“The Villa lay close to the sea,” என்ற ஒற்றை வரியுடன் துவங்குகிறது, Stefan Zweigன் “Forgotten Dreams” என்ற சிறுகதை.
1881ஆம் ஆண்டு பிறந்த Stefan Zweig இந்தக் கதையை 1900ஆம் ஆண்டு எழுதியதாக விக்கிப்பீடியா சொல்கிறது. தகவல் பிழை எதுவும் இல்லையென்றால், அவர் இதைத் தன் பத்தொன்பதாம் வயதில் எழுதியிருக்க வேண்டும். வியன்னாவில் பிறந்த ஸ்டெஃபான் ஸ்வைக், தனது நாற்பது மற்றும் ஐம்பதுகளில் மிகப் பிரபலமான எழுத்தாளராக இருந்தவர், உலக மொழிகள் பலவற்றில் மொழிபெயர்க்கப்பட்டவர். ஹிட்லரின் இன ஒழிப்பு நடவடிக்கைகளால் புலம் பெயர்ந்த இவர், பல தேசங்களைக் கடந்து இறுதியில், இங்கிலாந்து சிங்கப்பூரில் பெருந்தோல்வியைச் சந்தித்தப்போது, “என் ஐரோப்பா இனி மீண்டும் திரும்பப் போவதில்லை,” என்று தன் அறுபத்து ஒன்றாம் வயதில், பிரேசிலில் தற்கொலை செய்து கொண்டவர்.
இவரது படைப்பாற்றல் உச்சத்தில் இருந்த காலகட்டமும் ஐரோப்பாவால் இரு உலகப் போர்கள் நிகழ்ந்த காலகட்டமும் ஒன்றுபடுகின்றன- இக்காலகட்டத்தில் எல்லைகளற்ற ஐரோப்பா, போர் எதிர்ப்பு (பசிஃபிஸம்) முதலான நாட்டங்கள் அவரது எழுத்தைப் போலவே அவரையும் ஒரு கற்பனைநவிற்சியாளராக (ரொமாண்டிக்) சித்தரிக்கின்றன என்றாலும் அவரது நிதர்சனம் எவருக்கும் குறைந்தததல்ல. நாஜியிசத்தின் பிரத்யேக அச்சுறுத்தலை அவர் வெகு சீக்கிரமே உணர்ந்திருந்தாலும், ஹிட்லரின் ஜெர்மனியை விமரிசிக்கச் சொன்னபோது, “நான் எந்த தேசத்தையும் கண்டனம் செய்ய மாட்டேன்” என்றார். யூதராக இருந்தபோதிலும், பாலஸ்தீனில் குடியேறிய யூதர்களின் நடவடிக்கைகள் குறித்து கவலைப்பட்டார் – அது ஒரு ஆபத்தான தேசிய இயக்கமாக மாறிக் கொண்டிருக்கிறது, என்று எச்சரித்தார்- “நான் அனைத்து வகை தேசீயங்களையும் வெறுக்கிறேன்”. அறிவு சார்ந்து இயங்குபவன் எந்தத் தரப்புக்கும் ஆதரவாக இருக்க முடியாது- “அறிவின் பாற்பட்டு இயங்குவதென்பது மிகவும் நியாயமாக இருப்பதாகும், அது எதிராளியைப் புரிந்து கொள்ளக் கோருகின்றது, எனவே உன் தரப்பின் அறவலிமை குறித்த நம்பிக்கையை நலிவுறச் செய்கிறது”
இவரது சிந்தனை, எழுத்து, நடை, கற்பனை குறித்து பல விமரிசனங்கள் இருந்தாலும் உலகின் சிறந்த கதைகள் என்ற ஒரு தொகுப்பில்கூட இடம் பெற்றுள்ள இவரது முதல் கதை, “மறக்கப்பட்ட கனவுகள்”, வாசிக்கப்பட வேண்டிய ஒன்று. காதல் கதைதான் என்றாலும், அதன் தலைப்பும் கதையோட்டத்தின் மையமும் ஒரு வகையில் அவரது வாழ்க்கை. மற்றும் அதன் துயரங்களின் முன்தரிசனமாய் அமைந்திருக்கின்றன. தன் காலம் குறித்த விவரணைகளை ஒரு சுயசரிதையாய், பிறருக்கு எச்சரிக்கையாய் இருக்க வேண்டும் என்ற ஆவேச வேகத்தில் பதிவு செய்தவர் ஸ்வைக்- “தம் காலங்களைத் தீர்மானிக்கும் மகத்தான இயக்கங்களின் துவக்கங்களை இனம் கண்டுகொள்ளும் ஆற்றல் அதன் சமகாலத்தவர்களுக்கு மறுக்கப்படுகின்றது என்பது வரலாற்றின் நிராகரிக்க முடியாத நியதியாய் நிலவுகின்றது,” என்பதே அவரது சுயசரிதையின் எச்சரிக்கை. அவர் எழுதிய முதல் சிறுகதையே அவரது காலத்தின் முடிவை கவித்துவ முரண்தன்மையுடன் சுட்டுகிறது என்பதை ஒரு மிகப்பெரிய கற்பனைத் தாவலில் நாம் கண்டு கொள்ள முடியும். உண்மையில், இந்தக் கதையை எழுதும்போது, 1900ல், அவரது காலம் எதிர்கொள்ளப்போகும் அழிவுகள் குறித்து கவலைப்பட யாருக்கும் எந்தக் காரணங்களும் இருந்திருக்கவில்லை.
ஸ்டெஃபான் ஸ்வைக்கின் கதைமொழி மிக நிதானமாக ஒவ்வொரு காட்சியாக, உவமைகளைக் கொண்டு சித்தரிப்பதாய் இருக்கிறது. முதல் பத்தி இப்படி துவங்குகிறது, அதன் இறுதி வரிகள் கவனிக்கத்தக்கவை, “மறக்கப்பட்ட கனவுகள்” தலைப்புடன் பொருத்திப் பார்த்தால் முக்கியத்துவம் கொண்ட ஒன்று. இங்கேயே கதையின் முடிவை ஊகித்து விடலாம். ஆனால் முதல் வாசிப்பில் அதற்கான அவசியம் இல்லை என்பதால் நாம் அந்த வாக்கியத்தை இயல்பாகக் கடந்து சென்று விடுகிறோம்.
“The quiet avenues, lined with pine trees, breathed out the rich strength of salty sea air, and a slight breeze constantly played around the orange trees, now and then removing a colourful bloom from flowering shrubs as if with careful fingers. The sunlit distance, where attractive houses built on hillsides gleamed like white pearls, a lighthouse miles away rose steeply and straight as a candle—the whole scene shone, its contours sharp and clearly outlined, and was set in the deep azure of the sky like a bright mosaic. The waves of the sea, marked by only the few white specks that were the distant sails of isolated ships, lapped against the tiered terrace on which the villa stood; the ground then rose on and on to the green of a broad, shady garden and merged with the rest of the park, a scene drowsy and still, as if under some fairy-tale enchantment.”
இந்தக் கடற்கரையில் ஒரு வீடு இருக்கிறது- அது உறங்கிக் கொண்டிருக்கிறது- sleeping house– அதன் மீது காலை வெயில் ஒரு கனமான சுமையாய் இறங்குகிறது- on which the morning heat lay heavily. அதன் கீழ் கடலின் அலைகள் வானவில் வண்ணங்களில் மின்னுகின்றன, வைரங்கள் போல் பிரகாசமாய். அந்தரங்க உரையாடலில் இருப்பது போல் நெருக்கமாய் நின்று கொண்டிருக்கும் பைன் மரங்களில் விழும் வெயில், விரித்து வைக்கப்பட்டிருக்கும் ஒரு ஜப்பானிய குடையின் மீதும் விழுகிறது. அதன் கீழுள்ள கூடை நாற்காலியில் ஒரு பெண் சாய்ந்து அமர்ந்திருக்கிறாள். மோதிரங்கள் இல்லாத விரல்கள் (பின் வரும் கதைக்கு இது ஒரு முக்கியமான குறிப்பு) மறதியில் இருப்பதுபோல் போல் துவண்டிருக்கின்றன, அவை மென்மையான, இனிய அசைவுகளில் ஒரு நாயின் பட்டுச் சருமத்தைத் தடவிக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. அவளது கரிய கண்களில் ஒரு சிறு நகைப்பின் சாயல் இருக்கிறது, அவை ஒரு புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கின்றன. இருள்திரை போர்த்து அழகு கூட்டப்பட்டது போல் ஒளிரும் விழிகள் என்று எழுதுகிறார் ஸ்வைக். அவளது அழகு எளிய, இயல்பான அழகல்ல, கவனமான, நுட்பமான சல்லாபத்தைக் கொண்டு வளர்க்கப்பட்ட ஒன்று – புறப்பார்வையில் ஒழுங்கற்றது போல் தோற்றம் அளிக்கும் மணம் நிறைந்த அவளது சுருள் கேசம், ஒரு கலைஞனின் கவனத்துடன் கட்டமைக்கப்பட்டது. புத்தகத்தை வாசிக்கும்போதே அவளது வெண்ணிற பற்களை வெளிப்படுத்தும் மென்னகை, கண்ணாடியின் முன் பல ஆண்டுகள் பழகிப் பெற்ற ஒன்று. அவள் புனைந்த வேடங்கள் கவனமற்ற போதிலும் அகற்ற முடியாத வகையில் அவளது இயல்பாய் ஆகி விட்டதை ஸ்வைக் அவளது புறத்தோற்றத்தை விவரிக்கும்போதே உணர்த்தி விடுகிறார்.
இப்போது ஒரு பணியாள் வருகிறான், ஒரு விசிட்டிங் கார்டைத் தருகிறான். அவள் வெளியே காத்திருப்பவனை உள்ளே அனுமதிக்கச் சொல்கிறாள். சிறிது சிரமப்பட்டுத்தான் வந்திருப்பது யாரென்பதை நினைவுக்கு கொண்டு வருகிறாள்- பின் அவள் கண்கள் ஜொலிக்கின்றன, இப்போது கிட்டத்தட்ட மறந்தே போய்விட்ட, வெகுகாலத்துக்கு முந்தைய இளமை நாட்களை அவள் நினைத்துப் பார்க்கிறாள். உருவங்களும் கனவுகளும் மீண்டும் பிரத்யேக வடிவம் பெறுகின்றன, மெய் போல் தெளிவாய்த் தோற்றம் கொள்கின்றன.
அவளைச் சந்திக்க வந்திருப்பவன் பேசும் முதல் வார்த்தைகளே அவர்கள் இருவருக்கும் இடையே உள்ள இடைவெளியை உணர்த்துகின்றன – பல ஆண்டுகளுக்குப் பின் முதல் முறை சந்திக்கிறோம், என்கிறான் அவன், இனியும் பல ஆண்டுகளுக்கு இதுதான் இறுதிச் சந்திப்பாக இருக்கப் போகிறது. பதிலுக்கு அவளும், ஒரு காலத்தில் சிறிது முக்கியத்துவம் கொண்டவனாக நீ இருந்திருந்தாலும் இப்போது உன் பெயரைக் கொண்டு உன்னை என்னால் உடனே நினைவுபடுத்திக் கொள்ள முடியவில்லை, என்கிறாள். இருவரும் சிரித்துக் கொள்கிறார்கள். சொல்லியும் சொல்லாமலும் உணரப்பட்ட இளமையின் முதல் காதல், அதன் மென்போதை ஒரு கனவு போல் அவர்கள் உள்ளத்தில் எழுகிறது. விழித்ததும் இது குறித்து முரண்நகையுடன் நினைத்துப் பார்க்கலாம், ஆனால் உண்மையில் கனவு தொடர வேண்டும், கனவில் வாழ வேண்டும் என்பதுதான் உன் ஆசையாக இருக்கும், என்று இளமைக் காதல் குறித்து எழுதுகிறார் ஸ்வைக். தயங்கித் தயங்கி மேற்கொள்ளப்படும் இளம் காதலெனும் அழகிய கனவு, விழைந்தாலும் கேளத்துணியாதது, ஆசை வளர்த்தாலும் அளிக்கவொண்ணாதது.
இருவரும் பழைய விஷயங்களைப் பேசிக் கொள்கிறார்கள், சிரித்துக் கொண்டே, சந்தோஷமாக. எல்லாம் பேசி முடித்ததும் இறந்த காதலின் சோகம் அவர்கள் மீது ஒரு கனமான சுமையாய்க் கவிகிறது. “நான் அமெரிக்காவில் இருக்கும்போது உன் திருமணம் பற்றி கேள்விப்பட்டேன்,” என்கிறான் அவன். பத்து ஆண்டுகளுக்கு முன்னர் நடந்ததன் நினைவுகளைக் கலைத்துக் கொண்டு, “அப்போது நீ என்னைப் பற்றி என்ன நினைத்தாய்?” என்று அவள் கேட்கிறாள். “நான் நாளை அமேரிக்கா கிளம்புகிறேன்,” என்று பதில் சொல்கிறான் அவன். “என் காதலின் சுவாலை எப்போதோ நட்பின் அவியும் தணல்களாய் அடங்கி விட்டிருந்தது. உன் மேல் கோபம் வரவில்லை, என்னால் உன்னைப் புரிந்து கொள்ள முடியவில்லை, உனக்காகப் பரிதாபப்பட்டேன்,” என்கிறான். என் மேல் இரக்கப்பட என்ன இருக்கிறது, என்று அவள் கோபமாய்க் கேட்கிறாள். “உன் பணக்கார கணவனை நினைத்துப் பார்த்தேன். நீயோ லட்சியவாதி, சாதாரண வாழ்க்கையின் அற்பங்களை வெறுக்கும் விடுதலை விரும்பி, உன்னால் எப்படி ஒரு சாதாரண பைனான்சியரின் மனைவியாக இருக்க முடியும் என்று வருத்தப்பட்டேன்”, என்கிறான்.
“அப்படியானால் அவனை ஏன் நான் திருமணம் செய்து கொண்டிருக்கப் போகிறேன்?” என்று அவள் கேட்கிறாள். “எனக்குத் தெரியாத குணங்கள் அவனுக்கு இருந்திருக்கலாம். ஆனால் நீ அவனை அவனது அந்தஸ்துக்காகவும் சொத்துக்காகவும் திருமணம் செய்து கொண்டிருக்கக்கூடும் என்பதை என்னால் நினைத்தே பார்க்க முடியவில்லை,” என்கிறான்.
அப்போது, “It was as if she had failed to hear those last words, for she was looking through her fingers, which glowed deep rose like a murex shell, staring far into the distance, all the way to the veils of mist on the horizon where the sky dipped its pale-blue garment into the dark magnificence of the waves,” என்று எழுதுகிறார் ஸ்வைக். அவளது விரல்கள் சிப்பி ஓடு போல் சிவந்திருந்தன, பனிப்படலம் திரை போர்த்திருக்கிறது, வானம் தன் வெளிர் நீல ஆடையை அலைகளின் மகோன்னத இருளில் நனைத்துக் கொண்டிருந்தது. உணர்வுகளின் பொருளை மட்டுமல்ல, பாத்திரங்கள் அறியாததை, அவர்கள் வாழ்வின் அடிப்படை அர்த்தங்களை இயற்கை விவரணைகளைக் கொண்டு ஸ்வைக் சித்தரிக்கிறார்.
“ஆனால் அதுதான் நடந்தது,” என்று சொல்கிறாள் அவள். அதன் பின் ஒரு நீண்ட உரையில், தனக்குத் தன்னையே புரியவில்லை என்கிறாள். அற்புதங்களை நம்பும் இளம் பெண்களின் இதயங்களை வளர்ந்தபின் எந்தப் பெண் அறியக்கூடும், என்று கேட்கிறாள்- யதார்த்தத்தின் முதல் மூச்சில் உதிரும் சிறு வெண் மலர்கள் போல் மென்மையானவை அவர்களின் கனவுகள். பிற பெண்களைப் போல் ஏக்கங்களை ஆனந்தமாய் மாற்றும் ஆண்கள் குறித்து அவள் கனவு காணவில்லை, அவளது கனவுகள் பொன்னும் பட்டாடையும் விழைந்தன. அவள் செல்வச் செழிப்பை, அதன் மகத்துவத்தை நேசித்தாள். “நான் என் சாதாரண ஆடைகளில் என்னை வெறுத்தேன், ஒரு சாமியாரைப் போல் எளிமையாகவும் அடக்கமாகவும் இருந்தேன், வசீகரமற்ற என் தோற்றம் குறித்து வெட்கப்பட்டு பல நாட்கள் நான் வீட்டிலேயே இருந்திருக்கிறேன். என் குறுகிய, அழகற்ற அறையில் மறைந்து இருந்தபோது நான் மிகவும் விரும்பிய கனவில் நான் கடலோரம் தனியாய் இருக்க விரும்பினேன். என் வீடு மகத்தானதாகவும் கலைத்தன்மை கொண்டதாகவும் இருக்கும். சாதாரண உழைக்கும் உலகின் கரங்கள் தொடாத, அமைதி கொழிக்கும், நிழல் வேய்ந்த பசிய தோட்டப் பாதைகளில் நடக்க விரும்பினேன் – இந்த இடம் போன்ற ஒன்றுதான். என் கணவர் என் கனவுகளை மெய்யாக்கினார், அதைச் செய்ய முடியும் என்பதால் அவரைத் திருமணம் செய்து கொண்டேன்”
அலைகள் மட்டுமே ஆர்ப்பரிக்கும் சிறிது நேர மௌனத்துக்குப்பின், “ஆனால் காதலைப் பற்றி என்ன சொல்கிறாய்?” என்று அவன் கேட்கிறான். “அந்த லட்சியங்களை எல்லாம் இன்னும் வைத்திருக்கிறாயா?” என்று அவள் சிரித்துக் கொண்டே கேட்கிறாள். அத்தனை தொலைவில் உள்ள உலகம் போனபின்னும் அவற்றில் சிலவும்கூட சாகவில்லையா, வாடவில்லையா? வலுக்கட்டாயமாக உன்னிலிருந்து பிய்த்து எடுக்கப்பட்டு மண்ணில் வீசப்படவில்லையா, அவற்றை ஆயிரம் வாகனங்களின் சக்கரங்கள் நசுக்கவில்லையா?
அவன் எதுவும் சொல்வதில்லை. அவளது கரங்களை முத்தமிட்டு விடை பெற்றுக் கொள்கிறான். தன்னுள் ஆழக் கிடந்த ரகசியத்தை வெளிப்படுத்தியது குறித்தும் பல ஆண்டுகள் அவளுக்கு ஒரு அந்நியன் போலிருந்த ஒரு ஆணிடம் தன் ஆன்மாவைத் திறந்தது குறித்தும் அவள் வெட்கப்படவில்லை. சிரித்துக் கொண்டே அவன் போவதைப் பார்க்கிறாள், காதல் பற்றி அவன் பேசியதை நினைத்துக் கொள்கிறாள்.
“அவளுக்கும் நிகழ் காலத்துக்கும் இடையில் மௌனமாய், வெளியே கேட்காத வகையில் அடி வைத்து கடந்த காலம் எழுகிறது. திடீரென்று அவள் அவன் தன் வாழ்வுக்கு ஒரு திசை அளித்திருக்க முடியும் என்பதை நினைத்துப் பார்க்கிறாள். அந்த வினோத எண்ணத்துக்கு அவள் மனம் ஒளிரும் வண்ணங்கள் பூசுகிறது. மெல்ல, மெல்ல, அவளறியாமல், கனவு காணும் அவள் இதழ்களின் முறுவல் மறைந்து போகிறது”
இப்படி முடிகிறது கதை.
சிங்கப்பூர் வீழ்ந்தது என்ற செய்திக்குப்பின், இங்கிலாந்து தோற்பது உறுதியானபின், தன் ஐரோப்பா இனி திரும்பப் போவதில்லை, தேசீயங்கள் அதை மீட்கவியலாதபடி பிளவுபடுத்தி விட்டன என்று மனமுடைந்து, “என் தேசத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் பூரண சுதந்திரம், எங்கும் என்னை அதிதியென உணர்தல்” என்ற தன் சர்வதேச லட்சியம் பொய்த்துப் போனதை தாள முடியாமல் தன் இளம் மனைவியுடன் உயிரை மாய்த்துக் கொண்டவர் ஸ்வைக். பல வண்ணங்களில் ஒளிர்ந்து மறைந்தாலும், துரோகங்களால் தோற்கடிக்கப்பட்டு, மறக்கப்பட்டு பலகாலமான பின்னும் அவை ஒரு வாதையாய் உயிர்த்தெழக்கூடும் என்பதுதான் கனவுகளின் வலிமை. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஸ்வைக்கின் சமகாலத்தவர்கள் தேசீய உணர்வுகளால் எழும் யுத்தங்களைத் தவிர்க்க ஒருங்கிணைந்த ஐரோப்பாவை உருவாக்கினர். இதுவரை ஐரோப்பிய தேசங்கள் தமக்குள் போரிட்டுக் கொள்வதை வெற்றிகரமாய்த் தவிர்த்து வந்திருக்கின்றன. ஐரோப்பா ஒரு கனவென்றால் தேசீயமும் ஒரு கனவு. பல காரணங்களால் ஐரோப்பிய கனவு மெலிந்து, தேசீய கனவுகள் வலுவடைவதை இன்று நாம் காண்கிறோம். தான் வாழும் காலத்தில் புகழ் பெற்றிருந்தாலும் ‘உண்மையை எதிர்கொள்ளும் துணிச்சலற்றவர்” என்றும் ‘அற்ப எழுத்தாளர்’ என்றும்கூட விமரிசிக்கப்பட்டு, தனது மறைவுக்குப்பின் மறக்கப்பட்டிருந்த ஸ்வைக் இன்று மீண்டும் பேசப்படுகிறார், அவரது நூல்கள் மீண்டும் வாசிக்கப்படுகின்றன. கலை மட்டுமல்ல, காலமும் ஒரு எழுத்தாளனின் இடத்தையும் அவனது படைப்புகளின் முக்கியத்துவத்தையும் தீர்மானிக்கக் காரணம் ஆகிறது. மேற்குலகில் ஸ்வைக்கின் காலம் திரும்புவதன் அறிகுறிகள் தென்படுகின்றன. அதன் மக்களுக்கு ஸ்வைக் ஒரு எச்சரிக்கையாய் இருக்கக்கூடும்.
ஒளிப்பட உதவி – விக்கிபீடியா