மணி பத்தாகி பத்து நிமிடங்கள்தான் கடந்திருந்தது. அதற்குள் அலுவலகம் சுறுசுறுப்பாக இயங்க தொடங்கியிருந்தது. கணவனிடம் சொல்லிக் கொள்ள கூட அவகாசமின்றி காரிலிருந்து இறங்கி கொண்டாள். முதல் தளத்திலிருந்து அவளது இருக்கை. அவசரமாக படிகளில் தாவி ஏறினாள். பச்சை மையில் கையெழுத்து போடும் தகுதி பெற்றவள். ஒரே மகன். பன்னிரண்டாம் வகுப்பிலிருந்தான்.
”மேடம்.. சிஇ உங்களை வர சொல்றார்..” என்றார் அலுவலக உதவியாளர் அவளுக்காக காத்திருந்தவர் போல.
”கடவுளே.. அதுக்குள்ள வந்துட்டாரா.. இருங்க பேக்க வச்சிட்டு வந்துடுறேன்..”
”பேக்க நான் வச்சிடுறன்.. சார் உங்களை ரெண்டு தடவை கூப்டுட்டாரு..”
அதுவும் உண்மைதான். பேச்சின் நுனியிலேயே கோபத்தை வைத்திருப்பார். முகாம் அலுவலர் என்பதால் வாரம் இரண்டு அல்லது மூன்று நாட்கள்தான் அலுவலகப் பணியிலிருப்பார். அதுவும் இத்தனை சீக்கிரம் வருவதில்லை. ஏதேனும் அவசர வேலையாக இருக்கும்.
“வீரபாண்டியன் சார் வந்துட்டாரா..?” பேக்கை அவனிடம் நீட்டினாள்.
”வந்துட்டாரு மேடம்.. அவரும் சிஇ ரூம்லதான் இருக்காரு..” பதட்டமான நடந்தாள். இவளும் வீரபாண்டியனும் இரண்டாம் மட்ட அதிகாரிகள். கதவை தள்ளிக் கொண்டு நுழைந்தாள். தலைமைப் பொறியாளர் அலைபேசியில் பவ்யமாக பேசிக் கொண்டிருந்தார். தலைமை அலுவலகம் அது. துறை செயலரிமிருந்து போன் வந்திருக்க வேண்டும்.
”வணக்கம் சார்..” தயக்கமாக கூறினாள். கண்கள் அவளை கவனித்தாலும் யோசனை அதிலில்லாதது போல வெற்றுப் பார்வை பார்த்தார். மீண்டும் “வணக்கம் சார்..“ என்றாள். படபடப்பாக இருந்தது. வீரபாண்டியன் இவளை பார்த்து வணக்கம் சொல்வது போல நெஞ்சு வரை வலது கையை உயர்த்தினான். தனது பக்கத்து இருக்கையை சைகையால் காட்ட, அவள் தலைமை பொறியாளரின் உத்தரவுக்காக காத்திருந்தாள். அலைபேசியை வைத்து விட்டு, விட்டதிலிருந்து தொடர்ந்தார். அவளை அப்போதுதான் கவனித்தது போல நாற்காலியை காட்டினார். கைப்பையிலிருந்து எடுத்து வைத்திருந்த குறிப்பேட்டையும் பேனாவையும் எடுத்து வைத்துக் கொண்டு அமர்ந்தாள் அவள்.
”அனொவ்ன்ஸ்மெண்ட்ல அறிவிச்ச வொர்க் பத்தின டீடெயில்ஸ் டிவிஷன்வைஸா ரெடி பண்ணனும்..” என்றார்.
”சரிங்க சார்..” என்றான் வீரபாண்டியன். அவளுக்கு விஷயம் பிடிப்பட்டது. சட்டசபை கூட போவதால் இந்த கெடுபிடி.
”எக்ஸ்பெட்டட் கொஸ்டின்ஸ் சர்க்கிள்ல கேட்டு வாங்கி.. ரிப்ளைய ரெடி பண்ணனும்..” சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்ப சாத்தியமுள்ள கேள்விகளுக்கு பதில் தயார் செய்ய வேண்டும். சட்டமன்றம் தொடங்கிய பிறகு கவனஈர்ப்பு.. கட்மோஷன்.. ஸ்டார்ட்.. அன்ஸ்டார்ட் என பல்வேறு ரூபத்தில் மூச்சு விட அவகாசமின்றி கேள்விகள் வந்து விழும். இவைகளெல்லாம் வீரபாண்டியனுக்கான பணிகள். அவனுக்கு கீழே மூன்று உதவிப்பொறியாளர்கள். அதில் இரண்டு காலியிடம். அவளுக்கும் அப்படிதான்.
”மேடம்.. இம்மீடியட்டா ப்ராகரஸ் ரிப்போர்ட் வேணும்.. போத் ஃபிஸிக்கல் அண்ட் ஃபைனான்சியல்.. பிபிடி தயார் பண்ணீடுங்க..” என்றார் இவளிடம் திரும்பி. மூன்று வட்டங்களும் ஒன்பது கோட்டங்களும் உள்ளடக்கியது தலைமை அலுவலகம். பணிகளின் விபரமும் அதன் தற்போதைய நிலையையும் புத்தகமாகவும் பவர்பாயிண்ட்டாகவும் தயார் செய்ய வேண்டும்.
”சரிங்க சார்..”
”டிலே பண்ணீடாதீங்க மேடம்..” என்றார் சற்றே கண்டிப்புடன்.
”ஒகே சார்..”
கதவை தள்ளிக் கொண்டு வெளியே வந்தனர் இருவரும். “கவர்மெண்ட் ஆபிசுன்னா வேலையே கெடையாதுன்னு வெளில பேசுவாங்க.. இங்க வந்து பாக்க சொல்லுணும் அவங்களெல்லாம்..” என்றாள் கீதா.
”ஆமா மேடம்.. சிஇ சொல்ற டீடெயில்ஸ கேட்டு வாங்கறதுக்குள்ள ஒரு வழியாயிடும்..” என்றான்.
”இன்னைக்குள்ள வொர்க் ஸ்டேஜ் வாங்கினாதான் நாளைக்கு பிபிடி ரெடி பண்ண முடியும்..” என்றாள்.
”சார்.. இந்த தபாலை கொடுக்க சொன்னாரு சிஇ..“ வீரபாண்டியனின் கையில் திணித்தார் அலுவலக உதவியாளர். சென்ற முறை கேட்கப்பட்ட சட்டமன்ற கேள்விகளின் தற்போதைய நிலை வேண்டி அனுப்பப்பட்ட அவசர நிகரி தபால். “சரி.. வர்றேன்.. மேடம்..” தபாலோடு தனது இருக்கைக்கு விரைந்தான். குளிரூட்டி பொருத்தப்பட்ட அடுத்தடுத்த கேபின்கள். கண்ணாடி தடுப்பு.. முதல் தடுப்பு அவனுடையது. அதற்கடுத்த கேபினிலிருந்தது கீதாவின் இருக்கை. மேசை மேலிருந்த தோள்பையை அதற்கான இடத்தில் வைத்து விட்டு அமர்ந்தாள். டிராவை திறந்து சிறு நோட்டை எடுத்து ஸ்ரீராமஜெயம் போல எதையோ இரண்டு நிமிடம் எழுதினாள். செல்போன் ஒலித்தது. கணவரின் பெயர் ஒளிர “ஒங்க ஆபிசே பரபரப்பா இருந்துச்சு.. எதும் அவசரமா..?” என்றான் அக்கறையாக. “அசெம்ளி கூட போவுதுல்ல.. அதான்..“ என்றவள் ”சரி.. மணிகண்டன் ஸ்கூலுக்கு மூணறைக்கு போவுணும்.. மறந்துடாதீங்க..” என்றாள்.
”மேடம்.. இதுல நாலு கொஸ்டின் நீங்க டீல் பண்ற சப்ஜெக்ட்..” என்றான் அங்கிருந்தே வீரபாண்டியன்.
”ஒரு ஜெராக்ஸ் எடுத்து குடுங்க சார்..” என்றாள் இவளும் இங்கிருந்தபடியே.
கொஸ்டினை சமாளிப்பது கொஞ்சம் சுலபம். “பரிசீலனையில் உள்ளது.. வரும் நிதியாண்டில் நிதி ஒதுக்க ஆவண செய்யப்படும்.. இது எங்கள் துறை சார்ந்ததல்ல..“ என்ற மூன்று பதில்களுக்குள் முன்னுாறு கேள்விகள் என்றாலும் அடங்கி விடும். உதவி பொறியாளரை அழைத்தாள்.
”மேம்..”
”இன்னைக்குள்ள பிராகிரஸ் ரிப்போர்ட் முடிச்சாவணும். நீங்க மளமளன்னு எல்லா இஇக்கு ஃபோன் போட்டு விஷயத்தை சொல்லுங்க.. சி.இ உடனே தர சொன்னாருன்னு சொல்லுங்க..”
”முடிஞ்சளவு வாங்கீடுறேன் மேடம்..”
”நீங்க எங்கிட்ட சொல்றமாதிரி நான் சிஇட்ட சொல்ல முடியுமா சார்.. நீங்க ஃபோன் ரூம்க்கு போங்க.. நா வேலைய முடிச்சுட்டு வந்துடுறேன்..” என்றாள்.
வீரபாண்டியன் அவள் கேபினுக்குள் நுழைந்தான்.
”மேடம்.. இந்த கொஸ்டினை பாருங்களேன்…” என்றான். சட்டசபை தொடங்கினாலே வரும் தலைவலி இது. சமூக ஆர்வலர் என்ற பெயரில் ஒருவர் எதாவது எசகுபிசகான கேள்விகளை முதலமைச்சர் தனிப்பிரிவு.. துறை செயலர்.. உட்பட உயர்நிலை அலுவலங்களுக்கு அனுப்பி விட்டு இங்கும் ஒரு பிரதி அனுப்பி விடுவார். ”யாரு சார்.. அந்த ராஜ மன்னாருதானே..” என்றாள்.
”ஆமா மேடம்..” என்றான் அலுப்பாக. பெரிய அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டிருப்பதால் பதில் அளிக்காமல் அலட்சியம் செய்து விட முடியாது. இமயத்திலிருந்து வங்காள விரிகுடா வரையிலான நீர்த்தடங்களை இணைத்து அதன் மூலம் இந்திய மக்கள் அனைவருக்கும் நீர் வழங்கும் திட்டம் என்ற தலைப்பில் நுணுக்கி நுணுக்கி வெகு அபத்தமான யோசனைகளோடு பத்து பக்கத்துக்கு எழுதியிருந்தார். இடையிடையே சிவப்பு மையில் படங்கள் வேறு வரைந்திருந்தார்.
”இதுக்கெல்லாம் என்னன்னு சார் பதிலெழுதறது.. பேசாம ஒருநாள் ஆபிசுக்கு வர சொல்லி கவுன்சிலிங் பண்ணி அனுப்பலாம்..” சிரித்தாள்.
”கரெக்ட்தான்.. நாமளும் ஒருநாள் இதுக்காக ஒதுக்கி சிரிச்சிக்கலாம்..” என்றான் சின்ன சிரிப்படன்.
”காபி சாப்றீங்களா சார்..” என்றாள். வீட்டிலிருந்தே ப்ளாஸ்கில் எடுத்து வந்து விடுவாள். காபி போட்டு இவளுக்கும் கணவருக்கும் ஆளுக்கொரு ப்ளாஸ்கில் ஊற்றி வைப்பது அம்மாவின் வேலை. ”தாரளமா..” என்றான்.
மதியம் வரை கால்வாசி தகவல்களை கூட பெற முடியவில்லை. தினசரி பார்வையிட வேண்டிய தபால்கள் வேறு குவிந்திருந்தன. அதற்குள் தலைமைப் பொறியாளரிடமிருந்து அழைப்பு. ”மேடம்.. என்னாச்சு..?” என்றார்.
”பண்ணீடுறேன் சார்..” என்றாள்.
”எப்ப முடியும்னு சொல்லுங்க..” என்றார் கூடுதல் வேகமாக.
”சார்.. முடிச்சிடுறேன் சார்..”
”இஇட்ட நீங்களே நேரடியா பேசுங்க.. ஏஇ பேசறதுக்கும் எஸ்டிஓ பேசறதுக்கும் வித்யாசமில்லையா..?” என்றார்.
செயற்பொறியாளர்கள் விபரங்களை உடன் அளித்து விடுவதாகதான் சொன்னார்கள். ஆனாலும் நான்கு மணியாகியும் வேலை சுணக்கமாகவே இருந்தது. வீரபாண்டியனுக்கும் அதே நிலைதான். ”ஒரு கேள்விக்கு பதில் தர்றதுக்கே இவ்ளோ நேரமா சார்..? அத்தனையும் வாங்கி கம்பைல் பண்ணி நாங்க எப்போ செகரட்ரிக்கு அனுப்பறது..” தொலைபேசியில் சத்தமாக பேசிக் கொண்டிருந்தான். அருகில் போய் ”எந்த டிவிஷன் சார்..” என்றாள். சொன்னான்.
”வைக்காதீங்க.. நான் பேசறேன்..” என்றபடியே ரீசிவரை வாங்கிக் கொண்டாள்.
“சார்.. எல்லா டிவிஷனும் ஃபிகர் குடுத்துட்டாங்க.. உங்கள்ட்டேர்ந்து வந்தவொடனே கம்பைல் பண்ணி செகரட்டரிக்கு அனுப்பணும்.. அங்கேர்ந்து ஃபோன் வந்துட்டே இருக்கு சார்..”
”எல்லாமே ஒடனே.. ஒடனேன்னா எப்டீங்க மேடம்..?” என்றார் அந்த செயற்பொறியாளர்.
”உங்க கஷ்டம் புரியுது சார்.. நாங்க என்ன செய்ட்டும்.. ப்ரீதிங் டைம் கூட குடுக்காம அவசரப்படறாங்களே சார்..” செயற்பொறியாளர் பதவி இவள் பதவியை விட ஒரு படி மேலானது. அவளின் பணிவில் மனம் இளகியவற்போல ”உங்க ஆபிஸ் மெயில் ஐடி குடுங்க மேடம்.. அனுப்ப சொல்றேன்..“ என்றார்.
”சார்.. பிபிடிக்கு ஃபோட்டோஸ் வேணும் சார்..” என்றாள் மின்னஞ்சல் முகவரியை சொல்லி விட்டு.
”தெரியும்மா.. சொன்னீங்களே..” அலைபேசியை துண்டித்துக் கொண்டார்.
”பாருங்க சார்.. டெய்லி பத்து மெயில் கரஸ்பாண்ட் பண்றோம்.. மெயில் ஐடி வேணுமாம்..” என்றாள் வீரபாண்டியனிடம் கோபமாக..
”அப்றம் அவங்க கெத்தை காட்றது எப்டீ..?” சிரித்து விட்டு தொடர்ந்தான். ”எல்லா டிவிஷன்லேர்ந்தும் பர்டிகுலர்ஸ் வந்துடுச்சா மேடம்..”
“அட.. நீங்க வேற சார்.. இன்னும் வர்ல..”
”மேடம்.. சிஇ கூப்டுறாங்க..” என்றார் அலுவலக உதவியாளர் குறுக்கிட்டு.
தலைமைப் பொறியாளர் கடுப்பாக வைத்திருந்தார் முகத்தை. ”மேடம்.. ஒம்பதே ஒம்பது டிவிஷன்.. அதை கேட்டு வாங்க இவ்ளோ நேரமாங்க..? மத்த ரீஜின்லேர்ந்தெல்லாம் வந்துருச்சாம்.. நம்பதான் இன்னும் அனுப்பலயாம்.. செகரடேரியட்லேர்ந்து அர்ஜ் பண்றாங்க.. சீக்ரம்..” பேசிக் கொண்டே வந்தவர் குரலை உயர்த்தி கத்த தொடங்கினார். ”எல்லாம் அவசர நேரத்திலதான் செய்வீங்களா..? அசெம்ளி கூட்டம் கூட போவுதுன்னு தெரியும்ல்ல.. இதெல்லாம் தயாரா வச்சிக்க வேணாமா..? அவசர கோலத்தில அள்ளுப்புளிக்கணக்க கொடுத்துடுவீங்க.. அங்க மினிஸ்டர் முன்னாடி பதில் சொல்றது நாந்தானே..? போய் விறுவிறுன்னு வேலைய பாருங்க மேடம்..”
எரிச்சலாக வந்தது அவளுக்கு. செயற்பொறியாளர்களின் அலைபேசியை தவிர்த்து அலுவலக எண்ணில் தொடர்பு கொண்டு கத்தினாள். ”தோ.. வாங்கீ்ட்டே இருக்கோம் மேடம்..” என்றார்கள்.
”எவ்ளோ நேரம் இதயே சொல்லுவீங்க.. ஒரு டிவிஷன் ஒர்க்கை கூட கம்பைல் பண்ணி தர முடியலேன்னா என்ன சார் அர்த்தம்.. நீங்க எப்போ அனுப்பி.. நாங்க எப்போ செகரடேரியட்டுக்கு அனுப்பறது..?” என்றாள் கோபமாக.
கணவரிடமிருந்து அழைப்பு. ”சொல்லுங்க..” என்றாள்..
”மணிகண்டனோட மிஸ் ரொம்ப பிரைஸ் பண்ணினாங்க.. எல்லாம் அவங்கம்மா கோச்சிங்ன்னு சொன்னேன்.. அவங்களுக்கு ஆச்சர்யமா போச்சு.. நைசா நீ வேலைக்கு போறீயான்னு விசாரிச்சாங்க.. எங்கம்மா எஸ்டீஓவா இருக்காங்கன்னு ஒன் பையன் பெருமையா சொன்னான்..” என்றான்.
”இங்க ஆபிஸ்ல ஒரே புடுங்கு.. எல்லாம் ஓரே நாள்ல எல்லாத்தையும் முடிச்சுக் குடுன்னு உசிர வாங்றாங்க..” என்றாள்.
”சரி.. பொறுமை.. பொறுமை.. கௌம்பும்போது மிஸ்ட்கால் குடு.. உன்னை பிக்கப் பண்ணீக்கிறேன்.. வீட்ல ஃப்ரஷ்அப் பண்ணீட்டு வெளில சாப்டுக்கலாம்..”
”நேரமாயிடும்னு நெனக்கிறேன்..”
”அப்டீன்னா உங்கம்மாவையும் மணியையும் கூட்டீட்டு வந்துடுறன்.. சாப்டுட்டே வீட்டுக்கு போலாம்..” என்றான். அவனும் அதிகாரி என்பதால் மனைவியை புரிந்துக் கொள்ள முடிந்தது.
”சரிங்க.. வைக்றன்..” என்றாள். வெளியே இருட்டத் தொடங்கியிருந்தது. ”கடவுளே.. ஆறாயிடுச்சா.. நேரம் போறதே தெரில..”
மெயிலில் புகைப்படங்கள் வந்துக் கொண்டேயிருந்தன. ”எல்லாத்தையும் டவுன்லோடு பண்ணி டிவிஷன்வைஸ் ஃபோல்டர் போட்டு ஏத்தி வச்சுடுங்க மேடம்.. பிபிடி பண்றதுக்கு கம்ஃபர்டபளா இருக்கும்…” என்றாள் தனது உதவியாளரிடம். அதற்குள் தலைமைப் பொறியாளர் கனிணி அறைக்கே வந்து விட்டார்.
”எவ்ளோ நேரம் எடுத்துக்குவீங்க..?” அனைவரும் எழுந்துக் கொண்டனர்.
”இதோ ஆச்சு சார்.. முடிச்சுட்டோம்..” பதற்றமாக பேசினாள்.
”இன்னும் எத்தனை பெட்டிஷன் பெண்டிங்..?” என்றார் வீரப்பாண்டியனிடம்.
”டோட்டலா இருவத்தொண்ணு சார்.. பதினாறு குளோஸ் பண்ணீட்டேன்.. இன்னும் அஞ்சு இருக்கு சார்..”
சிஎம் செல் பெட்டிஷன் பைலை பார்வையிட்டவர் ”ஒரு மாசத்துக்கு முன்னாடி வந்த பேப்பர்.. .ஃபைல்ல கட்டி வச்சிட்டு இப்ப வேலை செய்றீங்க.. அப்டிதானே..? உதவிப் பொறியாளரை கத்தி விட்டு ”இதெல்லாம் மானிட்டர் பண்ணாம நீங்க என்ன சார் பண்றீங்க..? என்றார் கோபமாக வீரபாண்டியனிடம்.
பிறகு இவளிடம் திரும்பி ”நீங்கம்மா..?” என்றார்.
”இதோ முடிச்சிட்டேன் சார்..” என்றாள் பவ்யமாக.
”காலைலேர்ந்து ஒரே பதில்தானே சொல்றீங்க.. புக்லெட் போட்டாச்சா..?“
”இன்னும் இல்ல சார்.. இப்பதான் எல்லா ப்ராகிரசும் வந்துச்சு.. இதோ போட்டுடுறன் சார்..” என்றாள்.
நிமிர்ந்து பார்த்து விட்டு கோபமாக நகர்ந்தார். மணி ஏழரையை தாண்டியிருந்தது.
”கடவுளே.. இவருக்கென்னா..? சொல்லீட்டு போயிடுவாரு.. அவசரம்னு கேட்டாலே ஆடி அசஞ்சு குடுக்குறாங்க.. இதுல டெய்லி வேற ரிப்போர்ட் கேக்குணுமா.. ச்சே.. வெறுத்துப் போச்சு.. பொம்பளன்னு கூட அந்தாளுக்கு அறிவில்ல.. இவரு பாட்டுக்கு பேசிட்டு போறாரு.. மினிஸ்டர்.. செகரட்டரின்னு அலைஞ்சு வருமானம் வர்ற பக்கமா போஸ்டிங் வாங்கீட்டு வந்து உக்கார தெரியுதுல்ல.. கேள்விக் கேட்டா வலிக்குதாம்மா..? இவரு பொண்டாட்டீ பொம்பளபுள்ளயெல்லாம் இத்தனை நேரத்துக்கு வெளிய இருந்தா தாக்கிக்குவாராம்மா… ஆம்பளபொம்பள வித்யாசம் கூட தெரியாம ஒரேடீயா எகிற்றாரு.. சே..” என்றாள் படபடப்பாக நாளை மருத்துவ விடுப்பு எடுக்க வேண்டும் என்ற முடிவோடு.
***
Ethu Enna katha pa. Antha amma purusanukke renduthadava calla edukkuthu. Oru velaium pannala.35000 salary vankkum. Ethula pombala nu vera salichukiduthu.
Bombalana yarum kelvi ketkakudaatha enna?
இக்கதை நீதி கதையல்ல, ஒரு நாளின் சம்பவக்குறிப்பு தான், சிறுகதைக்கான வலிமையை சற்றே இழக்கிறது தான் என்றாலும், கதையை அதன் தீர்வாக எண்ண கூடாது.
அரசு அலுவலகங்களில் வழக்கமாக நடக்கும் நிகழ்வைப் படம் பிடித்திருக்கிறார், ஆசிரியர். லஞ்ச நடமாட்டம் உள்ள அலுவலகங்களில், கீழிருந்து மேலே ஒரு தகவலைப் பெறவேண்டுமானால், அதற்கும் அந்த ஊழியர் லஞ்சம் கொடுத்துத்தான் பெறவேண்டும் என்பது எழுதப்படாத சட்டம். அதிலும், மேலதிகாரி, ஊழலராக இருந்தால், தகவல்களைக் கொடுக்காமல் லீவு போட்டுவிட்டுச் செல்லும் எழுத்தர்களை நான் அறிவேன். அவர்களுக்கு உரிய லஞ்சப் பங்கைக்கொடுத்து அவர்களின் வீட்டிற்கே போய் தகவல் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலைக்கு மேலதிகாரி தள்ளப்படுவார். அதிலும் பெண் ஊழியர்கள் அடாவடி ஆசாமிகளாக இருப்பார்கள் என்பதே நிஜம். சில விதிவிலக்குகள் இருக்கலாம்.
– இராய செல்லப்பா நியூஜெர்சி
பெண் எதற்கு பெண் என்ற சலுகை எதிர் பார்க்கிறாள்? ஆண்களைப்போல் தேக வலிமை இல்லாததால் என்பதாலா?.”பொம்பளைன்னு கூட அறிவில்லை”.வீட்டில் பொறுப்பு அதிகம் என்பதாலா?