வந்து கடலில் போட்டிங் செல்லாமல் திரும்ப வேண்டியிருக்குமோ என்ற கவலை அகன்று ஹோட்டலில் நிம்மதியாகத் தூங்கினோம்.
மறுநாள் உற்சாகமாய்க் கிளம்பிக் கொண்டிருக்கும்போது படகுக் கம்பெனியிலிருந்து போன் வந்தது. வானிலை சரி இல்லாததால் கேப்டன் வர மறுத்து விட்டார் என்று சொன்னார்கள். எங்களுக்கு ரொம்ப ஏமாற்றமாயிருந்தது. எங்கள் ஏமாற்றத்தைப் புரிந்து கொண்டவர்களாக மேலும் சொன்னார்கள். கேப்டன்தான் வர மறுத்து விட்டார். நீங்களே போட் ஓட்டிக் கொண்டு செல்வதாக இருந்தால் படகை வாடகைக்கு விடுவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை என்றார்கள்.
படகுச் சவாரி செய்து நடுக்கடலில் நங்கூரமிட்டு விளையாடி விட்டு வராமல் எங்களுக்கு ஜென்ம சாபல்யம் கிடைக்காது போலிருந்தது. நாங்களே படகை ஓட்டிக் கொள்கிறோம் என்று சொல்லி விட்டோம். எங்களில் ஒருவர் முன்னர் அந்தப் பகுதியில் வசித்தவர். வாரா வாரம் மோட்டார் படகுச் சவாரி செய்வது அவர் வழக்கம். ஆகவே அவர் இருக்க பயமேன்.
சுமார் பதினொண்ணேமுக்காலுக்கு அங்கே போய் விட்டோம். கடற்கரையை ஒட்டிய ஒரு ஹோட்டலுக்குப் பின்னால் இருந்தது அந்த போட் கம்பெனி. முதலில் எங்கள் எல்லாரிடமும் ஒரு படிவத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டார்கள். அதாவது கம்பெனி சார்பாக நியமிக்கப்பட்டிருந்த அந்த அழகான பெண் சிப்பந்தி ப்ளூ பெர்ரி குரலால் படிவத்தில் எழுதியிருந்ததை விளக்கி கையெழுத்து வாங்கிக் கொண்டாள்.
எங்கள் சுய புத்தியின் பேரில், சொந்தப் பொறுப்பில் இந்தப் படகுச் சவாரி செய்கிறோம். இதனால் ஏற்படும் உடமை இழப்பு முதல் உயிர் இழப்பு வரை எதற்குமே கம்பேனி பொறுப்பேற்காது என்பதே அந்தப் படிவத்தின் சாராம்சம். குழந்தைகளுக்காக பெற்றோர் கையெழுத்திட்டோம்.
ஒரு கேளிக்கை மனநிலையில் இதெல்லாம் மனதில் ஒட்டுவதில்லை. நாங்கள் பாட்டுக்கு மென்பொருள் தரவிறக்கும் முன்பு அக்ரீ அக்ரீ என்று குத்துவோமே அப்படி கையெழுத்தைப் போட்டுத் தள்ளிக் கொண்டிருந்தோம்.
அந்தப் பெண் ஆளுக்கொரு லைஃப் ஜாக்கெட் எடுத்துக் கொடுத்தாள். நானும், சிலரும் நீச்சல் தெரியும் என்று அதை வாங்க மறுத்து விட்டோம். அவள் எல்லா ஜாக்கெட்டையும் ஒரு ஓரமாய்ப் போட்டு விட்டு – உங்கள் இஷ்டம், வேண்டுமென்றால் எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டுப் போய் விட்டாள். அவள்தான் ஏற்கெனவே எங்களிடம் எகையெழுத்து வாங்கிக் கொண்டு விட்டாளே, இனி நாங்கள் எக்கேடு கெட்டாலும் அவளுக்கு எந்தக் கவலையும் இல்லை.
அந்த யமஹா விசைப் படகை கொண்டு வந்து நிறுத்திய ஆசாமி ஒரு ட்ரையல் ரன் போய் எங்களில் ஓரிருவருக்கு பயிற்சி தருவதாகச் சொன்னான். எஞ்சினை ஆன் செய்வது, ஆஃப் செய்வது, பொருட்களை எங்கே வைப்பது. போன்ற பல அடிப்படை விஷயங்களைச் சொல்லிக் கொடுத்து விட்டு – “இந்த இடத்தைப் பார்த்து வெச்சுக்கங்க. சாயந்தரம் ஆறு மணிக்கு திருப்பிக் கொடுத்தால் போதும். இட்ஸ் ஆல் யுவர்ஸ்” என்றான்.
தண்ணீரில் குலுங்கும் போட்டில் பேலன்ஸ் பண்ணி ஏறி அமர சில பெண்களும், குழந்தைகளும் தடுமாறினார்கள்.
“வானிலை மோசம் என்றார்களே, இப்போது பரவாயில்லையா?” எனக்கு அவனிடம் கேட்கத் தோன்றியது.
“மழை இனி இல்லை. ஆனால் காற்று அதிகம்.” – இடது புறம் கை காண்பித்தான். “இந்தப் பக்கம் போக வேண்டாம்.”
ஃப்ளோரிடாவில் பழம் தின்று கொட்டை போட்டவரான எங்கள் ஆள் இந்தப் பக்கம் போனால்தான் தாழ்வான பகுதி வரும், அங்கே படகை நிறுத்தினால் கீழே இறங்கி விளையாட முடியும், குழந்தைகள் மனமகிழ்வார்கள் என்றார்.
சினிமா பட வில்லன்கள் போல் நடுக்கடலில் அருந்த பியர், பீட்ஸா எல்லாமும் கூட வாங்கி அடுக்கியாயிற்று.
படகு என்பது வெறும் பலகை. பலகையின் ஒரு முனையில் எஞ்சின் மாட்டியிருக்கிறது. இரண்டு பென்ச்சுகள் பொருத்தப்பட்டுள்ளன. அவ்வளவுதான். யமஹா மோட்டார் ஸ்டார்ட் ஆனது. அப்போதுதான் கவனித்தேன், நாங்கள் சிலர் லைஃப் ஜாக்கெட் வேண்டாம் என்று சொன்னதைப் பார்த்தோ என்னவோ யாருமே லைஃப் ஜாக்கெட் வாங்கிக் கொள்ளவில்லை. குழந்தைகள் உட்பட. அவர்களில் பலருக்கு நீச்சல் தெரியாது.
படகு கொஞ்ச தூரம் போனதும் ஒரு பெரிய அலை தண்ணீரை வாரியிறைத்து படகில் நுழைந்து வழிந்து ஓடியது. பழம் தின்றவர் அப்படித்தான் இருக்கும் என்றார். ஏதோ ரோலர் கோஸ்டர் ரைடு போல எண்ணி ஒவ்வொரு முறை அலை வந்து படகு முழுக்கத் தண்ணீரை இறைக்கும்போதும் ஓ வென கத்தி மகிழ்ந்தார்கள்.
நாங்கள் புறப்பட்ட இடம் புள்ளியாகி மறைந்து விட்டது. நாலாபுறமும் அசைந்தாடும் கன்னங்கரேல் தண்ணீர் தவிர வேறொன்றும் தெரியவில்லை.
போகப் போக அடுத்தடுத்து இடைவெளி இல்லாமல் பெரிசு பெரிசாக வேக வேகமாக அலைகள் வந்து தூக்கித் தூக்கிப் போட ஆரம்பித்தன. படகின் ஆட்டம் ரொம்ப ஜாஸ்தியானது. இன்னொரு பேரலையில் சிலரின் செருப்புகள் கழண்டு கடலோடு கலந்தன. பெட்டியில் வைத்திருந்த பீட்ஸா எல்லாம் நனைந்து நமுத்துப்போன அப்பளம் போலானது. குழந்தைகள் வீறிட்டழ ஆரம்பித்தார்கள்.
இதைத்தான் வானிலை சரியில்லை என்று சொன்னார்களா? இதனால்தான் படகுக் கம்பெனிகள் பலர் வாடகைக்கு விட மறுத்தார்களா?
எல்லோர் முகமும் சற்றே வெளிறத் துவங்கியது. பருமனான நபர்களை இடம் மாறி அமரச் சொல்லி ஜோக் அடித்துப் பார்த்தார் ஒரு நண்பர். யாருக்கும் சிரிப்பு வரவில்லை.
அதே நேரம் அடித்த இன்னொரு மிகப் பெரிய அலை படகை ஏறக்குறைய புரட்டிப் போட்டது. ஒருபக்கமாய் சரிந்து ஆட்களை தூக்கி வீசியது. ஒருவரை ஒருவர் இறுக்கமாய்ப் பற்றிக் கொண்டார்கள். அவ்வளவுதான் கவிழ்ந்தோம் என்று நினைத்தேன். சற்று நேரம் மிதக்கும் அளவுக்கு எனக்கு நீச்சல் தெரியும். ஆனால் லைஃப் ஜாக்கெட் அணியாத நீச்சல் தெரியாத பலரை எப்படிக் காப்பாற்றுவது? சுறா மீன்கள் இருக்குமா? அந்த பய கணத்திலும் பல்வேறு யோசனைகள்.
ஆனால் படகை ஓட்டும் பழம் தின்று கொட்டை போட்ட நண்பர் கொஞ்சமும் கலவரம் அடையாமல் அல்லது கலவரத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல் லாகவமாக அந்தப் பெரிய அலையைக் கையாண்டு கவிழ இருந்த படகை நேராக்கி விட்டார்.
“இன்னும் கொஞ்ச தூரம் போனா அலைகள் அடங்கிரும். அந்த இடம் ரொம்ப நல்லா இருக்கும்.” என்றார்.
“போதும். திரும்பிப் போயிடலாம்.” என்று எல்லோரும் சத்தம் போட ஆரம்பித்தனர். அலைகளின் கோரத் தாண்டவத்துடன் போராடி படகைத் திருப்புவதே பெரும்பாடாக இருந்தது. ஒரு வழியாய்த் திருப்பி திக்கு திசையை உணர்ந்து புறப்பட்ட இடத்துக்கு வந்து சேர்ந்த பின்புதான் பலருக்கு உயிரே வந்தது.
ஏற்கெனவே எழுதி வாங்கிக் கொண்ட படகுக் கம்பெனி பேரழகி பேயறைந்தது போலிருந்த எங்களைப் பற்றிய எந்தப் பிரக்ஞையுமின்றி – “என்ன போட்ல சீட்டெல்லாம் கழண்டிருக்கு?” என்றாள்.
இதைப் போன்ற கட்டுரைகள் எழுதுவதற்காகவாவது முட்டாள்த்தனமான முடிவுகளை சில சமயம் எடுக்க வேண்டும்.